சுரண்டல், ஒடுக்குமுறை இல்லாத சமுதாயத்திற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்!

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் மே நாள் அறிக்கை, ஏப்ரல் 20, 2023

மே 1, 2023 அன்று, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், நம்முடைய உரிமைகளுக்கான போராட்டத்தில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த அனைத்து தோழர்களின் நினைவிலிருந்து உத்வேகம் பெறுவார்கள். போர்க்குணமிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுப்புவார்கள். எதிர்ப்புப் பேரணிகள் மூலம், முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அவர்கள் மீண்டும் உறுதி ஏற்பார்கள். இதனுடன், தற்போதைய முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையான அமைப்புமுறைக்கு ஒரு மாற்றைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற தங்கள் தீர்மானத்தை தொழிலாளர்கள் மீண்டும் உறுதிப்படுத்துவார்கள்.

இன்று, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளர்கள் போராட்டப் பாதையில் துணிவோடு முன்னேறிச் செல்கின்றனர். கண்ணியமான மனித வாழ்க்கையை உறுதிசெய்யும் ஊதியத்திற்காகவும், பாதுகாப்பான வாழ்வாதாரத்திற்காகவும், விண்ணைத் தொடும் விலைவாசிக்கு எதிராகவும், பெருகிவரும் வேலையின்மைக்கு எதிராகவும் அவர்கள் தெருக்களில் இறங்கிப் போராடுகிறார்கள். முதலாளித்துவ சுரண்டல், விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராகவும், நாடுகளின் ஒடுக்குமுறை, வகுப்புவாத வன்முறை, இனவாதம் மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகவும் அவர்கள் குரல் எழுப்புகின்றனர். தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் உழைப்பின் பலனை அனுபவிக்கக் கூடிய ஒரு அமைப்புக்காகவும் போராடுகிறார்கள்.

இரயில்வே, சாலைப் போக்குவரத்து, பெட்ரோலியம் மற்றும் பாதுகாப்புத் துறைகள், மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், வங்கி மற்றும் காப்பீடு போன்ற துறைகளில் உள்ள தொழிலாளர்கள், முதலாளித்துவ ஆட்சியாளர்களின் தனியார்மயமாக்கும் திட்டத்தை துணிவோடு எதிர்த்து வருகிறார்கள். பொதுச் சேவைகளான கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, மின்சாரம் மற்றும் நீர் வழங்கல், பொதுப் போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, போன்றன அனைத்தும் முதலாளிகளுக்கு இலாபம் சம்பாதிப்பதற்கான வழிகளாக மாற்றப்படுகின்றன. இதை எதிர்த்து, இந்தச் சேவைகளைப் பெறுவது சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களுடைய உரிமையாக இருக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோருகின்றனர். முதலாளிகளின் தனியார்மயமாக்கல் நிகழ்ச்சி நிரலை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் வணக்கம் செலுத்துகிறது.

44 தொழிலாளர் சட்டங்களை எளிமையாக்குகிறோம் என்ற பெயரில், நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. தொழிலாளர்களைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்தும் வழிமுறைகளை முதலாளிகளுக்கு எளிதாக்குவதே இந்தத் தொகுப்புச் சட்டங்களின் உண்மையான நோக்கமாகும். பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் நீண்ட காலம் போராடி வென்றெடுத்த அனைத்து உரிமைகளும் இப்போது பறிக்கப்படும். 12-16 மணி நேர வேலை நாள் என்பது புதிய விதிமுறையாக இருக்கும். பெண்களின்  பாதுகாப்புக்கு எந்த உத்திரவாதமும் இல்லாமல், இரவு நேரப் பணியில் வேலை செய்யுமாறு அவர்கள் நிர்பந்திக்கப்படுவார்கள்.

தொழிற் சங்கங்களில் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, உரிமைகளுக்காகப் போராடுவது என்பது பெரும்பாலான தொழிலாளர்களுக்கு மிகவும் கடினமாகிவிடும்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இலாபகரமான விலையில் பொதுக் கொள்முதல் செய்யக் கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அனைத்து உழைக்கும் மக்களுக்கும் அவர்களின் அன்றாடத் தேவைகளை, போதுமான அளவிலும், நல்ல தரத்திலும் மலிவு விலையிலும் வழங்க பொது விநியோக முறை வேண்டுமெனத் தொழிலாளர்கள் கோருகின்றனர். இது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இத்தனை போராட்டங்கள் நடைபெற்றும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை? டாடா, பிர்லா, அம்பானி, அதானி போன்ற மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் செல்வங்கள் மட்டும் ஏன் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன? தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நிலை ஏன் மோசத்திலிருந்து படுமோசமாக ஆகி வருகிறது? ஏகபோக முதலாளிகளின் அதிகபட்ச இலாபத்திற்கான பேராசைதான் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற விடாமல் தடுக்கிறது. ஒவ்வொரு துறையிலும் தொழிலாளர்களின் சுரண்டலைப் பெருமளவில் அதிகரிப்பதன் மூலமும், விவசாயிகளின் கொள்ளையைத் தீவிரப்படுத்துவதன் மூலமும் ஏகபோக முதலாளிகள், முடிந்தவரை அதிகபட்ச வேகத்தில் மேலும் பணக்காரர்களாக ஆக விரும்புகிறார்கள். முதலாளி வர்க்கமே இந்தியாவின் உண்மையான ஆட்சியாளராக இருக்கிறது. அது மிகப்பெரிய ஏகபோக முதலாளித்துவ குடும்பங்களைத் தலைமையாகக் கொண்டு இயங்குகிறது. இந்திய அரசு, முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்கிறது. எந்த அரசியல் கட்சி அரசாங்கத்தை அமைத்தாலும், முதலாளி வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரல் எப்போதும் செயல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்கிறது.

முதலாளித்துவ அமைப்புதான் நமது மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலகாரணமாகும். அரசாங்கத்தையும் அதன் அமைச்சரவையையும் அமைக்கும் அரசியல் கட்சி, பாராளுமன்ற எதிர்க்கட்சிகள், காவல்துறை, இராணுவம், நீதித்துறை மற்றும் செய்தி ஊடகங்கள் என இந்திய அரசின் அனைத்து நிறுவனங்களும் – முதலாளி வர்க்க சர்வாதிகாரத்தை தொழிலாளர்கள் – விவசாயிகள் மீது சுமத்துவதற்கான கருவிகளாகும்.

இந்த “உலகின் மிகப் பெரிய சனநாயகத்தின்” அரசியல் அமைப்பும் செயல்முறையும், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களும் எப்போதும் அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவதை உறுதி செய்கிறது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறும் கட்சி, அரசாங்கத்தையும் அமைச்சரவையையும் அமைக்கிறது. நம் வாழ்க்கையை பாதிக்கும் ஒவ்வொரு முக்கிய முடிவையும் எடுக்கும் அதிகாரம் உயர்மட்ட அமைச்சரவையின் கையில் குவிந்துள்ளது. தேர்தலில் யார் வேட்பாளராக நிற்கலாம் என்பதைத் தெரிவு செய்யவோ, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை தங்களுக்கு பதிலளிக்க கடமைப் பட்டவர்களாகவோ அல்லது அவர்களை திரும்ப அழைக்கவோ மக்களுக்கு எந்த வழிமுறைகளும் இல்லை. சட்டத்தை முன்வைக்கவோ, தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, மக்கள் விரோத சட்டங்களைத் திருத்தவோ உழைப்பாளர்களான நம்மிடம் அதிகாரம் இல்லை.

தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் மக்கள் தங்களுக்கு விருப்பமான ஆட்சியைக் கொண்டு வருகிறார்கள் என்ற மாயை பரப்பப்படுகிறது. இது மிகப்பெரிய பொய்யாகும். முதலாளிகளின் செயல்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தக்கூடிய அவர்களுடைய நம்பிக்கைக்குரிய எந்த ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் வெற்றியையும் உறுதி செய்ய முதலாளிகள் கோடிக்கணக்கான ரூபாய்களை வாரி வழங்குகிறார்கள் என்பதுதான் உண்மை. முதலாளித்துவ திட்டங்களை, அவை “பொது நலனுக்காகவே” செயல்படுத்தப்படுவதாக மிகவும் சூழ்ச்சியாக மக்கள் முன் வைக்கக்கூடிய அரசியல் கட்சியால் தான் அரசாங்கம்  அமைக்கப்படுகிறது.

அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத வன்முறையும், அரசு பயங்கரவாதமும் ஆட்சியாளர்களின் விருப்பமான ஆயுதங்களாகும். இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒற்றுமையை அவர்கள் மீண்டும் மீண்டும் தகர்க்கிறார்கள். அவை நமது போராட்டங்களை பலவீனப்படுத்துகின்றன. நமது ஒற்றுமையை உடைக்க ஆட்சியாளர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நமது சனநாயகமும், அரசியலமைப்பும் சரியானவை தான் என்றும், சில ஊழல்வாதிகளும், மோசமான தலைவர்கள் மட்டுமே பிரச்சனைக்குக் காரணம் என்றும் மாயையை பரப்பும் சக்திகளே நமது போராட்டங்களின் பாதைக்கு பெரும் தடையாக இருக்கின்றன. தற்போதைய பாஜக அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டால், தொழிலாளர்கள், விவசாயிகளின் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். நடக்க இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில், போராடி வரும் மக்கள் பா.ஜ.,வுக்கு பதிலாக வேறு ஒரு மாற்றைத் தேர்ந்தெடுப்பதற்காக மக்களை அணிதிரட்ட அவர்கள் முயற்சிக்கின்றனர்.

நமக்குப் பின்னால் 76 ஆண்டு கால அனுபவம் உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சி அமைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் முதலாளிகளின் திட்டங்கள் தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாம் மீண்டும் மீண்டும் அதே மோசமான சுழற்சியில் சிக்கித் தவிக்க வேண்டுமா? முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை மாற்றி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நாம் அமைக்க வேண்டும்.

தற்போதைய நாடாளுமன்ற சனநாயக முறைக்குப் பதிலாக, மக்களாகிய நாமே கூட்டு முடிவெடுப்பவர்களாகவும், சமுதாயத்தின் மன்னர்களாகவும் இருக்கும் ஒரு அமைப்பை நாம் நிறுவ வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அமைப்பில், செயலாக்க அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வாக்காளர்களுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக இருப்பார்கள். எந்தவொரு தேர்தலுக்கும் முன்பாக வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் உரிமை உட்பட, ஒவ்வொரு வயது வந்தவருக்கும் தேர்ந்தெடுக்கவும், தேர்ந்தெடுக்கப்படவும் உரிமையை அரசியல் செயல்முறை உறுதிப்படுத்தும். தேர்தல் பரப்புரைகளுக்கு தனிப்பட்ட நிதி பயன்படுத்தப்படுவதைத் தடுத்து பொது நிதி மட்டுமே பயன்படுத்தப்படும்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் சமுதாயத்தில் பெரும்பான்மையாக உள்ளோம். நாட்டின் செல்வத்தை நாம் உற்பத்தி செய்கிறோம், ஆனால் ஆளும் முதலாளி வர்க்கம் நமது உழைப்பின் பயன்கள் நமக்குக் கிடைக்க விடாமல் தடுக்கிறது. முதலாளிகளின் செல்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் அதே வேளையில் நமது நிலைமைகள் மோசத்திலிருந்து படுமோசமாக ஆகிக் கொண்டே வருகின்றன. இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும். நாட்டின் செல்வத்தை உற்பத்தி செய்பவர்களே, நாட்டின் ஆட்சியாளர்களாகவும் இருக்க வேண்டும்.  அப்போதுதான், மக்களின் வளர்ந்து வரும் தேவைகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்ட பொருளாதாரத்தை கொண்ட ஒரு புதிய சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும். நமது எதிர்காலத்தைப் பாதிக்கும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்டவர்களாக மக்களும் இருக்க முடியும்.

தொழிலாளர் தோழர்களே,

133 ஆண்டுகளுக்கு முன்பு, 1890 மே 1, அன்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அனைத்து நாட்டுத் தொழிலாளர்களும் 8 மணி நேர வேலை நாள் கோரி வீதிகளில் இறங்கினர். 1889 இல் நிறுவப்பட்ட சோசலிச அகிலத்தின் அறைகூவல், முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தைக் குறிக்கும் நாளாக மே 1 – ஐ மே நாளாக அறிவித்தது. அப்போதிருந்து, முதலாளித்துவ சுரண்டலில் இருந்து விடுதலை பெறுவதற்கானப் போராட்டத்தை வலுப்படுத்த தொழிலாளர்கள் புதுப்பிக்கப்பட்ட உறுதியுடன் முன்வரும் நாளாக மே நாள் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது.

முதலாளித்துவ அமைப்பிலிருந்து சமுதாயத்தை தொழிலாளி வர்க்கம் விடுவிக்க வேண்டும். முதலாளித்துவ அமைப்பு தொடரும் வரை, தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து உழைப்பாளிகள் மீதான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு முடிவு கட்ட முடியாது.

தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைவரின் உரிமைகளைப் பாதுகாக்கும் நமது ஒன்றுபட்ட போராட்டத்தை வலுப்படுத்துவோம். ஏகபோக முதலாளித்துவக் குடும்பங்களின் தலைமையிலான முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை மாற்றி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை அமைக்கும் நோக்கத்துடன், சுரண்டப்படும் மற்றும் ஒடுக்கப்படும் மக்கள் அனைவரையும் அணிதிரட்டுவோம்.

தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களே – இந்தியா நமக்கே சொந்தம்! நாமே அதன் மன்னர்கள்!

வாழ்க மே நாள்!

புரட்சி ஓங்குக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *