புத்தாண்டு வாழ்த்துக்கள்

2025 புத்தாண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் மத்தியக்குழு தன்னுடைய எல்லா உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. தங்களுடைய உரிமைகளுக்காகவும் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடி வருகின்ற எல்லா தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கு எதிராக வீரம் மிக்க போராட்டத்தை மேற்கொண்டு வரும் பாலஸ்தீன, லெபனிய மற்றும் பிற எதிர்ப்புப் போராளிகளின் வீரம் மிக்க செயல்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம். இந்த பூதாகரமான குற்றத்திற்கு எதிராக உலகெங்கிலும் நடைபெற்று வரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களைப் போற்றுகிறோம். முதலாளித்துவ சுரண்டலுக்கும், அரசு பயங்கரவாதத்திற்கும், சனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதற்கும் எதிராக எல்லா நாடுகளைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கமும் மக்களும் மேற்கொண்டுவரும் போராட்டங்களை நாம் வாழ்த்துகிறோம்.

தனியார்மயத் திட்டங்களுக்கு எதிராக எவ்வித சமரசமின்றிப் போராடிவரும் இந்திய இரயில்வே, மின்சார நிறுவனங்கள், நிலக்கரி சுரங்கங்கள், வங்கிகள், காப்பீடுகள், தொலைத்தொடர்பு மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களை வணங்குகிறோம். தீவிரமடைந்துவரும் சுரண்டலுக்கு எதிராக வாகன உற்பத்தி நிறுவனங்கள், மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்பம், எஃகு, ஆடைகள் உற்பத்தி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுடைய போராட்டங்களை நாங்கள் போற்றுகிறோம். உத்தரவாதமான ஓய்வூதிய உரிமை உட்பட தொழிலாளர்களாக தங்களுக்குரிய உரிமைகளைக் கோரிப் போராடிவரும் அங்கன்வாடி மற்றும் ஆஷா தொழிலாளர்கள், பிற மருத்துவ பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசாங்க ஊழியர்கள் மற்றும் பிறருக்கு வணக்கம் செலுத்துகிறோம்.

ஏகபோக முதலாளித்துவ திட்டமாகிய வேளாண் சந்தைச் சீர்திருத்தங்களை கடைபிடித்து வருவதில் உடும்புப்பிடியாக நிற்கின்ற மத்திய அரசுக்கு எதிராக குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதத்திற்காக தங்களுடைய போராட்டத்தில் வீரத்தோடு உறுதியாக நின்று வருகின்ற விவசாயிகளை நாங்கள் வணங்குகிறோம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் பாகுபாடுகளுக்கும், அதிகரித்து வரும் வன்முறைகளுக்கும் எதிராக விடாப்பிடியாகப் போராடி வருகின்ற பெண்களுக்கும் ஆடவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். வேலை இல்லாத் திண்டாட்டத்தை எதிர்த்தும், அனைவருக்கும் சமமான – தரமான கல்வியைக் கோரியும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற இளைஞர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம். வகுப்புவாத மோதல்களைத் தூண்டி விடுவதற்காக அதிகாரத்தில் இருப்பவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிராக எல்லா மத நம்பிக்கை கொண்ட மக்களுடைய போராட்டங்களை நாங்கள் போற்றுகிறோம். தங்களுடைய அடிப்படைக் கோரிக்கைகளை பாதுகாப்பதற்காக துணிவுடன் போராடி வருகின்ற கனடா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த இந்திய மாணவர்களின் வெற்றிக்கு நாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் ஒரு சிறுபான்மையான பகாசூர பணக்காரர்கள் மென்மேலும் கொழுத்து வருகின்ற அதே நேரத்தில், பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பாதுகாப்பற்ற வாழ்வாதாரம் உட்பட மிக மோசமான பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.  அரசியல் அதிகாரத்தின் தன்மையிலும், பொருளாதாரத்தின் போக்கிலும் ஒரு தரமான மாற்றத்திற்காக திரளான மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சிப் போக்கின் திசையைத் தீர்மானிப்பதிலும் அனைவருடைய தேவைகளை நிறைவு செய்கின்ற வகையில் சமூக உற்பத்தி இருப்பதை உறுதி செய்வதிலும் தங்களுக்குத் தெளிவான பங்கை அளிக்கக் கூடிய ஒரு அமைப்பை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள்.

தற்போதைய சூழ்நிலைகள், முதலாளி வர்க்க சனநாயகத்தை மாற்றி உயர்ந்த அமைப்பாகிய ஒரு பாட்டாளி வர்க்க சனநாயகத்தைக் கோருகின்றன. அப்படிப்பட்டதொரு அமைப்பில் அரசியல் கட்சிகளின் பங்கானது பெரும் திரளான உழைக்கும் மக்களின் கைகளில் தீர்மானிக்கும் அதிகாரம் இருப்பதை உறுதி செய்வதாக இருக்கும். முதலாளி வர்க்க ஆட்சியைத் தூக்கி எறிவதிலும், உழைக்கும் மக்களுடைய ஆட்சி அதிகாரத்தை நிர்மாணித்து முதலாளித்துவ அமைப்பிலிருந்து சோசலிசத்திற்கு புரட்சிகர மாற்றங்களைச் செயல்படுத்துவதிலும், வர்க்கங்களற்ற கம்யூனிச சமுதாயத்திற்கு பாதை அமைப்பதிலும் போராட்டங்களுக்குத் தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்க வேண்டும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடமையை நிறைவேற்றுவதற்கு தொழிலாளி வர்க்கத்திற்குத் தேவைப்படும் விழிப்புணர்வையும், அமைப்பையும் அளிப்பது எல்லா நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் சந்தித்து வரும் சவாலாகும்.

புரட்சிகரமான கண்ணோட்டத்தோடு புத்தாண்டை நாம் வரவேற்போம். நம்மை எதிர் கொண்டுள்ள கடமைகளை துணிவோடும் உறுதியோடும் எதிர்கொள்வோம். நம் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமையப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. முதலாளி வர்க்க ஆட்சியை நாம் முடிவுக்கு கொண்டு வந்து, அரசியல் அதிகாரத்தை நம் கைகளில் எடுத்துக்கொள்ளும்போது தொழிலாளிகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *