சர்வதேச உழைக்கும் மக்களுடைய நாளாகிய மே நாள், முதன்முதலில் 1890 மே முதல் தேதியன்று, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவெங்கும் ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் கொண்டாடப்பட்டது.
மே தினத்தின் தோற்றம், குறைந்த நேர வேலை நாளுக்கான போராட்டத்துடன் நெருக்கமாக இணைந்துள்ளது. இது தொழிலாளி வர்க்கத்திற்கான மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கையாகும். இந்தப் போராட்டம் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிட்டத்தட்ட தொழிற்சாலை அமைப்பின் தொடக்கத்திலிருந்தே ஆரம்பித்தது. 14, 16 அல்லது 18 மணி நேரமாக இருந்த நீண்ட வேலை நாளை தொழிலாளர்கள் எதிர்த்தனர். வேலை நேரத்தைக் குறைப்பதற்கான வேலை நிறுத்தப் போராட்டங்கள் 1820-களிலும் 1830-களிலும் நிறைந்திருந்தன.
வேலை நிறுத்தங்களுக்கு, அதிக ஊதியத்திற்கான கோரிக்கை மிகவும் பொதுவான காரணமாக இருந்தபோதிலும், தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராக தங்கள் கோரிக்கைகளை வகுக்கும் போது, குறைந்த வேலை நேரத்திற்கான கோரிக்கையும், அணி திரட்டுவதற்கான உரிமையும் எப்போதும் முன்னணியில் வைக்கப்பட்டது.
இங்கிலாந்தில், வேலை நாள் எத்தனை மணி நேரமாக இருக்க வேண்டுமென்பதில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே கடுமையான போராட்டம் நிலவியது. பிரிட்டிஷ் பாராளுமன்றம், வேலை நாளை 10 மணிநேரமாக வரையறுத்து, 1847-இல் தொழிற்சாலைகள் சட்டத்தை நிறைவேற்றியது தொழிலாளி வர்க்கத்திற்கு கிடைத்த முக்கியமான வெற்றியாகும்.
கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரால் நிறுவப்பட்ட சர்வதேச தொழிலாளர் சங்கம், 1866 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டில் எட்டு மணி நேர வேலை நாளுக்காகப் போராடுமாறு அனைத்து நாட்டுத் தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுத்தது.
ஆகஸ்ட் 20, 1866 இல், அமெரிக்காவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் தேசியத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கினர். அதன் நிறுவன மாநாட்டில், வேலை நாள் நேரத்தைக் குறைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஒட்டி பின்வரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது – “இந்நாட்டுத் தொழிலாளர்களை முதலாளித்துவ அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்கு தற்போதைய முதலாவதும், மிகவும் முக்கியமானதுமானத் தேவை, 8 மணி நேரம் பொதுவான வேலை நாளாக அமெரிக்க ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருக்க வேண்டுமென ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்த மகத்தான முடிவை எட்டும் வரை எங்கள் முழு பலத்தையும் பயன்படுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.“
1885 இல் வேலை நிறுத்தங்கள் மற்றும் கதவடைப்புகள் சுமார் 700 ஆக அதிகரித்ததோடு, அதில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையும் 2,50,000 ஆக உயர்ந்தது. 1886 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது. இது தொழிலாளர்களின் போராட்ட உணர்வைப் பிரதிபலித்தது.
“8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு மற்றும் 8 மணி நேர ஓய்வு” என்ற கோரிக்கையை ஒட்டி பல நகரங்களிலும் பல்வேறு தொழில் துறைகளிலும் உள்ள தொழிலாளர்கள் ஒன்றுபடத் தொடங்கினர்.
இந்தக் கோரிக்கையை ஒட்டி மே 1, 1886 அன்று ஒரு பெரிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அவர்கள் தயாராகத் தொடங்கினர்.
வேலை நிறுத்த இயக்கம் மிகவும் பரவலாக இருந்த சிகாகோ, வேலை நிறுத்தத்தின் மையமாக இருந்தது. அதே நேரத்தில் மே முதல் தேதி போராட்டத்தில், வேறு பல நகரங்களும் பங்கேற்றன. நியூயார்க், பால்டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, சின்சினாட்டி, செயின்ட் லூயிஸ், பிட்ஸ்பர்க், டெட்ராய்ட் மற்றும் பல நகரங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
அமெரிக்காவில் 8 மணி நேர வேலைக்கான இயக்கம், 1886 மே 1, வேலை நிறுத்தத்தின் மூலம் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. இது தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு புகழ் பெற்ற அத்தியாயமாகும். 1886 மே 1, இல், தொழிலாளர்கள் தத்தம் வேலைகளை நிறுத்தி விட்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஒரு பெரும் புயலாகத் திரண்டதை சிகாகோ நகரம் கண்டது. தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியைக் கண்டு அமெரிக்க அரசும் முதலாளித்துவ வர்க்கமும் அச்சமடைந்தன. வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க தலைமையைத் தாக்குவதன் மூலம் அவர்கள், முழு தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கும் ஒரு கொடூரமான அடியைக் கொடுக்க விரும்பினர்.
மே 3 அன்று, சிகாகோவில் உள்ள மெக்கார்மிக் ரீப்பர் ஒர்க்ஸில் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் அமைதியான கூட்டத்தை காவல்துறை கொடூரமாகத் தாக்கியது. இதன் விளைவாக ஆறு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். காவல்துறையின் இந்த நியாயமற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், தொழிலாளர்கள் மே 4 அன்று ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தினர். அமைதியாக நடைபெற்ற இந்தக் கூட்டம் முடிவுக்கு வர இருந்த நேரத்தில் காவல்துறைக்காக வேலை செய்யும் கயவர்கள் குழப்பம் ஏற்படுத்துவதற்காக கூட்டத்தின் மீது ஒரு வெடிகுண்டை வீசினார்கள். காவல்துறையும், கலவரத்தைத் தூண்டிவிட்ட ஏஜென்ட்டுகளும் வேண்டுமென்றே திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கலவரத்திலும் வன்முறையிலும் பலர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
அமெரிக்க முதலாளித்துவ ஊடகங்கள், தொழிலாளர்களை அராஜகவாதிகளாகவும் குற்றவாளிகளாகவும் சித்தரித்து அவர்களைத் தூக்கிலிட வேண்டுமென குரலெழுப்பி ஒரு மிகப்பெரும் தொழிலாளர் விரோத பரப்புரையைக் கட்டவிழ்த்து விட்டன. வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களின் ஏழு தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர். நடத்தப்பட்ட முழு விசாரணையும் திட்டமிட்ட போலி நாடகமென பின்னர் அம்பலமானது. அமெரிக்க முதலாளி வர்க்கம், தொழிலாளர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம் உரிமைகளுக்கான தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கொஞ்ச காலத்திற்கு நசுக்க முடிந்தது. இருப்பினும், தொழிலாளர்களின் போராட்ட உணர்வை அதனால் அழிக்க முடியவில்லை. அவர்கள் மே 1, 1890 அன்று அமெரிக்கா முழுவதும் பேரணிகளை நடத்த முடிவு செய்தனர்.
மீண்டும் ஒரு சர்வதேச தொழிலாளர் அமைப்பை உருவாக்குவதற்காக, பிரெஞ்சுப் புரட்சியின் போது பாஸ்டில் வீழ்ச்சியின் நூறாவது ஆண்டு விழா நாளான, 1889 சூலை 14 அன்று, பல நாடுகளின் அணி திரட்டப்பட்ட புரட்சிகர பாட்டாளி வர்க்க இயக்கங்களின் தலைவர்கள் பாரிசு நகரில் கூடியிருந்தனர். 1884-1886 காலகட்டத்தில் அமெரிக்காவில் 8 மணி நேர வேலை நாளுக்கானப் போராட்டம் பற்றியும், அந்த இயக்கம் அண்மையில் மீண்டும் எழுச்சி பெற்றிருப்பது குறித்தும், அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் இருந்து இரண்டாவது அகிலமாக மாறப்போகும் நிறுவனக் கூட்டத்தில் கூடியிருந்தவர்கள் கேட்டறிந்தனர். அமெரிக்கத் தொழிலாளர்களின் எடுத்துக்காட்டால் ஈர்க்கப்பட்ட, பாரிசு மாநாடு பின்வரும் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது :
“இந்த மாநாடு, ஒரு பெரிய சர்வதேச ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்வதென முடிவு செய்கிறது, இதனால் அனைத்து நாடுகளிலும் அனைத்து நகரங்களிலும் ஒரு குறிப்பிட்ட நாளில் உழைக்கும் மக்கள், அரசு அதிகாரிகளிடம் வேலை நாளை சட்டப்பூர்வமாக எட்டு மணி நேரமாகக் குறைக்க வேண்டுமெனக் கோரவும், அத்துடன் பாரிஸ் காங்கிரசின் பிற முடிவுகளைச் செயல்படுத்தவும் முடியும். 1888 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செயின்ட் லூயிஸில் நடந்த அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாட்டில் மே 1, 1890 அன்று இது போன்றதொரு ஆர்ப்பாட்டம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதால், அதே நாளை சர்வதேச ஆர்ப்பாட்டத்திற்கான நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் நிலைமைகளுக்கு ஏற்ப பல்வேறு நாட்டுத் தொழிலாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்”.
இதுவே மே 1 ஆம் தேதி மே நாளின் தோற்றத்தைக் குறித்தது.
கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையின் நான்காவது ஜெர்மன் பதிப்பிற்காக ஏங்கெல்சு மே 1, 1890 இல் எழுதிய முன்னுரையில், அவர் சர்வதேச பாட்டாளி வர்க்க அமைப்புகளின் வரலாற்றை மீள்பார்வை செய்து, முதல் சர்வதேச மே தினத்தின் முக்கியத்துவத்தை கவனத்திற்குக் கொண்டு வந்தார்:
“நான் இந்த வரிகளை எழுதுகையில், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பாட்டாளி வர்க்கம் முதன்முறையாக அணிதிரட்டப்பட்ட – ஒரு இராணுவமாக – ஒரு கொடியின் கீழ் – ஒரே ஒரு உடனடி நோக்கத்திற்காக – சர்வதேசத்தின் ஜெனிவா மாநாட்டால் 1866 இல் பிரகடனப்படுத்தப்பட்டு, மீண்டும் 1889 இல் பாரிசு தொழிலாளர் மாநாட்டால் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையான எட்டு மணி நேர வேலை நாளை சட்டத்தின் மூலம் நிறுவப்பட வேண்டுமென்ற நோக்கத்திற்காக அதன் போர்ப் படைகளை மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. இன்றைய இந்தக் காட்சி, அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களும் உண்மையிலேயே ஒன்றுபட்டுள்ளனர் என்ற உண்மையை அனைத்து நாட்டு முதலாளிகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் உணர்த்தும்.
இன்னும் மார்க்ஸ் என் பக்கத்தில் இருந்திருந்தால், இதை அவரே தன் கண்களால் பார்த்திருப்பார்!”
அப்போதிலிருந்து, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மே 1 ஆம் நாளை முதலாளித்துவத்திற்கு எதிரான பொதுப் போராட்டத்தில் அனைத்து வகையான சுரண்டல்களிலிருந்தும் விடுதலைக்காக அனைத்து நாட்டுத் தொழிலாளர்களிடையே ஒற்றுமை நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவின் 1923 முதல் மே நாளின் நூற்றாண்டு விழா
இந்தியாவில் நடைபெறும் மே நாள் கொண்டாட்டங்கள், ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று உலகெங்கிலும் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச உழைக்கும் வர்க்க நாள் கொண்டாட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
இந்தியாவின் முதல் மே நாள் கொண்டாட்டம் 1923 மே 1, இல் இந்தியத் தொழிலாளி விவசாயி கட்சியால் சென்னையில் (முன்னாள் மெட்ராஸ்) ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. இந்தியாவில் முதல் முறையாக சிவப்புக் கொடி ஏற்றப்பட்ட நாளும் அதுவே ஆகும். கட்சித் தலைவர் தோழர் சிங்காரவேலு 1923-இல் இரண்டு இடங்களில் மே நாளைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் ஒரு கூட்டம் நடைபெற்றது; மற்றதொரு கூட்டம் திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்றது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தொழிலாளர் வெற்றிச் சிலை நாட்டின் முதல் மே நாள் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது.
சென்னையில் நடத்தப்பட்ட மே நாள் கொண்டாட்டம் தொழிலாளி வர்க்கத்தினரிடையே சோசலிச விழிப்புணர்வின் எழுச்சியைப் பிரதிபலித்தது. தேச துரோக குற்றச்சாட்டில் லோகமான்ய திலக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த மாபெரும் வேலை நிறுத்த இயக்கத்தின் மூலம் இந்தியத் தொழிலாளி வர்க்கம் காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் தனது புரட்சிகர ஆற்றலை ஏற்கனவே காட்டியிருக்கிறது.
முதல் உலகப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 1918-1921 காலகட்டத்தில் ஒரு பெரிய வேலை நிறுத்த இயக்கம் இந்தியாவெங்கும் பரவியது. 1918 ஆம் ஆண்டின் இறுதியில், நல்ல ஊதியம், வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்காக நடைபெற்ற தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் விளைவாக மும்பை முழுவதும் பருத்தி ஆலைத் தொழில்கள் மூடப்பட்டன. பாசிச ரவுலட் சட்டத்திற்கு எதிரான சக்திவாய்ந்த போராட்டங்களில் இந்தியா முழுவதும் இரயில்வே தொழிலாளர்களும், துணி ஆலைத் தொழிலாளர்களும் முன்னணியில் இருந்தனர். நவம்பர் 1921 இல், வேல்ஸ் இளவரசரின் வருகையை எதிர்த்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மும்பை துணி ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம், நகரத்தையே முழுவதுமாக நிறுத்தி வைத்தது.
முதல் உலகப் போரின் போதும் அதற்குப் பின்னரும் கெதர் புரட்சியாளர்களின் வீரச் செயல்களும், 1917-இல் சோவியத் யூனியனில் மாபெரும் அக்டோபர் சோசலிசப் புரட்சியின் வெற்றியும், விழிப்புணர்வு அடைந்துவரும் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு புத்துணர்ச்சி அளித்தன.