“நிர்பயாவிலிருந்து அபாயா வரை நினைவுகூர்வோம், எதிர்ப்போம்” என்ற தலைப்பில், பெண்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான ஒரு ஆர்பாட்டத்தை டிசம்பர் 16 அன்று தில்லி ஜந்தர்மந்தரில், பல்வேறு பெண்கள் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலை செய்யும் பெண்கள், ஆடவர்களுடன் பல மாணவர்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
இந்த எதிர்ப்புக் கூட்டத்தை ஆல் இந்தியா டெமாக்ரடிக் பெண்கள் அசோசியேஷன், நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியப் பெண்கள், முற்போக்கு பெண்கள் சங்கம், ஆல் இந்தியா மகிலா சன்ஸ்க்ருதிக் சங்கத்தன், போராடும் பெண்களுடைய மையம், பிரகதிசீல் மகிலா சங்கம், ஆல் இந்தியா பிரோகிரெசிவ் பெண்கள் அசோசியேஷன், ஜிம்மாதாரி எஸ் டபிள்யூ ஓ மற்றும் அலிஃபா-என்ஏபிஎம் ஆகிய அமைப்புகள் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.
கூட்டத்தின் துவக்கத்தில், “ஒற்றுமை ஓங்குக”, “சமுதாயத்தின் விடுதலைக்கு பெண்கள் விடுதலை ஒரு முன் நிபந்தனையாகும்”, “அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி, அடிமைத்தனத்திற்கும் அநீதிக்கும் நாங்கள் முடிவு கட்டுவோம்”, “குற்றவாளிகளுக்கு தண்டனை கொடு” போன்ற போர்க்குணம் மிக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த அமைப்புகளுடைய பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றினர். நிர்பயா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு காட்டுமிராண்டி தனமாகக் கொலை செய்யப்பட்ட பின் 12 ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர். குற்றம் நடந்தபோது பல்லாயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். பெண்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முறையான சீர்திருத்தங்களை, இயக்கம் கோரியது. மக்களுடைய கோபத்தின் பிரதிபலிப்பாக அரசாங்கம் ஒரு குழுவை நிறுவியது. அக்குழு பல சட்ட சீர்திருத்தங்களை முன்மொழிந்தது. இருப்பினும் கடந்த எல்லா ஆண்டுகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் எந்த மாற்றமும் இல்லாததோடு, மாறாக அவை மேலும் அதிகரித்து வருகின்றன.
பெண்கள் சந்தித்து வரும் வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் அவர்களே காரணமென குற்றம் சாட்டப்படுவதற்கு எதிராக பேச்சாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கே பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் அவமானத்தையும், கண்ணியக் குறைவையும் சந்திக்க வேண்டியுள்ளது. கட்டுவா, யுனோவா, ஹாத்ராஸ், ஷாஜெகான்பூர் போன்ற கற்பழிப்பு மற்றும் வன்முறை நிகழ்வுகளுக்கும், பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிரான அநீதிக்கும், கடந்த ஓராண்டு காலமாக மணிப்பூரில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் கொடூரமான வன்முறைகளுக்கும், 2024 ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவமனையில் இளம் மருத்துவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வுக்கும், அரசே பொறுப்பேற்று பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளதாக பேச்சாளர்கள் கூறினர்.
பெண்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் இழைக்கப்பட்டு வரும் பாரபட்சம், ஒடுக்குதல்கள், பாலியல் வன்முறைகள் மற்றும் குற்றங்களுக்கு இந்த அமைப்பை கட்டிக் காக்கின்ற தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பும், அரசுமே பொறுப்பு என்று பேச்சாளர்கள் கூறினர். முதலாளித்துவ குடும்பங்களின் நலன்களை அரசு கட்டிக் காக்கிறது. பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் தீவிர சுரண்டலும், முதலாளிகள் தங்களுடைய இலாபங்களைப் பெருக்குவதற்கு உதவுகிறது. பெண்களுக்கு எதிரான சுரண்டலும் பாரபட்சமும் நீடிப்பதற்கு சட்ட அமைப்பு, நீதித்துறை, செயலாக்கத்துறை, காவல் துறை, இராணுவம் போன்ற முழு அரசியல் அமைப்பும் உதவுகின்றன.
எல்லா சுரண்டப்பட்ட மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்களின் அனுபவத்தின் அடிப்படையில் நம்முடைய ஒன்றுபட்ட போராட்டங்கள் மட்டுமே நமக்கு நீதி கிடைக்க வழி செய்யும் என்ற உறுதியான கருத்தை கூட்டம் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தது. ஒடுக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் நாம் அனைவரும் நம்முடைய ஒற்றுமையையும் போராட்ட அமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பெண் மற்றும் ஆணின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய ஒரு சமுதாயத்தை நாம் நிறுவ வேண்டும், அந்த உரிமைகளை யார் மீறினாலும், அவர்கள் சமுதாயத்தின் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.