உலகம் முழுவதும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களுக்கு வீரவணக்கம்!

உலகெங்கிலும் தொழிலாளர்களின் மே நாள் பேரணிகளும், அணிவகுப்புகளும்

உலகெங்கிலும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகள் மீது முதலாளிகளும், அரசாங்கங்களும் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராக மாபெரும் பேரணிகளை நடத்தினர். உலகின் பல நாடுகளில் உள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்த மே நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பல நாடுகளில் இந்தப் பேரணிகளை கட்டுப்படுத்தவும், அவற்றை அரங்கத்திற்குள் அடைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்படிப்பட்ட அனைத்துத் தடைகளையும் மீறி, தொழிலாளர்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தும் தங்கள் உரிமையைப் பாதுகாத்தனர்.

தென்கொரியா

தென் கொரியாவில், பல்வேறு நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் சுமார் 1,00,000 பேர் கலந்துகொண்டனர். மாபெரும் மே நாள் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதற்கான ஏற்பாடுகள் மே 1 ஆம் தேதிக்கு முன்பே தொடங்கிவிட்டன. தலைநகர் சியோலில் நடைபெற்ற இரண்டு பெரிய பேரணிகளில் சுமார் 30,000 பேர் கலந்து கொண்டனர். வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் பணவீக்கத்தின் காரணமாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினங்களை எதிர் கொள்ள அதிக ஊதியத்தையும், நல்ல பணிச் சூழலையும் கோரினர். பேரணியில் பங்கேற்ற செயற்பாட்டாளர் ஒருவர், “எங்கள் கூலியைத் தவிர மற்ற அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. எங்களுடைய குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துங்கள்! எங்கள் வேலை நேரத்தைக் குறையுங்கள்!” என்று கோரினார்.

சப்பான்

சப்பானின் தலைநகர் டோக்கியோவில் உள்ள யோயோகி பூங்காவில் இளைஞர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டனர். தொற்றுநோய்களின் நிதி நெருக்கடி அழுத்தங்களின் கீழ் அவர்கள் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், ​​பணவீக்கம் காரணமாக அவர்கள் மீது அதிகரித்து வரும் பொருளாதாரச் சுமையை ஈடுகட்ட தங்கள் ஊதியத்தை உயர்த்துமாறு தொழிலாளர்கள் கோரினர். பெரிய இராணுவ விரிவாக்கத்தில் முதலீடு செய்வதையும், அதையொட்டி மக்கள் மீது பொருளாதாரச் சுமையை மேலும் கூட்டும் வரிகளை அதிகரிப்பதற்கும் அரசாங்கத்தைத் தொழிலாளர்கள் கண்டித்தனர்.

இந்தோனேசியா

32 தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தோனேசிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைநகர் ஜகார்த்தாவில் ஏற்பாடு செய்திருந்த மே நாள் அணிவகுப்புகளில் சுமார் 50,000 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். தொழிலாளர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இழப்பை உருவாக்கி தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட வேலை உருவாக்கும் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆட்கள் கடத்தப்படுவதையும், வேலை அவுட்சோர்சிங்கையும் தடுக்க அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் விமர்சித்தனர். வெளிநாட்டில் பணிபுரியும் இந்தோனேசியத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென அவர்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டனர். ஜகார்த்தா மட்டுமின்றி, பண்டுங், யோக்யகார்த்தா, சுரபயா மற்றும் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் மே நாள் பேரணிகள் நடைபெற்றன.

தைவான்

தைவான் தலைநகர் தைபே நகரில் உள்ள கெட்டகலான் வீதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுகூடி, அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க அதிக ஊதியம் கோரினர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் செயற்பாட்டாளர்களும் தங்களின் உரிமைகளைக் கோருவதற்காக ஒன்று கூடினர். ஏராளமான மருத்துவப் பணியாளர்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.

லெபனான்

லெபனானில் உள்ள பெய்ரூட் நகரில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க ஆர்வலர்கள் மே நாள் பேரணிகளை ஏற்பாடு செய்தனர். இந்தப் பேரணியில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். அதிகரித்து வரும் பணவீக்கச் சுமையை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். தொடர்ந்து மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி முக்கால்வாசி மக்களை வறுமையில் தள்ளியுள்ளது. கூலி உயர்வு கேட்டு கடந்த ஓராண்டாக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

பிரான்ஸ்

ஓய்வூதிய வயதை 62ல் இருந்து 64 ஆக உயர்த்தியுள்ள சமீபத்திய ஓய்வூதிய சீர்திருத்தங்களை எதிர்த்து பிரான்சின் பல்வேறு பகுதிகளில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஒய்வூதிய சீர்திருத்தங்களை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தெருக்களில் இறங்கினர். நாடு முழுவதும் நடைபெற்ற 300-க்கும் மேற்பட்ட வேலைநிறுத்தங்களில் சுமார் 13 இலட்சம் மக்கள் பங்கேற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்பெயின்

ஸ்பெயினில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மே நாள் பேரணிகளில் பங்கேற்று, அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப தங்களின் சராசரி ஊதியத்தை உயர்த்துமாறு கோரினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 70 பேரணிகள் நடத்தப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரி சம்பளத்துடன் ஒப்பிடும்போது ஸ்பெயினில் ஊதியங்கள் மிகக் குறைவாக இருக்கின்றன. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால், மக்கள் வாழ்க்கையை நடத்துவது மிகவும் கடினமாகிவிட்டது. “பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களின் ஊதியத்தையும் உயர்த்த வேண்டும்” என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாக இருந்தது.

பாகிஸ்தான்

பாதுகாப்பு என்ற பெயரில் பாகிஸ்தானில் அனைத்து பேரணிகளும் தடை செய்யப்பட்டன. மே நாளன்று தொழிலாளர்கள் எந்தவிதமான நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்வதைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், தொழிலாளர்கள் மிகப் பெரிய அரங்கக் கூட்டங்களை நடத்தினர். தொழிலாளர்களின் தற்போதைய நிலை மற்றும் நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் விவாதித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புக்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், செயற்பாட்டாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

ஜெர்மனி

மே 1 ஆம் தேதி ஜெர்மனியின் கோப்லென்ஸில் ஒரு மாபெரும் பேரணி, ஜெர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பால் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டமைப்பில் எட்டு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 60 இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். விமானம், இரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து துறை, பொதுச் சேவைகள், சுகாதாரம் மற்றும் நகராட்சி துப்புரவு சேவைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பேரணியில் பங்கேற்றனர். ஜெர்மன் தொழிலாளர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து சம்பளம் மற்றும் வேலை நிலைமைகள் தொடர்பாக பல வேலைநிறுத்தங்களில் பங்கேற்று வருகின்றனர். கடந்த ஓராண்டாக பொதுத் துறை ஊழியர்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜேர்மனியின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சுமார் 398 மே நாள் நிகழ்ச்சிகளில் 3 இலட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இத்தாலி

இத்தாலியின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஊதிய உயர்வு மற்றும் நாட்டின் வரிக் கொள்கைகளில் சீர்திருத்தங்களைக் கோரி ரோமில் நடந்த எதிர்ப்பு ஆர்பாட்டங்களில் தொழிலாளர்கள் தீவிரமாகப் பங்கேற்றனர். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

நெதர்லாந்து

நெதர்லாந்தில் உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய அதிக ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக எதிர்ப்பு நடவடிக்கைகளை சர்வதேச தொழிலாளர் நாள் கண்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கு 3-7% ஊதிய உயர்வும், அடுத்த ஆண்டு 5% உயர்வும் அளிக்கப்பட்டது. ஆனால் முன்மொழியப்பட்ட இந்த ஊதிய உயர்வை தொழிலாளர்கள் நிராகரித்தனர், இது விலை உயர்வை ஈடுகட்டாத காரணத்தால், உண்மையான ஊதியத்தில் எந்த உயர்வும் இல்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சிரிலங்கா

சிரிலங்கா தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அரசுக்குச் சொந்தமான அனைத்துத் துறைகளையும் தனியார்மயப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கை அரசாங்கம் புதிய சிக்கன நடவடிக்கையை அறிவித்தது, அதன்படி அரசாங்க வேலைகளுக்கு இனி ஆட்சேர்ப்பு இருக்காது. சிரிலங்காவின் பொருளாதாரத்தை மீட்டெப்பதற்கு சர்வதேச நாணய நிதி விதித்துள்ள வரிகளை உயர்த்துவது, 15 இலட்சம் அரசாங்க வேலைகளை வெட்டிக் குறைப்பது மற்றும் அனைத்து அரசுக்கு சொந்தமான நிறுவனங்களையும் தனியார்மயமாக்குவது போன்ற அறிவுரைகளை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து, நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் ஒன்று கூடி மே நாள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பொருளாதார நெருக்கடியின் சுமையை மக்களின் முதுகில் ஏற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

துருக்கி

துருக்கியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மே நாளை முன்னிட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பல பேரணிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும் கலந்து கொண்டனர். வரலாற்று சிறப்புமிக்க மே நாள் சதுக்கமான தக்சிமில் பேரணி நடத்த முயன்ற தொழிலாளர்கள், காவல்துறையால் வன்முறையாக தாக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர். தொழிலாளர்களின் ஆர்பாட்டங்களைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மீறி, பல்லாயிரக்கணக்கான மக்கள் இஸ்தான்புல்லில் உள்ள மால்டெப் சதுக்கத்தில் ஒன்று கூடினர். அங்காரா, இஸ்மிர், பர்சா, தியர்பாகிர், கொன்யா, கெய்சேரி, ஆர்ட்வின், சம்சுன், யலோவா, சோங்குல்டாக் மற்றும் எஸ்கிசெஹிர் உட்பட துருக்கியெங்கும் மாபெரும் மே நாள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. துருக்கியில் அதானாவில் தொழிலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த பேரணியில் சுமார் 6,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இங்கிலாந்து

இலண்டனில் நடைபெற்ற போர்க்குணமிக்க மே நாள் பேரணியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இங்கிலாந்தில் ஏப்ரல் 8 இரவு முதல் மே 1 நள்ளிரவு வரை நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பங்கேற்றனர். இங்கிலாந்தின் மருத்துவமனைகள், மனநலம் மற்றும் பிற சமூக சேவைகளில் வேலை செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்ட செவிலியர்கள் இந்த  வேலைநிறுத்தங்களில் கலந்து கொண்டனர். வேலைநிறுத்தம் செய்த செவிலியர்கள் சிறந்த பணி நிலைமைகள் மற்றும் மேம்பட்ட வேலை வாய்ப்புகளைக் கோரி இருந்தனர். முதன்முறையாக இங்கிலாந்தில் உள்ள 125 தேசிய சுகாதார சேவை (NHS) அறக்கட்டளைகளைச் சேர்ந்த செவிலியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகக் குரல் எழுப்ப வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *