தொழிற்சாலை வேலை நேரத்தை நீட்டிக்கும் சட்டத் திருத்தத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசு நிர்பந்திக்கப்பட்டுள்ளது
வேலை நாளினை 12 மணி நேரமாக அதிகரிக்கும் தொழிற்சாலைகள் சட்டத் (1948) திருத்தத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைப்பதற்கான தனது அரசாங்கத்தின் முடிவை ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். ஏப்ரல் 21ஆம் தேதி சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததை அடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்தத் திருத்தத்திற்கு மாநிலமெங்கும் உள்ள தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி தொழிலாளிகள் மற்றும் மக்கள் போராட்டங்களை அவர்கள் அறிவித்தனர். தொழிலாளி வர்க்கத்தின் இந்த போர்க்குணமிக்க போராட்டத்தின் பிரதிபலிப்பு, சட்டத் திருத்தத்தை அமுல்படுத்துவதைத் தடுத்து நிறுத்தி வைக்கும் நிலைக்கு அரசாங்கத்தைத் தள்ளியுள்ளது.
மாநிலத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களுடனான அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தையின் போது, தி.மு.க-வைச் சேர்ந்த தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை (எல்.பி.எஃப்) உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் திருத்தத்தை எதிர்த்ததை அடுத்து, திருத்தம் நிறுத்தி வைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. திராவிடர் கழகம், காங்கிரசு, ம.தி.மு.க., சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் திருத்தத்தை திரும்பப் பெறுமாறு முதல்வரிடம் கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தன.
தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தம்) சட்டம், 2023
வாராந்திர விடுமுறைகள், தினசரி வேலை நேரம், ஓய்வுக்கான இடைவேளைகள் மற்றும் கூடுதல் நேர வேலைக்கான ஓவர்டயம் ஊதியம் உள்ளிட்ட வேலை நேரம் மற்றும் வேலை நிலைமைகள் தொடர்பான சட்டத்தின் தற்போதைய விதிகளை மீறுவதற்கு இந்தத் திருத்தம் மாநில அரசை அனுமதிக்கிறது. இந்த சட்டத் திருத்தம், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்க தொழிற்சாலை உடமையாளர்களை அனுமதிக்கும். முன்பு மூன்று மாத காலத்திற்கு அதிகபட்ச வரம்பாக 75 மணி நேரமாக இருந்த கூடுதல் வேலை நேரத்தை 145 மணிநேரம் வரை தொழிலாளர்கள் நீடித்து வேலை செய்ய வைக்க தொழிற்சாலை உடமையாளர்கள் இச்சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்த முடியும். மேலும் தொழிற்சாலை உடமையாளர்கள் பெண்களை இரவு நேர வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தவும் இது உதவும்.
முதலாளிகளின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது
இந்தத் திருத்தம் இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேலை நேரம் மற்றும் வேலை நிலைமைகளின் நெகிழ்வுத்தன்மையை இது அனுமதிக்கிறது, அதன் மூலம் தொழிலாளர்களைச் சுரண்டுவதை மேலும் தீவிரப்படுத்த முடியும். தொழில்துறையின் பல்வேறு துறைகளில் உள்ள முதலாளிகள் வேலை நாளின் அளவை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அரசாங்கம் நீட்டிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இந்த திருத்தத்தின் மூலம் “பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியுமென்றும், குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்” என்றும் கூறி தமிழக அரசு இதை நியாயப்படுத்தியுள்ளது. உலக சந்தையில், சீனாவுக்கு மாற்று விநியோகச் சங்கிலியாக தமிழகம் உருவெடுக்க இந்தத் திருத்தம் உதவும் என்று அரசாங்கம் கூறுகிறது. இது முதலாளிகளின் இலாபத்தை அதிகரிக்கவும், உலகச் சந்தைகளில் அவர்கள் தங்களுடைய இடத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும், மிகவும் மோசமான சுரண்டல் நிலைமைகளில் மலிவான – திறமையான தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் என்று இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்கு இந்த அரசாங்கம் இதன் மூலம் உறுதியளிக்கிறது.
இந்திய மற்றும் வெளிநாட்டு முக்கிய உற்பத்தி நிறுவனங்களின் மையமாக அண்மை ஆண்டுகளில் தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. இது உலகளாவிய ஏகபோக நிறுவனங்களிலிருந்து பல இலட்சக் கணக்கான டாலர்கள் முதலீடுகளை ஈர்த்துள்ளது. தமிழ்நாடு மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழில்துறை தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். நாட்டின் வாகனங்கள், ஆடை மற்றும் காலணி ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு முறையே 37.6%, 30.8% மற்றும் 46.4% ஆக இருந்து வருகிறது.
நோக்கியா, சாம்சங், ஃபிளக்ஸ், டெல், மோடரோலா, சேல்காம்ப், எச்பி போன்ற உலகளாவிய பூதாகர நிறுவனங்களை உள்ளடக்கிய 16 முன்னணி மின்னணுவியல் உற்பத்தியாளர்களின் தொழிற்சாலைகள் தமிழகத்தில் இப்போது உள்ளன. உயர்தரமான ஆப்பிள் கைபேசிகளை உற்பத்தி செய்வதற்கான பெரிய ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள பாக்ஸ்கான் மற்றும் பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் அண்மையில் தமிழகத்தில் நுழைந்துள்ளன. இவற்றில் பல நிறுவனங்கள் இத்தகைய சட்டத் திருத்தம் கோரி வலுவாக நெருக்குதல் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாளிகளுடைய சங்கங்கள் சட்டத் திருத்தத்தைப் பாராட்டியுள்ளன
எப்.ஐ.இ.ஓ (இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு) இன் தலைவர், “நெகிழ்வான வேலை நேரத்திற்கான சட்டப்பூர்வ ஏற்பாடு, மாநிலத்திற்கும் தொழிலாளர்களுக்கும், குறிப்பாக பெண் ஊழியர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் பல நன்மைகளைத் தருகிறது” என்று கூறியுள்ளார். அவர்கள் போற்றுவது, தொழிலாளர்களை அதிக அளவில் சுரண்டுவதற்கான வாய்ப்புகளையும், முதலாளிகளுக்கு அதிக இலாபம் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் தான்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (TEA) தலைவர், ஏற்றுமதி நிறுவனங்கள் சட்டப்பூர்வமாக தங்கள் சுரண்டலை தீவிரப்படுத்த உதவும் இச்சட்ட மாற்றங்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். மேலும், திருப்பூர் பின்னலாடை ஆடை ஏற்றுமதித் தொழிலின் பருவகால தன்மையைக் கருத்தில் கொண்டு, அதிக உற்பத்தி தேவைப்படும் காலங்களில் தொழிற்சாலை உடமையாளர்கள், தொழிலாளர்களை அதிக ஓவர்டைம் கொடுத்து வேலைகளில் ஈடுபடுத்த இந்த சட்டத் திருத்தம் உதவும் என்று அவர் கூறியுள்ளார். உற்பத்தித் தேவை அதிகமாக இல்லாத காலங்களில், ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி விடுவதன் மூலம் முதலாளிகள் தங்களுடைய இலாபத்தை உறுதி செய்து கொள்ள முடியும்.
தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை தொழிற் சங்கங்கள் எதிர்க்கின்றன
தொழிற்சாலைகள் சட்டம் 1948 இன் மீது கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது தொழிற்சங்கங்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றன. ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டத்தில், மத்திய அரசு அமல்படுத்த சிரமப்பட்டு வரும் இத்தகைய பிற்போக்கான சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்தத் திருத்தம், முதலாளிகளின் நலன்களுக்கு வெளிப்படையாகவே ஆதரவளிப்பதோடு, தொழிலாளர்களின் உரிமைகளைத் தாக்குகிறது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தத் திருத்தங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான பலகட்ட போராட்டங்களை அறிவித்தன. அவற்றில், மே 9 அன்று மாவட்டத் தலைமையகங்களில் ஆர்பாட்டங்களும், மே 12 அன்று மாநிலம் தழுவிய தொழிலாளர்கள் வேலை நிறுத்தமும் அடங்கும். ஏஐடியுசி, சிஐடியு, எச்.எம்.எஸ், ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, உழைக்கும் மக்கள் மாமன்றம், எம்.எல்.எப், எல்.எல்.எப் உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டறிக்கையை வெளியிட்டனர். தனியார் துறை மற்றும் பொதுத் துறையில் உள்ள அனைத்து தொழிற் சங்கங்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்கேற்பார்களென அவர்கள் அறிவித்தனர்.
8 மணி நேர வேலை நாளுக்கான உரிமையை நிலைநாட்டுவதற்காக தொழிலாளர்கள் போராடிய வரலாற்றை அந்த அறிக்கை நினைவு கூர்ந்துள்ளது. 1936-ஆம் ஆண்டு புதுச்சேரியிலும், 1947ஆம் ஆண்டு நாடு முழுவதும் 8 மணி நேர வேலை நேர வரம்பு அமல்படுத்தப்பட்டதைத் தொழிலாளர்களுக்கு நினைவூட்டியது. “எட்டு மணி நேர வேலை நாள் என்பது நமது முன்னோர்களால் தங்கள் உயிரையும் இரத்தத்தையும் தியாகம் செய்து பெற்ற வெற்றியாகும்”, இந்த உரிமையை கட்டிக்காப்பது தொழிலாளி வர்க்கத்தின் கடமையாகும் என்று அறிக்கை கூறியுள்ளது.
தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென பெண் தொழிலாளர் சங்கம் வலியுறுத்துகிறது
சென்னை நகரின் மையப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற மே தின பூங்காவில், தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்திற்கு எதிராக பெண் தொழிலாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் தொழிலாளர் சங்கம் மற்றும் கார்மென்ட்ஸ் & பேஷன் ஒர்க்கர்ஸ் யூனியனைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆடைத் தொழிலாளர்களும், வீட்டு வேலைப் பணியாளர்களும் இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.
தொழிற்சாலைகளில் தற்போதுள்ள 8 மணி நேர வேலையிலேயே, பயண நேரம் உட்பட 12 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் வீட்டை விட்டு வெளியே செலவிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் விளக்கினர். 12 மணி நேர வேலை செய்ய வேண்டியிருந்தால், அவர்கள் எப்படி வீட்டிற்குச் சென்று மறுநாள் மீண்டும் வேலைக்கு திரும்ப முடியுமென அவர்களால் கற்பனை கூட செய்ய முடியவில்லை! அவர்களால் ஓய்வெடுக்கவோ, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடவோ முடியாது. இந்த சட்டத்திருத்தம் பெண்கள் வாழ்வாதாரத்திற்காக வெளியே வருவதைத் தடுக்கும் என்றும், அவர்களை மீண்டும் வீடுகளுக்குள்ளேயே முடக்கிப் போடும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பலர் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினர்.
முதலாளிகளின் இலாபத்தை அதிகரிப்பதற்காக, தொழிலாளர்களை கடுமையாகச் சுரண்டுவதற்கு வழிவகை செய்து தரும் அரசாங்கத்தின் முயற்சிகளை உழைக்கும் பெண்கள் வன்மையாகக் கண்டித்தனர். தொழிலாளர்களுக்கு எதிரான இந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, பிப்ரவரி 24 அன்று, கர்நாடக அரசாங்கம் தொழிற்சாலைகள் சட்டம் 1948 இன் மீது இதே போன்றதொரு திருத்தத்தை தொழிற்சாலைகள் (கர்நாடகா திருத்தம்) மசோதா, 2023 என்ற பெயரில் நிறைவேற்றியது. இந்த திருத்தத்தின் மூலம், தொழிலாளர்களின் ஒரு நாள் வேலை நேரத்தை 12 மணி நேரம் வரையில் நீட்டிக்கவும், ஓவர்டயம் வேலையை மூன்று மாதங்களில் மொத்தமாக 75 மணி என்ற வரையறையிலிருந்து 145 மணிநேரமாக அதிகரித்துக் கொள்ளவும், பெண்கள் தொழிலாளர்களை இரவு நேர வேலைகளில் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தவும் நிறுவனங்கள் இப்போது அனுமதிக்கப்படும்.
இந்த மசோதா சட்டப் பேரவையில் விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது, இதற்கு காங்கிரசு, ஜேடிஎஸ் மற்றும் ஒரே ஒரு பாஜக உறுப்பினர் உட்பட பலரும் எதிர்ப்புத் தெரிவித்து, சட்டப் பேரவையிலிருந்து அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
நமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் உறுதியாக நிற்க வேண்டும்
தமிழகத் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்கள், தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு அரசை நிர்பந்திப்பதில் வெற்றி பெற்றாலும், அந்தத் திருத்தம் திரும்பப் பெறப்படவில்லை என்பதுதான் உண்மை. இந்தத் திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளில் முயற்சிக்கும் என்பதில் தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தச் சட்டத் திருத்தத்தை நிறுத்தி வைத்திருப்பதால், அரசாங்கம் தனது நோக்கத்தை மாற்றிக்கொண்டது என்று பொருளில்லை. அதனுடைய நோக்கமானது, தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவதன் மூலம் இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகள் அதிக இலாபம் ஈட்ட வழிவகை செய்வதாகவே உள்ளது.
அதே ஆளும் முதலாளி வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற எதிர்க்கட்சிகளாக செயல்படும் அரசியல் கட்சிகள் மீது தொழிலாளர்கள் நம்பிக்கை வைக்க முடியாது. ஆளும் கட்சி மக்கள் விரோதச் சட்டத்தைக் கொண்டுவரும் போதெல்லாம், இந்தக் கட்சிகள் காலங்காலமாக செய்து வரும் வெளிநடப்புகளை நடத்துகின்றன அல்லது மன்றத்தின் நடவடிக்கைகளில் இடையூறுகளை ஏற்படுத்தி அதனால் அவையிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். இதன் மூலம் ஆளும் கட்சி எவ்விதத் தடையுமின்றி மசோதாவை நிறைவேற்ற உதவுகின்றன.
அரசியல் மற்றும் தொழிற்சங்க இணைப்பு போன்ற வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தொழிலாளர்கள் தங்கள் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும், நமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.