தமிழகத் தொழிலாளர்கள் மே நாளை பேரார்வத்தோடு கொண்டாடினர்

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை

2023 ஆம் ஆண்டு மே முதல் நாள், இந்தியாவில் முதல் மே நாள் கொண்டாட்டத்தின் நூற்றாண்டைக் குறிக்கிறது. சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னையில், தொழிலாளர்கள் செங்கொடியை ஏற்றினர். எனவே இந்த ஆண்டின் மே நாள் தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது இந்திய தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காக, முதலில் காலனிய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும் நடத்திய ஐக்கியப் போராட்டத்தின் நூற்றாண்டைக் குறிக்கிறது.

செங்கற்பட்டில் தொழிலாளர்கள் பேரணி

இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் நெருக்குதலுக்குப் பணிந்து தமிழக அரசு வேலை நாளை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டம் இயற்றியது. இந்தத் தொழிலாளர் விரோதச் சட்டத்திற்கு அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தொழிற் சங்கங்களின் சக்திவாய்ந்த எதிர்ப்பின் காரணமாக, அரசாங்கம் பின்வாங்கி சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழகத்தில் மே நாளைத் தொழிலாளர்கள் பெரும் ஆர்வத்தோடு கொண்டாடினர். தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளுக்காக ஒன்றுபட்ட போராட்டத்தை தீவிரப்படுத்துவதென உறுதி ஏற்றனர்.

ஆல் இந்தியா ஏ.எஸ்.எல். நேஷ்னல் ஏவியேஷன் ஒர்கர்ஸ் யூனியன்

தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், (Workers Unity Movement) தனது மே நாள் அறிக்கையை தொழிற்சாலை நுழைவாயில்களிலும், தொழிலாளர்கள் குடியிருப்புகளிலும், தொழிலாளர்களின் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களிலும் விநியோகித்தது.

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், இஞ்சினீரிங் தொழிற்சாலைகள், ஆடைத் தொழிற்சாலைகள், சமையல் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களிடையே இந்த அறிக்கை பரவலாக விநியோகிக்கப்பட்டது. 12 மணிநேர வேலை நாளுக்கு எதிராக பெண் தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் இந்த அறிக்கை விநியோகிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பழமையான நிறுவனங்களில் ஒன்றான சிம்சன் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கும் அறிக்கை விநியோகிக்கப்பட்டது.

கோவையில் சென்ட்ரல் ஆர்கனைசேசன் ஆப் இந்தியன் டிரேட் யூனியனின் நிகழ்ச்சி

பாடியில் உள்ள டிவிஎஸ் குழும நிறுவனங்களான பிரேக்ஸ் இந்தியா, சுந்தரம் கிளேட்டன் மற்றும் சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் தொழிலாளர்களிடையே மே நாள் அறிக்கை விநியோகிக்கப்பட்டது. இந்த நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான இளம் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்களாக வைக்கப்பட்டு கடுமையாக சுரண்டப்படுகிறார்கள். ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை மற்றும் யமஹா டெக்னாலஜி பார்க் தொழிலாளர்கள் மத்தியிலும் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. வாகனங்களுக்கான மின்சுற்றுகளைத் தயாரிக்கும் நிறுவனமான யாசாகியில், பயிற்சியாளர்களாகவும், தற்காலிக அடிப்படையிலும் வேலையில் வைக்கப்பட்டிருக்கும் ஏராளமான இளம் பெண்கள் மற்றும் ஆண் தொழிலாளர்களுக்கு மே நாள் அறிக்கை விநியோகிக்கப்பட்டது.

எல்லா இடங்களிலும், தற்போதுள்ள சமூகப் பொருளாதார அமைப்பின் மீது தொழிலாளர்கள் மத்தியில் உள்ள கொந்தளிப்புத் தெளிவாகக் காண முடிந்தது. அவர்கள் இந்த அமைப்புமுறைக்கு ஒரு மாற்றைத் தேடுகிறார்கள். தொழிலாளர் அமைப்புகள் ஒரே மேடையில் ஒன்றிணைந்து, முன்னேறிச் செல்வதற்கான வழியைக் காட்ட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

விஎச்எஸ் மருத்துவமனைத் தொழிலாளர்கள் செங்கொடி ஏற்றினர்

மே நாளன்று, விஎச்எஸ் மருத்துவமனை வாசலில் நடைபெற்ற மே நாள் கூட்டத்தில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர்கள் பங்கேற்றனர். விஎச்எஸ் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் ராமகிருஷ்ணன், சங்கத்தின் செயற்பாட்டாளர் கோ.வேலு மற்றும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் பாஸ்கர் ஆகியோர் தொழிலாளர்களுக்கு மே நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து உரையாற்றினர். தொழிலாளர்களின் கடந்த காலப் போராட்டங்களை அவர்கள் நினைவு கூர்ந்தனர். அவர்கள் தொழிலாளர் விரோத தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான பிற தாக்குதல்களைப் பற்றி பேசினர். இந்தத் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்குத் தொழிலாளர்கள் தங்கள் ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும், வலுப்படுத்தவும் வேண்டுமென அழைப்பு விடுத்தனர்.

திருப்பூர் மாவட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம்

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர்கள் ரானே என்ஜின் வால்வு தொழிலாளர் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற மே நாள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சென்னை விமான நிலைய வளாகத்தில் அனைத்திந்திய ஏ.எஸ்.எல் நேஷ்னல் ஏவியேஷன் ஒர்கர்ஸ் யூனியன் ஏற்பாடு செய்திருந்த மே நாள் கொண்டாட்டத்தில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர். செங்கொடியை ஏற்றிவைத்து, ஏர் இந்தியா மற்றும் ஏடிஎஸ்எல் நிறுவனங்களில் நிலவும் மோசமான நிலைமை குறித்து சங்கத்தின் செயலாளர் தோழர் பி.ரமேஷ் உரையாற்றினார். தொழிலாளர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் பாஸ்கர், தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நோக்கத்தையும், முதலாளி வர்க்கத் தாக்குதல்களுக்கு எதிராக இந்தியாவின் அனைத்து தொழிலாளர்களின் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசரத் தேவையையும் விளக்கிக் கூறினார்.

அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு

மே நாள் அன்று மாலை செங்கற்பட்டில் ஏஐடியுசி, சிஐடியு ஏற்பாடு செய்து நடத்திய மே நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

தொழிற்சாலைகளில், 8 மணி நேர வேலை நாளை 12 மணி நேரமாக மாற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தம் குறித்து தொழிலாளர்கள் பலரும் தங்கள் கவலைகளைத் தெரிவித்தனர். அரசாங்கத்தின் இந்த முதலாளித்துவ சார்பு நடவடிக்கையை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும் சதித் திட்டங்களைத் தொழிலாளர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கமும் ஒன்றுபட வேண்டுமெனவும், அனைத்து தொழிற் சங்கங்களும் தோழமையோடு ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டுமெனவும், முதலாளிகள் மற்றும் அவர்களின் அரசாங்கத்திற்கு எதிராக நமது எல்லா சக்திகளையும் ஒருங்கிணைக்க வேண்டுமெனவும் தொழிலாளர்கள் தங்களுடைய ஆழ்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

ஓசூரில் மே நாள் பேரணி

நுழைவாயில்களில், பல தொழிற்சாலை நிறுவனங்களின் நிர்வாகம், தங்கள் தொழிற்சாலைத் தொழிலாளர்களுக்கு நுழைவாயிலுக்கு வெளியே நின்று கூட தொழிலாளர் ஒற்றுமை இயக்கச் செயற்பாட்டாளர்கள், மே நாள் துண்டறிக்கையை வினியோகிப்பதையும், தொழிலாளர்களுடன் பேசுவதையும் தடுக்க முயன்றன. முதலாளித்துவ உடமையாளர்கள், அரசாங்கத்தின் ஆதரவுடன், இந்த முழு நாடும் அவர்களுடைய தனிப்பட்ட சொத்து என்பது போல் செயல்படுகிறார்கள். தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள், இந்த அச்சுறுத்தல்களை துணிவோடு நிராகரித்து, தொழிலாளர்களுக்கு துண்டறிக்கைகளை விநியோகித்தனர்.

அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் மே நாள் ஆர்ப்பாட்டம்

முதலாளிகளின் இத்தகைய நடத்தையும் ஆணவமும், எல்லா தொழிற் சங்கங்களும், தொழிலாளி வர்க்க அமைப்புக்களும் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் மூலம் நம்முடைய அடிப்படை உரிமைகள் மேல் தொடுக்கப்படும் இப்படிப்பட்ட தாக்குதல்களை எதிர்க்க வேண்டிய உடனடித் தேவையை சுட்டிக் காட்டுகிறது. நம்மிடையே பிளவுகளுக்கு வழிவகுக்கும் நம் குறுகிய குறுங்குழுவாத சிந்தனை, தொழிலாளி வர்க்கத்தின் மீதும், அதன் அமைப்புகள் மீதும் தாக்குதல்களை முதலாளிகள் தீவிரப்படுத்த மட்டுமே உதவுகிறது. தொழிலாளி வர்க்கத்தையும், அதன் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான பொதுவான அறிக்கைகளை கொண்டு வரவும், முதலாளிகளின் இத்தகைய அச்சுறுத்தல்களை மீறி, அவற்றை ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பரவலாக விநியோகிக்கவும் நாம் முன்வர வேண்டும். முதலாளி வர்க்கத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தையும் அதன் அமைப்புகளையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் செயல்படுகிறது.

ஓசூரில் மே நாள் பேரணி

ஓசூரில் கன்சாய் நெரோலாக் தொழிலாளர் சங்கத்தின் முன்முயற்சியில், மாவா மருந்துத் தொழிலாளர் சங்கம், டெரெக்ஸ் ஊழியர் சங்கம், வேக் தொழிற்சாலைத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஜிஇ ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து மே நாள் பேரணி மற்றும் கூட்டத்தை நடத்தின. இந்தப் பேரணியில் 12 மணி நேர நாள் தொழிலாளர் சட்டத் திருத்தத்தையும், நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஒப்பந்தத் தொழில் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும், தற்காலிக அடிப்படையிலும், பயிற்சித் தொழிலாளர்களாகவும் பணியமர்த்தப்பட்டுள்ள எல்லாத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரினர். அசோக் லேலண்ட் ஊழியர் சங்கத்தின் திராவிட தொழிலாளர் சங்கம் உட்பட மே தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் நாடு முழுவதும் தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையைக் கட்டியெழுப்பி வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

அவினாசி ஒன்றியத்தில் ஏஐடியுசி-சிஐடியு மே நாள் பேரணி

கோவையில் சென்ட்ரல் ஆர்கனைசேசன் ஆப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் மற்றும் சி.டபிள்யூ.பி இணைந்து மே நாள் பேரணி மற்றும் கூட்டத்தை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர் விரோத 12 மணி நேர சட்டத் திருத்தம் மற்றும் புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை இரத்து செய்ய வேண்டுமென்றும், அனைத்து தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உட்பட அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் நியாயமான ஊதியம் போன்றவற்றை தொழிலாளர்கள் கோரினர். தொழிலாளர்களின் போர்க்குணமிக்க ஒற்றுமையைக் கட்ட வேண்டுமென கூட்டம் அழைப்பு விடுத்தது.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்கள் மற்றும் மாவட்டத் தலைமையகங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்கள் உட்பட தமிழகமெங்கிலும், தொழிற்சாலை மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற மே நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் உப்புவயல் தொழிலாளி குடியிருப்புப் பகுதியில் மே நாள் விழா நடைபெற்றது. இது அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பால் (UWF) ஏற்பாடு செய்யப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார். மே நாள் கூட்டத்தில் உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் உழைக்கும் மக்கள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தோழர் சரவணமுத்துவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பேச்சாளர்கள் மே நாள் வரலாறு குறித்துப் பேசினர். மேலும் அவர்கள் 1923 ஆம் ஆண்டு சென்னையில் முதல் மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்திய தோழர் சிங்காரவேலர் உள்ளிட்ட தொழிலாளி வர்க்கத் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களையும், 12 மணி நேரம் வேலை திருத்தத்தையும் இரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். நிகழ்ச்சியின் இறுதியில், தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவோமென உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *