பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்புச் சட்டம் : தொழிலாளர்களின் உரிமைகள் கடுமையான மீறல்

தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் நடத்திய கூட்டம்

பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்புச் சட்டமானது இந்திய அரசு செப்டம்பர் 2020 இல் வெளியிட்ட நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களில் ஒன்றாகும். இந்த பிரச்சனைகள் குறித்து தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பல்லாண்டுகளாக நமது நாட்டின் தொழிலாளர்கள் தங்களின் இடைவிடாத போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் மூலம், சில பிரிவு தொழிலாளர்களுக்கு ஓரளவு சமூகப் பாதுகாப்பிற்கு வாக்குறுதி அளிக்கும் சட்டங்களை இயற்றுமாறு அரசை கட்டாயப்படுத்தினர். கொண்டு வரப்பட்டுள்ள பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்புச் சட்டம் இந்த சாதனைகள் அனைத்தின் மீதான தாக்குதல் என தொழிலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பணியிடத்தில் அவர்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகள் ஆகியவற்றில், அனைத்து துறைகளிலும் உள்ள தொழிலாளர்கள் ஏற்கனவே எதிர்கொள்ளும் மோசமான நிலைமைகளை இந்த புதிய சட்டம் பெரிதும் மோசமாக்குகிறது. இது தொழிலாளர்களின் வாழ்வுரிமை மற்றும் கண்ணியத்தைக் கடுமையாக மீறுகிறது. கட்சி வேறுபாடுகளைக் கடந்த அளவில் தொழிற்சங்கங்களும், அனைத்து தொழில்கள் மற்றும் சேவைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது அமைப்புகளால் இது உறுதியாக எதிர்க்கப்படுகிறது.

டிசம்பர் 24, 2022 அன்று இந்தச் சட்டம் குறித்து தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய பேச்சாளர்கள், இரயில்வே, கட்டுமானத் தளங்கள், துணி மற்றும் ஆடைத் தொழில், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் பிற துறைகளிலும் சேவைகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்களின் அபாயகரமான பணி நிலைமைகள் குறித்து விரிவாகப் பேசினர்.

கூட்டத்தில் முக்கிய பேச்சாளர்களாக தோழர்கள் பிர்ஜு நாயக், (செயலாளர் – தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்); காந்த ராஜு, (தேசிய பொதுச் செயலாளர், அகில இந்திய இரயில்வே ட்ராக் மெயின்டெய்னர் யூனியன் (AIRTU); சஞ்சய் பாண்டி, (மத்திய செயல் தலைவர், இந்திய இரயில்வே லோகோ ரன்னிங்மென் அமைப்பு); சுபாஷ் பட்நாகர், (செயலாளர், நிர்மான் மஸ்தூர் பஞ்சாயத்து சங்கம்) மற்றும் டாக்டர் சுவாதி ரானே, (நிறுவனர், சேவசக்தி ஹெல்த்கேர் கன்சல்டன்சி) ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் சார்பில் தோழர் சுசரிதா நடத்தினார்.

பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலை நிலைமைகள் எப்போதும் நம் நாட்டின் தொழிலாளி வர்க்கத்தின் முக்கிய பிரச்சனையாக உள்ளது என்று தோழர் பிர்ஜு நாயக் சுட்டிக்காட்டினார். பணியிடங்களில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர். மேலும் இலட்சக்கணக்கானோர் காயம் அடைகின்றனர், அவர்களில் பலர் வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றவர்களாக வாழ்கின்றனர். தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ விபத்துகள், நிலத்தடி சுரங்கங்களில் தொழிலாளர்கள் சிக்குவது, சுரங்கங்களில் வெள்ளம் புகுந்து தொழிலாளர்கள் மூழ்குவது, உலைகள் வெடித்து சிதறுவது, கட்டுமான பணிகளில் தொழிலாளர்கள் விழுந்து மரணம், வேலையின் போது இரயில் டிராக்மென் உயிரிழப்பது, சாக்கடை சுத்தம் செய்யும் போது நச்சு வாயுவின் காரணமாக உயிரிழப்பது இவையெல்லாம் நம் நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் ஆகும். அவற்றில் சில நிகழ்வுகள் மட்டுமே வெளி வருகின்றன, பெரும்பாலானவை அறிவிக்கப்படாமல் போகின்றன. இவ்வாறு உயிரிழக்கும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் மீறி, மோசமான நிலைமைகளில் பணிபுரிய அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். நமது நாடு முழுவதும் பதிவு செய்யப்படாத இலட்சக்கணக்கான தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கடைகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கட்டுமானத் தளங்களில் உள்ள தொழிலாளர்களின் நிலைமைகளைக் கண்காணிக்க அரசாங்கம் கவலைப்படாததால், இப்படிப்பட்ட பணியிடங்களில் இறந்தவர்களின் உண்மையான அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை எதுவும் இல்லை.

இலாபத்தை அதிகரிக்க வேண்டும் என்ற பேராசையால் உந்தப்பட்ட முதலாளித்துவ உடமையாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வேண்டுமென்றே புறக்கணித்ததன் விளைவாகவே வேலையிடத்தில் தொழிலாளர்கள் மரணங்களும், காயங்களும் ஏற்படுகின்றன என்ற உண்மையை மறைப்பதற்காக அவற்றை விபத்துகள் என்று பொய்யாக அழைக்கின்றனர்.

பணியிடத்தில் ஏற்படும் மரணங்கள் மட்டுமே, பணிச்சூழலின் காரணமாக தொழிலாளர்கள் இறப்பதற்கான ஒரே காரணமோ அல்லது முக்கிய காரணமோ அல்லவென பிர்ஜு நாயக் விளக்கினார். தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களில் வேலை நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன, அங்கு தொழிலாளர்கள் புற்றுநோய் மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற பல நோய்களுக்கு ஆளாகிறார்கள், அது உடல்நலக்குறைவுக்கும் இளம் வயது மரணங்களுக்கும் வழிவகுக்கிறது. பணியிடத்தில் ஏற்படும் நோய்களால் இறக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை இந்திய அரசு பதிவு செய்வதில்லை.

மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை இந்த பணியிடப் பாதுகாப்புச் சட்டம் முற்றிலும் புறக்கணிக்கிறது, 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்வதாக காட்டும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும் என்பதால் இதன் மூலம் விவசாயத் தொழிலாளர்கள் உட்பட நாட்டின் 90% தொழிலாளர்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். தகவல் தொழில் நுட்ப பணியாளர்கள் மற்றும் “மேலாளர்கள்”, “மேற்பார்வையாளர்கள்” போன்ற தரவரிசையில் இருப்பவர்களையும் இந்த சட்டம் விலக்கி வைக்கிறது. ‘மிகை நேர வேலை – ஓவர் டைம்’ என்ற பெயரில் வாரத்திற்கான அதிகபட்ச வேலை நேரத்தை நீட்டித்திருப்பதன் மூலமும், பெண்களுக்கு இரவு ஷிப்ட் வேலைகளை சட்ட பூர்வமாக்குவதன் மூலம், இது தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு மீது மேலும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.

நமது நாட்டில் மிகப்பெரும்பாலான தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை நடத்துவதற்காக, பயங்கரமான நிலைமைகளில் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது, மக்களைக் கொல்லும் முதலாளித்துவ அமைப்பு மற்றும் இந்த சுரண்டல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்திய அரசின் அப்பட்டமான குற்றச் செயலாகும். முதலாளி வர்க்கம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வேலை நிலைமைகளை உறுதிப்படுத்த மறுக்கிறது, ஏனெனில் அது அதிகபட்ச இலாபத்திற்கான அதன் நடவடிக்கைகளைப் பாதிக்கும். முதலாளிகளின் இந்த முயற்சிகளைப் பாதுகாக்க அனைத்து அரசாங்கங்களும் வேலை செய்து வந்துள்ளன, தற்போதைய அரசாங்கமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலுக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை கோருவதற்கான போராட்டத்தை நாம் ஒற்றுமையோடு தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்திய இரயில்வேயில் உள்ள சுமார் 4 லட்சம் இருப்புப்பாதை பராமரிப்பாளர்களின் பணியின் மிகவும் அபாயகரமான நிலைமைகள் பற்றி தோழர் காந்த ராஜு உரையாற்றினார். டிராக்மென்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 300-400 டிராக்மென்கள் பணி செய்கையில் கொல்லப்படுகிறார்கள். உரிய இழப்பீடு பெறுவதற்கான நடைமுறைகள் நீண்டதாகவும், சிக்கலானதாகவும் இருப்பது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை மேலும் மோசமாக்குகிறது.

டிராக்மென்கள் மீது அதிக வேலைச் சுமை இருக்கிறது. அவர்கள் எந்த மிகை நேர ஊதியமும் இன்றி 12 மணி நேர ஷிப்டுகளில் வேலை செய்கிறார்கள். ஏறக்குறைய ஒரு இலட்சம் டிராக்மென் பணியிடங்கள் காலியாக உள்ளன, ஆனால் இந்த பணியிடங்களை நிரப்ப அரசாங்கமும் இரயில்வே வாரியமும் மறுத்து வருகின்றன. டிராக்மேன்களின் பாதுகாப்பிற்காக, தண்டவாளத்தில் வரும் இரயில்கள் பற்றி எச்சரிப்பதற்காக, பாதுகாப்பு சாதனங்களை இரயில்வே வாரியம் அளிக்க வேண்டுமென டிராக்மென்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதைச் செயல்படுத்த இரயில்வே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிராக்மென்கள் தங்கள் கைபேசியில் உள்ள டார்ச் லைட்டுகளைப் பயன்படுத்தி இருட்டில் வேலை செய்ய வேண்டியுள்ளது, இது மிகவும் ஆபத்தானதாகும். லெவல் கிராசிங் கேட்களில் பணிபுரியும் டிராக்மென்களுக்கு ஓய்வு அறையோ, குடிநீரோ அல்லது கழிப்பறை வசதிகளோ இல்லை. இவையனைத்தும் இந்திய அரசாங்கம் தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் முற்றிலும் இரக்கமற்ற அலட்சியமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகின்றன.

நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் குறித்து விரிவாகப் பேசிய தோழர் காந்த ராஜு, தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் வென்றெடுத்த அனைத்து உரிமைகளின் மீதான நேரடியான தாக்குதலாகும் இது என்று விளக்கினார். அவர்கள் விரும்பும் தொழிற்சங்கத்தை உருவாக்கும் உரிமை தாக்குதலுக்கு உள்ளாகிறது. தொழிலாளர் தொகுப்புச் சட்ட விதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்ற சாக்குப்போக்கின் கீழ், இரயில் பாதை பராமரிப்பாளர் சங்கத்தின் அங்கீகாரத்தை இரயில்வே வாரியம் எவ்வாறு முடக்கியுள்ளது என்பதை எடுத்துக் காட்டி அவர் விளக்கினார். முதலாளிகள் தங்கள் இலாபத்தை அதிகரிப்பதற்காக, தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும் நசுக்க விரும்புகிறார்கள், மேலும் அரசாங்கம் அவர்களின் நலன்களுக்காக முழுமையாக செயல்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் அமல்படுத்துவதைத் தடுக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துவதில் இந்திய இரயில்வேயின் டிராக்மென்கள் உறுதியாக இருப்பதாக அவர் அறிவித்தார்.

தொழிற்சாலைகள், சுரங்கங்கள், கப்பல் துறைமுகங்கள், கட்டுமானத் தளங்கள், பத்திரிகையாளர்கள் போன்றவற்றில் பாதுகாப்பு தொடர்பான 13 தொழிலாளர் சட்டங்களையும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களையும் உள்ளடக்கியதாக பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது என்று தோழர் சஞ்சய் பாண்டி விளக்கினார். இரயில்வே ஊழியர்கள் எதிர்கொள்ளும் குறிப்பான விபத்துகள், காயங்கள் மற்றும் ஆபத்துகளின் தன்மை இதில் சேர்க்கப்படவில்லை. இரயில்வேயில் வேலை செய்யும் சூழ்நிலைகள் காரணமாக வரக்கூடிய தூக்கமின்மை, முதுகுவலி, நீரிழிவு நோய், நினைவாற்றல் இழப்பு போன்ற நோய்களும் இதில் சேர்க்கப்படவில்லை. தொழிலாளர்கள் தங்களுக்கென தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். 500 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள் மட்டுமே கட்டாய பாதுகாப்புக் குழுவைக் கொண்டிருக்கும் என்று வரையறுப்பதன் மூலம், இந்தச் சட்டம் பாதுகாப்பான வேலை நிலைமைகளுக்கான உரிமையை வெளிப்படையாக மீறுகிறது. சிறு நிறுவனங்களில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை இந்தச் சட்டம் விலக்கி வைக்கிறது.

கூடுதல் வேலை நேரத்தின் அளவை அதிகரிக்கவும், தொழிலாளர்களைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்தவும் முதலாளிகளை அனுமதிக்கும் பல விதிகள் சட்டத்தில் இருப்பதை தோழர் சஞ்சய் பாண்டி சுட்டிக் காட்டினார். இந்த தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக அனைத்து தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை அனைத்து பணியிடங்களிலும், தெருக்களிலும் முடுக்கிவிட வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.

கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களுக்கென ஒரு ஒருங்கிணைந்த சட்டமாக, கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் (பிஓசிடபிள்யூ BOCW) சட்டத்தை உருவாக்க வேண்டுமென்று கோரி 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய நீண்ட போராட்டத்தைப் பற்றி தோழர் சுபாஷ் பட்நாகர் பேசினார். இந்தப் போராட்டத்தின் விளைவாக, இன்று நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான கட்டுமானத் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் உடனடி மற்றும் நீண்ட காலத் தேவைகளுக்காக ரூ.80,000 கோடிக்கு மேல் பாதுகாப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் பல்வேறு வழிகளிலும் தவறாகப் பயன்படுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இந்த புதிய பணியிடப் பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பிஓசிடபிள்யூ சட்டமே இரத்து செய்யப்பட்டு, கட்டுமானத் தொழிலாளர்கள் போராடி வென்ற உரிமைகள் பல மறுக்கப்பட வாய்ப்புள்ளது என்று தோழர் பட்நாகர் விளக்கினார். எனவே, பிஓசிடபிள்யூ சட்டத்தைப் புதுப்பிக்க வேண்டும் என கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மற்ற அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளுடன் சேர்ந்து, கட்டுமானத் தொழிலாளர்களும் இந்த நான்கு தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்களை உறுதியாக எதிர்க்கின்றனர் என்று பட்நாகர் கூறினார்.

டாக்டர் சுவாதி ரானே, செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் பற்றி பேசினார். அனைத்து மக்களுக்கும் மலிவு விலையில் நல்ல தரமான மருத்துவ சேவையை வழங்க வேண்டிய கடமையை நிறைவேற்ற மறுத்துவரும் அரசாங்கத்தை அவர் கண்டித்தார். அரசாங்கம், பொது சுகாதார அமைப்பை சிதைத்து வருகிறது என்றும் சுகாதார சேவைகளை மென்மேலும் தனியார்மயமாக்குவதற்கு நெருக்குதல் கொடுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். தொழிலாளர்களின் நோய் மற்றும் துயரத்தில் இருந்து பெரும் இலாபம் ஈட்ட விரும்பும் முதலாளிகளின் நலன்களுக்காக அரசாங்கம் செயல்படுகிறது என்று அவர் கூறினார். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவை இன்று மிகவும் பொதுவான வேலை தொடர்பான நோய்களாக உள்ளன. மேலும் சுத்தமான மற்றும் சுகாதாரமான வாழ்க்கைச் சூழல், சுத்தமான குடிநீர், சத்தான உணவு மற்றும் தூய்மையான சூழல் தொழிலாளர்களுக்கு இல்லை. ஒரு சராசரி தொழிலாளி தனது ஊதியத்தில் பெரும் பகுதியை சுகாதாரப் பராமரிப்புக்காகச் செலவிடுகிறார், ஏனெனில் அவரும் அவரது குடும்பத்தினரும் தனியார் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இஎஸ்ஐ மருத்துவமனைகளை மூடவும், தொழிலாளர்களை தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல நிர்பந்திக்கவும் அரசு முயற்சிக்கிறது என்று டாக்டர் ரானே கூறினார். மிகக் குறைவான மற்றும் போதுமான பணியாளர்கள் இல்லாத போதும் அரசு மருத்துவமனைகள் மட்டுமே மக்களுக்கு சேவை செய்கின்றன என்பதை கோவிட் தொற்றுநோய் எடுத்துக் காட்டியது, அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை திருப்பி அனுப்புகின்றன அல்லது அவர்களை கசக்கிப் பிழிகின்றன. செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் சுரண்டப்படுகிறார்கள், மேலும் தனியார் மருத்துவமனைகளில் அவர்கள் மேலும் அதிகமாக சுரண்டப்படுகிறார்கள். செவிலியர்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை, முறையான உடை மாற்றும் அறைகள் அல்லது இரவு பணிக்கு ஓய்வு அறைகளும் இல்லை, சரியான பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் அபாயகரமான சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் கூட மருத்துவமனைப் பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதை அவர் கண்டித்தார். மேலும் அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவமனைகள் தேவை என்றும், மருத்துவமனைகளில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் அரசு ஊழியர்களாகவும், முறையான பயிற்சி பெற்றவர்களாக, போதுமான ஊதியம் மற்றும் பாதுகாப்பான பணி நிலைமைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கையை முன்வைத்தார்.

தொழிலாளர்களுக்கு நல்ல மற்றும் மலிவான செலவில் சுகாதாரப் பாதுகாப்புக்கான உரிமைகளுக்காகப் போராடுவதற்கு மக்கள் மன்றங்களை அமைக்கப்பட வேண்டுமென அவர் முன்மொழிந்தார். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பணியாளர்களின் பணி நிலைமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வைப் பரப்பவும், முறையான சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல்களைக் கோரவும் அனைவரும் உழைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். சுகாதார பணியாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறந்த சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகளைக் கோர வேண்டும் என்றார் அவர்.

அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தோழர் கீதா ராமகிருஷ்ணன் கட்டுமானத் தொழிலாளர்களின் நிலை குறித்து பேசினார். பணியிடத்தில் பாதுகாப்பு தொடர்பான பிஓசிடபிள்யூ சட்டத்தின் பிரிவு, புதிய பணியிடப் பாதுகாப்பு குறித்த சட்டத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். அதனால்தான் கட்டுமானத் தொழிலாளர்களின் உடனடி கோரிக்கையானது, பிஓசிடபிள்யூ சட்டத்தை மீட்டெடுப்பதாக உள்ளதென அவர் விளக்கினார்.

கட்டுமானத் தொழிலாளர்கள் ஒரு தனிப்பட்ட முதலாளியிடம் வேலை செய்யாததால், அவர்கள் தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) கீழ் காப்பீடு செய்யப்படுவதில்லை. பெரும்பாலான கட்டுமானப் பணிகள், ஒப்பந்தம் மற்றும் துணை ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்றன என்று அவர் விளக்கினார்.

கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாராத் துறையில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் இன் கீழ் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை அவர் எழுப்பினார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் உழைத்துவரும் அருட்தந்தை போஸ்கோ, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சனைகளை எடுத்துரைத்தார். இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கின்றனர். அரசின் நிர்வாகத்தின் பல துறைகள் உட்பட, எல்லா நிறுவனங்களிலும் ஒப்பந்த தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் முதலாளிகள் எந்த விதமான பாதுகாப்பையும் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான சட்டங்கள் எதுவும் இல்லை. தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் பெற்ற வெற்றிகள் அனைத்தும் தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களின் கீழ் மறுக்கப்படுகின்றன. தண்ணீர், தங்குமிடம், கல்வி, சுகாதாரம் – ஆகிய அடிப்படைத் தேவைகளும் பிற உரிமைகள் அனைத்தும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மறுக்கப்படுகின்றன. அவர்கள், கழிவறை, சரியான உணவு, குடிநீர் இன்றி, மோசமான சூழ்நிலையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அனைத்துத் தொழிலாளர் அமைப்புகளும் ஒன்றிணைந்து, தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்றும், அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் முறையான வேலை நிலைமைகளை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் கோரி போராட அவர் அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு தொழிலாளர் ஆதரவுக் குழுவைச் சேர்ந்த தோழர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூரில் உள்ள துணி மற்றும் ஆடைத் தொழிலாளர்களின் நிலைமைகளை எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில்தான் மிக அதிக அளவில் நூற்பாலைகள் உள்ளன. அங்கு வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் ஆவர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் இவர்கள், பணிப் பாதுகாப்பு இல்லாதவர்களாக உள்ளனர். அவர்கள் தங்கும் விடுதிகளிலும், ஆலைகளுக்குள்ளும், முறையான உணவு, குடிநீர், கழிப்பறைகள் இன்றி பரிதாபமான சூழ்நிலையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். துணி ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பருத்தி பஞ்சு மற்றும் சத்தத்தால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர், இது அவர்களின் நலத்தை மோசமாக பாதிக்கிறது. அவர்களுக்கு பாதுகாப்புக் கருவிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. கொத்தடிமைகள் போல அவர்கள் நடத்தப்படுகிறார்கள். பெரும்பாலான இந்தத் தொழிலாளர்கள், தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இல்லை. விபத்துக்களுக்கு இழப்பீடோ அல்லது உடல்நலக் குறைவின் போது விடுப்போ கிடையாது. பணியிடப் பாதுகாப்பு தொகுப்புச் சட்டம் என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல் என்று கிருஷ்ணமூர்த்தி கூறினார். அனைத்து தொழிலாளர் அமைப்புகளும் தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்களை இரத்து செய்வதற்காக ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

காம்கார் ஏக்தா கமிட்டியின் பாவே, இரயில்வே என்ஜின் டிரைவர்கள் மற்றும் டிராக்மேன்களின் வேலை நேரம் எவ்வாறு அதிகரிக்கப்படுகிறது என்பதை விவரித்தார். இது அவர்களின் பணியை மிகவும் அபாயகரமானதாக ஆக்கி, அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிப்பது மட்டுமின்றி பயணிகளுக்கு ஆபத்தையும் அதிகரிக்கிறது.

அனைத்து அரசாங்கங்களும் மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கின்றன, ஆனால் உண்மையில் முதலாளி வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலை விசுவாசத்தோடு செயல்படுத்துகின்றன என்று இங்கிலாந்தின் இந்திய தொழிலாளர் சங்கத்தின் தல்விந்தர் சுட்டிக்காட்டினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர்களாக ஆக்குவதற்காக, எப்படி மக்கள் கைகளில் அதிகாரத்தை கொண்டு சேர்ப்பது என்பது நாம் அனைவரும் சிந்திக்கவும் விவாதிக்கவும் வேண்டிய கேள்வியாகும் என்று அவர் கூறினார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி மற்ற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கும், அதன் மூலம் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் ஒரு மேடையை வழங்கி வரும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்திற்கு பேச்சாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள், தொழிலாளர்களைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்பதில் ஒருமித்த கருத்து இருந்தது. பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்புச் சட்டம் பணியிடத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பின்மையை அதிகரித்து, பல ஆண்டுகளாக போராடி வென்ற தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, இந்த தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டத்தை நாம் முடுக்கிவிட வேண்டும்.

முதலாளி வர்க்கத்திற்கு எதிராகவும், நமது உரிமைகள் மீதான அனைத்துத் தாக்குதல்களுக்கு எதிராகவும் நமது போராட்ட ஐக்கியத்தை வலுப்படுத்துவதே தொழிலாளி வர்க்கத்திற்கு முன்னேறிச் செல்வதற்கான வழியாகும். தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மூலம் உலகமயமாக்கல் திட்டத்திற்கு எதிராக தொழிலாளர்-விவசாயி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். முதலாளித்துவ பேராசையை நிறைவேற்றுவதற்கு பதிலாக மனித தேவைகளை நிறைவேற்றும் வகையில் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்காக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவும் நோக்கத்துடன் நமது போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *