தோழர்களே
இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி நிறுவப்பட்டதன் 44 ஆவது ஆண்டு விழாவிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது நாட்டில் கம்யூனிச இயக்கமானது எண்ணற்ற கட்சிகளாகவும் குழுக்களாகவும் பிளவுபட்டு இருந்த ஒரு நேரத்தில் நமது கட்சி நிறுவப்பட்டது என்பதை உங்களில் பெரும்பாலானோர் அறிவீர்கள். அவர்களில் சிலர் எந்தப் புரட்சியுமின்றி பாராளுமன்ற போராட்டங்களின் மூலம் சோசிலிசத்தை அடைய முடியும் என்று சொல்லி முதலாளி வர்க்க அரசோடு இணைந்துவிட்டனர். தொழிலாளிகளையும் விவசாயிகளையும் தற்போதுள்ள அமைப்பின்மீது நம்பிக்கை வைக்குமாறு கேட்பதன் மூலம் அவர்கள் தேர்தல் எந்திரங்கள் போல செயல்பட்டு வந்தனர். மற்றும் சிலர் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை சுற்றி வளைக்கும் ஒரு பாதையை முன்வைத்து, தனிநபர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஒரு தேர்தல் எந்திரமாகவோ அல்லது ஒரு இராணுவ எந்திரமாகவோ இல்லாமல், தொழிலாளி வர்க்கம் மற்றும் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அதிகாரத்தை கொண்டுவரக்கூடிய ஒரு கருவியாக செயல்படும் ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சியை நிறுவுவதென நாம் முடிவுசெய்தோம். மார்க்சிய-லெனினிய கொள்கையால் வழிநடத்தப்படும் ஒரு கட்சியாக, முதலாளி வர்க்க ஆட்சி அதிகாரத்தை மாற்றி தொழிலாளர்கள் விவசாயிகளுடைய அதிகாரத்தை நிறுவவும், முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கும், கம்யூனிசத்திற்கும் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கத்திலும் உறுதிகொண்ட ஒரு கட்சியை நிறுவ வேண்டுமென நாம் தீர்மானித்தோம்.
முதலாளித்துவக் கருத்தியலின் செல்வாக்கின் காரணமாக கம்யூனிச இயக்கம் தொடர்ந்து சிதறுண்டு இருக்கின்ற போதிலும், நாம் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் ஒரு முன்னணிக் கட்சியை, எல்லா கம்யூனிஸ்டுகளும் இணைந்து நின்று போராடக்கூடிய ஒரு கட்சியைக் கட்டுகின்ற நம்முடைய நோக்கத்திலிருந்து நாம் சிறிதும் பிறழவில்லை.
தோழர்களே,
ஒரு இருண்ட சூழ்நிலையை உலக மக்கள் சந்தித்து வரும் ஒரு நேரத்தில் நாம் இங்கு கூடியிருக்கிறோம். அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய முழு ஆதிக்கத்தின் கீழ் ஒருதுருவ உலகை அமைப்பதற்காக முயன்று வருகிறது. அது, இந்த நோக்கத்தை அடைவதற்காக மிகவும் மோசமான மனிதாபிமானமற்ற, குற்றவியலான வழிகளைக் கடைபிடித்து வருவதோடு, தன்னுடைய எதிராளிகளை பலவீனப்படுத்தியும் வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் பின்பற்றி வரும் இந்தப் போக்கானது, மனித சமுதாயத்தை ஒரு புதிய உலகப் போரில் மூழ்கடிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், நாடுகளுக்கிடையே உறவுகள் எப்படியிருக்க வேண்டுமென நிறுவப்பட்ட கோட்பாடுகளை அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் காலில் போட்டு நசுக்கி வருகிறார்கள். “விதிமுறைகள் அடிப்படையிலான” உலக நியதியைப் பின்பற்றி வருவதாக அவர்கள் கூறிக் கொள்கிறார்கள். இந்த விதிமுறைகள் அடிப்படையிலான அமைப்பில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தீர்மானிக்கும் விதிமுறைகளை மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். இவ்வாறு அமெரிக்கா கட்டளையிடும் உலக முறையை பிற நாடுகள் ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், இந்திய முதலாளி வர்க்கம், மற்ற ஏகாதிபத்திய சக்திகளோடு கூடியும், முட்டி மோதியும் தன்னுடைய சொந்த ஏகாதிபத்திய நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு முயற்சி செய்து வருகிறது. நமது நாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளைச் சுரண்டுவதையும் கொள்ளையடிப்பதையும் தீவிரப்படுத்துவதன் மூலம் உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் குழுவில் இந்திய முதலாளிகள் சேர முயற்சித்து வருகிறார்கள்.
தோழர்களே,
முதலாளித்துவ அமைப்பு உலக அளவில் ஒரு மோசமான நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்தகைய சூழ்நிலைகளில் தங்களுடைய இலாபத்தைப் பெருக்குவதற்காக எல்லா நாட்டு ஆளும் முதலாளி வர்க்கங்களும் உழைக்கும் வர்க்கம் மற்றும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், உரிமைகளையும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி வருகிறார்கள். அவர்கள் மதச் சிறுபான்மை மக்கள், தேசிய சிறுபான்மையினர், குடியேறியுள்ளவர்கள், அகதிகள் போன்றவர்கள் மீது கடுமையானத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை நசுக்குவதற்காக அவர்கள் தேசிய வெறியைத் தூண்டி விட்டு வருகிறார்கள். தொழிலாளி வர்க்கமும், மக்களும் இருபதாம் நூற்றாண்டில் போராட்டங்கள் மூலம் வென்றெடுத்த தங்களுடைய உரிமைகளுக்கான அங்கீகாரம் போன்றவை அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு வருகின்றன.
ஏகாதிபத்திய சக்திகள் கட்டவிழ்த்து விட்டுள்ள அநீதியான போர்களை உலகெங்கிலுமுள்ள உழைக்கும் மக்கள் எதிர்த்து வருகிறார்கள். இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள், உழைப்பு சுரண்டல் தீவிரப்படுத்தப்படுவதற்கு எதிராகவும், தொழிலாளர்களாக அவர்களுக்கு உள்ள உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதற்கு எதிராகவும் போராடி வருகின்றனர்.
அதிகபட்ச இலாபத்தை அடைய வேண்டுமென்ற ஏகபோக முதலாளிகளுடைய முயற்சியில் அவர்கள் சமூக மற்றும் இயற்கைச் சூழலை அழித்து வருகிறார்கள். மனித இனத்தை அழிப்போமென முதலாளித்துவம் அச்சுறுத்தி வருகிறது.
உலகெங்கிலும் உள்ள நிலைமைகள், முதலாளித்துவ அமைப்பை மாற்றி, ஒரு சோசலிச அமைப்பை நிறுவ வேண்டுமென கேட்டு வருகின்றன. மேலும் பேரழிவுகளிலிருந்து மனித இனத்தைக் காப்பதற்கு இது மட்டுமே ஒரே வழியாகும்.
தோழர்களே,
நமது நாட்டுத் தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையைச் சந்தித்து வருகிறார்கள். வேலை இல்லாத் திண்டாட்டம் மிகவும் மோசமாகவும், அதிகரித்தும் வருகிறது. மென்மேலும் மக்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்யுமாறு தள்ளப்பட்டு வருகிறார்கள். இளைஞர்கள் கிக் தொழிலாளர்களாகவும், வினியோகத் தொழிலாளர்களாகவும் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறார்கள். அவர்கள் எவ்வித வேலைப் பாதுகாப்பும் இல்லாமல் நீண்ட நேரம் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களிலுள்ள தொழிலாளர்களுடைய நிலைமைகள் தனியார்மயத்தினால் மோசமடைந்துள்ளன.
மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், விவசாயத்தை சார்ந்து இருக்கிறார்கள். வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பற்ற நிலை அதிகரித்து வருவதை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள்.
தொழிலாளர்கள் – விவசாயிகளின் பெரும்பாலான பிள்ளைகள் தரமற்ற பள்ளிகளில் படிக்க வேண்டியுள்ளது. நாட்டிலுள்ள பெரும்பாலான உழைக்கும் மக்கள் நெருக்கடி மிகுந்த பொது மருத்துவமனைகளில் மிக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இன்னொரு பக்கம் இந்திய முதலாளிகள் உலகின் மிகவும் பெரிய பணக்கார முதலாளிகளின் பட்டியலில் சேர்ந்திருக்கிறார்கள்.
தொழிலாளிகள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களுடைய நிலைமை இவ்வாறு மோசமாக இருப்பதற்குக் காரணம், நமது நாட்டினுடைய பெருவீத உற்பத்தி, முதலாளி வர்க்கத்தின் கைகளில் இருப்பதாகும். எல்லா பொருளாதாரத் துறைகளிலும் மேலாதிக்கம் செலுத்தி வரும் சுமார் 150 ஏகபோக முதலாளித்துவ குடும்பங்கள் முதலாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்குகிறது. பொருட்களை உற்பத்தி செய்வதும் சேவைகளை வழங்குவதும் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக இல்லாமல், ஏகபோகங்களுக்கு அதிகபட்ச இலாபத்தை உறுதி செய்வதற்காக செய்யப்படுகிறது. இவ்வாறு பொருளாதாரத்தின் போக்கானது முழுவதுமாக தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும் மக்களுடைய நலன்களுக்கு எதிராக இருக்கிறது.
பொருளாதார ரீதியாக மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கமாக இருக்கின்ற முதலாளி வர்க்கம், இந்திய அரசை பயன்படுத்தி அரசியல் ரீதியாகவும் மேலாதிக்கம் கொண்ட வர்க்கமாக ஆகியிருக்கிறது. காவல்துறை, ஆயுதப்படைகள், அதிகாரிகள், பாராளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் நீதித்துறை அடங்கிய இந்திய அரசு முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை கட்டிக் காக்கும் ஒரு கருவியாகும். நாட்டை நடத்துவதற்கு மக்கள் தான் தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற மாயையை உருவாக்குவதற்கு பாராளுமன்ற சனநாயக அமைப்பு பயன்படுகிறது. ஆனால் உண்மையில் முதலாளி வர்க்கமானது அதனுடைய நலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மூலம் நாட்டை ஆட்சி செய்கிறது.
அவ்வப்போது நடத்தப்படும் தேர்தல்கள் மூலம் முதலாளி வர்க்கமானது அதற்கு மிகவும் பிடித்த கட்சிகளில் எந்த கட்சி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மக்களைச் சுரண்டுவதையும், ஒடுக்குவதையும் மேற்பார்வை செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதற்கு ஏக போக முதலாளிகள், தங்களுடைய பண பலத்தையும், ஊடகங்கள் மீது அவர்களுக்கு உள்ள கட்டுப்பாட்டையும், மக்களுடைய கைபேசிகள் பற்றிய விவரங்களையும் பயன்படுத்துவதோடு, தேர்தல் வாக்குகளில் வெளிப்படையாகவே மோசடிகள் செய்வதன் மூலம் தீர்மானிக்கிறார்கள். மக்கள் அவர்களுக்கு பிடித்த ஒரு கட்சியை தேர்ந்தெடுத்திருப்பது போன்ற ஒரு கருத்தை உருவாக்குகின்ற அதே நேரத்தில் தேர்தல் வழிமுறையைப் பயன்படுத்தி, முதலாளிகள் உண்மையில் தங்களுக்கு பிடித்த ஒரு கட்சியிடம் செயலாக்க அதிகாரத்தை ஒப்படைக்கிறார்கள்.
செயலாக்க அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பிற்காக முதலாளி வர்க்க கட்சிகள் ஒன்றோடொன்று போட்டி போடுகின்றனர். ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ அரசாங்கத்தை அமைக்கையில், மற்ற கட்சிகள் விசுவாசமுள்ள எதிர்க்கட்சியின் அங்கமாக செயல்படுகிறார்கள். அவர்கள் விசுவாசமுள்ள எதிர் அணியாக இருக்கிறார்கள், ஏனெனில் முதலாளி வர்க்க ஆட்சியை பாதுகாப்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
முதலாளித்துவ அமைப்பைக் கட்டிக் காப்பதிலும், முதலாளி வர்க்க ஆட்சியை நடத்துவதிலும் பாராளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் இருக்கின்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் குறிப்பிட்ட பங்குகளை வகிக்கிறார்கள். ஆளும் கட்சியானது, முதலாளி வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துகின்ற அதே நேரத்தில் மக்களுடைய முக்கிய நலன்களுக்காகவே செயல்படுவதாக மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது. எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விமர்சனம் செய்வதன் மூலம், அவர்கள் உழைக்கும் பெரும்பான்மை மக்களுடைய நலன்களுக்காக பேசுவது போன்ற ஒரு கருத்தை உருவாக்குகிறார்கள். அரசாங்கத்தை அமைப்பதற்கும், முதலாளித்துவ நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதற்கும் எப்போது வாய்ப்பு கிடைக்குமென அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உலகிலேயே மிக அதிகமான மக்கள்தொகை கொண்ட சனநாயகம் இந்தியா என்று அறிவித்து வருகின்ற நிலையில், மக்களுடைய சனநாயக உரிமைகள் அப்பட்டமாக தினந்தோறும் மீறப்பட்டு வருகிறது. அரசாங்கத்தை விமர்சிக்கின்ற எவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் (யூஏபிஏ) மற்றும் பிற கொடூரமான சட்டங்கள் சட்டங்களைப் பயன்படுத்தி சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
முஸ்லிம்களும் சீக்கியர்களும் பயங்கரவாதிகளாகவும் இந்தியாவின் ஒற்றுமை மட்டும் ஒருமைப்பாட்டிற்கு எதிரிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இது கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக தலைமையிலான அரசாங்கங்களின் கீழ் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில பழமையான கோயில்களின் இடிபாடுகள் மீது தற்போதைய வழிபாட்டு இடங்கள் கட்டப்பட்டுள்ளன என்ற சாக்குபோக்கைக் கூறி பல்வேறு வழிபாட்டிடங்களை இடித்துத் தகர்க்க வேண்டும் என்ற குரலுக்கு பாஜக அரசாங்கம் தீவிரமாக ஆதரவளித்து வருகிறது.
இவையனைத்தும் தொழிலாளிகள், விவசாயிகளின் ஒற்றுமையை உடைப்பதற்காக செய்யப்பட்டு வருகின்றன. ஆளும் முதலாளி வர்க்கம் கடைபிடித்து வரும் தொழிலாளருக்கும், விவசாயிகளுக்கும் எதிரான பொருளாதாரப் போக்கை எதிர்த்து அவர்கள் நடத்திவரும் போராட்டத்தை நசுக்குவதற்காகச் செய்யப்படுகின்றன.
காவல்துறை அதிகாரங்கள்அதிக அளவில் பயன்படுத்தப்படுவது, அரசியல் எதிராளிகள் துன்புறுத்தப்படுவது மற்றும் எல்லா எதிர்ப்பும் குற்றமயமாக்கப்பட்டு வருவது போன்றன இந்திய சனநாயகம், சுரண்டும் ஒரு சிறுபான்மையினருடைய காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகாரம் என்ற உண்மையை வெட்ட வெளிச்சமாக்கி வருகிறது.
தங்களுடைய சனநாயகம், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பார்வையில் முழுவதுமாக வெட்டவெளிச்சமாகுவதை முதலாளி வர்க்கம் விரும்பவில்லை. இந்த காரணத்திற்காகவே 2024 பொதுத் தேர்தல்களை பாஜகவிற்கு தனிப் பெரும்பான்மையை மறுக்கவும், பாராளுமன்ற எதிர்க்கட்சிகளை வலுப்படுத்தவும் அது பயன்படுத்தியது. வலிமையான பாராளுமன்ற எதிர்ப்பு, தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுடைய கவலைகளைத் தீர்க்க பாராளுமன்றத்தில் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்ற மாயையை வலுப்படுத்த உதவுகிறது. இவ்வாறு, தற்போதுள்ள முதலாளி வர்க்க சனநாயக அமைப்புக்கு ஒரு மாற்றை தொழிலாளர்கள் விவசாயிகள் தேடுவதைத் தடுக்க முதலாளி வர்க்கம் விரும்புகிறது.
தங்களுடைய மோசமான நிலைமைகளை மாற்றுவதற்கு தொழிலாளிகள் விவசாயிகளுக்கு உள்ள ஒரே வழியானது முதலாளி வர்க்க ஆட்சியை மாற்றி தொழிலாளிகள் விவசாயிகளுடைய அதிகாரத்தைக் கொண்டு வருவதற்காக அணிதிரள்வதாகும். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கானப் போராட்டத்திற்கும், பெரு வீத உற்பத்தி சாதனங்களை முதலாளி வர்க்கத்தின் கைகளில் இருந்து கைப்பற்றுவதற்கும், வாழ்வாதாரத்தையும் வளமையையும் எல்லா மக்களுக்கும் உறுதிப்படுத்துவதற்காக பொருளாதார அமைப்பை மாற்றி அமைப்பதற்கும் திரளான உழைக்கும் மக்களுக்குத் தொழிலாளி வர்க்கம் தலைமையளிக்க வேண்டும். இந்த பணியை நிறைவேற்றுவதற்கு தொழிலாளி வர்க்கத்திற்கு அவசியமான விழிப்புணர்வையும் அமைப்பையும் அளிப்பது நமது கட்சியை எதிர்கொண்டுள்ள சவால் ஆகும்.
தோழர்களே
தொழிலாளர்கள் – விவசாயிகளுடைய அதிகாரத்தை நிறுவும் நோக்கத்தோடு தொழிலாளி – விவசாயி கூட்டணியைக் கட்ட வேண்டிய தேவையை நமது கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. பாஜகவை தோற்கடிப்பது என்ற பெயரில் தொழிலாளிகள் – விவசாயிகளை பாராளுமன்ற எதிர்க்கட்சிகளின் பின்னால் அணி திரட்டுகின்ற எல்லா முயற்சிகளையும் நாம் எதிர்த்து வந்திருக்கிறோம்.
தனியார்மயத்துக்கு எதிரான பொதுவான போராட்டத்தில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சாலைகள் மற்றும் சேவைத் தொழிலாளர்களை ஒரு பொதுவான மேடையின் கீழ் நமது கட்சி கொண்டு வந்திருக்கிறது. தனியார்மயமானது தொழிலாளர்களுடைய நலன்களுக்கு மட்டுமன்றி சமுதாயத்தின் பொதுநலன்களுக்கும் எதிரானது என்பதை நாம் சுட்டிக்காட்டி இருக்கிறோம். இரயில்வே, மின்சார வினியோகம், மருத்துவம் மற்றும் பிற துறைகள் தனியார் மயப்படுத்தப்படுவதற்கு எதிராக திரளான மக்களை அணி திரட்டுவதற்காக நாம் வேலைசெய்து வருகிறோம். மின்னணு மின்சார மீட்டர்களை அமைப்பது தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் எதிரான திட்டம் என்கின்ற அடிப்படையில் அதை வெட்ட வெளிச்சமாக்கி நாம் எதிர்த்து வந்திருக்கிறோம்.
தில்லியின் எல்லைகளில் 13 மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற விவசாயிகள் போராட்டமானது ஒரு வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாகும், அந்தப் போராட்டம் எல்லா சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உணர்வூட்டியது. ஒரு பொதுவான கோரிக்கைப் பட்டியலை ஒட்டி தொழிலாளி-விவசாயிகளின் ஒற்றுமையை பலப்படுத்துவதற்காக நமது கட்சி வேலைசெய்து வந்திருக்கிறது.
எல்லா விவசாய விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட பூர்வமான உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேண்டுமென விவசாயிகள் கோரி வருகின்றனர். இது ஒரு நியாயமான கோரிக்கையாகும். வேளாண் வணிகத்திலிருந்து இலாபம் அடைய விரும்புகின்ற ஏகபோக முதலாளிகளின் நலன்களை இது பாதிக்கும் என்பதால் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் மறுத்து வருகிறது. குறைந்தபட்ச ஆதரவுவிலைக்கு எதிராக ஆளும் வர்க்கம் முன்வைத்து வரும் போலியான வாதங்களை நமது கட்சி வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.
விவசாயிகளும் தொழிலாளிகளும் தங்களுடைய குழந்தைகள் நல்ல கல்வி பெற வேண்டும் என ஆழமான விருப்பம் கொண்டிருக்கின்றனர். தற்போதுள்ள மிகவும் சமனற்ற பள்ளி அமைப்பானது நமது சமுதாயத்திலுள்ள வர்க்க மற்றும் சாதி படிநிலைகளை நீடிப்பதற்கு சேவை செய்கிறது. “அனைவருக்கும் ஒரே தரமான கல்வி ஏன் இல்லை?” என்ற கேள்வியையொட்டி நமது கட்சி ஒரு பெரும் இயக்கத்தை துவக்கியிருக்கிறது.
பாலியல் வன்முறை மற்றும் பாகுபாடுங்களுக்கு எதிரான பெண்கள் போராட்டத்தில் நமது கட்சி மும்முரமாக பங்கேற்று வந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாரபட்சமும் வன்முறையும், எல்லா உழைக்கும் மக்களை சுரண்டுவதைத் தீவிரப்படுத்துவதற்கு ஆளும் முதலாளி வர்க்கத்திற்கு பயன்படுகிறது. பெண்கள் மீது நடத்தப்படும் எல்லா வகையான வன்முறைகளுக்கும் பாரபட்சத்திற்கும் எதிரான போராட்டமானது, எல்லா வகையான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான தொழிலாளி வர்க்கம் மற்றும் மக்களுடைய போராட்டத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகும் என்ற கருத்தை நாம் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறோம்.
இந்திய அரசு, வகுப்புவாதத்திற்கு எதிரானது என்ற மாயையை நமது கட்சி தொடர்ந்து வெட்ட வெளிச்சமாக்கி வந்திருக்கிறது. வகுப்புவாதத்திற்கும், வகுப்புவாத வன்முறைக்கும் அடிப்படை ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டுமல்ல. அது ஆளும் முதலாளி வர்க்கத்திலும் அதனுடைய பிரித்தாளும் சூழ்ச்சியிலும் இருக்கிறது.
சாதி ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் நாடகமாடி வருவதை நமது கட்சி அம்பலப்படுத்தியிருக்கிறது. உண்மையோ ஆளும் வர்க்கம், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையும் ஒடுக்குமுறையும் பாதுகாத்து நீட்டித்து வருகிறது. ஏனெனில் அது மனித உழைப்பைத் தீவிரமாக சுரண்டுவதற்கும், மக்களைப் பிளவுபடுத்தி வைப்பதற்கும், பழைய அடையாளங்களில் அவர்களைக் கட்டிப் போடுவதற்கும் அது உதவுகிறது.
தேர்தல்கள் மூலம் அதிகாரத்தில் உள்ள கட்சிகளை மட்டும் மாற்றுவதன் மூலம் மக்களுடைய எந்த பிரச்சனையும் தீர்க்க முடியாது என்பதை நமது கட்சி போராடும் மக்களிடம் மீண்டும் மீண்டும் எடுத்துரைத்து வருகிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் எதிர்த்தத் தாக்குதல் என்பது ஏதோ ஒரு அரசியல் கட்சியின் செயல் திட்டம் என்பது மட்டுமல்ல. அது ஆளும் முதலாளி வர்க்கத்தின் செயல் திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
தோழர்களே,
கம்யூனிச இயக்கத்தின் முக்கிய நோக்கமானது முதலாளி வர்க்க ஆட்சியை மாற்றி, தொழிலாளிகள் – விவசாயிகளின் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு வருவதாகும் என்று கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உள்ள ஏறத்தாழ எல்லா கட்சிகளும் ஒப்புக்கொள்கிறார்கள். அதே நேரத்தில் அவர்களில் பெரும்பாலானவர்கள், உடனடி நோக்கமானது காங்கிரசு தலைமையிலான இந்தியா கூட்டணியை ஆதரிப்பதன் மூலம் பாஜகவைத் தோற்கடிப்பதாகும் என்று வாதாடுகின்றனர். ஒரு செயல் தந்திரமானது நம்முடைய முக்கிய நோக்கங்களுக்கு சேவை செய்வதாக இருக்க வேண்டும் என்று மார்க்சிச லெனினிச அறிவியல் நமக்கு அறிவுறுத்துகிறது. பாஜக-வைத் தோற்கடிப்பது என்ற பெயரில் காங்கிரசு மற்றும் பிற முதலாளித்துவ கட்சிகளோடு கைகோர்ப்பதானது நம்முடைய முக்கிய நோக்கமாகிய தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளின் ஆட்சி அதிகாரத்தை நோக்கி நம்மை எடுத்து செல்லாது. மாறாக பாராளுமன்ற எதிர்க்கட்சிகளின் பின்னால் வால் பிடித்து செல்வது என்பது தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளின் வர்க்க உணர்வை எப்போதுமே மழுங்கடித்திருக்கிறதென வரலாற்று அனுபவம் காட்டுகிறது. இது முதலாளி வர்க்கத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கு பயன்படாமல் பின்னடைவுக்கே வழி வகுக்கிறது.
எடுத்துக்காட்டாக 2004 இல் இருந்து 2008 காலகட்டத்தில் பாஜக-வை அதிகாரத்திலிருந்து விலக்கி வைப்பது என்ற பெயரில் கம்யூனிச இயக்கத்தில் இருந்த சில கட்சிகள் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யு.பி.ஏ) அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர். காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமானது ஒரு பொதுவான குறைந்தபட்ச திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது என்றும் அது முதலாளிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் கூறினர். பொதுவான குறைந்தபட்ச திட்டத்தின் கீழ் அவர்களுடைய நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதால், தொழிலாளிகளும் விவசாயிகளும் தீவிரமாகப் போராட வேண்டியதில்லை என்ற தவறான எண்ணத்தைப் பரப்புவதற்கு இது பயன்பட்டது.
சுரண்டல் அதிபர்கள் மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்கள் என்ற இருவருக்கும் சேவை செய்வதாக ஒரு பொதுவான திட்டம் இருக்கும் என்ற கருத்தானது, இந்திய அரசு என்ற கருவியைப் பயன்படுத்தி சுரண்டல் அதிபர்கள் மற்றும் சுரண்டப்படுபவர்களுடைய நலன்களை சமரசப்படுத்த முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். இந்த கருத்தானது மார்க்சிச-லெனினிச அடிப்படை படிப்பினைகளுக்கு முழுவதும் எதிரானதாகும்.
முதலாளி வர்க்கத்தின் நலன்களை தொழிலாளிகள் – விவசாயிகளுடைய நலன்களோடு சமரசப்படுத்த முடியாது என்று மார்க்சிசம் – லெனினிசம் நமக்கு கற்றுத் தருகிறது. சமுதாயம் சமரச படுத்த முடியாத நலன்களைக் கொண்ட வர்கங்களாகப் பிளவுபட்டு இருக்கின்ற காரணத்தால், வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அரசு தோன்றியது. அரசு என்பது மற்ற வர்க்கங்கள் மீது ஒரு வர்க்கம் ஆட்சியை நடத்துவதற்கான ஒரு கருவியாகும். இந்திய அரசு முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நடத்துவதற்கான ஒரு கருவியாகும். அது சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பெருவாரியான மக்களின் உரிமைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஆளும் முதலாளி வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கிறது. அரசாங்கத்தின் பொறுப்பில் பாஜக அல்லது காங்கிரஸ் அல்லது வேறு ஒரு கட்சி என யார் இருந்தாலும் இதுதான் நடைபெற்று வருகிறது.
தற்போது நிலவும் அரசியல் அமைப்பின் தன்மை குறித்து இந்த நேரத்தில் முதலாளி வர்க்கத்தின் அரசியல்வாதிகள் மிக பெரிய அளவில் குழப்பத்தைப் பரப்பி வருகிறார்கள். பாராளுமன்றத்திலுள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் சனநாயகத்தை ஆபத்துக்குள்ளாக்கி வருவதாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். இந்த சனநாயகத்தை பாதுகாக்குமாறு அவர்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
தற்போதுள்ள அமைப்பானது நமது நாட்டு வளங்களையும் உழைப்பையும் முதலாளி வர்க்கம் மட்டுமே சுரண்டுவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் சுதந்திரமளிக்கும் ஒரு சனநாயகம் என்ற உண்மையை முதலாளி வர்க்கக் கட்சிகள் மறைக்கிறார்கள். பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் மீது இது ஒரு காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகாரமாகும்.
பாஜகவை தேர்தல்கள் மூலம் தோற்கடிப்பதன் மூலம் சனநாயகத்தைக் காக்க வேண்டும் என்று அழைப்பு கொடுக்கும் கம்யூனிச இயக்கத்தில் உள்ள கட்சிகள், தேர்தல் முடிவுகள் மக்களுடைய விருப்பத்தைப் பிரதிபலிக்கின்றன என்ற முதலாளி வர்க்க பரப்புரையோடு சமரசம் செய்துக் கொள்கிறார்கள். தற்போதுள்ள அமைப்பில் தேர்தல் முடிவுகளை முதலாளி வர்க்கம் தீர்மானிக்கிறது என்ற உண்மையை மூடிமறைக்க அவர்கள் உதவுகின்றனர்.
தொழிலாளி வர்க்கம் மற்றும் பாடுபடும் விவசாயிகளுடைய பணியானது தற்போதுள்ள பாராளுமன்ற சனநாயகத்தை பாதுகாப்பதல்ல. தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளுடைய கடமையானது இந்த முதலாளி வர்க்க சனநாயக அமைப்பை, ஒரு பாட்டாளி வர்க்க சனநாயக அமைப்பைக் கொண்டு மாற்றியமைப்பதாகும்.
நிகழ்ச்சி நிரலை முதலாளி வர்க்கம் தீர்மானிக்கும் இந்த முதலாளித்துவ அமைப்பை, முதலாளி வர்க்க சனநாயகம் கட்டிக் காக்கிறது. பாட்டாளி வர்க்க சனநாயக அமைப்பு, முதலாளித்துவத்திலிருந்து சோசலிசம் மற்றும் கம்யூனிசத்திற்கான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு சேவை செய்கிறது. அதில் உழைக்கும் வர்க்கம் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கிறது. அத்தகைய அமைப்பில், உழைக்கும் மக்களுடைய சனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படும் அதே நேரத்தில், தொழிலாளிகளையும் விவசாயிகளையும் சுரண்டுகின்ற “உரிமை” முதலாளி வர்க்கத்திற்கு மறுக்கப்படும்.
பாட்டாளி வர்க்க சனநாயக அமைப்பில், இறையாண்மையானது மக்களுடைய கைகளில் இருக்கும். தேர்தலில் நிற்கக்கூடிய வேட்பாளர்களைத் தீர்மானிப்பதில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். சட்டங்களையும் கொள்கைகளையும் முன்வைப்பதற்கும், நாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளை எந்த நேரத்திலும் திருப்பி அழைக்கவும் நமக்கு உரிமை இருக்கும். வேட்பாளர்களைத் தீர்மானிப்பதிலும் தேர்ந்தெடுப்பதிலும் முழு செயல்முறைக்கும் தேவைப்படும் நிதியை அரசு செலவு செய்யும். மக்களோடு தொடர்பு கொள்ள எல்லா வேட்பாளர்களுக்கும் சமமான நேரமும், வாய்ப்பும் உறுதிசெய்யப்படும்.
தோழர்களே,
தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்களுடைய நலன்களைப் பாதுகாக்க கூடிய ஒரு புதிய அமைப்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நோக்கத்தை அடைவதற்கு முக்கியமான காரணியானது, மார்க்சிச லெனினிச அறிவியல் கோட்பாடுகளை உறுதியாக உயர்த்திப் பிடிக்கும் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிக் கட்சியைக் கட்டி பலப்படுத்துவதாகும்.
கடந்த 44 ஆண்டுகளில் நாம் கட்டியிருப்பது மிகவும் விலை மதிப்புள்ளதாகும். இந்திய சமுதாயத்தின் விதியையும் எதிர்காலத்தையும் நிர்ணயிப்பதில் இது முக்கியமான காரணியாகும்.
தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இடையில் அடிப்படை அமைப்புகளைக் கட்டுவதன் மூலம் கட்சியை மேலும் நாம் வலுப்படுத்த வேண்டும். சனநாயக மத்தியத்துவம் என்ற அமைப்புக் கோட்பாட்டை நடைமுறையில் செயல்படுத்துவதற்கு நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்!
முதலாளி வர்க்கத்துக்கு எதிராகவும், தங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாத்தும் பரந்துபட்ட தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும் மக்களுடைய அரசியல் ஒற்றுமையைக் கட்டுவதற்கான வேலையைத் தீவிரப்படுத்துவோம்!
முதலாளி வர்க்க கருத்தியலோடு எல்லாவகையான சமரசத்தையும் எதிர்த்து விடாப்பிடியான போராட்டத்தை மேற்கொள்வதன் மூலம் கம்யூனிச இயக்கத்தில் ஒற்றுமையை மீண்டும் கட்டி அமைக்கும் வேலையைத் தீவிரப்படுத்துவோம்!
மார்க்சிச லெனினிசத்தை நாம் நன்கு கற்றுத் தெளிவோம்! நாமும், தொழிலாளி வர்க்கமும் மார்க்சிச லெனினிச அறிவியலை ஆயுதமாகக் கொண்டு தற்போதுள்ள அமைப்பைப் பற்றிய எல்லா மாயைகளையும் உதறித் தள்ளுவோம்!
சனநாயகம் பற்றியும் அரசு பற்றியும் பரப்பப்பட்டுள்ள குழப்பத்தை தெளிவுப்படுத்துவதற்காக நம்முடைய எல்லா சக்தியையும் செலவிடுவோம்! தற்போதுள்ள முதலாளிவர்க்க அரசை மாற்றி ஒரு பாட்டாளி வர்க்க அரசை நிறுவ வேண்டிய அவசியத்தை தொழிலாளர்களும் விவசாயிகளும் புரிந்து கொண்ட பின்னர், இந்தியப் புரட்சி முன்னேறி பீடு நடை போடுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடூடி வாழ்க!
புரட்சி ஓங்குக!
இன்குலாப் ஜிந்தாபாத்!