வகுப்புவாத வன்முறைக்கு எதிராகவும், கருத்துரிமையைப் பாதுகாக்கவும் அரசியல் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவோம்!

பாபர் மசூதி இடித்துத் தகர்க்கப்பட்டதன் 30-வது ஆண்டு நினைவு நாள்

பாபரி மசூதி என்றழைக்கப்படும் 16-ஆம் நூற்றாண்டின் வரலாற்று நினைவுச்சின்னம் டிசம்பர் 6, 1992 அன்று தரைமட்டமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற வகுப்புவாத வன்முறைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்தக் குற்றத்தை திட்டமிட்டு நடத்திய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று முற்போக்கு சக்திகள் கோரி வரும் நிலையில், நீதி மறுக்கப்பட்டுள்ளது. பாபரி மசூதி தகர்க்கப்பட்ட அந்த இடத்தில் இராமர் கோவிலைக் கட்ட உத்தரவிட்டதன் மூலம் நீதிமன்ற தீர்ப்புகள் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதை நியாயப்படுத்தப்படுத்தியுள்ளன. இப்பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டு விட்டதாகவும், இதை யார் எதிர்த்தாலும் அவர்கள் தேச விரோதிகள் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தவே இத்தீர்ப்பு பயன்படுத்தப்படுகிறது. இது, மக்களை பயமுறுத்துவதற்கும், அனைத்து எதிர்ப்புகளையும் கருத்து வேறுபாடுகளையும் ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

வகுப்புவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் மக்கள் நமக்கு, 30-வது ஆண்டு நினைவு நாள், கடந்த ஆண்டுகளில் நமது அனுபவத்திலிருந்து வெளிவந்துள்ள முக்கிய படிப்பினைகளை மீண்டும் வலியுறுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும். அயோத்தியைத் தவிர வேறு பல இடங்களில் மசூதிகளை இடித்துத் தள்ளிவிட்டு கோயில்கள் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், வகுப்புவாத நஞ்சு பரவுவது அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையில் முன்னோக்கி செல்வதற்கான வழியை வரையறுக்க இது ஒரு சந்தர்ப்பமாகும்.

நன்கு திட்டமிடப்பட்ட குற்றம்

30 ஆண்டுகளுக்கு முன்னர் இடித்துத் தகர்க்கப்பட்டது, மத வெறியால் உந்தப்பட்டதாகக் கூறப்படும் கரசேவகர்களின் தன்னிச்சையான செயல் என்ற பொய்யையொட்டி கூறப்பட்டுவரும் அதிகாரபூர்வமான கட்டுக் கதையாகும்.

பாபர் மசூதி இடிப்பு எந்த வகையிலும் தன்னிச்சையான நிகழ்வல்ல. இடித்துத் தகர்க்கப்பட்டதும் மற்றும் அதைத் தொடர்ந்து பல வாரங்கள் நடந்த வகுப்புவாத வன்முறைகளும் நன்கு திட்டமிடப்பட்டனவாகும். அவை ஆளும் வர்க்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் வகுக்கப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு அங்கமாக இருந்தன.

ராமர் கோயில் பற்றிய பரப்புரையில் காங்கிரசு மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சித் தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். காங்கிரசு கட்சித் தலைமையிலான மத்திய அரசாங்கமும், பாஜக தலைமையிலான உத்தரப் பிரதேச அரசும் பாபர் மசூதியை இடித்துத் தகர்க்கவும், வகுப்புவாத வன்முறைகள் நடைபெறவும் அனுமதிக்குமாறு அவரவருடைய பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டிருந்தன. சிரி கிருஷ்ணா ஆணையம் டிசம்பர் 1992 மற்றும் சனவரி 1993 இல் நடந்த வகுப்புவாத வன்முறையில் குற்றவாளிகளாக காங்கிரசு, பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளைக் குறிப்பிட்டுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும், அந்த இடத்தில் இராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையையொட்டி வகுப்புவாத வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதையும் நியாயப்படுத்துவதிலும், ஒத்துழைப்பதிலும் நிர்வாகம் மற்றும் சட்டமன்றம், மூத்த அதிகாரிகள் மற்றும் ஆயுத பாதுகாப்புப் படைத் தலைவர்கள் மற்றும் நீதித்துறை என அனைவரும் ஒரு அங்கமாக ஒருங்கிணைந்துச் செயல்பட்டனர்.

நாட்டு மக்கள் அனைவரின் உயிரையும், அவர்களுடைய கருத்துரிமையையும் பாதுகாக்க வேண்டிய கடமையுடைய அரசு, கொலையாளியாக, படுகொலையைத் திட்டமிட்டு நடத்துபவராக மாறியது. அரசின் ஆதரவோடு திட்டமிட்டு நடத்தப்படும் வகுப்புவாத வன்முறையை எதிர் கொண்ட மக்கள் பாதுகாப்பற்றவர்களாக, தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளுமாறு கைவிடப்பட்டனர்.

பிரச்சனையின் வரலாறு

அயோத்தி சர்ச்சை முதலில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது, அவர்கள் பாபர் மசூதியுடன் தொடர்புடைய அனைத்து ஆவண ஆதாரங்களையும் அழித்தார்கள். இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் வழிபடுவதற்கான விதிகளை விவரிக்கும் அப்போது அவாத்தின் நவாபாக இருந்தவர் கையெழுத்திட்ட ஆவணமும் அழிக்கப்பட்ட ஆதாரங்களில் ஒன்றாகும். அங்கிருந்த இராமர் கோவிலை இடித்துத் தள்ளிவிட்டு, பாபரால் மசூதி கட்டப்பட்டது என்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தங்களுடைய அரசிதழில் எழுதி வைத்திருந்தனர்.

இந்து-முஸ்லிம் மோதல்களைத் தூண்டி விடுவது என்பது, இந்தியாவைக் கைப்பற்றி ஆட்சி செய்வதற்காக ஆங்கிலேயரின் முக்கிய திட்டத்தின் மையக் கூறாகும். 1857 – இல் மக்கள், அன்னிய ஆட்சிக்கு எதிராக மத மற்றும் சாதித் தடைகளைத் தாண்டி ஒன்றிணைந்ததைக் கண்ட ஆங்கிலேயர்கள் அதற்குப் பின்னர், சாத்தியமான ஒவ்வொரு துறையிலும் வகுப்புவாத பிளவுகளை மேலும் தீவிரப்படுத்தி நிறுவனமயமாக்குவதில் அதிக கவனம் செலுத்தினர்.

1947 முதல், இந்திய ஆளும் வர்க்கம் அதே ஆட்சி முறையைத் தொடர்ந்து வருகிறது. ராஜீவ் காந்தி தலைமையில் இருந்த மத்திய அரசு, 1986 பிப்ரவரியில் இந்து வழிபாட்டாளர்களுக்கு இடத்தின் பூட்டை மீண்டும் திறந்து விடுவதன் மூலம் பாபர் மசூதி தொடர்பான பிரச்சனைக்கு நெய் வார்த்தது.

இந்திய அரசின் வகுப்புவாதம்

மதச்சார்பின்மை மற்றும் சனநாயகத்தின் தூண் என்று பிரகடனப்படுத்தப்படும் இந்திய அரசின் பிளவுவாத மற்றும் வகுப்புவாதத் தன்மையை கடந்த 30 ஆண்டுகள் முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளன. எப்போதும் மதச்சார்பின்மையின் பெயரில் பேசிக்கொண்டு, வெளிப்படையான மற்றும் மறைமுகமான.. வகுப்புவாதிகளை இந்திய அரசு பாதுகாத்து வருகிறது.

அரசியலமைப்பு சட்டம், இந்திய மக்களை பெரும்பான்மை என்றும், பல சிறுபான்மை மத சமூகங்களென்றும் பிளவுபடுத்துகிறது. இது மக்களின் தேசிய, வர்க்க மற்றும் மனித அடையாளங்களை நசுக்கி வைத்து விட்டு, வகுப்புவாத அடையாளத்தை முன்னிலைப்படுத்துகிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மன்னர்கள் செய்த கூறப்படும் குற்றங்களுக்காக முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துமாறு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்க அரசு அனுமதி அளிக்கிறது. இத்தகைய பரப்புரைகளை நீதிமன்றங்கள் நியாயப்படுத்தி ஊக்குவிக்கின்றன.

வகுப்புவாத பழிவாங்கலுக்கு ஆதரவாக நீதித்துறை பேசுகிறது. பாபர் மசூதியை இடித்துத் தகர்க்க வேண்டுமென வெளிப்படையாகவே அறைகூவலெழுப்பிய பல்வேறு பாஜக தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அது தள்ளுபடி செய்தது மட்டுமின்றி, பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அது உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இதன்மூலம், மத நம்பிக்கை மற்றும் காலனிய பொய்களின் அடிப்படையிலான வாதங்களுக்கு நீதித்துறை சட்ட ரீதியான ஆதரவை வழங்கியுள்ளது.

அரசியல் படிப்பினைகள்

பாபர் மசூதி இடிப்பு இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இது, அரசியல்  குற்றமயமாக்கப்படுவதும் அரசு பயங்கரவாதமும் தீவிரமடையும் ஒரு புதிய காலகட்டத்திற்கான முன்னறிவிப்பாக இருந்தது.

மக்களுக்கு எதிராக மரணத்தையும், அழிவையும், பயங்கரத்தையும் பரப்பாமல் முதலாளி வர்க்கத்தால் இனி ஆட்சி செய்ய முடியாது என்பதை இன்றைய காலகட்டம் வெளிப்படுத்தியுள்ளது. முதலாளி வர்க்க ஆட்சியை நீடிக்கச் செய்வதற்கு வகுப்புவாத வன்முறையை மீண்டும் மீண்டும் அரசு திட்டமிட்டு நடத்த வேண்டியுள்ளது. பாபர் மசூதி இடித்துத் தகர்க்கப்பட்டதும் அந்த இடத்தில் இராமர் கோவில் கட்டுவதற்கான பரப்புரையும் பிப்ரவரி 2002-இல் குஜராத் இனப்படுகொலைக்கு அடித்தளமிட்டது. ஐயோத்தியாவிலிருந்து கரசேவகர்கள் திரும்பிக் கொண்டிருந்த ரயில் எரிக்கப்பட்டது, குஜராத் மாநிலம் முழுவதும் பல வாரங்கள் மற்றும் மாதங்கள் நீடித்த வகுப்புவாத வன்முறையைத் தூண்டி விட்ட தீப்பொறியாகச் செயல்பட்டது.

வரலாற்றுத் தவறுகளை சரிசெய்வது என்ற பெயரில் இன்னும் பலவற்றை இடித்துத் தகர்க்க வேண்டுமென்ற கோரிக்கைகள் இப்போது எழுப்பப்படுகின்றன. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மத உணர்வுகளை சூழ்ச்சியாக கையாளுவது அதிகரித்து வருகிறது. சமூகம் பின்னோக்கித் தள்ளப்பட்டு வருகிறது. மக்களின் கருத்துரிமை உரிமையானது, அதைப் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அரசாலேயே சேற்றில் போட்டு மிதிக்கப்பட்டு வருகிறது.

ஒரு முக்கியமான அரசியல் படிப்பினை என்னவெனில், அதிகரித்து வரும் வகுப்புவாதத்திற்கும் வகுப்புவாத வன்முறைக்கும் ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டுமே காரணம் என்று அடையாளம் காண்பது தவறு என்பதாகும். ஆளும் வர்க்கமே அதற்குப் பொறுப்பாகும். அரசும் அதன் அனைத்து நிறுவனங்களும் பொறுப்பாகும். இந்தியாவிலும் உலக அளவிலும், முதலாளித்துவத்தின் தொடர்ந்து தீவிரமடைந்துவரும் நெருக்கடியே, முதலாளி வர்க்கத்தின் சமூக-விரோதத் தாக்குதலுக்கான பொருளாதார அடித்தளமாகும்.

பாதிக்கப்பட்டவர்களைக் குற்றம் சாட்டுவதும் அவர்களை வகுப்புவாதிகள் என்று சொல்வதும் தவறாகும். மத அடிப்படையில் குறிவைக்கப்படும் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும் தங்கள் வழிபாட்டு முறைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் அணிதிரள்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. போராட்டமானது, அரசு மற்றும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக நடத்தப்பட வேண்டும்.

அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத வன்முறைகள் உட்பட, மக்களுக்கு எதிரான பெரும் குற்றங்களில் ஈடுபடாமல் நாட்டை ஆளும் திறன் இந்திய முதலாளி வர்க்கத்திற்கு இல்லை என்பதைக் கடந்த 30 ஆண்டுகள் காட்டுகின்றன. இந்த வர்க்கம் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான அனைத்து ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் முதலாளி வர்க்க ஆட்சியால் பாதிக்கப்பட்டோர் அனைவரின் கூட்டணியால் மட்டுமே நாட்டைச் சிறப்பாக ஆள முடியும்.

முன்னேற்றத்திற்கான வழி

ஆளும் வர்க்கம் எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரையும் அவர்களின் மதத்தின் அடிப்படையில் குறிவைத்தால், அது உண்மையில் ஒட்டுமொத்த மக்கள் மீதான தாக்குதலாகும். இது மக்களின் ஒற்றுமை மற்றும் அவர்களின் சமூக சூழலின் மீதான தாக்குதலாகும்.

ஆளும் முதலாளி வர்க்கத்திற்கும் தற்போதுள்ள வகுப்புவாத அரசுக்கும் எதிராக மக்களின் அரசியல் ஒற்றுமையை கட்டியெழுப்புவதும் பலப்படுத்துவதும் நமது உடனடிப் பணியாகும். வகுப்புவாத வன்முறைக்கும் அனைத்து வகையான அரசு பயங்கரவாதத்திற்கும் எதிராக அரசியல் ஒற்றுமை கட்டப்படுவதைத் தடுக்கும் கருத்தியல் சிந்தனைகள் உட்பட அனைத்து வகையான குறுங்குழுவாத அணுகுமுறைகளையும் நாம் எதிர்க்க வேண்டும்.

ஒவ்வொருக்கும் தத்தம் கருத்துக்களைக் கொண்டிருப்பதற்கான உரிமை உள்ளது, அதை மதிக்கவும் பாதுகாக்கவும் அரசு கடமைப்பட்டுள்ளது என்ற கொள்கையையொட்டி நாம் ஒன்றுபட வேண்டும். இதை ஏற்றுக்கொண்டால், எந்த ஒரு மத நம்பிக்கையும் பெரும்பான்மையா அல்லது சிறுபான்மையா என்ற கேள்விக்கே இடமில்லை. ஒருவர் எந்த கடவுளையும் வணங்கலாம் அல்லது கடவுள் இல்லை என்றும் கருதலாம். ஒவ்வொருவரின் நம்பிக்கையும் மற்ற எந்த ஒருவரின் நம்பிக்கையைப் போலவே சமமாக கருதப்பட வேண்டும்.

ஒவ்வொரு தனிநபரின் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளது என்ற கொள்கையைச் சுற்றி நாம் ஒன்றுபட வேண்டும். இந்த உரிமையை அரசு பாதுகாக்கத் தவறினால், அதிகாரத்தின் உயர்மட்டத்திலுள்ளவர்கள் பதிலளிக்க பொறுப்பேற்க வேண்டும். அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எதிரான குற்றங்களை இழைப்பவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

1857 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த நம் முன்னோர்கள், “நாமே இந்தியா, அது நமக்கே உரியதென!” முழங்கினர். நமது பொது எதிரியைத் தோற்கடித்து, நமது எதிர்காலத்தைக் கூட்டாகத் தீர்மானிக்கும் மக்களாக ஆவதற்காக, சாதி மத மற்றும் எல்லா வேறுபாடுகளுக்கும் மேலாக எழுந்து ஒன்றுபட வேண்டும் என்ற இந்திய மக்களின் விருப்பத்தை இந்த முழக்கம் வெளிப்படுத்தியது. இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இந்தப் போராட்டம் இன்று வரை தொடர்கிறது.

ஏகபோக முதலாளிகளின் தலைமையிலான முதலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஓர் அங்கமாக தற்போதுள்ள வகுப்புவாத அரசை, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் ஆட்சியின் புதிய அரசு அதிகாரத்தைக் கொண்டு மாற்றும் நோக்கத்துடன் இந்த வகுப்புவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட வேண்டும். நாமே முடிவெடுப்பவர்களாக இருக்கும் ஒரு அரசை நிறுவி, உறுதிப்படுத்த இந்த பண்டைய நாகரிகத்தின் மக்களாகிய நம்மால் முடியும். அத்தகைய அரசு, சமுதாயத்திலுள்ள அனைவருக்கும் பொதுவான மற்றும் மீற முடியாத உரிமையாக கருத்துரிமையை மதித்துப் பாதுகாக்கும். யாருடைய கருத்துரிமை அல்லது வேறு எந்த மனித உரிமையையும் மீறும் எவரும், குழுவும் அல்லது கட்சியும் உடனடியாக விசாரிக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவதை இது உறுதி செய்யும்.

அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்!

ஒருவர் மீதான தாக்குதல் அனைவரின் மீதான தாக்குதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *