அயோத்தியாவில் இருந்த 16 ஆம் நூற்றாண்டின் தேசிய நினைவுச் சின்னம் காட்டிமிராண்டித்தனமாக உடைத்து நொறுக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடந்து விட்டதை டிசம்பர் 6, 2024 குறிக்கிறது. அது, மத்தியில் காங்கிரசு கட்சியின் தலைமையிலும், உத்தரப்பிரதேசத்தில் பாஜக கட்சியின் தலைமையிலும் இருந்த அரசாங்கங்களின் மேற்பார்வையில் இடித்து தகர்க்கப்பட்டது. இவ்வாறு தகர்க்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதற்கும், போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கும் மக்களுடைய உரிமைகளை பாதுகாத்து பல்லாண்டுகளாக இணைந்து வேலை செய்து வரும் பல அமைப்புகள் தில்லி ஜந்தர் மந்தரில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினர்.
கூட்டம் நடைபெற்ற இடத்தை சுற்றிலும், “மக்களை பிளவுபடுத்தும் அரசியல் ஒழிக!”, “நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான போராட்டத்தை முன் கொண்டு செல்வோம்!”, “அரசு பயங்கரவாதமும் அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்பு வன்முறையும் ஒழிக!”, “குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!”, “அமைதி மற்றும் ஐக்கியத்திற்கான போராட்டத்தை முன் கொண்டு செல்வோம்!” என்பன போன்ற முழக்கங்களைக் கொண்ட தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த கண்டன ஆர்பாட்டத்தை மக்களாட்சி இயக்கம், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா, இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி, ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த், லோக் பக்ச, சிட்டிசன்ஸ் ஃபார் டெமோக்ரசி, ஸ்டூடண்ட் இஸ்லாமிக் ஆர்கனைசேஷன், தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், முற்போக்கு மகளிர் சங்கம், தி சீக் ஃபோரம், சி பி ஐ (எம்-எல்) நியூ புராலிடோரியன், யுனைட்டெட் முஸ்லிம்ஸ் ஃப்ரெண்ட், மற்றும் பிறர் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தனர். பங்கேற்கும் அமைப்புகளுடைய பிரதிநிதிகள் இந்த பிரச்சினை குறித்தும், அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத வன்முறைக்கும், வகுப்புவாத அடிப்படையில் மக்கள் பிளவுபடுத்தப் படுவதற்கும் எதிராக போராட்டத்தை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்தும் தத்தம் கருத்துகளை முன்வைத்தனர்.
மக்களாட்சி இயக்கத்தின் தலைவர் எஸ் இராகவன், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் டாக்டர் ராயிஸ் உதின், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த மொஹம்மத் ஷாஃபி, இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் ராவ், ஆல் இந்தியா முஸ்லிம் பர்சனல் லா போர்டு-ஐச் சேர்ந்த டாக்டர் எஸ் க்யூ ஆர் இலியாஸ், ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த்-வின் மொஹம்மத் சலீம் இன்ஜினியர், லோக் பக்சின் இரவீந்திர குமார் யாதவ், சிட்டிசென்ஸ் ஃபார் டெமோக்ரசியைச் சேர்ந்த என்டி பஞ்சோலி, சி பி ஐ (எம்-எல்) நியூ புராலிடேரியனைச் சேர்ந்த ஷியோமங்கள் சித்தான்கர் ஆகியோர் உட்பட பலரும் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினர். இந்த ஆர்பாட்டத்தில் யுனைட்டெட் முஸ்லிம்ஸ் ஃப்ரெண்ட்-ஐச் சேர்ந்த வழக்குரைஞர் ஷாஹித் அலி, சீக்கியர் ஃபோரமைச் சேர்ந்த லாலி சுஹானி, அல் ஹிந்த் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஒன்கார் நாத் கட்டியார் மற்றும் முற்போக்கு பெண்கள் சங்கம், தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், உமன் மூவ்மென்ட் இந்தியா, இந்திய இளைஞர் ஒற்றுமை சங்கம் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் பங்கேற்றனர்.
மசூதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உச்சநீதிமன்றத்திற்கு உத்தரப்பிரதேச அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை மீறி 1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியாவில் இருந்த பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபரி மசூதி கார்சேவகர்களால் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது என்பதைப் பேச்சாளர்கள் நினைவு கூர்ந்தனர். மசூதி உடைத்துத் தகர்க்கப்படுவதை தடுப்பதற்கு காங்கிரசு கட்சியின் தலைமையில் இருந்த மத்திய அரசாங்கமும், பாஜக தலைமையில் இருந்த உத்தரப்பிரதேச அரசாங்கமும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த போலீஸ் தலையிடாமல் இருப்பதை உறுதிசெய்தனர். அப்போது பாஜக கட்சியின் தலைவராக இருந்த எல்கே அத்வானி உட்பட பாஜக தலைவர்கள் மசூதி உடைத்து நொறுக்கப்படுவதை வெளிப்படையாகவே ஊக்குவித்தனர்.
பாபரி மசூதி தகர்க்கப்பட்டது ஒரு தன்னிச்சையான செயல் அல்ல என்பதையும் அதிகாரத்தில் இருந்தவவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றம் என்பதையும் எல்லா ஆதாரங்களோடு பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினர்.
மசூதி தகர்க்கப்பட்ட 10 நாட்களில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட லிபரான் ஆணையம் தன்னுடைய அறிக்கையை 17 ஆண்டுகளுக்கு பிறகு சமர்ப்பித்தது! அந்த அறிக்கையானது மசூதியைத் திட்டமிட்டு தகர்த்ததாக பல்வேறு பாஜக தலைவர்கள் உட்பட 68 பேர் மீது குற்றம் சாட்டியது. குற்றம் சாட்டப்பட்ட அந்த அனைவரையும் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி ஒரு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 2020 செப்டம்பரில் விடுதலை செய்தது. 16-ஆம் நூற்றாண்டில் அந்த இடத்தில் ஒரு கோயில் இடிக்கப்பட்டது என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றாலும் கூட, மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ஒரு இராமர் கோயிலைக் கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 2019 நவம்பரில் தீர்மானித்தது. இந்தத் தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் பாபரி மசூதி இடிக்கப்பட்ட குற்றத்தை நியாயப்படுத்தியது.
தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பை, சூரத் மற்றும் பல இடங்களில் நடத்தப்பட்ட வகுப்புவாத வன்முறைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். வகுப்புவாத வன்முறையைத் தூண்டி விட்டதில் பாஜக, காங்கிரசு கட்சி மற்றும் சிவசேனா தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர் என்று சிரிகிருஷ்ணா விசாரணை ஆணையம் உறுதிப்படுத்தி இருந்தும், அவர்கள் எவரும் தண்டிக்கப்படவில்லை.
பாபரி மசூதி இடித்துத் தகர்க்கப்பட்டதும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற வகுப்புவாத வன்முறைகளிலும் மத்தியிலும் அந்தந்த குறிப்பிட்ட மாநிலங்களிலும் அரசாங்கங்களின் தலைமையில் இருந்த அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பங்கேற்று இருந்ததையும், இந்த குற்றவியலான கட்சிகளுடைய எந்த தலைவர்களையும் நீதித்துறை தண்டிக்க தவறியதும், இப்படிப்பட்ட குற்றவியலான செயல்கள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் ஒரு தெளிவான திட்டத்தின் அங்கம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
பெரும் திரளான உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தின் மீதும், உரிமைகள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக ஒன்று கூடுகின்ற சூழலில், மசூதி இருந்த இடத்தில் ஒரு இராமர் கோயிலைக் கட்ட வேண்டுமென்ற முயற்சியானது, மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்தும் அரசியல் நோக்கம் கொண்டதாகும்.
முஸ்லிம் மக்களையும், சீக்கியர்களையும் குற்றவாளிகள் போல சித்தரிப்பது அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்பதைப் பேச்சாளர்கள் சுட்டிக் காட்டினார். வாரணாசியில் உள்ள கியான் வாப்பி மசூதி, மதுராவிலுள்ள ஷாஹி இட்கா மசூதி மற்றும் பிற வரலாற்று சின்னங்கள் பற்றி அடிப்படையற்ற கதைகள் வகுப்புவாத பதட்டத்தைத் தூண்டிவிடப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சமூக விரோத செயல்பாட்டில் எல்லா மட்டங்களிலும் உள்ள நீதிமன்றங்களும் ஒத்துழைத்து வருகின்றன. சமீபத்தில், உத்திரபிரதேசத்தின் சம்பல் நகரில் உள்ள 16 ஆம் நூற்றாண்டு மசூதி இருக்கும் இடத்தில், நீதிமன்றத்தின் அனுமதியோடு, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில் ஒரு கோவில் இருந்ததா என்று இந்திய தொல்லியல் துறையின் குழு விசாரணை நடத்தச் சென்றதற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்! அதே சமயத்தில், மத்திய பாஜக அரசின் முழு ஆதரவுடன் மதவாத சக்திகள், வரலாற்றுச் சிறப்புமிக்க அஜ்மீர் ஷெரீப் தர்காவிற்குக் கீழே கோயில் இருந்ததா என்று விசாரிக்கக் கோரி இராஜஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளனர்.
இப்படிப்பட்ட அரசு ஏற்பாடு செய்து நடத்தும் வகுப்புவாத வன்முறை, முஸ்லிம் மக்களுக்கு மட்டுமன்றி நமது நாட்டில் உள்ள எல்லா இந்திய மக்களுக்கும் எதிரான தாக்குதலாகும் என்பதில் எல்லா பேச்சாளர்களும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தனர். பாபரி மசூதி இடித்து தகர்க்கப்பட்டதற்கு காரணமானவர்களும் 1992-93 இல் வகுப்புவாத வன்முறையை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரினர். சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினருடைய கருத்துரிமை, பொதுவான மீறமுடியாத உரிமையாக மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரினர்.