கடுமையான பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் தங்கள் இலாபத்தை அதிகரிக்க முதலாளிகள் எடுக்கும் முயற்சிகள், உலகெங்கிலும் மிகப் பெரிய அளவில் வேலை இழப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.
உலகளவில் தொழில்நுட்ப துறையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த ஆண்டு வேலை இழந்துள்ளனர். ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிலிருந்து கிட்டத்தட்ட 40,000 தொழிலாளர்கள் வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளனர். இந்த நிறுவனங்களில் பல, ஏப்ரல்-சூன் 2022 இல் வருமானத்தில் சரிவைச் சந்தித்தன, இதையடுத்து இந்த நிறுவனங்கள் பல தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கியிருக்கின்றன. அண்மையில் துவக்கப்பட்ட நிறுவனங்களில் நூற்றுக்கணக்கில் துவங்கி பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகப் பெரும் எண்ணிக்கையில் பணிநீக்கங்கள் நடைபெற்றுள்ளன.
பொதுவாக, முதலில் புதிதாக வேலைக்கு பணியாளர்களை எடுப்பதை நிறுத்தி வைத்தல், பின்னர் ஊதியத்தில் வெட்டு, அதைத் தொடர்ந்து பணிநீக்கங்கள் என்று செயல்படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் தொழில்நுட்பத் துறையில் உள்ள தொழிலாளர்களை மிகவும் பாதுகாப்பற்றவர்களாக ஆக்கியுள்ளன. பல சமயங்களில், ஊழியர்களுக்கு இந்த நேரத்தில் இருந்து இனி அவர்களுக்கு அந்த நிறுவனத்தில் வேலை இல்லை என்று தெரிவிக்கும் செய்தி, மனிதவளத் துறையிலிருந்து காணொளி வாயிலாகக் ஊழியர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
இத்தகைய பணி நீக்கங்களைச் செயல்படுத்தி வரும் எந்த நிறுவனமும் பணி நீக்கம் செய்து வருவதாக ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள் இந்த நகர்வுகளை பசப்பலான சொற்தொடர்களில் மறைத்து வைத்துப் பேசுகிறார்கள். மைக்ரோசாப்டின் செய்தித் தொடர்பாளர், தனது நிறுவனம் “சரியானவரை சரியான வாய்ப்புடன் (வேலையுடன்) பொறுத்தி வருவதை” உறுதி செய்வதாகக் கூறுகிறது. உண்மை என்னவென்றால், குறிப்பிட்ட சில பிரிவுகளில் உள்ள எல்லாத் தொழிலாளர்களும் வேலையிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் பெருமளவில் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பதற்கான அறிகுறிகள் உள்ள மற்றொரு பொருளாதாரத் துறை முதலீட்டு வங்கியாகும். இத்துறையில். கோவிட்க்குப் பிறகு பொருளாதார நடவடிக்கைகளில் மீண்டும் எழுச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதலீட்டு வங்கிகள் வர்த்தகத்திலிருந்தும் (பங்குச் சந்தையில்) மற்றும் ஒப்பந்தம் செய்வதன் மூலமும் (இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்களை நிர்வகித்தல்) தரகு மற்றும் பிற வழிகள் மூலம் தங்களுடைய வருவாயில் பெரிய ஏற்றத்தை எதிர்பார்த்தன. ஆனால், முதலீட்டு வங்கிகளின் சூலை-செப்டம்பர் 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வருவாயில் சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் 30-35% மேல் குறையும் என்று தற்போது கணிக்கத் தொடங்கியுள்ளன.
தங்களுடைய வருவாய் வீழ்ச்சிக்கு முதலீட்டு வங்கிகளின் முதல் பதில் மக்களுக்கு குறைவான ஊதியம் வழங்குவதாகும். ஆனால் வருவாய் அளவு நிரந்தரமாகக் குறைக்கப்பட்டால், வங்கிகள் ஊழியர்களை வெட்டிக் குறைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும்.
இந்தியாவில், கல்வித் தொழில்நுட்ப (எட்டெக்) நிறுவனங்களில் பெரும் பணிநீக்கங்கள் காணப்படுகின்றன. இந்த ஆண்டு சனவரியில் லிடோ லேர்னிங் என்ற நிறுவனம் மூடப்போவதாக அறிவித்து, தன்னுடைய கிட்டத்தட்ட 2000 ஊழியர்களை வேறு வேலையை தேடிக் கொள்ளுமாறு கூறியதிலிருந்து பணி நீக்கங்கள் தொடங்கின.
நான்கு வயதிலிருந்து தொடங்கி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பது வரை, இணைய வழி – கைபேசி – செயலி வழியாக கற்பிக்கும் திட்டங்களை, எட்டெக் (கல்வி தொழில் நுட்ப) நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. கோவிட் 19 தொற்றுநோய் பரவிவந்த போது இத்தகைய நிறுவனங்கள் எண்ணிக்கையிலும் அளவிலும் வேகமாக வளர்ந்தன.
இருப்பினும், அனைத்து நிலைகளிலும் வகுப்பறை கற்பித்தல் மீண்டும் தொடங்கப்படுவதால், இந்த நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் இந்த நிறுவனங்களுடைய விற்பனையும், வருமானமும் குறைந்துள்ளன. முதல் 10 எட்டெக் நிறுவனங்களில், அனாகாடமி, வேதாந்து மற்றும் பைஜூஸ் உட்பட பல நிறுவனங்கள், “ஊழியர்களை வழக்கமான மதிப்பீட்டு வழிமுறை மற்றும் மறு மதிப்பீடு” என்ற பெயரில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளன. பைஜூஸ் நிறுவனம் மட்டும் சூன் மாதம் முதல் 1500-2000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் உள்ள எட்டெக் நிறுவனங்கள், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கி வருவதாகப் போற்றப்பட்டன. ஆனால் இன்று, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களின் பணிநீக்கங்களுக்கு அவர்களே காரணமாக உள்ளனர்.
ஆளும் வர்க்கத்தின் அரசியல்வாதிகள், நமது நாட்டின் இளைஞர்களுக்குப் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிவோம் என்று மீண்டும் மீண்டும் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இருக்கும் உழைப்பு சக்தியை பயனுள்ள வகையில் முதலாளித்துவத்தால் வேலைக்கு அமர்த்த முடியாது என்ற உண்மையை அவர்கள் மறைக்கின்றனர். அதிகபட்ச இலாபத்தைத் தேடி நிதி மூலதனம் ஒரு தொழிலில் இருந்து இன்னொரு தொழிலுக்குச் மாறிச் செல்லும்போது, அது பேரழிவை விட்டுச் செல்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பெருமளவில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருளாதாரத் துறைகளாக இருப்பவை, இலாப விகிதம் குறையும் போது வேலைகளை மிகப்பெரிய அளவில் அழிப்பவர்களாக மாறுகின்றன. உற்பத்தி, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் அனைத்தும் சமூகத்தின் தேவைகளால் அல்லாமல், முதலாளித்துவ பேராசையால் இயக்கப்படும் வரை இது தவிர்க்க முடியாததாகும்.