தில்லியின் எல்லைகளில் விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்தன

தில்லியின் எல்லைகளில் பல இலட்சக்கணக்கான விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை நவம்பர் 26 குறிக்கிறது. இந்தியாவின் தலைநகரைச் சுற்றி 2020 நவம்பர் 26 அன்று தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அவர்களுடைய போராட்டத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை நினைவுக் கூர்வதென நாடெங்கிலும் உள்ள விவசாயிகள் முடிவு செய்தனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள விவசாய சங்கங்கள், ஒன்றிய அரசின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து செயல்படும் தத்தம் ஆளுநர் மாளிகையின் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவார்கள்.

தில்லியின் எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வந்த காத்திருப்புப் போராட்டத்தை அவர்கள் நிறுத்தி வைத்ததற்கு அடிப்படையாக இருந்த, 2021 டிசம்பரில் மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர். அந்த நேரத்தில் மூன்று விவசாயி விரோத சட்டங்களை இரத்து செய்த பிறகு, மத்திய அரசு அனைத்து விவசாய விளைபொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதை உறுதி செய்தல், மக்கள் விரோத மற்றும் ஏகபோகங்களுக்கு ஆதரவான மின்சாரம் திருத்த மசோதாவை பின்வாங்குவது ஆகியன உள்ளிட்ட விவசாயிகளின் ஆர்பாட்டத்தின் பிற முக்கிய கோரிக்கைகளையும் தீர்த்து வைப்பதாக உறுதியளித்திருந்தது.

தில்லியின் எல்லைகளில் நடத்தப்பட்ட விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம்,  நாடு முழுவதிலுமிருந்து 500 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒரு பொதுவான கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்ததாகும். டாடாக்கள், அம்பானிகள், பிர்லாக்கள், அதானிகள் மற்றும் பிற ஏகபோக பெரும் தொழில் நிறுவனக் குடும்பங்களின் தலைமையிலான முதலாளி வர்க்கத்தின் தாராளமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கு முற்றிலும் எதிராக, விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான உரிமையைக் கோரத் துணிந்தனர்.

விவசாயிகளும் அவர்களின் டிராக்டர் வண்டிகளும் பஞ்சாப் – அரியானா எல்லைகளைக் கடந்து வருவதைத் தடுக்க, பாஜக தலைமையிலான மத்திய அரசும் அரியானா அரசும் சாலைகளைத் தோண்டி, முள் வேலிகளையும், தடுப்புகளையும் அமைத்திருந்தன. இருப்பினும், பஞ்சாப் மற்றும் அரியானாவின் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இதற்கு அஞ்சி பணிய மறுத்துவிட்டனர். அவர்கள் துணிவோடு முன்னேறிச் சென்று, தங்கள் வழியில் இருந்த சாலைத் தடைகளையும் மீறி, எப்படியும் தில்லியை அடைய வேண்டுமென்ற உறுதியோடு செயல்பட்டனர். இது உத்தரப்பிரதேச விவசாயிகளுக்கு ஆர்வமூட்டியது. அவர்கள் தில்லி உத்தரபிரதேச எல்லையான காஜிபூரில் ஒரு போராட்ட தளத்தை அமைத்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயிகள் ராஜஸ்தான் அரியானா எல்லையான ஷாஜஹான்பூரில் ஒரு போராட்டத் தளத்தை அமைத்தனர்.

கிட்டத்தட்ட ஒரு வருடம் நீடித்த போராட்டத்தினால், தில்லியின் எல்லைகளை மாபெரும் எதிர்ப்பு முகாமாக விவசாயிகள் மாற்றினர். நாடெங்கிலும் உள்ள விவசாய அமைப்புகள் தங்கள் பிரதிநிதிகளை போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு அனுப்பினர். தொழிலாளர்களும், பெண்களும், இளைஞர்களும் விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கிராம மக்கள், போராடும் விவசாயிகளுக்காக ஒவ்வொரு நாளும் ஏராளமான உணவு தானியங்களையும், காய்கறிகளையும், பழங்களையும் லாரிகளில் கொண்டு வந்து வினியோகித்தனர்..

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்வதற்காக  ஒன்றுபடும் போது அவர்களது திட்டமிட்டு செயல்படுத்தும் திறனை, போராட்டத் தளங்களில் அவர்களுடைய வாழ்க்கையும் வேலைகளும் வெளிப்படுத்தின. இந்த இடங்களில் முகாமிட்டுள்ளவர்களின் அனைத்துத் தேவைகளையும் நன்கு கவனித்துக் கொள்ள திட்டமிட்ட முறையில் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டன. குழந்தைகளுக்கான பள்ளிகள், அனைவருக்கும் நூலகங்கள் மற்றும் அவசர சுகாதார சேவைகளை வழங்க மருத்துவ குழுக்கள் இருந்தன. தற்போதுள்ள முதலாளி வர்க்க ஆட்சியின் கீழ் வேறு எந்தப் பொது இடத்திலும் தாங்கள் இவ்வளவு பாதுகாப்பாக உணர்ந்ததில்லை என்று போராட்டத் தளங்களுக்கு சென்று வந்த பெண்கள் தெரிவித்தனர்.

நமக்குக் கிடைத்திருக்கும் மதிப்புமிக்க அனுபவத்தின் படிப்பினைகளைத் திரும்பிப் பார்க்கவும் தொகுத்துக் கொள்ளவும் இந்த இரண்டாவது ஆண்டு நிறைவு விழா பொருத்தமான நேரமாகும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அனைத்து அமைப்பாளர்களும் வரவிருக்கும் வர்க்கப் போராட்டத்திற்கு தயாராகும் நோக்கத்துடன் இதைச் செய்ய வேண்டும். நம்முடைய இலக்கு, ஏகபோகக் குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட முதலாளி வர்க்கத்தை வீழ்த்தி வெற்றி பெறுவதாகும். முக்கியமான படிப்பினைகள் என்னென்ன, வெற்றிக்கான பாதை எது?

முக்கிய படிப்பினைகள்

ஒரு முக்கியமான படிப்பினை என்னவென்றால், ஆளும் வர்க்கம் எப்போதுமே மதம், சாதி அல்லது தேர்தல் கட்சிப் போட்டிகளின் அடிப்படையில் குறுங்குழுவாத சண்டைகளை மக்களிடையே தூண்டிவிடும் என்பதாகும். இந்த பிளவுபடுத்தும் அரசியல் மற்றும் கருத்தியல் தாக்குதலை போராடும் சக்திகள் முறியடிப்பது அவசியமானதும் சாத்தியமானதும் ஆகும்.

டிசம்பர் 2020 முதலே, பாஜக-வும் அதன் தலைமையின் கீழ் உள்ள மத்திய அரசும் விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தவும் பிளவுபடுத்தவும் “சீக்கிய பயங்கரவாதம்” என்ற அச்சத்தை எழுப்ப முயன்றன. ஆனால் விவசாயிகள் தாங்கள் ஒன்றிணைந்துள்ள முக்கிய கோரிக்கைகளிலிருந்து திசைதிருப்ப மறுத்து விட்டனர். விவசாயப் போராட்டம் மதிப்பிழந்து விடாதது மட்டுமின்றி அது இந்தியாவிற்குள்ளும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மத்தியிலும் பரவலான ஆதரவைப் பெற்றது. 2021 ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று ஒரு கொடூரமான சதியை ஏற்பாடு செய்ததன் மூலம் மத்திய அரசு போராட்டத்தை அழிக்க முயன்றது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் டிராக்டர்கள், தில்லி செங்கோட்டையை சுற்றியுள்ள பகுதியை அடையுமாறு தில்லி காவல்துறையினரால் திட்டமிட்ட முறையில் வழிநடத்தப்பட்டது. அங்கு வன்முறை வெடித்தது. சீக்கிய ஆர்பாட்டக்காரர்கள், தங்களுடைய மதக் கொடியை வைத்திருக்கும் காட்சிப் படங்களை ஊடகங்கள் பரப்பின.

சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்ட பொய்கள், அவதூறுகள், வகுப்புவாத தப்பெண்ணங்கள் மற்றும் வெறுப்புகளையும் மீறி, விவசாயிகள் 12 மாதங்களாக தில்லியின் எல்லைப் பகுதிகளில் தங்கள் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

டிசம்பர் 2021-இல் மூன்று விவசாயி விரோத சட்டங்களும் பின்வாங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டிருந்தாலும், ஆளும் வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரல் மாறவில்லை என்பது மற்றொரு முக்கியமான படிப்பினையாகும். ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள்  மேலாதிக்கம் செலுத்துவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் விவசாய வர்த்தகத்தை திறந்துவிடும் தாராளமயமாக்கும் திட்டம் எவ்வித மாற்றமுமின்றி தொடர்கிறது.

அனைத்து விவசாயப் பொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையிலோ அல்லது அதற்கு மேலோ கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்பதை கடந்த 11 மாத நடவடிக்கைகள் காட்டுகின்றன. இந்த பிரச்சனையை ஆராய்ந்து சில முன்வைப்புகளை உருவாக்குவதற்கு ஒரு குழுவை அமைப்பதற்கே கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியிருக்கிறது, அப்படி கொடுக்கப்படும் முன்வைப்புகளை அரசாங்கம் செயல்படுத்தும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. விவசாயம் தொடர்பான அரசின் கொள்கைப் போக்கிலும் நோக்கத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலையிலோ அல்லது அதற்கு மேலோ அனைத்து பயிர்களும் உத்தரவாதமாக கொள்முதல் செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்றும் ஆர்வமோ திறனோ மத்திய அரசுக்கு இல்லை. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமானால், மத்திய மற்றும் மாநில அளவில் பொதுக் கொள்முதலை கணிசமாக அதிகரிக்க வேண்டும். பொது கொள்முதலின் பங்கை அதிகரிப்பது, இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானதாகும். இந்த ஏகபோக முதலாளி வர்க்க கொள்ளையர்கள், இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி செய்ததை விடவும் மேலும் தீவிரமாகவும், விரிவாகவும் இந்திய விவசாயத்தில் ஆதிக்கம் செலுத்தவும் கொள்ளையடிக்கவும் ஆர்வமாக உள்ளனர்.

மூன்று விவசாயி விரோத சட்டங்களை இரத்து செய்யும் முடிவு உண்மையில் ஆளும் வர்க்கத்தின் தந்திரமான சூழ்ச்சியாகும். பஞ்சாபில் 2022 சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டிக் கட்சிகளின் பரப்புரைகள் தொடங்கும் நேரத்தில் இது செய்யப்பட்டிருக்கிறது. பஞ்சாப் விவசாயிகளிடையே உள்ள பெரிய சங்கங்கள், மூன்று சட்டங்களை இரத்து செய்வதன் மூலம் அமைதியடைவார்கள் என்றும், விவசாய சங்கங்களின் ஒரு பகுதியினர் தேர்தல் அரசியலில் இழுக்கப்படுவார்கள் என்றும், அது விவசாயிகளின் அணிகளில் பிளவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் மத்திய அரசு கணக்கிட்டது.

விவசாயிகள் தங்கள் பொதுவான உடனடி கோரிக்கைகளை ஒட்டி செயல்பாட்டில் ஒற்றுமையை அடைந்திருந்த போதிலும், அவர்கள் தங்களுடைய அரசியல் நோக்கத்தில் ஒன்றுபடவில்லை. இதன் விளைவாக, விவசாயிகள் போராட்டம் வெவ்வேறு திசைகளில் இழுக்கப்பட்டது. பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலின் போது இது வெளிப்படையானது.

முன்னேற்றத்திற்கான பாதை குறித்து

எந்தவொரு கட்சி அல்லது தனிநபரின் விருப்பங்களுக்கு அப்பாற்பட்டு, விவசாயிகளுடைய போராட்டத்திற்கு இரண்டு வெவ்வேறு பாதைகள் உள்ளன. இந்த இரண்டு பாதைகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை ஆகும். அவை எதிரெதிரான இரு முக்கிய வர்க்கங்களில் முதலாளி வர்க்கதிற்கு பொறுத்தமானது ஒன்றும், பாட்டாளி வர்க்கத்திற்கு பொறுத்தமானது இன்னொன்றும் ஆகும்.

விவசாயிகளுடைய போராட்டத்தை ஒரு காரணியாகப் பயன்படுத்தி, பாஜக-விற்கு மாற்றாக ஒரு பாராளுமன்ற எதிர்ப்பை வளர்க்கவும் வலுப்படுத்தவும் வேண்டுமென முதலாளி வர்க்கம் கருதுகிறது. ஏகபோக முதலாளிகளின் தலைமையிலான முதலாளி வர்க்க ஆட்சியைத் தூக்கியெறிவதற்கான போராட்டத்தில் விவசாயிகளை ஒரு சாத்தியமான புரட்சிகர கூட்டாளியாகப் பாட்டாளி வர்க்கம் கருதுகிறது.

தேர்தல் வழிமுறையின் மூலம் பாஜக-வை ஆட்சியிலிருந்து அகற்றினால், அனைத்து விவசாயிகளுக்கும் பாதுகாப்பான வாழ்வாதாரத்தை முதலாளித்துவம் வழங்குவது சாத்தியம் என்ற மாயையை முதலாளித்துவக் கட்சிகள் பரப்பி வருகின்றன. முதலாளித்துவம், அதன் தற்போதைய தீவிரமான ஏகபோக கட்டத்தில், விவசாயிகளையும் மற்ற அனைத்து சிறு சொத்துடமையாளர்களையும் அழித்துவிடுவது தவிர்க்க முடியாதது என்று பாட்டாளி வர்க்கத்தின் ஒரு அரசியல் கட்சி உண்மையைச் சொல்கிறது.

முதலாளித்துவத்திற்கு மாற்று எதுவும் இல்லை என்றும், தற்போதுள்ள பாராளுமன்ற சனநாயக முறையை விடச் சிறந்தது எதுவுமில்லை என்ற பொய்யை முதலாளி வர்க்கம் பரப்புகிறது. கம்யூனிஸ்டுகள் மற்றும் அனைத்து முற்போக்கு சக்திகளாகிய நாம்தான் இந்தப் பொய்யை அம்பலப்படுத்த வேண்டும். இதற்கு ஒரு மாற்றை முன்வைத்து, அதனையொட்டி அரசியல் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும்.

முதலாளித்துவத்திற்கு மாற்று ஒரு சோசலிச அமைப்பாகும். முதலாளித்துவப் பேராசையை நிறைவேற்றுவதற்கு பதிலாக அது, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். பாராளுமன்ற சனநாயகத்திற்கு மாற்றாக ஒரு நவீன பாட்டாளி வர்க்க சனநாயகம் உள்ளது, இதில் சட்டங்கள் மற்றும் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் தொழிலாளர்களும் விவசாயிகளும் பங்கேற்பார்கள்.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆட்சியின் கீழ், அனைத்து உணவு மற்றும் உணவு அல்லாத பயிர்களையும் உள்ளடக்கிய பொது கொள்முதல் முறையை உருவாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பொறுப்பேற்றுக் கொள்ளும். வெளிநாட்டு வர்த்தகத்திலும் மொத்த உள்நாட்டு வர்த்தகத்திலும் தனிப்பட்ட இலாபம் ஈட்டுபவர்களின் பங்கை அகற்றுவதன் மூலம், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசு, விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்கள் அவற்றின் உண்மையான மதிப்புகளில் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும். விவசாயப் பொருட்களின் பெரும்பகுதியை முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட, விவசாயிகளுக்கு இலாபகரமான விலையில் பொது நிறுவனங்கள் வாங்கும். அனைத்து அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களும் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் பொது விநியோக முறையுடன் பொது கொள்முதல் அமைப்பு இணைக்கப்படும்.

முதலாளிகள், அரசு இயந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வரை, தேர்தல்களைப் பயன்படுத்தி தங்களுடைய நம்பிக்கைக்குரிய கட்சிகளில் ஏதாவது ஒன்றை ஆட்சி அமைக்குமாறு செய்வது தொடரும் வரை, விவசாய நெருக்கடிக்குத் தீர்வு கிடைக்காது. எனவே, தங்களின் உடனடி கோரிக்கைகளுக்கான போராட்டத்தை நடத்துகின்ற அதே நேரத்தில், தொழிலாளர்களும் விவசாயிகளும் இந்தியாவின் தலைவிதியைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளும் திறன் வாய்ந்த அரசியல் சக்தியாக மாற வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சி அதிகாரம், விவசாயம் மற்றும் அனைத்து சமூகத்தையும் நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான பாதையைத் திறக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *