கர்நாடக தேர்தல்கள் 2023

மாற்றம் என்ற மாயை

கர்நாடகாவில் உள்ள தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் வாழ்க்கை நிலைமைகளில் மாற்றம் வரவேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், கர்நாடக சட்டமன்றத் தேர்தல்கள் 2023 மே மாதத்தில் நடைபெற்றன. இந்தத் தேர்தலின் விளைவாக பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு பதிலாக காங்கிரசு கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இதை ஒரு பெரிய மாற்றமாக செய்தி ஊடகங்களில் பேசப்படுகிறது. ஆனால், முதலாளி வர்க்கத்தின் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு செய்யப்படும் இத்தகைய மாற்றம், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை அல்லது வேலை நிலைமைகளில் எவ்வித தரமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை வரலாற்று அனுபவம் காட்டுகிறது. ஏதோ நல்லதொரு மாற்றம் வந்துவிட்டது போன்றதொரு மாயை மட்டுமே உருவாக்கப்படுகிறது.

ஒப்பீட்டளவில் கர்நாடகம் அதிக முதலாளித்துவ வளர்ச்சியடைந்த மாநிலமாகக் கருதப்படுகிறது. கர்நாடகாவின் சராசரி வருமானம், அகில இந்திய சராசரி வருமானத்தை விட கணிசமாக அதிகமாக உள்ளது. இருப்பினும், சராசரியானது மிக அதிக அளவில் நிலவும் சமத்துவமற்ற நிலையை மறைக்கிறது. ஏகபோக முதலாளிகள், சுரங்க முதலாளிகள், ரியல் எஸ்டேட் சுறாக்கள் மற்றும் பிற சுரண்டலதிபர்கள், ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் அண்மை ஆண்டுகளில் மிகப் பெரும் பணக்காரர்களாகி விட்டனர். மற்றொரு துருவத்தில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை நிலைமைகள் ஆண்டுக்கு ஆண்டு மோசத்திலிருந்து படுமோசமாக ஆகி வருகின்றன.

மிகவும் திறமையான தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் உட்பட, மாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள், தாங்கள் வேலையிலிருந்து எப்போது தூக்கி எறியப்படுவோமோ என்ற மன உளைச்சலில் தூக்கமின்றி இரவுகளைக் கழிக்கின்றனர். வேலை சந்தையில் நுழையும் இளைஞர்கள் தங்கள் வேலை வாய்ப்பு குறித்து கவலையடைந்துள்ளனர். படித்து பட்டம் பெற்றவர்கள் பொருட்களை கொண்டு செல்லும் வேலைக்காரர்களாகவும் விற்பனைப் பெண்களாகவும் குறைந்தபட்ச ஊதியத்தில் அல்லது அதற்கும் குறைவான ஊதியத்தில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

கர்நாடகாவில் அமைந்துள்ள பாதுகாப்பு உற்பத்தி மற்றும் இதர கனரக தொழிற்சாலைகளை தனியார்மயமாக்குவதை உடனடியாக நிறுத்தக் கோரி தொழில்துறை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வழக்கமான வேலைகளை ஒப்பந்த வேலைகளாக மாற்றுவது உட்பட, முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிற் சட்டங்களில் கொண்டு வரப்படும் சீர்திருத்தங்களுக்கு எதிராக எண்ணற்ற துறைகளில் உள்ள தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

விவசாய சங்கங்கள், தங்களுடைய விளைபொருட்கள் நிலையான மற்றும் இலாபகரமான விலையில் கொள்முதல் செய்யப்படுவதற்கு அரசு உத்தரவாதம் கோரி வருகின்றன. ஒவ்வொரு முதலாளித்துவக் கட்சியும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளிக்கிறது. அது ஆட்சி அதிகாரத்திற்கு வரும் போது, ​​அதே கட்சி வர்த்தக தாராளமயமாக்கல் – அதாவது, வேளாண் வணிகத்தில் அதிகபட்ச இலாபத்தை அறுவடை செய்வதற்கான இடத்தை தனியார் நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டத்தில்.உறுதியாக இருப்பதால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிக்கு துரோகமிழைக்கிறது.

வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கு முதலாளித்துவக் கட்சிகளிடம் எந்தத் தீர்வும் இல்லை. மாநிலத்தில் உள்ள காங்கிரசு மற்றும் பாஜக தலைமையிலான இரண்டு அரசாங்கங்களும் வெவ்வேறு சாதிகள் மற்றும் மத குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு வேலைகளின் ஒதுக்கீட்டை சூழ்ச்சியாக மாற்றியமைக்கின்றன. மாநிலத்தில் கிடைக்கும் வேலைகளில் 3%-க்கும் குறைவாகவே உள்ள அரசு வேலைகளுக்காக வெவ்வேறு சாதிகள் மற்றும் மத நம்பிக்கைகளைச் சேர்ந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ள வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும், வேலையின்மைக்கும் தங்களிடம் எந்தத் தீர்வும் இல்லாத நிலையில், மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் வாக்கு வங்கிகளை வளர்ப்பதற்காக சூழ்நிலையைப் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

கர்நாடகா தேர்தல் பரப்புரையில், போட்டியிடும் கட்சிகளின் பேரணிகள் மற்றும் பரப்புரைகளுக்காக மிகப் பெரிய அளவில் பணம் கொட்டி செலவழிக்கப்பட்டதை மீண்டும் காண முடிந்தது. பாஜக மற்றும் காங்கிரசு ஆகிய இரு கட்சிகளும் மற்ற அனைத்து கட்சிகளும் கூட்டாக செலவு செய்ததைக் காட்டிலும் அதிகமாக செலவு செய்துள்ளன. இந்த இரு கட்சிகளின் தேர்தல் பரப்புரைகளுக்கு மாநிலத்தில் உள்ள முதலாளிகளும், பெரும் நில உடமையாளர்களும், இந்தியாவின் மிகப்பெரிய ஏகபோக முதலாளிகளும், கர்நாடகாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களும் நிதியளித்தன.

ஏகபோக முதலாளிகள் தங்கள் பண பலத்தையும், ஊடகங்கள் மீதுள்ள அவர்களுடைய கட்டுப்பாட்டையும் பயன்படுத்தித் தேர்தலில் தங்களுக்கு விருப்பமான கட்சி வெற்றி பெறுவதை உறுதி செய்கின்றன. உழைக்கும் மக்களிடையே நிலவும் பரவலான அதிருப்தியையும், கர்நாடகாவில் பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் கோபத்தையும் எதிர்கொண்ட ஏகபோக முதலாளிகள் இந்தத் தேர்தலில் காங்கிரசு கட்சியை ஆதரித்து அதன் வெற்றிக்கு ஏற்பாடு செய்வதென முடிவு செய்தனர்.

அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிலாளர்கள் – விவசாயிகளின் பொது மக்கள் அமைப்புகளும் ஏதாவது ஒரு முதலாளித்துவக் கட்சியின் வாலாகச் செயல்படும் போக்கை நிராகரிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். தற்போதுள்ள முதலாளி வர்க்க ஆட்சி முறைக்குள் நமது பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடும் அனைத்து மாயைகளையும் நாம் உடைத்தெறிய வேண்டும். முதலாளி வர்க்க ஆட்சியை மாற்றி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவுவதை இலக்காகக் கொண்ட நமது சொந்த தனிப்பட்ட புரட்சிகர வேலைத் திட்டத்தையொட்டி நாம் ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் முதலாளித்துவ பேராசையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக நமது தேவைகளை நிறைவேற்றும் வகையில் பொருளாதார அமைப்பை மாற்றியமைக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *