தமிழக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த கருத்தரங்கு:

விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க போராட்ட ஒற்றுமையை வலுப்படுத்த தீர்மானம்

தமிழகத்தின் தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாபேட்டையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், முன்னேற்றத்திற்கான வழிகள் குறித்தும் விவாதிப்பதற்காக ஒரு கருத்தரங்கம் மார்ச் 28 அன்று நடைபெற்றது. மானாவரி நிலங்களின் பாசனநீர்ப் பிரச்சனை, அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க வழியில்லாமல் இருப்பது மற்றும் வேளாண் விளை பொருட்களுக்கு தேவைப்படும் சேமிப்புக் கிடங்குகளும் பிற உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாதது உள்ளிட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தாளண்மை உழவர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த, இக்கருத்தரங்கில் விவசாயிகளும், தொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகளும், விவசாயிகளின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய முற்போக்கு சிந்தனையாளர்களும் கலந்து கொண்டனர்.

அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய விவசாயிகள் தொடர்ந்து கோரி வருவதை பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினர். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகளுக்கு இலாபகரமானதாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும். 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசாங்கம் அறிவித்தாலும், பல சந்தர்ப்பங்களில், அறிவிக்கப்பட்ட விலை அவற்றின் உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்டாத நிலை இருப்பதை பேச்சாளர்கள் சுட்டிக் காட்டினர். மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமான உத்தரவாதம் அளிக்க அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மறுபுறம், ஏகபோக முதலாளிகள் வேளாண் சந்தையைக் கைப்பற்றி பெரும் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் வழிவகை செய்து வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகளின் வாழ்வாதாரம் ஆண்டுக்கு ஆண்டு சீரழிந்து வருவதை புள்ளி விவரங்களோடு தாளாண்மை உழவர் இயக்கத்தைச் சேர்ந்த பொறியாளர் கோ.திருநாவுக்கரசும் மற்றவர்களும் சுட்டிக் காட்டினர். விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடவும், அரசிடமிருந்து உத்தரவாதமான ஆதரவு விலையை வென்றெடுக்கவும் விவசாயத் தலைவர்கள் தங்கள் உறுதியை வெளிப்படுத்தினர்.

மானாவரி நிலங்களில் உள்ள பயிர்களுக்கு நீர்ப்பாசனத்தை உறுதி செய்வதற்காக தமிழ்நாட்டு உழவர் இயக்கம் அமைத்த வல்லுநர் குழுவின் அனுபவத்தை திரு திருநாவுக்கரசு கருத்தரங்கில் விளக்கிக் கூறினார். இந்த குழுவில் நன்கறிந்த நீர் மேலாண்மை தொழில்நுட்ப வல்லுநர்களும், விவசாய நிபுணர்களும் பங்கேற்றனர். போதுமான தரவுகளின் அடிப்படையில், மாநிலத்தின் வறண்ட பகுதிகளில் மழை நீரை சேமிப்பதற்கான பல எளிய, சிக்கனமான வழிமுறைகளை குழு முன்மொழிந்துள்ளது. தற்போதுள்ள நீர் சேமிப்பு வசதிகளை ஆழப்படுத்துதல், தூர்வாருதல் மற்றும் அவற்றின் உயரத்தை உயர்த்துதல் மற்றும் நீர் பாதுகாப்பிற்காக தடுப்பணைகள், குளங்கள் மற்றும் ஏரிகளை அமைக்கவும் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த வல்லுநர் குழு தனது கண்டுபிடிப்புகளையும், பரிந்துரைகளையும் ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்னரே தமிழக அரசிடம் சமர்ப்பித்திருந்த போதிலும், அதன் அடிப்படையான, சிக்கனமான மற்றும் எளிமையான பரிந்துரைகளைக் கூட அரசாங்கம் செயல்படுத்தவில்லை. இந்தப் பரிந்துரைகளை விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு பேச்சாளர்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டனர்.

வேளாண் விளைபொருட்களுக்கு போதுமான சேமிப்புக் கிடங்குகள் இல்லை என்ற பிரச்சனையை உரையாற்றியோர் எழுப்பினர். நெல், இதர தானியங்கள் மற்றும் வேளாண் விளைபொருட்களுக்கான சேமிப்பு வசதிகள் பற்றாக்குறையாக உள்ளன. முறையான சேமிப்பு மற்றும் குளிர்சாதன வசதிகள் இல்லாததால், ஆண்டுதோறும் ஏராளமான விவசாய விளைபொருட்கள் வீணாகின்றன என்று அவர்கள் குறிப்பிட்டனர். விவசாய வணிகத்திலும் சேமிப்புக் கிடங்குகளிலும் பெருமளவில் நுழையும் பெரும் முதலாளிகளை ஊக்குவிக்கும் அரசாங்கம் அதே வேளையில், விவசாயிகளின் பயன்பாட்டிற்காகப் போதுமான சேமிப்பு மற்றும் கிடங்கு வசதிகளை உருவாக்க வேண்டுமென்றே மறுத்து வருகிறது. தமிழகத்தில், இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில், திறந்தவெளியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நெல், ஒவ்வொரு ஆண்டும் மழையால் நாசமடைந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டு விவசாயிகள் நெற்றி வேர்வை சிந்தி உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் இவ்வாறு சீரழிக்கப்பட்டு வருவது குறித்து அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் கொஞ்சமும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. விவசாய விளைபொருட்களுக்கு போதிய சேமிப்பு கிடங்குகளையும், குளிர் சாதன வசதிகளையும் அரசு அமைக்க வேண்டும் என பேச்சாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அனைத்து நவீன கருவிகள் மற்றும் இயந்திரங்களுடன் கூடிய வேளாண் இயந்திர மையங்களை அரசாங்கம் அமைக்க வேண்டுமென்றும், அந்த இயந்திரங்களை பயன்படுத்த இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்துரையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் விவசாயிகளின் செலவுச் சுமையை குறைக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் பெரு முதலாளிகளுக்கு வழங்கப்படும் கடன் மற்றும் வரி தள்ளுபடியுடன் ஒப்பிடும் போது, ​​அனைத்து விவசாயப் பகுதிகளிலும் விவசாய விளைபொருட்களுக்கு முறையான சேமிப்பு வசதிகளையும், இயந்திர மையங்களையும் அமைக்கத் தேவைப்படும் நிதி மிகவும் சொற்பமே என்பதைப் பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினர்.

கருத்தரங்கில் தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் பொறியாளர் திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற வேளாண்துறை உதவி இயக்குநர் திரு பி.கலைவாணன், திருச்சி நீர்ப் பாசன மேலாண்மைப் பயிற்சி நிறுவனத்தின் பொறியாளர் ம.சேகர், சமவெளி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பொறியாளர் சு.பழனிராஜன், பொதுப் பணித்துறையிலிருந்து ஓய்வு பெற்ற கண்காணிப்புப் பொறியாளர் அ.இராசாராமன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தோழர் சரவண முத்துவேல், ஏரிகள் சீரமைப்பாளர் தோழர் தங்க கண்ணன், தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பாஸ்கர், மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் காளியப்பன், மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சித் தோழர் அருணாசலம், தாளாண்மை உழவர் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் துரை மதிவாணன் மற்றும் பலர் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினர்.

விவசாயிகளுடைய கோரிக்கைகளையொட்டி அவர்களுடைய போராட்ட ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தி முன்னேற வேண்டுமென்ற உறுதியோடு கருத்தரங்கு நிறைவுற்றது.

One comment

  1. விவசாய பெருங்குடி மக்கள் சந்திக்கும் பிரச்சினை களை மக்களுக்கு எடுத்துச் செல்ல ஊடகங்கள் முன் வர வேண்டும் விவசாய மொத்த வியாபாரம் மற்றும் சந்தைகள் விலையை அரசு நிர்ணயித்த விலை மாறிவரும் கால சுழ்நிலைக்கு ஏற்றார் போல் அரசு அரசியல் தலையீடு இல்லாமல் போர் கால அடிப்படையில் வழங்கிட வேண்டும் சிறு குறு விவசாயிகளின் விவசாய ஈடு பொருட்கள் மற்றும் உற்பத்தி சாதனங்களின் விலை குறைய வேண்டும் விவசாய நிலங்கள் விற்பனை செய்வதில் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *