இந்தியாவெங்கும் மே நாள் பேரணிகள்:

தங்கள் உரிமைகள் தாக்கப்படுவதற்கு எதிராக நாடு முழுவதும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டம்

தொழிலாளர் ஒற்றுமை இயக்க நிருபரின் அறிக்கை

சர்வதேச தொழிலாளர் நாளான மே 1, 2023 அன்று நாடெங்கிலும் தொழிலாளர்கள் போராட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தினர். 1886 இல் சிகாகோவில் 8 மணி நேர வேலை நாள் உரிமைக்காகப் போராடியத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அவர்கள் வணக்கம் செலுத்தினர். தனியார்மயமாக்கல், ஒப்பந்தமயமாக்கல், தொழிலாளர் விரோத சட்டங்கள் மற்றும் கொள்கைகள் போன்ற வடிவங்களில் தொழிலாளி வர்க்கத்தின் மீது நடத்தப்படும் பல்வேறு தாக்குதல்களை அவர்கள் எதிர்த்தனர். நல்ல பணிச்சூழலுக்கான உரிமையை அவர்கள் கோரினர்.

தில்லியில் மே நாள் பேரணி

தில்லியில் தொழிற்சங்கங்கள் கூட்டாக மே நாள் பேரணியை நடத்தினர். அவர்கள் தொழிலாளர் விரோத தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள், தனியார்மயமாக்கல், அவுட்சோர்சிங், பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகியவற்றை எதிர்த்தனர்.

தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் பல பேரணிகள் நடத்தப்பட்டன, அங்கு தொழிலாளர்கள் மத்திய மாநில அரசாங்கங்களின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தனர். தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கோவை மற்றும் திருப்பூரில் உள்ள தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. மாநிலங்கள் முழுவதும் பல தெரு முனை மற்றும் கிராமசபைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

பஞ்சாப் அம்ரித்சர்

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில், பல்வேறு அரசியல் கட்சிகளும், தொழில்துறை ஊழியர்களும், விவசாயிகளும், மாணவர்களும், தொழிற் சங்கங்களும் கூட்டங்களை நடத்தி, சிகாகோ தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு எட்ட முடியாமல் செய்யும் அரசின் கொள்கைகளை அவர்கள் கண்டித்தனர். மாநிலத்தின் பல நகரங்களிலும், கூட்டங்கள் நடத்தப்பட்டன. பஞ்சாப் துணைச் சேவைகள் கூட்டமைப்பு (PSSF) மற்றும் சஃபாய் சேவாக் யூனியன் ஆகியவற்றின் செயற்பாட்டாளர்கள் கூட்டாக உள்ளூர் முனிசிபல் கவுன்சில் வளாகத்தில் ஒரு பேரணியை நடத்தினர். உள்ளூர் எழுத்தாளர்களும், படிப்பாளர்களும், மற்றும் பல சமூக – அரசியல் அமைப்புகளும் கூட ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தினர்,

மராட்டியம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள துப்புறவுத் தொழிலாளர்களும் மே நாள் பேரணிகளில் பங்கேற்றனர்.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் ஹவுரா, ஹூக்ளி மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் தொழிலாளர்கள் பேரணிகளை நடத்தினர். தொழிற்சாலை, வாகன தொழிற் சங்கங்களும். வணிகர் சங்கங்களும் பல்வேறு பேரணிகளில் பங்கேற்றன. பல மாணவர் சங்கங்கள் பல்கலைக் கழக வளாகங்களில் மே நாள் நிகழ்ச்சியை நடத்தினர்.

மின்சாரம், இரயில்வே, வங்கி மற்றும் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் நாட்டின் பல பகுதிகளில் ஆர்பாட்டப் பேரணிகளை நடத்தினர். மராட்டியம் மற்றும் ஜார்கண்டில் உள்ள மின்சாரத் தொழிலாளர்கள் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காக, பல்லாண்டுகளாக தொழிலாளர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்தனர். மேலும் இன்று தங்கள் உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதென அவர்கள் உறுதி மேற்கொண்டனர்.

மத்தியப் பிரதேசத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவரும் மின்சாரத் தொழிலாளர்கள் வேலை நிரந்தரம், ஒப்பந்த முறைக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், பகுதி நேரத் தொழிலாளர்களை முழுநேரத் தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் என்று கோரி மே நாள் பேரணிகளை நடத்தினர்.

அசாம் – கௌஹாத்தி

அசாம், குஜராத் மற்றும் மராட்டியம் உட்பட நாடு முழுவதும் இரயில்வே தொழிலாளர்கள் கூட்டங்களையும், பேரணிகளையும் மற்றும் இரு சக்கர வாகன ஊர்வலங்களையும் ஏற்பாடு செய்து நடத்தினர். தனியார்மயமாக்கல், புதிய ஓய்வூதியத் திட்டம், அன்னிய நேரடி முதலீடு மற்றும் இரயில்வேயில் பொதுத் துறை – தனியார் கூட்டுறவை அவர்கள் எதிர்த்தனர். ராஜஸ்தான் அஜ்மீரில், இரயில்வே தொழிலாளர்களும், பிற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஒரு மாபெரும் பேரணி மற்றும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பல மக்கள் திரள் அமைப்புகள் இந்தியா முழுவதும் மே நாள் நிகழ்ச்சிகளையும் பேரணிகளையும் நடத்தின.

மராட்டிய மாநிலம்
கேரளம்
இராஜஸ்தான் – அஞ்மீர்
ஜார்கண்ட்
தமிழ்நாடு – தகவல் தொழில்நுட்ப வல்லுனர் சங்கம்
மத்திய பிரதேசம்
இராஜஸ்தான் ஆஞ்மீர்
பஞ்சாப்
குஜராத்
தெலுங்கானா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *