தமிழகத்தில் தொடரும் விவசாயிகள் போராட்டங்கள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வேளாண் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை, உரங்கள் உட்பட இடுபொருட்கள் தடையின்றி கட்டுப்பாடான விலையில் கிடைக்க வேண்டும், மின்சார திருத்தச் சட்டம் இரத்து, வெள்ளத்தால் பயிர் இழப்பீட்டிற்கு உரிய நிவாரணம், விளை நிலங்களை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட  தங்களுடைய பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தியும், தீர்வு கோரியும் விவசாயிகள் இடைவிடாமல் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அண்மையில் நடைபெற்ற விவசாயப் போராட்டங்கள் பற்றிய சுருக்கம் பின்வருமாறு –

உரங்கள் மற்றும் பிற விவசாய இடுபொருட்களின் தட்டுப்பாட்டிற்கு எதிரான போராட்டங்கள்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்டக் குழு, திருச்செந்தூர் வட்டாரக் குழு சார்பில் குரும்பூரிலும், ஆறுமுகநெரியிலும் மாவட்டத்தின் மற்றும் பிற இடங்களிலும் விவசாயிகள் ஒன்று கூடி செப்டெம்பர் – அக்டோபர் மாதங்களில் பல ஆர்பாட்டங்களை தோழர் வி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடத்தினார்கள். கூட்டங்களில், “ஒன்றிய அரசின் மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், உரம் உட்பட எல்லா வேளாண் இடுபொருட்களையும் தட்டுபாடின்றி கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கிட வேண்டும், உப்பளத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும், வடிகால்களையும், ஓடைகளையும் சீர் செய்து, தூர் வாரி நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர், தரமான சாலை வசதி, தெரு விளக்கு வசதிகளைச் செய்து தர வேண்டும், தரமான மருத்துவ வசதிகள் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் மருத்துவர்களை நியமித்து எல்லா மருந்துகளும் கிடைக்கும் வகையில் மருத்துவமனையை மேம்படுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பசுவந்தனை பகுதியில் உரத் தட்டுப்பாடு நிலவி வருவது குறித்து விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கையெழுத்திட்ட பொது மனு மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. (கட்சி சார்பற்ற) தமிழக விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் தோழர் சரவணமுத்துவேல் யூரியா மற்றும் டி.ஏ.பி உரத் தட்டுப்பாட்டின் காரணமாக இந்த விதைப்பு நேரத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகள் குறித்து விளக்கிக் கூறி உடனடி தீர்வைக் கோரினார். தங்களுடைய போராட்டத்தின் மூலம், உரத் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு ஆவன செய்வோம் என்ற மாவட்ட நிர்வாகத்தின் வாக்குறுதியை விவசாயிகள் பெற்றிருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாரில் தமிழ் விவசாயிகள் சங்கம் பயர்க்காப்பீடு, செஸ்வரி, நானோயூரியா, கரம்பைமண், கோரிக்கைகளை முன்வைத்து செப்டெம்பர் 19-இல் ஆர்பாட்டம் நடத்தினர். விவசாயிகள் பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பாசன வசதிகள் கோரி போராட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே செப்டெம்பர் மாதத்தில் விவசாயிகளுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தை நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், “கிடப்பில் போடப்பட்டுள்ள ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகளை தமிழக அரசு உடனே துவங்க வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன பகுதி கரையோர விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் கிணற்றில் உள்ள மின் இணைப்பைத் துண்டிக்க கூடாது. பரம்பிக்குளம் பாசன திட்டத்திற்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு அநீதி இழைக்கக் கூடாது. மழைக்காலங்களில் மழைநீர் வீணாகாமல் ஏரி, குளம், குட்டை மற்றும் பிற நீர் நிலைகளில் நீர் நிறப்ப ஆவன செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஏபி கரையோர விவசாயிகள், கோவை, திருப்பூர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், விவசாய கூட்டமைப்புகள், கொங்கு மண்டலம் மேற்கு பகுதி விவசாயிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றின் அருகே உள்ள நிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி குழாய் மூலம் தண்ணீர் அப்பிபட்டி, ஓடப்பட்டி மற்றும் தென்பழனி போன்ற வறண்ட நிலங்களுக்கு பாசன வசதிக்கு பயன்படுத்தி வருவதற்கு பொதுப்பணித் துறையினர் தடை விதித்துள்ளனர். அந்தப்பகுதி விவசாயிகளுக்கு உரிய நீர் ஆதாரத்தை உறுதி செய்யவும், தண்ணீர் கொண்டு செல்வதை அனுமதித்து முறைப்படுத்தவும் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் நவ 2, 2022 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலம் தடுக்கப்பட்ட நிலையில் நெடுஞ்சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் 13, அக்டோபர், 2022 இல் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கம் நடத்திய ஆர்பாட்டத்தில் மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், உரங்களின் விலை உயர்வைக் குறைக்க வேண்டும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் தட்டுப்பாடின்றி யூரியா உரம் வழங்க வேண்டும், காவிரியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும், வீணாகும் மழை நீரை ஏரி குளங்களில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக் கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கைகளில் திருவோடு ஏந்தி முழக்கங்கள் எழுப்பி பங்கேற்றனர்.

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் போராட்டம்

ஆகஸ்டு மாதத்தில், திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் பல்லடம் சாலையில் ஆவின் குளிரூட்டும் நிலையம் முன் சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். திருப்பூர் மாவட்டத்தில் ஆவின் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து முழுமையாக பாலை கொள்முதல் செய்யாமல் 20% திருப்பி அனுப்புவதாகவும், பாலின் டிடிஎஸ் தன்மை குறைவாக இருப்பதாக கூறி, குறைந்த விலை நிர்ணயிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுடைய கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு உடனடியாக ஆவன செய்ய வேண்டுமென அவர்கள் கூறினர்.

விளை நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிரான போராட்டம்

நீர் வளம் நிறைந்த தஞ்சை மாவட்டத்தில், கண்டியூர் மேல திருப்பந்துருத்தி, கீழ திருப்பந்துருத்தி மற்றும் பிற பகுதிகளில் புறவழிச் சாலைத் திட்டம் அமைப்பதற்காக சிறு விவசாயிகள் முதல் பெரும் விவசாயிகள் வரை அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நிலங்களை அரசு பறித்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்தை அழித்துவிட்டு புறவழிச் சாலை அமைப்பதால், அங்குள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்து வருகிறது. நெல், தென்னை, வெற்றிலை, காய்கறிகள் விளையும் விவசாய நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டுமென தஞ்சை மாவட்ட விவசாயிகள், திருவையாறு வட்டாட்சியர் – மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நவம்பர் 1 அன்று விவசாயிகள் கருப்பு பட்டை அணிந்து சங்கு ஊதி, புறவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிடுமாறு கொண்டுவந்த தீர்மானத்தை கீழ திருப்பந்துருத்தி ஊராட்சி மன்றம் நிறைவேற்றியுள்ளது. நவ 8, 2022 அன்று திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆர்பாட்டம் நடத்தினர்.

சென்னை – சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதைக் கைவிடக் கோரி சேலத்திலும் பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் ஆர்பாட்டம் நடத்தினர்.

சென்னையையொட்டி இரண்டாவது விமான நிலையத்தைக் கட்டுவதற்காக இந்திய அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. அதற்காக அது காஞ்சிபுரம் மாவட்டத்தில்,  சென்னையிலிருந்து 68 கிமீ தூரத்திலுள்ள பரந்தூர் என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. பரந்தூர் சுற்றுவட்டாரம் வளமான விவசாய நிலங்களைக் கொண்டுள்ள பகுதியாகும். விமான நிலையத்தைக் கட்டுவதற்காக 7000 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தவும், அவற்றை பெரும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகளுடைய வாழ்வாதாரமான வேளாண்மையை முழுவதுமாக அழித்து, அவர்களுடைய நிலங்களிலிருந்து வெளியேற்றும் இந்தத் திட்டத்தை எதிர்த்து அங்குள்ள விவசாயிகளும், மக்களும் தொடர்ந்து பல்வேறு ஆர்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

பயிர் காப்பீடு கோரியும், பயிர் அழிக்கப்படுவதற்கு எதிராக பாதுகாப்பு கோரியும் போராட்டங்கள்

தஞ்சை மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்தும், பிராதான் மந்திரி கிசான் திட்டத்தில் நிதி குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தஞ்சை விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் விவசாயிகள் திட்டத்திற்கு விவசாயிகளுக்கு உதவித் தொகையை ரூ 19,000 இலிருந்து 16,000 கோடி ரூபாயாக குறைந்த நிதி ஒதுக்கியிருப்பதைக் கண்டித்தும் தஞ்சை ஆட்சியர் கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்திலும், தமிழகத்தின் பல இடங்களிலும் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. சம்பா பயிர் உட்பட பல பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றைத் தூர்வார நடவடிக்கை எடுக்கவும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் வேளாண் விற்பனை மையங்களில் யூரியா, பொட்டாசியம் மற்றும் உரங்கள் தட்டுப்பாடு நிலவுவதையும், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரையிலும் இழப்பீடு வழங்கப்படாததையும் கண்டித்து தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் செப்டெம்பர் 30 அன்று விவசாயிகள் உர சாக்குகளை கையில் ஏந்தியபடியும், அழுகிய வாழை மரங்களை கையில் வைத்துக் கொண்டு மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

ஒரு ஏக்கர் நெல்லுக்கு  ரூ.30,000, வாழைக்கு 1 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.  மழை காரணமாக, நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்து பல இடங்களில் நெல் மூட்டைகளுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற உணவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை மாற்றி 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எனவும் மழையின் அளவைப் பொறுத்து ஈரப்பதத்தில் தளர்வு வழங்கும் நிரந்தரத் தீர்வை அரசாங்கம் எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செப் 23, 2022 அன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு தலையில் முக்காடிட்டு போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் என்றால் நிலம் வைத்திருப்பவர்களும், குத்தகை நிலத்தில் உழவு செய்யும் விவசாயிகளும், விவசாய நிலத்தில் கூலி வேலை செய்பவர்களும், அடமானம் வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகளும் ஆவார்கள். ஆனால் பட்டா நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் வருடம் ரூ.6000/- உதவித் தொகை வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது விவசாயிகளைப் பிளவுபடுத்தும் சூழ்ச்சியென்று கூறி, அதை விவசாயிகள் கண்டித்தனர். விவசாயிகள் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது. அதைத் தட்டிக் கழிக்க முடியாதென அவர்கள் கூறினர்.

வாழை உட்பட விவசாயிகளுக்கு கடனளிக்க வங்கிகள் மறுப்பதையும், கோவில் நிலங்களில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்கு ரூ.6000/-  உதவித் தொகை கிடையாது என்பதும், கோவில் நிலங்களில் சாகுபடி செய்பவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் வழங்க மறுப்பது என்பதும் கண்டிக்கத் தக்கதாகும். 60 ஆண்டுகளாக உழுதுவரும் நரிக்குறவர்களின் விவசாய நிலத்திற்கு பட்டா கொடுக்காமல் அவர்களைக் கைது வழக்கு போடுவது விவசாயிகளுடைய நியாயமான உரிமையை காலில் போட்டு நசுக்குவதாகும். மேலும் பல கோரிக்கைகளை எழுப்பி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், தேசிய ஊரக 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களுக்கு விரிவுபடுத்த வேண்டுமெனவும், இத் திட்டத்தின் கீழ் கூலியை உயர்த்தி ரூ 381 வழங்க வேண்டுமெனவும் கோரி சூன் மாதத்தில் ஆர்பாட்டம் நடத்தினர்.

கரும்பு விவசாயிகளின் ஆர்பாட்டங்கள்

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லிக்குப்பம் இ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை முன்பு கரும்புகளை கையில் ஏந்தியவாறு அக்டோபர் 7 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு, ஒரு டன் கரும்புக்கு ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும், எரிந்த கரும்புக்களுக்கு விவசாயிகளிடம் பிடித்தம் செய்த பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும், தமிழக அரசு அறிவித்த கரும்பு ரகங்களை நடவு செய்தால் ஆலை நிர்வாகமே பதிவு செய்திட வேண்டும், 2003-04 2008-09 ஆண்டுக்கான இலாப பங்குத் தொகையை உடனே வழங்க வேண்டும், கழிவு என்ற பெயரில் பிடித்தம் செய்யப்பட்ட கரும்புக்கான தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி பங்கேற்ற விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

கள்ளக்குறிச்சியில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் 19-10-2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர். கலையநல்லூர் தரணி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டுமென்றும், தரணி சக்கரை ஆலை 2018-19 ஆம் ஆண்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தில்லியின் எல்லைகளில் நடைபெற்ற விவசாயப் போராட்டத்தின் 2-ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகள்

தில்லியின் எல்லைகளில் விவசாயிகள் நடத்திய மிக நீண்ட போராட்டம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நவம்பர் 26 அன்று நாடெங்கிலும் ஆர்பாட்டங்களையும் பேரணிகளையும் நடத்துமாறு ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) அழைப்பு விடுத்திருந்தது.

சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட பேரணி, சென்னை எழும்பூர் பகுதியில் நடைபெற்றது. தமிழ் நாடெங்கிலுமிருந்து திரண்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் இதில் பங்கேற்றனர். ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், பல்வேறு விவசாய சங்கத் தலைவர்கள் உட்பட பலரும் பேரணியில் உரையாற்றினர். இந்திய அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும், குறைந்தபட்ச ஆதரவு விலை கோரியும், மின்சார திருத்தச் சட்ட மசோதாவை இரத்து செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்திப் பேசினர்.

ஆளுநர் மாளிகையை நோக்கி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழக விவசாயிகளுடைய பேரணியை தமிழக அரசு அனுமதிக்கவில்லை. கடைசி நேரம் வரை பேரணி அமைப்பாளர்களை இழுத்தடித்து பின்னர் ஒரு ஒதுக்குப்புறமான எழும்பூர் இராஜரத்தினம் அரங்கையொட்டி பேரணியை நடத்த அனுமதியளித்தது. மேலும் பேரணி முடிவடைந்த பின்னர் விவசாய சங்கத் தலைவர்களை ஆளுநரிடம் மனு அளிக்க கூட்டிக் கொண்டு செல்வதாகக் கூறி காவல்துறை, கிண்டி வட்டாட்சியருடைய அலுவலகத்திற்கு விவசாயிகளுடைய தலைவர்களை கொண்டு சென்றது. இதை ஏற்றுக் கொள்ள மறுத்து விவசாய சங்கத் தலைவர்கள் 3 மணி முதல் 6 மணி வரை ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர், தலைமைச் செயலகத்தின் மக்கள் தொடர்பு செயலாளரிடம் மனு ஒப்படைக்கப்பட்டது. மக்களுடைய வரிப்பணத்தில் உலாவி வருகின்ற ஆளுநர் மனு வாங்க மறுத்து இப்படி விவசாயிகளை அவமதித்த அரசாங்கம், எப்படி தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றப் போகிறது என்பது தமிழக விவசாயிகளுடைய கேள்வியாக உள்ளது. இது தான் இந்திய அரசு, கோடிக்கணக்கான இந்திய விவசாயிகளுக்கு அளிக்கின்ற மரியாதையா என ஆட்சியாளர்களுடைய இந்த ஆணவமான போக்கை விவசாயிகளும் மக்களும் வன்மையாகக் கண்டித்தனர்.

தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலைமையகங்களிலும் விவசாயிகளுடைய பேரணிகள் நடைபெற்றன. விவசாய சங்கத் தலைவர்கள், விவசாயிகளுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களுடைய போராட்டம் தொடருமென உறுதிபட தெரிவித்தனர்.

விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்திரவாதம், கடன் தள்ளுபடி, மின்சார திருத்த மசோதாவை இரத்து செய்தல், லக்கிம்பூர் கேரியில் போராடும் விவசாயிகளைக் கொடூரமாகக் கொன்ற குற்றவாளிகளைக் கடுமையாக தண்டித்தல், விரிவான பயிர்க் காப்பீட்டுத் திட்டம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ 5000 ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *