குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் கேட்கும் தங்களுடைய நியாயமான கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக நிற்கின்றனர்

தங்களுடைய முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றான எல்லா வேளாண் விளைபொருட்களுக்கும் சட்டரீதியாக உத்தரவாதமான குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி விவசாய சங்கங்கள் கடந்த பல ஆண்டுகளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடைய தலைவர்களில் ஒருவரான ஜக்ஜித் சிங் தாலிவால், பஞ்சாப் – அரியானாவிற்கும் இடையிலுள்ள கன்னாரி எல்லையில் காலவரையறையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது உட்பட பல்வேறு வழிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர் ஏறத்தாழ 50 நாட்கள் தொடர்ந்து உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலும் மைய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மறுத்து வருகிறது. விவசாய சங்கத் தலைவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கக்கூட அது மறுத்து வருகிறது.

உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு பஞ்சாப் அரசாங்கத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணை கொடுத்து வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற தங்களுடைய கோரிக்கையை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வரை தங்களுடைய போராட்டத்தை நிறுத்த மாட்டோமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் உறுதிபட அறிவித்திருக்கின்றனர். விவசாயிகளுடைய கோரிக்கைகள் பற்றி விவாதிப்பதற்காக விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்தால் மட்டுமே தங்களுடைய தலைவருக்கு மருத்துவ தலையீட்டை ஏற்றுக்கொள்ளுவோமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான ஐக்கிய விவசாயிகள் முன்னணியானது, தங்களுடைய கோரிக்கை கொள்கை மாற்றம் தொடர்பான ஒன்று என்பதால் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை தாங்கள் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. இக்கொள்கை பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்திற்கு உள்ளது, நீதிமன்றத்துக்கு அல்ல என்றும் அவர்கள் விளக்கியிருக்கிறார்கள்.

ஆனால் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், விவசாய சங்கத் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுத்து வருகிறது. மேலும் அவர்களை அவமதிக்கின்ற வகையில் அது “வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் பற்றிய தேசிய கொள்கை அறிக்கையை” வெளியிட்டிருக்கிறது. அதில் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. வெளியிடப்பட்டிருக்கும் இந்த 35 பக்கங்களைக் கொண்ட வரைவுக் கொள்கைத் திட்டத்தில், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 21 டிசம்பரில் இரத்து செய்யப்பட்ட விவசாய விரோத வேளாண் சட்டங்களில் இருந்த அதே வழிமுறைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

2024 செப்டம்பரில் விவசாயிகள் எழுப்புகின்ற இந்தப் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது குறிப்பிடத்தக்கது. அக்குழுவானது, “விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகள் கிடைக்க வேண்டும் என்றும், நிதி நிறுவனங்களிடமிருந்து பஞ்சாப் விவசாயிகள் பெற்றிருக்கும் கடன் தொகையானது ரூ 73,000 கோடிகளுக்கும் அதிகமாகவும், அரியானாவில் அது ரூ 76,000 கோடிகளுக்கு அதிகமாகவும் இருப்பதாலும், இந்த தாங்கமுடியாத கடன் சுமை காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டு, விவசாயிகளுடைய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டியது அவசியம் என்றும் பரிந்துரை செய்திருக்கிறது”.

வேளாண்மை, கால்நடை வளர்ப்பு மற்றும் உணவு உற்பத்தி செய்தல் பற்றிய பாராளுமன்ற நிலைக் குழுவானது 2024 டிசம்பரில் சமர்ப்பித்த ஒரு அறிக்கையில், விவசாயிகளுடைய நிதி அடிப்படையை உறுதிசெய்வதற்கு சட்டபூர்வமான குறைந்தபட்ச ஆதரவு விலையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அது, “குறைந்தபட்ச ஆதரவு விலை, உணவு உற்பத்தியையும் பொது விநியோக அமைப்பையும் உறுதிப்படுத்துவதன் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியுமென” என்று வலியுறுத்தியிருக்கிறது.

சட்டத்தால் உத்தரவாதம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான விவசாயிகளுடைய கோரிக்கையானது முற்றிலும் ஒரு நியாயமான கோரிக்கையாகும். அது, வேளாண் வணிகத்தை மேலாதிக்கம் செய்து உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களுடைய நலன்களை காலில் போட்டு நசுக்கி அதிகபட்ச இலாபத்தை அடைய வேண்டுமென்ற ஏகபோக முதலாளிகளுடைய திட்டங்களுக்கு எதிராக இருப்பதன் காரணமாகவே இக்கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் மறுத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *