விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது

பஞ்சாப், அரியானா, உ.பி. மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களது விளைபொருட்களை இலாபகரமான விலையில் கொள்முதல் செய்வதற்கு உத்திரவாதம்,  அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP), விவசாய இடுபொருட்களுக்கு அரசு மானியம், சிறந்த நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றிற்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடன் தள்ளுபடி கோரியும் மின்சாரத் திருத்த மசோதாவுக்கு எதிராகவும். லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு நீதி மற்றும் போராடும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள போலி காவல்துறை வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பன அவர்கள் எழுப்பும் மற்ற முக்கியமான கோரிக்கைகளாகும். 2021 டிசம்பரில் தில்லியின் எல்லையில் விவசாயிகள் நடத்தி வந்த போராடத்தைப் பின்வாங்கச் செய்வதற்காக அரசாங்கம் தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாய அமைப்பினர் கோருகின்றனர்.

பஞ்சாப் முதல்வர் முற்றுகை

பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) கொடியின் கீழ் நூற்றுக்கணக்கான விவசாயிகள் அக்டோபர் 9 முதல் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இல்லம் அருகே காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கினர். மழை மற்றும் பூச்சித் தாக்குதலால் பயிர் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, வைக்கோலைக் கையாள்வதற்காக குவிண்டாலுக்கு ரூ.200 நிதியுதவி, நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு, கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு லும்பி தோல் நோயால் இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு மற்றும் சோளம், பருப்பு வகைகள் மற்றும் பாசுமதி போன்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சாலையின் குறுக்கே தங்கள் டிராக்டர் வண்டிகளை நிறுத்தி வைத்து 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையை மறித்துள்ளனர்.

அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், அக்டோபர் 20 ஆம் தேதி அன்று முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று பிகேயு (ஏக்தா உக்ரஹான்) மாநில அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அக்டோபர் 20 அன்று, முற்றுகை நடைபெறும் இடத்திற்கு ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான விவசாயிகளும், இளைஞர்களும் பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேரணியாகச் சென்றனர். முதல்வர் இல்லத்தில் நீண்ட தர்ணா போராட்டம் நடத்துவதற்குத் தயாராக, உணவுப் பொருட்கள், படுக்கைகள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள், மின்விசிறிகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை விவசாயிகள் தங்களுடன் எடுத்துச் சென்றனர். அவர்கள் சாலையில், தற்காலிக தங்குமிடங்களையும், விவசாயி தலைவர்கள் போராட்டக்காரர்களுடன் உரையாற்றுவதற்கு ஒரு மேடையையும் அமைத்திருக்கின்றனர்.

விவசாயிகளது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடர்வோமென பிகேயு (ஏக்தா உக்ரஹான்) பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் கோக்ரிகாலன் கூறினார்.

பஞ்சாபில் இரயில் மறியல் போராட்டம்

விவசாயத் தொழிலாளர் போராட்டக் குழு – பஞ்சாப் (KMSC) அக்டோபர் 3 அன்று லக்கிம்பூர் கெரியில் ஒரு வருடத்திற்கு முன்பு கொல்லப்பட்ட 5 விவசாயிகளின் நினைவாக மாபெரும் இரயில்-மறியல் போராட்டத்தை நடத்தினர்.

பஞ்சாப் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் 10 மாவட்டங்களில் 16 இடங்களில் முக்கிய இரயில் பாதைகளை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். முக்த்சார், மான்சா, பர்னாலா, சங்ரூர், மலேர்கோட்லா, பாட்டியாலா, ஃபதேகர் சாஹிப் மற்றும் ரோபர் ஆகிய 8 மாவட்டங்களில், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முதல்வரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். ஒவ்வொரு போராட்டக் களத்திலும், உயிர்நீத்த விவசாயிகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

விவசாயத் தொழிலாளர் போராட்டக் குழு – பஞ்சாப் தலைவர் சத்னம் சிங் பன்னு மற்றும் செயலாளர் சர்வான் சிங் பாந்தர் ஆகியோர் இந்த போராட்டத்தின் போது விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

லக்கிம்பூர் கிரி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ராவை உடனடியாகக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்றும், அவனது தந்தை மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர். மின் விநியோகச் சட்டம் 2022-இன் அறிவிப்பை இரத்து செய்ய வேண்டும். மத்திய அரசும், பஞ்சாப் அரசும் 23 பயிர்களை கொள்முதல் செய்ய உத்தரவாதம் அளிக்க சட்டம் இயற்ற வேண்டும். அரசு விவசாயிகளுக்கு வைக்கோலை நிர்வகிக்க இலவசக் கருவிகளை வழங்க வேண்டும் அல்லது ஏக்கருக்கு 7000 ரூபாய் வழங்க வேண்டும், இரண்டும் இல்லையெனில் விவசாயிகள் தங்கள் வைக்கோலை எரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், மேலும் கடந்த ஆண்டு பாசுமதி, பருத்தி உள்ளிட்ட வெள்ளத்தால் நாசமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரினர்.

முன்னதாக, விவசாயத் தொழிலாளர் போராட்டக் குழு செப்டம்பர் 12 அன்று தங்கள் வயல்களின் பாசனத்திற்கு போதுமான தண்ணீர் கோரி போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தினர்.

ஒரு காலத்தில் ஏராளமான நதி நீர் கொண்ட மாநிலமாக இருந்த பஞ்சாப், நிலத்தடி நீர் மட்டம் வீழ்ச்சியடைந்ததால், பத்தாண்டுகளுக்கும் குறைவான காலத்தில் பாலைவனமாக மாறிவிட்டதை போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். இது, அதிக அளவு நீர்ப்பாசனம் தேவைப்படும் பயிர்களை ஊக்குவித்ததன் விளைவாகும். இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். அமிர்தசரஸ், தர்ன் தாரண், குர்தாஸ்பூர், ஹோஷியார்பூர், ஜலந்தர், கபுர்தலா, மோகா, ஃபெரோஸ்பூர், ஃபசில்கா, முக்த்சர், ஃபரித்கோட், மான்சா, பர்னாலா, ஃபதேகர் சாஹிப், பதான்கோட் மற்றும் மலேர்கோட்லா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

அசம்கரில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

உத்தரபிரதேச மாநிலம் அசம்கரில் விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் அக்டோபர் 22 அன்று 11 நாள் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கிரியா பாக்கில் உள்ள ஹரிராமில் மக்கள் நாடாளுமன்றத்தை நடத்தினர். அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி, கிசான் சங்கிராமி பரிஷத், கிசான் சங்க்ராம் சமிதி, ஜெய் கிசான் அந்தோலன் மற்றும் பூமியா பச்சாவ் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்றன.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக அரசாங்கம் செயல்பட்டு வருவதை விவசாயிகள் கண்டித்தனர். வணிக நோக்கங்களுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதையும், விவசாயத்தின் அனைத்து அம்சங்களிலும் ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் அவர்கள் எதிர்த்தனர், இது விவசாயிகளுக்கு அழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்தனர். இரயில்வே, விமான நிலையங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பிற அனைத்து முக்கிய தொழிற்சாலைகளும் சேவைகளும் தனியார்மயமாக்கப்படுவதை அவர்கள் எதிர்த்தனர், இவை அனைத்தும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக மக்களின் நலன்களை விலையாகக் கொடுத்து செய்யப்படுகின்றன என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

ஆட்குறைப்பு, தொழிற்சாலைகள் மூடல், அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றை எதிர்கொள்ளும் தொழிலாளர்களுக்கு விவசாயிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை தங்களுடைய போராட்டம் தொடரும் என உறுதியேற்றனர். “தங்கள் நிலத்தில் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்ற விவசாயிகளின் உறுதியை வெளிப்படுத்தும் கோரிக்கைகளைக் கொண்ட மனு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

விவசாயப் போராட்டத்தின் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, போராட்டங்கள் நடத்த அழைப்பு

விவசாயி விரோத மூன்று சட்டங்களுக்கு (தற்போது பின்வாங்கப்பட்டுள்ளன) எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நவம்பர் 26 ஆம் தேதி அன்று தத்தம் மாநிலங்களில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்துமாறு விவசாயிகளுக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) அழைப்பு விடுத்துள்ளது. நாடு தழுவிய ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்லும் திட்டம் குறித்தும், மாநில ஆளுநர்களிடம் சமர்ப்பிக்க வேண்டிய கோரிக்கை மனு குறித்தும் நவம்பர் 14 ஆம் தேதி புது தில்லியில் திட்டமிடப்பட்டுள்ள ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் கூட்டத்தில் இறுதி செய்யப்படும்.

வனப் பாதுகாப்புச் சட்ட விதிகளில் மத்திய அரசு செய்து வரும் மாற்றங்களை ஐ.வி.மு. கண்டனம் செய்திருக்கிறது. நவம்பர் 15 ஆம் தேதி தியாகி பிர்சா முண்டாவின் பிறந்தநாளில், உரிமைகளுக்காகப் போராடும் பழங்குடியின அமைப்புகளுக்கு தங்களுடைய ஆதரவை அளிப்பதென அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *