மாண்புடன் வாழ்க்கையை நடத்துவதற்கு ஏற்ற ஊதியத்திற்கான போராட்டம் என்ற தலைப்பில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் 2024 அக்டோபர் 27 ஆம் தேதி அன்று ஒரு கூட்டத்தை நடத்தியது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர் அமைப்புகளும், தொழிற்சங்க ஆர்வலர்களும், செயற்பாட்டாளர்களும் மற்றும் ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் இதில் பங்கேற்றனர்.
தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் திரு சந்தோஷ் குமாரும், கட்டிட தொழிலாளர் பஞ்சாயத்து சங்கத்தின் தலைவர் திரு சுபாஷ் பத் நகரும், காம்கார் ஏக்தா கமிட்டியின் துணைத் தலைவராகிய திரு கிரிஷ் உம், அனைத்து இந்திய மின்சார ஊழியர்கள் பெடரேஷனின் தேசிய செயலாளராகிய திரு கிருஷ்ண போயரும், பாரா இந்து ராவ் மருத்துவமனை ஊழியர் சங்கத்தின் செயலாளர் சஞ்சய் குமார் தாக்கூர் ஆகியோர் முக்கிய உரையாற்றினர்.
கூட்டத்தை திரு பிர்ஜு நாயக் நடத்தினார்.
தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் சார்பாக உரையாற்றிய திரு சந்தோஷ் குமார் நமது நாட்டில் எல்லா தொழிலாளர்களுக்கும் ஒரு வாழ்க்கை நடத்தக்கூடிய ஊதியத்தை உறுதி செய்யுமாறு தொழிலாளர்கள் அரசை மீண்டும் மீண்டும் கேட்டு வருகிறார்கள் என்றார். தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தோடு ஒரு மாண்புமிக்க வாழ்க்கை நடத்துவதற்காக அப்படிப்பட்டதொரு ஊதியத்தைக் கோரி வருகிறார்கள். வேலை இழப்பு, நோய்நொடி, ஊனம் அல்லது வயது முதிர்வு ஏற்படுமானால் உரிய பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றிற்காகப் போராடி வருகிறார்கள். தொழிலாளர்களின் இந்த கோரிக்கைகளை அரசாங்கம் பல்லாண்டுகளாக புறக்கணித்து வருகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திறனற்ற தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூபாய் 20,358-ஐ மத்திய அரசாங்கம் அறிவித்து இருப்பதைக் குறிப்பிட்ட அவர், இந்த ஊதியத்தை கொண்டு எந்த நகரத்திலும் நான்கு உறுப்பினர்கள் கொண்ட ஒரு தொழிலாளி குடும்பம் வாழ்க்கை நடத்துவது மிகவும் கடினம் என்பதை அத்தியாவசிய பொருட்களின் விலைகளை எடுத்துக்காட்டாக கொண்டு அவர் விளக்கினார். குழந்தைகளுடைய கல்வி, குடும்ப உறுப்பினர்களுடைய உடல்நலம் போன்றவற்றைக் கவனிப்பதற்கு மிகுந்த பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே பெரும்பாலான தொழிலாளர்கள் நிரந்தரமாக கடனாளியாக இருக்க நேரிடுகிறது என்றார் அவர். இந்திய அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் நெறிகளில் ஒன்று வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற ஒரு ஊதியத்தை உறுதி செய்வதாகும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த 76 ஆண்டுகளில் எந்த ஒரு அரசாங்கமும் மாண்புடன் வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற ஊதியத்தை உறுதி செய்யவில்லை என்று கூறினார்.
குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் அடிப்படை பற்றிய விளக்கிய திரு சந்தோஷ் குமார், ஒரு தொழிலாளி அடுத்த நாள் வேலைக்கு வந்து முதலாளிகளுக்கு உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச ஊதிய அளவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறினார்.
மத்திய மாநில அரசாங்கங்களில் நிரந்தர வேலையில் இருக்கும் தொழிலாளர்கள் நீங்கலாக, நாட்டிலுள்ள 90 சதவீத தொழிலாளர்களுக்கு எந்த குறைந்தபட்ச ஊதியமும் இல்லை என்பதைத் தெளிவாக அவர் விளக்கினார். அரசு நிறுவனங்களில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள், தனியார் மற்றும் முறைசாரா துறைகளில் உள்ள தொழிற்சாலைத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், ஆஷா தொழிலாளர்கள், உணவு வழங்கும் தொழிலாளர்கள், கிக் தொழிலாளர்கள், பண்ணைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், 100 நாள் வேலைத்திட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றவர்களை எடுத்துக்காட்டாக கூறினார். இந்த எல்லா துறைகளிலும் தொழிலாளர்கள் மிகக் கடுமையாக சுரண்டப்பட்டு வருகிறார்கள். வேலைக்கு எவ்வித உத்திரவாதமும் இன்றி இளம் தொழிலாளர்கள் பயிற்சி, அப்ரண்டீஸ் போன்ற திட்டங்களின் கீழ் கடுமையாகச் சுரண்டப்பட்டு வருகிறார்கள். ஆண் தொழிலாளர்களை காட்டிலும் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யுமாறு பெண் தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
ஒவ்வொரு மாநில அரசாங்கமும் விருப்பப்படி தத்தம் மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்துக் கொள்வதை ஆளும் முதலாளி வர்க்கம் வேண்டும் என்றே உறுதி செய்திருக்கிறது. குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டால் மூலதனம் வேறு பிற மாநிலங்களுக்கு சென்று விடும் எனவே இந்த மாநிலம் வளர்ச்சி பெறாது என்ற சாக்கு போக்கைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாநில அரசாங்கமும் குறைந்தபட்ச ஊதியத்தை மிகக்குறைவாக வைத்திருக்கிறார்கள். இதே தர்க்கத்தை கூறி அந்நிய மூலதனத்தை இந்தியா ஈர்ப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்றும் எனவே நமது தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறைந்தபட்ச ஊதியத்திற்கு வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறுகிறது.
எல்லா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒரு மாண்புடன் கூடிய வாழ்க்கை நடத்துவதற்கான ஊதியம் என்பது முற்றிலும் நியாயமான கோரிக்கை என்பதை திரு சந்தோஷ் வலியுறுத்தினார். குறைந்தபட்ச ஊதியத்தில் கொண்டுவரப்படும் உயர்வானது முழு தொழிலாளி வர்க்கத்தின் சராசரி ஊதியத்தையும் உயர்த்துகிறது. அதுபோலவே குறைந்தபட்ச ஊதியம் குறையுமானால் அது எல்லா தொழிலாளி வர்க்கத்தின் சராசரி ஊதியத்தையும் குறைக்கிறது.
இறுதியாக வாழ்க்கை நடத்துவதற்கான ஊதியத்திற்கான போராட்டத்தை இந்த முதலாளித்துவ அமைப்பை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தோடு தொழிலாளி வர்க்கம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். முதலாளிகளுடைய ஆட்சி அதிகாரத்திற்கு பதிலாக தொழிலாளர்கள் – விவசாயிகளுடைய ஆட்சியை நாம் நிறுவ வேண்டும். முக்கிய உற்பத்தி மற்றும் பரிமாற்ற கருவிகளை முதலாளிகளுடைய கைகளிலிருந்து பறித்து சமுதாயத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களுடைய அதிகரித்து வருகின்ற பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதை தொழிலாளிகள் – விவசாயிகளுடைய அரசு மட்டுமே உறுதி செய்ய முடியும்.
குறிப்பிட்ட கால ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு வகையான வேலை ஒப்பந்தங்கள் மூலம் தொழிலாளர்கள் முதலாளிகளால் மிகக் கொடூரமாக சுரண்டப்பட்டு வருகிறார்கள் என்பதை திரு கிருஷ்ணா போயர் எடுத்து விளக்கினார். அரசு நிறுவனங்களும் சேவைகளும் மிக விரைவாக தனியார்மயப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மேலும் மேலும் அதிக அளவில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுக்கப்பட்டு வருகிறது. எல்லா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஒன்றுபட்டு ஒரு கண்ணியமான வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற ஊதியத்திற்காக போராட வேண்டிய தேவையை அவர் வலியுறுத்தினார்.
அரசு அலுவலகங்களிலும், அரசு மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் அதிக அளவில் ஒப்பந்த முறை பயன்படுத்தப்பட்டு வருவதை எடுத்துக்காட்டுகளோடு டாக்டர் சஞ்சய் குமார் தாகூர் குறிப்பிட்டார். இதன் காரணமாக பெரும்பாலான தொழிலாளர்கள் பெயரளவில் குறைந்தபட்ச ஊதிய அடிப்படையில் ஒப்பந்தத்திற்கு எடுக்கப்பட்டாலும் உண்மையில் அவர்களுக்கு அதில் 50 லிருந்து 60% மட்டுமே கொடுக்கப்படுகிறது. போதுமான ஊதியம் கிடைக்காத காரணத்தால் இந்த தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பங்களும் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று, ஒரு மருத்துவராக தன்னுடைய அனுபவத்திலிருந்து கூறினார். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக எல்லா தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் போராட வேண்டும் என்றார்.
காம்கார் ஏக்தா கமிட்டியின் துணைச் செயலாளர் ஆகிய கிரிஷ் பேசுகையில் இந்த 21 ஆம் நூற்றாண்டில் உணவு, உடை, இருப்பிடம் போன்றவை மட்டுமின்றி கல்வி, சுகாதாரம், மருத்துவம், மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து ஆகியவை எல்லாம் ஒவ்வொரு தொழிலாளியும் வாழ்க்கை நடத்துவதற்கான அடிப்படைத் தேவைகளாக ஆகி இருக்கின்றன என்றார். மாண்புடன் வாழ்க்கை நடத்துவதற்கான ஊதியம் இந்த எல்லா தேவைகளையும் நிறைவு செய்வதாக இருக்க வேண்டும். இரயில்வே ஓட்டுநர்கள், விமான ஒட்டிகள், தொழிற்சாலை தொழிலாளர்கள் போன்று பல்வேறு துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நீண்ட நேர வேலை மற்றும் சுரண்டலுக்கு ஆளாவதை அவர் குறிப்பிட்டார். எனவே இந்தத் தொழிலாளர்கள் பல்வேறு வகையான நோய்களுக்கு ஆளாகி இளம் வயதிலேயே இறக்க நேரிடுகிறது. எல்லா தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை கொடுத்தால் பொதுப் பணிகளுக்கு செலவழிக்க அரசாங்கத்திடம் எந்த தொகையும் இருக்காது என்று ஆளும் முதலாளி வர்க்க பேச்சாளர்கள் முன்வைக்கும் வாதத்தை அவர் மறுத்தார். நமது நாட்டு மற்றும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் தலைமையில் உள்ள ஆளும் முதலாளி வர்க்கம், முழுவதுமாக இரத்தம் உறிஞ்சுவதாக இருக்கிறது என்றும் இவ்வாறு தொழிலாளர்களைச் சுரண்டுவதன் மூலம் அளவற்ற செல்வத்தை அவர்கள் குவித்து வைத்து இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். இன்னொரு பக்கம் நமது நாட்டின் எல்லா செல்வதை உருவாக்குபவர்கள் தொழிலாளர்களும் விவசாயிகளும் ஆவர். எனவே ஒரு மாண்புமிக்க வாழ்க்கை நடத்தக்கூடிய ஊதியம் அவர்களுடைய உரிமை என்று அவர் கூறினார். இந்த உரிமையை அடைவதற்கு அரசு அதிகாரத்திலிருந்து ஆளும் முதலாளி வர்க்கத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக தொழிலாளிகள் விவசாயிகளுடைய அதிகாரத்தை நிறுவ வேண்டும்.
திரு சுபாஷ் பட்நகர் தொழிலாளர்கள் எப்படியாவது உயிர் பிழைத்து இருந்து அடுத்த நாள் வேலைக்கு வரக்கூடிய அளவுக்கு மட்டுமே தொழிலாளிக்கு ஊதியத்தை முதலாளிகள் கொடுக்கின்றனர் என்று எடுத்துக்காட்டுகளோடு விளக்கினார். பெரும்பாலான தொழிற்சாலைகளில் அறிவிக்கப்படும் ஊதியமானது அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியமாகக் காட்டப்பட்டாலும் உண்மையில் அதிலிருந்து மிகப்பெரிய தொகையை ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறார்கள். மாண்புள்ள வாழ்க்கை நடத்துவதற்கான ஊதியம் என்பது நம்முடைய உரிமையாகும், அதற்காக எல்லாத் தொழிலாளர்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற பலரும் இந்த முக்கியமான பிரச்சனை குறித்து தத்தம் கருத்துக்களை கூறினார். கிரேட் பிரிட்டனின் இந்திய தொழிலாளர்கள் அசோசியேஷனைச் சேர்ந்த திரு தல்விந்தர் மற்றும் திரு செல்வந்தர், உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற ஊதியத்திற்காக நடைபெற்று வரும் போராட்டம் குறித்தும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான தொழிலாளர்களுடைய போராட்டத்தில் இது ஒரு முக்கியமான அங்கம் என்றும் விளக்கினார்கள். முதலாளித்துவ ஆட்சியை மாற்றுவோம் என பொய்யான வாக்குறுதிகள் கொடுக்கும் முதலாளித்துவக் கட்சிகளை வெட்ட வெளிச்சமாக்க வேண்டும் என போராளி ஆசிரியர் பேராசிரியர் மன்பகஞ்சன் அழைப்பு விடுத்தார். பொய்யான குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வரும் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக 2004 இல் இருந்து போராடிவரும் ஒரு துணிவான தலைவராகிய குஷி ராம் இந்தப் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடைய ஒற்றுமையை பலப்படுத்தி வாழ்க்கை வாழ்வதற்கான ஊதியத்திற்கான போராட்டத்தை முன் கொண்டு செல்ல வேண்டுமென மக்களாட்சி இயக்கத்தின் துணைத் தலைவர் திரு அனுமான் பிரசாத் சர்மா அழைப்பு விடுத்தார். தன்னுடைய வேலை நிலைமைகள் குறித்து விளக்கிய ஒரு இளம் பெண் தொழிலாளர், வேலை செய்யும் இடங்களில் குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தினார்.
இறுதியில் உரையாற்றிய திரு பிர்ஜு நாயக், தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் எல்லா உழைக்கும் மக்களுடைய ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்றார். முதலாளித்துவ சுரண்டல் அமைப்புக்கு முடிவு கட்டிவிட்டு அதற்கு பதிலாக தொழிலாளர் – விவசாயி அதிகாரத்தை நிறுவும் நோக்கத்தோடு ஒரு மாண்புடன் கூடிய வாழ்க்கை வாழ்வதற்கான ஊதியத்திற்கான போராட்டத்தை நாம் முன் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.