அதன் உண்மையான நோக்கம் தெளிவாக அம்பலமானது
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, நவம்பர் 8, 2016 அன்று, பிரதமர் நரேந்திர மோடி எல்லா 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளையும் தடை செய்யும் முடிவை வெறும் நான்கு மணி நேரம் அவசாகம் அளித்து அறிவித்தார்.
எண்ணியல் (டிஜிட்டல்) பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை
கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், பயங்கரவாதத்துக்கு வரும் நிதியுதவியை முடக்குவதற்கும் பண மதிப்பு நீக்கம் வழி செய்யும் என்று பிரதமர் கூறினார். இது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை குறைக்கும் என்றும் அவர் கூறினார். “நீண்ட கால ஆதாயத்திற்காக” “தற்காலிக” வலியை பொறுத்துக் கொள்ளும்படி அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கூற்றுக்கள் ஒவ்வொன்றும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளன.
பணமதிப்பு நீக்கம், நீண்ட காலத்திற்கு கடுமையான பண நெருக்கடியை உருவாக்கியது. அது, மக்கள் தங்கள் சேமிப்புகளை வங்கிகளில் கட்டி வைக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தியது மேலும் அது, ரொக்கப் பண பரிவர்த்தனைகளுக்கு பதிலாக மின் எண்ணியல் (டிஜிட்டல்) பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ரொக்கமில்லாத எண்ணியல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. 2021-22 இல் 1000 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 7400 கோடிக்கும் அதிகமான எண்ணியல் பரிவர்த்தனைகளோடு, இந்தியா இப்போது எண்ணியல் பண பரிவர்த்தனைகளில் உலகின் மிகப்பெரிய சந்தையாக உள்ளது.
இந்தியாவில் எண்ணியல் பணப் பரிவர்த்தனைகளை பெருமளவில் பயன்படுத்துவதால், நிதி தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களுக்கு பெரும் இலாபத்திற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதில் கூகுள், பேடிஎம், போன்பே மற்றும் ஏர்டெல், ஜியோவின் பணப் பரிவர்த்தனை வங்கிகளும் அடங்கும்.
உழைக்கும் மக்களுக்கு பண மதிப்பு நீக்கத்தின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தியது. விவசாயம், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், கட்டுமானம் மற்றும் சுற்றுலா போன்ற ரொக்கப் பண பரிவர்த்தனைகளை பெரிதும் நம்பியிருக்கும் பொருளாதாரத்தின் பல துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மக்கள் அவசர மருத்துவ சேவைகளுக்கு பணம் செலுத்த முடியாமல் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவர்களின் துன்பத்தையும் கடுந்துயரத்தையும் “தற்காலிக வலி” என்று கூறப்பட்டது.
மூன்று இலட்சத்துக்கும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டபோது கிட்டத்தட்ட நான்கு கோடி மக்கள் வேலையிழந்தனர். மூடப்பட்ட இந்த நிறுவனங்களில் பல தங்கள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க முடியவில்லை. அவர்களின் வலி நிரந்தரமானது, தற்காலிகமானதல்ல.
“நீண்ட கால ஆதாயம்” முதலாளித்துவ கோடீஸ்வரர்களுக்கு கிடைத்தது, அவர்கள் பயனடைவதற்காகத் தான் உண்மையில் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது.
2016 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி, பண மதிப்பு நீக்கத்தின் உண்மையான நோக்கத்தை பிரதமர் அவர்களே “நாடு இன்று நிறைவேற்ற விரும்பும் மிகப்பெரிய பணி ‘ரொக்கப் பணமில்லா சமுதாயம்’ என்ற நமது கனவை நனவாக்குவதாகும்” என்று கூறி வெளிப்படுத்தினார்,
ரொக்கப் பணப் பயன்பாட்டைக் குறைப்பது என்பது, ஊழலைக் குறைப்பதல்ல. ரொக்கமற்ற பல வடிவங்களிலும் ஊழல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதற்கு முதலாளித்துவ நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்துவது அத்தகைய ஒரு எடுத்துக்காட்டாகும். முதலாளித்துவ நிறுவனங்களின் பெரும் கடன்களை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் தள்ளுபடி செய்ய வைப்பது, அண்மைக் காலங்களில் மிகப் பெரிய ஊழல் மோசடியாகும். தனியார்மயம், பொதுத்துறையில் அரசின் முதலீடுகளை விலக்கிக் கொள்வது மற்றும் பொதுச் சொத்துக்களைப் பணமாக்குதல் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு அடிமட்ட விலைக்கு விற்பதும் ஊழலின் ஒரு முக்கிய வடிவமாகும்.
மிகப் பெரிய அளவில் கறுப்புப் பணம் கைப்பற்றப்படும் என்றும், எனவே ஒவ்வொரு ஏழையின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்பது அரசின் வாக்குறுதிகளில் ஒன்று. இந்த வாக்குறுதி 6 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவோமெனக் கூறப்பட்டதும் அப்பட்டமான பொய்யாகும்.
பண மதிப்பு நீக்கத்தின் மூலம் 4 முதல் 5 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் மீட்கப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த அறிக்கை கூட பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30, 2017 அன்று வெளியிடப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை, அன்று வரை 98.96 சதவீத தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது. 16,000 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மட்டும் திரும்ப வரவில்லை.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ள நோட்டுகள் ஒழிக்கப்படும் என்றும், அதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகள் குறையும் என்றும் பிரதமர் கூறியிருப்பது முற்றிலும் பொய்யானது என்பதும் அம்பலமாகியுள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பவர்கள், கள்ள நோட்டுகளை மட்டும் சார்ந்து இருப்பதில்லை, அவர்கள் சமீபத்திய கிரிப்டோ-நாணயம் உட்பட பல நவீன நிதி வழிகளைப் பயன்படுத்துகின்றனர்.
பண மதிப்பு நீக்கம் நடைமுறைபடுத்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆன நிலையில், ஏழை -பணக்காரர் இடைவெளியைக் குறைக்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. மாறாக அந்த இடைவெளி உண்மையில் மிகப் பெரிய அளவில் விரிவடைத்துள்ளது.
பணமதிப்பு நீக்கத்தை நியாயப்படுத்துவதற்காக அரசாங்கம் கூறிய அனைத்தும் அப்பட்டமான பொய்கள் என்பதை வாழ்க்கை அனுபவம் அம்பலப்படுத்தியுள்ளது. மிகப்பெரிய இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் நலனுக்காக, எண்ணியல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதே அதன் உண்மையான நோக்கம் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.