ஜான்சி மருத்துவமனையில் தீ:
தற்போதைய முதலாளித்துவ அமைப்பின் மனிதாபிமானமற்ற முகம்

2024 நவம்பர் 15 அன்று இரவு, சுமார் 10:30 மணியளவில், உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (SNCU) ஒரு பெரும் தீ பிடித்தது. இந்தத் தீயில் புதிதாகப் பிறந்த 10 பச்சிளங் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 குழந்தைகள் பலத்தத் தீக்காயம் அடைந்தனர். அவர்களில் ஒரு குழந்தை நவம்பர் 18 அன்று இறந்தது.

இந்த விபத்தின் போது 49 குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 39 குழந்தைகளை மட்டுமே வெளியே கொண்டுவர முடிந்தது. அவர்களில் பலர் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில் இருந்தனர். இந்த அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இங்கு வைக்கப்பட்டிருந்த தீயை அணைக்கும் சிலிண்டர்கள் காலாவதியாகி விட்டனவாக (பழையனவாக) இருந்தன.

இது போலவே, திண்டுக்கல் மாவட்டம் திருச்சி சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் டிசம்பர் 12 அன்று  இரவு 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுக்கடங்காமல் தீ பரவியதால் மருத்துவமனையின் உள்ளே சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டு பரிதவித்தனர்.

இந்த தீ விபத்தின் போது மருத்துவமனை லிஃப்ட் மின்சாரம் தடைபட்டதன் காரணமாக லிஃப்டில் இருந்த சிறுவன் உட்பட 6 பேர் வெளியேற முடியாததால் தீயில் கருகியும் புகை மண்டலத்தால் மூச்சுத்திணறியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மருத்துவமனைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை அரசு அலட்சியம் செய்வதால், இதுபோன்ற வேதனையான விபத்துகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. கடந்த மாதம் சீல்டாவில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த ஆண்டு மே மாதம், தில்லியில் உள்ள பேபி கேர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பிறந்த குழந்தைகள் உயிரிழந்தன. நவம்பர் 2021 இல், போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குழந்தைகள் இறந்தனர். சனவரி 2021 இல், மராட்டிய மாநிலத்தில் உள்ள பண்டாரா மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பிறந்த 10 பச்சிளங் குழந்தைகள் இறந்தன. டிசம்பர் 2011 இல், கொல்கத்தாவில் உள்ள ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 89 பேர் இறந்தனர். ஆகஸ்ட் 2020 இல், குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஸ்ரேயா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளிகள் இறந்தனர். இதுபோன்ற ஒவ்வொரு விபத்துக்குப் பிறகும், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அரசாங்கம் பெரிய வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஆனால், இதுபோன்ற விபத்துகள் மீண்டும் மீண்டும் நடந்து வருவது, தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பு மற்றும் அதை நடத்தும் அரசின் மிகவும் மனிதாபிமானமற்ற தன்மையைப் பிரதிபலிக்கின்றன.

அனைத்து குடிமக்களுக்கும் தரமான மற்றும் பாதுகாப்பான மருத்துவ சேவையை வழங்குவது அரசின் கடமையாகும். ஆனால் தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பின் கீழ், மருத்துவ பாதுகாப்பை முதலாளிகளுக்கு அதிகபட்ச இலாபம் தரும் ஆதாரமாக அரசு மாற்றி வருகிறது. மருத்துவம் பெருமளவில் தனியார் மயமாக்கப்படும் வேளையில், அரசு மருத்துவமனைகளின் சேவைகள் திட்டமிட்ட முறையில் சீரழிக்கப்பட்டு வருகின்றன. ஏகபோக முதலாளிகள் தங்களுடைய தனியார் மருத்துவமனைகளை நிறுவி நோயாளிகளைக் கொள்ளையடிக்க எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. ஜான்சி மருத்துவமனையில் நடந்த விபத்தும், இதுபோன்ற பல விபத்துகளும் இதன் விளைவாகும். இந்த விபத்துக்களுக்கு உண்மையில் காரணமான உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளுக்கும், மருத்துவ அமைச்சரகமும் இதில் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல உலாவி வருகின்றனர். அவர்கள் ஒருபோதும் இந்தக் கொடிய குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவதில்லை.

முதலாளிகளின் இலாபத்தைப் பெருக்குவதற்காக இப்படி மக்களின் வாழ்வோடு விளையாடும் இந்த இந்திய அரசால் குடிமக்கள் அனைவரின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஒருபோதும் உறுதி செய்ய முடியாது. மருத்துவ சேவை மென்மேலும் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராக நாம் தொடர்ந்து போராட வேண்டும். இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமான அனைத்து அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டுமெனக் கோர வேண்டும். அனைத்து குடிமக்களும் கட்டுபடியாகக் கூடிய விலையில் பாதுகாப்பான மற்றும் தரமான சுகாதார சேவையைப் பெறுவதற்கு, நாடெங்கிலும் ஒரு விரிவான அனைவருக்குமான மருத்துவ பாதுகாப்பு முறையை நாம் கோர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *