செப்டம்பர் 27, 2022 அன்று, மத்திய உள்துறை அமைச்சகம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) மற்றும் அதனுடைய எட்டு துணை அமைப்புகளை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் சட்ட விரோதமானது என்று அறிவித்தது. அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைத் தடை செய்வது இந்திய சமுதாயத்திற்கு பயன்பட்டிருக்கிறதா என்ற கேள்வியை இந்த அறிவிப்பு மீண்டும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற உடனேயே நேரு அரசாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஆகியவற்றைத் தடை செய்தது. அப்போதிலிருந்து, பல்வேறு நியாயங்களைக் கூறி, ஏதாவதொரு அரசியல் அல்லது சமூக அமைப்பைத் தடை செய்வது அரசாங்கங்களின் வழக்கமாகிவிட்டது. எடுத்துக்காட்டாக, 1975-1977 தேசிய நெருக்கடி நிலையின் போது, பல எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இந்த அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அரசியல் செயற்பாட்டாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த எழுபத்தைந்து ஆண்டு கால அனுபவம், எந்தவொரு அரசியல் அல்லது சமூக அமைப்பைத் தடை செய்வது சமுதாயத்திற்குப் பயன்படவில்லை என்பதைக் காட்டுகிறது. அது போலவே ஒருவரின் அரசியல் கருத்துக்கள் அல்லது செயல்பாடுகளுக்காக அவர்களை சிறையில் அடைப்பதும் எந்த வகையிலும் சமுதாயத்திற்கு பயன்படவில்லை. சமுதாயத்தைப் பற்றி தத்தம் சொந்த கண்ணோட்டத்தை வைத்திருக்கவும், அவர்களின் கருத்தைப் பரப்புரை செய்யவும் மக்களுக்கு உரிமை உண்டு. அரசியலில் பழிவாங்கும் முயற்சிக்கு இடமில்லை.
அரசியல் வேறுபாடுகளுக்கு அரசியல் தீர்வு தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி கருதுகிறது. காவல் துறையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்க்கப்பட வேண்டிய சட்ட ஒழுங்கு பிரச்னையாக அவற்றைக் கருதக் கூடாது.