மின்வாரியத் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தாரீர்!

மின்சாரத்தை தனியார்மயமாக்குவது சமுதாய நலனுக்கு எதிரானது!

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அறிக்கை, நவம்பர் 23, 2022

மின்சாரத் திருத்த மசோதா 2022-க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் பெரும் எண்ணிக்கையில் மின்சாரத் தொழிலாளர்கள் திரண்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் அங்கு வந்துள்ளனர். நாடு முழுவதும் காட்டுத் தீயென பரவிவரும் தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்தில் மின் ஊழியர்களின் போராட்டம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.

தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், மின்சாரத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவளிக்கிறது. அவர்களுடைய ஒன்றுபட்ட போராட்டம், சமூதாயத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் ஒரு முக்கியமான படியாகும். போராட்டத்தில் மின் தொழிலாளர்கள் காட்டும் துணிச்சலுக்கும் உறுதிக்கும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் வணக்கம் செலுத்துகிறது.

இன்றைய காலக் கட்டத்தில் மின்சார வசதி அனைத்து மனிதர்களுக்கும் இன்றியமையாத தேவையாக உள்ளது. இது அனைவருக்கும் பொதுவான உரிமையாகும். எனவே அனைவருக்கும் கட்டுப்படியாகக் கூடிய விலையில், போதுமான மற்றும் நம்பகமான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது அரசின் கடமையாகும். இந்த அடிப்படைத் தேவையை உற்பத்தி செய்து விநியோகிப்பதன் நோக்கமாக தனியார் இலாபம் ஈட்டுதல் இருக்க முடியாது. மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்குவது என்பது, அரசு தன் கடமையைப் புறக்கணிப்பதாகும். மலிவு விலையில் நம்பகமான மின்சார விநியோகத்தை அனைத்து குடும்பங்களுக்கும் தர வேண்டிய அடிப்படை உரிமையை இது மீறுவதாகும்.

மின்சார விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை, நாடு முழுவதும் உள்ள மின்வாரிய ஊழியர்கள் தங்களுடைய ஒன்றிணைந்த எதிர்ப்பின் மூலம் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

ஜம்மு & காஷ்மீர், உத்தரகாண்ட், புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், சண்டிகர் போன்ற மாநிலங்களில் மின்சாரத் தொழிலாளர்களின் துணிவான நடவடிக்கைகள் அனைத்தும் மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்குவதைத் தடுக்க அவர்கள் நடத்திய போராட்டத்திற்கு சாட்சியாகும். அவர்களுடைய போராட்டத்தின் விளைவாக, 2014, 2018, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மின்சாரத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு திரும்பத் திரும்ப மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. மீண்டும் இந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை மேலும் பரிசீலனைக்காக அது நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தனியார்மயமாக்கல் திட்டம் 1990-களில் மின் உற்பத்தித் துறையில் தொடங்கியது. இந்திய மற்றும் வெளிநாட்டில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களுடன், அதிகாரிகள் நீண்ட கால மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இது மின்சார உற்பத்தியில் முதலீடு செய்த ஏகபோக முதலாளிகளுக்கு பெரும் தனியார் இலாபத்தை ஈட்டித் தந்தது. இது மாநில மின்சார வாரியங்கள் மின்சாரத்திற்காக கொடுக்க வேண்டிய விலையில் கடுமையான உயர்வுக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக விவசாயிகளும் நகர்ப்புற தொழிலாளர்களும் செலுத்த வேண்டிய மின்சாரக் கட்டணங்கள் கடுமையாக உயர வழிவகுத்தது.

மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர்களும், பல்வேறு முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களும் மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்குவது நுகர்வோருக்கு அவர்கள் விரும்பும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்கும் என்று கூறுகின்றனர். இது ஆரோக்கியமான போட்டியைக் கொண்டுவரும் என்றும் அதன் காரணமாக திறமையான மற்றும் நம்பகமான மின்சாரம், மலிவு விலையில் கிடைக்க வழிவகுக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அவர்களுடைய இந்த கட்டுக் கதைகளை, மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்கும் அனுபவம் ஆதரிக்கவில்லை. எடுத்துக் காட்டாக, மும்பை நகரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களும், ஒரு பொதுத்துறை நிறுவனமும் மின்சாரம் வழங்கி வருகின்றன. ஆனால் அங்கு மின்சாரக் கட்டணங்கள் நாட்டிலேயே மிகவும் அதிகமானதாக இருக்கிறது. தில்லியில், டாடா மற்றும் ரிலையன்ஸ் ஏகபோக நிறுவனங்களுக்குச் சொந்தமான இரண்டு வெவ்வேறு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வெவ்வேறு மண்டலங்கள் உள்ளன. தனிப்பட்ட குடும்பங்களுக்கு எந்த நிறுவனத்திலிருந்து மின்சாரத்தைப் பெறுவது என்று தீர்மானிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவர்கள் ஏதோ ஒரு தனியார் ஏகபோகத்தின் தயவில் இருக்க வேண்டிய கட்டயத்திலுள்ளனர்.

அதிகபட்ச இலாபம் ஈட்டுவதற்காக, சமுதாயத்தின் இந்த முக்கிய வளத்தை ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களுடைய ஏகபோகக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ள விரும்புகின்றன. மின்சாரத் திருத்த மசோதா, உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்காக தங்கள் சொந்த மூலதனத்தை பயன்படுத்தத் தேவையின்றி, குறைந்த அபாயத்தில் அதிக இலாப விகிதங்களை தனியார் நிறுவனங்கள் அனுபவிக்கும் வாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநில மின்சார வாரியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொது நிதியில் கட்டப்பட்ட மின்சாரத்தை வினியோகிக்கும் மிகப்பெரிய வலைப்பின்னல், பெரும் முதலாளிகளுக்கு, நடைமுறையில் இலவசமாகக் கிடைக்கும்.

தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற குறைந்த வருமானம் பெறும் நுகர்வோரின் இழப்பில், தனியார் நிறுவனங்களின் நலன்களுக்காக இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மின்சார ஊழியர் சங்கங்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளன.

நாடெங்கிலும் நடைபெற்றுவரும் விவசாயப் போராட்டங்களில் மின்சாரத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு ஒரு முக்கியப் பிரச்சினையாக இருந்து வருகிறது. மின்சாரத் திருத்த மசோதாவை எதிர்த்து விவசாய சங்கங்கள், தொழிற் சங்கங்களுடன் கைகோர்த்துள்ளன. தங்கள் தண்ணீர் பம்புகளை இயக்குவதற்கான மின்சாரத்திற்கான கட்டணம் மிகவும் அதிகரிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகிய இரண்டையும் தனியார் மயமாக்குவதால் ஏற்படும் தீங்கான விளைவுகள் குறித்து நகர்ப்புற மக்களுக்கு விளக்குவதற்காக மாநில மின் வாரிய ஊழியர்கள் பல விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களுடைய அயராத முயற்சியின் பலனாக, இன்று நாடு முழுவதும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களும், விவசாயிகளும் முன்வந்து இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

1990-களில் இருந்து, மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் தனியார்மயமாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. பல அடிப்படை பொதுத்துறை நிறுவனங்களையும், சேவைகளையும் தனியார்மயமாக்கலை நியாயப்படுத்துவதற்காக அவை திட்டமிட்ட முறையில் வேண்டுமென்றே அழிக்கப்பட்டு, “நட்டத்தை ஏற்படுத்துவதாக” அறிவிக்கப்பட்டுள்ளன. இரயில்வே, வங்கி, காப்பீடு, எம்டிஎன்எல், பிஎஸ்என்எல், சாலை மற்றும் விமானப் போக்குவரத்து, கல்வி மற்றும் சுகாதார சேவைகள் என அனைத்தும் இந்த வகையில் தனியார்மயத்தை நோக்கித் தள்ளப்படுகின்றன. அதே போன்று, மாநில மின் வாரியங்களையும், அரசு விநியோக நிறுவனங்களையும், மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு பொருளாதார ரீதியாக சீரழித்து, அதன் மூலம் அவற்றை ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களிடம், சொற்ப விலைக்கு வாரிக் கொடுத்துவிட வழி வகுத்து வருகின்றன.

தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் என்பது ஏகபோகக் குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும் மக்களின் போராட்டமாகும். இலாப வெறி கொண்ட ஏகபோக முதலாளிகளின் பேராசையில் இருந்து சமுதாயத்தை விடுவிக்கும் கண்ணோட்டத்துடன் இந்தப் போராட்டம் நடத்தப்பட வேண்டும். இதற்கு தொழிலாளி வர்க்கம், அரசியல் அதிகாரத்தை தன் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும், பெரிய அளவிலான உற்பத்திச் சாதனங்களின் உடமையை சமூகமயமாக்க வேண்டும் மற்றும் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் கண்ணியமான மனித வாழ்வின் எல்லா அத்தியாவசியத் தேவைகளையும் நிறைவு செய்வதற்காக பொருளாதாரத்தை மாற்றியமைக்க வேண்டும்.

மின்சாரத் தொழிலாளர்கள் முன்வைத்துள்ள மின்சாரத் திருத்த மசோதா 2022 ஐத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் அனைத்து முயற்சிகளையும் நிறுத்த வேண்டும்; ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும், மற்றும் பிற நியாயமான கோரிக்கைகளை தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் ஆதரிக்கிறது. மின்சாரத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

மின்சாரத் திருத்த மசோதா 2022-ஐ திரும்பப் பெறு!

மின் ஊழியர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு அளியுங்கள்!

தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து உழைப்பாளிகளின் ஒற்றுமை வாழ்க!

இன்குலாப் ஜிந்தாபாத்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *