நாங்கள் தொழிலாளர்கள் !

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை

தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை எழுப்புவதற்காக நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஆஷா தொழிலாளர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் 2024, நவம்பர் 29 அன்று திரண்டனர்.

அரியானா, குஜராத், பஞ்சாப், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான ஆஷா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு செங்கொடிகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு அணிவகுத்து வந்தனர். ஜந்தர் மந்தர் பகுதி எங்கும் அவர்கள் எழுப்பிய “நமது ஒற்றுமை வாழ்க!”, “தொழிலாளர்களாக நாங்கள் அங்கீகாரம் கோருகிறோம்!”, “நாங்கள் அரசு ஊழியர்கள் என்பதைப் பதிவு செய்க!”, “ஆஷா தொழிலாளர்கள் எங்களுக்கு ஒரு மாத ஊதியமாக ரூபாய் 26,000 கோருகிறோம்!”, “நாங்கள் சமூக பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை கோருகிறோம்!”, “ஓய்வூதியமாக நாங்கள் ரூபாய் 10,000 கோருகிறோம்!”, “அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத கொள்கை ஒழிக!” என்பன போன்ற முழக்கங்கள் அங்கு எதிரொலித்தன.

அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களும் மக்களை சென்றடைவதற்கு நாங்கள் வேலை செய்கிறோம் என்று ஆஷா தொழிலாளர்கள் விளக்கி கூறினர். நாங்கள் அரசாங்க சுகாதாரத்துறையில் தொழிலாளர்களாக வேலை செய்கையில், அரசாங்கம் எங்களை திட்டத் தொழிலாளர்கள் அல்லது மருத்துவ தன்னார்வலர்கள் என்று அழைக்கிறது. திட்டத் தொழிலாளர்கள் என்று எங்களை வகைப்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களாக எங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

வெவ்வேறு மாநிலங்களில் எங்களுக்கு வெவ்வேறு ஊதியம் வழங்கப்படுகிறது என்று ஆஷா தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினார். உத்தரகண்டில் ஆஷா தொழிலாளர்களுக்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து ரூ இரண்டாயிரமும் மாநில அரசாங்கத்திடமிருந்து ரூ 3300-மும், மொத்தமாக ரூ 5300 கொடுக்கப்படுகிறது. ஆனால் மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆஷா தொழிலாளர்களுக்கு ரூ 2,000-த்தை ஊதியமாக தருகிறார்கள். மேலும் நீண்டகால போராட்டத்தின் விளைவாக ஹரியானாவில் ஆஷா தொழிலாளர்களுக்கு ரூ 6000 கிடைக்கிறது. ஆனால் விலைவாசியைக் கணக்கில் எடுத்துக்கொண்டு எங்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 26,000 கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.”

உத்தரகண்டிலிருந்து வந்திருந்த ஆஷா தொழிலாளர்கள், மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக அவர்கள் மலைகளில் ஏறியும் இறங்கவும் வேண்டி இருக்கிறது என்று விளக்கிக் கூறினார்கள். இந்த வேலையை செய்கின்ற நேரத்தில் உயிரை இழக்ககூடிய அபாயத்தை அவர்கள் சந்திக்கிறார்கள்.  ஆனால் அவர்களுக்கு எவ்வித சமூகப் பாதுகாப்பும் இல்லை. அவர்களுடைய கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கா விட்டால், நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுப்போம் என்று அவர்கள் அறிவித்தனர். “புரட்சி ஓங்குக! இன்குலாப் ஜிந்தாபாத்!” என்ற போர்க்குணம் மிக்க முழக்கங்களோடு இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *