தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத் தப்படும் அனைத்திந்திய லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேஷனுடைய 24 ஆவது மாநாடு, 2024 டிசம்பர் 17, 18 ஆகிய நாட்களில் மிகுந்த போர்க்குணத்தோடு பாட்னாவிலுள்ள உள்ள சிரிகிருஷ்ணா மெமோரியல் அரங்கத்தில் நடைபெற்றது. நாடெங்கிலுமிருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இரயில் ஓட்டுனர்கள் தங்கள் குடும்பத்தோடு மிகுந்த ஆர்வத்தோடு இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பெண் இரயில் ஓட்டுநர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
மாநாட்டில் இந்திய ரயில்வேயின் பல்வேறு பிராந்தியங்களிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் தத்தம் பகுதிகளில் நடைபெற்ற வேலை குறித்து அறிக்கைகளை முன்வைத்தனர்.
அசோசியேஷனின் மத்திய செயற் குழுவின் தலைவராக ஆர் பகத், செயல் தலைவராக எல். மோனி மற்றும் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த 13 துணைத் தலைவர்களும், பொதுச்செயலாளராக கே.சி.ஜேம்ஸ் மற்றும் மூன்று இணைச் செயலாளர்களும், 12 துணை செயலாளர்களும் பொருளாளராக மோகன்சந்த் பாண்டே, துணைப் பொருளாளரும், தணிக்கையாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
டிசம்பர் 17 அன்று மாலை இரயில் ஒட்டுநர்கள் ஒரு பேரணி நடத்தினர். செங்கொடிகளைக் கைகளில் ஏந்தியவாறு சென்ற இரயில் ஓட்டுநர்கள், அரசாங்கத்தின் மக்கள் விரோத, சமூக விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்திய ரயில்வே தனியார்மயப்படுத்துவதை நிறுத்து! என்பிஎஸ் ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வா! இந்திய இரயில்வேயில் காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான காலி இடங்களை உடனடியாக நிரப்பு! – போன்ற முழக்கங்கள் அந்தப் பகுதி எங்கும் எதிரொலித்தன.
மாநாட்டில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், சி ஐ டி யூ, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டக் குழு, அனைத்திந்திய மாநில அரசாங்க ஊழியர்கள் பெடரேஷன், ஆல் இந்தியா ஸ்டேஷன் மாஸ்டர்கள் அசோசியேஷன் மற்றும் சி பி ஐ (எம்) சேர்ந்த எம்எல்ஏ அஜய் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
அரசாங்கம் இந்திய இரயில்வேயை தனியார் மயப்படுத்தும் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருவதை மாநாட்டில் பங்கேற்ற பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினார். மாறி மாறி வந்த எல்லா அரசாங்கங்களும் அதே தேசவிரோத, சமூக விரோதக் கொள்கையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்த தனியார் மயப்படுத்தும் திட்டமானது தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை நம் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இரயில்வேவை தனியார்மயப்படுத்துவது என்பது நம் நாட்டின்மீது திணிக்கப்பட்டுள்ள கொடூரமான செயலாகும். இதன் மூலம், முதலாளிகள் இரயில்களை இயக்கி இலாபம் குவித்து நம்முடைய உழைப்பாளிகளுடைய கடினமான உழைப்பை மேலும் கொள்ளையடித்து வருவார்கள். தனியார்மயம் குறித்த விழிப்புணர்வை நாம் பொதுமக்களிடம் பரப்ப வேண்டும். தனியார்மயத்துக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
இந்திய இரயில்வேயில் இலட்சக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன என்று மாநாட்டில் உரையாற்றிய பேச்சாளர்கள் குறிப்பிட்டனர். இவ்வாறு காலியாக உள்ள இடங்களில் 17,000 இரயில் ஓட்டுனர்களின் இடங்களாகும். இப்படி காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. ஓட்டுநர்கள் பற்றாக்குறையின் காரணமாக வேலையிலுள்ள இரயில் ஓட்டுநர்கள் அதிக வேலைச்சுமையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் அதிக நேரம் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நெருக்குதலான வேலை நிலைமைகள், இரயில் ஓட்டுநர்களை பல்வேறு நோய்களுக்கு ஆளாக்குகின்றன. பெரும்பாலான இரயில் ஓட்டுநர்கள் உயர் இரத்த அழுத்தம், நீரழிவு மற்றும் இதய நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இரயில் ஓட்டுனர்கள் மன அழுத்தமின்றி வேலை செய்வதற்கு உகந்த வகையில் அவருடைய மோசமான வேலை நிலைமைகளில் உடனடி மாற்றங்களை அரசாங்கம் கொண்டுவர வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி இரயில் ஓட்டுநர்கள் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்துங்கூட அரசாங்கம் அவர்களுடைய பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகிறது.
அரசாங்க ஊழியர்களை குழப்புவதற்கென்றே யூபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக பேச்சாளர்கள் கூறினார். எனவே யூபிஎஸ் மற்றும் என்பிஎஸ் ஓய்வூதியத் திட்டங்களை பின்வாங்கச் செய்வதற்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கும் கிளர்ந்தெழுந்து நாம் போராட வேண்டும்.
தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருவதன் மூலம் புதிய போராட்டங்களை பலவீனப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்து வேலை செய்து வருகிறது. அது தொழிலாளர்களுடைய உரிமைகளை வெட்டிக் குறைத்து வருகிறது.
தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடவேண்டுமென மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. முக்கியமான கோரிக்கைகள் பின்வருமாறு –
- என்பிஎஸ், யூபிஎஸ் ஓய்வூதியத் திட்டங்களை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
- இரயில்வேயை தனியார் மயப்படுத்தும், நிறுவனமயப்படுத்தும் திட்டங்களை நிறுத்து.
- வாரத்திற்கு 30 மணி நேர ஓய்வையும், 16 மணிநேர நாள் இடைவெளியையும் இரயில் ஓட்டுனர்களுக்கு கொடு.
- சரக்கு இரயில் ஓட்டுநர்களுக்கு அதிகபட்ச வேலை நேரமாக 8 மணி நேரத்தையும் பயணிகள் இரயில் ஓட்டுனர்களுக்கு ஆறு மணிநேர வேலையும் உறுதி செய்.
- காலியாக உள்ள இடங்களை நிரப்ப புதிய தொழிலாளர்களை நியமிக்க வேண்டும்.
- முப்பத்தி ஆறு மணி நேரத்திற்குள்ளாக தலைமை இடத்திற்கு திரும்பி வருவதை கட்டாயமாக்க ஆக்க வேண்டும்.
மாநாடு மிகவும் போர்க்குணம் மிக்க உணர்வோடு முடிவுக்கு வந்தது.