ஒரு கொடூரமான குற்றத்தின் 38-வது ஆண்டு நினைவு நாள்:

1984 இனப்படுகொலையின் பாடங்கள்

1984-இல் சீக்கியர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு 38 ஆண்டுகள் கடந்து விட்டதை நவம்பர் 1, குறிக்கிறது. அப்போது மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசு கட்சியின் முக்கிய தலைவர்கள் முன்னின்று மிகவும் திட்டமிட்ட முறையில் இந்தப் படுகொலையானது மூன்று நாட்கள் நடத்தப்பட்டன. தில்லி, கான்பூர், பொகாரோ மற்றும் பல நகரங்களின் தெருக்களில் கொடூரமாகக் கொல்லப்பட்ட சீக்கியர்களின் உடல்கள் சிதறிக்கிடந்தன. அந்த மூன்று நாட்களில் 10,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

திட்டமிட்டு நடத்தப்பட்ட 1984 இனப்படுகொலை

அக்டோபர் 31, 1984 இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பே சீக்கியர்களின் இனப்படுகொலைக்கான திட்டமிடப்பட்டது.

சீக்கியர்கள், இந்தியாவை அழிக்கத் துடிக்கின்ற பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டி, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய ஊடகங்களில் திட்டமிட்ட முறையில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசின் பொறுப்பில் இருந்த காங்கிரசு கட்சிதான் இந்த வகுப்புவாத பரப்புரையை முன்னின்று நடத்தியது.

படுகொலைக்கு முன்தயாரிப்பாக, சீக்கிய குடும்பங்களை அடையாளம் குறிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் தேவைப்படும் போது விநியோகிப்பதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தன. மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டல்களும், ரப்பர் டயர்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

திருமதி காந்தி படுகொலை செய்யப்பட்டவுடன், திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்திரா காந்தி, அவரது சீக்கிய பாதுகாவலர்களால் கொல்லப்பட்டதாக வதந்தியை செய்தி ஊடகங்கள் வேண்டுமென்றே பரப்பின. அவர் படுகொலை செய்யப்பட்டதைக் கொண்டாடும் விதமாக சீக்கியர்கள் இனிப்புகளை விநியோகிப்பதாகவும், அவர்கள் தில்லியின் குடிநீரில் நஞ்சைக் கலந்து விட்டதாகவும் தில்லியில் வதந்திகள் பரப்பப்பட்டன.

இந்திரா காந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த எய்ம்ஸ் மருத்துவமனை முன்பு கூடிய காங்கிரசு கட்சித் தலைவர்கள், இரத்தத்திற்கு பதில் இரத்தம் என்று ஆத்திரமூட்டும் முழக்கத்தை எழுப்பினர். இந்த முழக்கம் இந்திய அரசின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது.

நவம்பர் 1 ஆம் தேதி அதிகாலையில் இருந்து, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் தில்லியின் தெருக்களில் இரத்தவெறி கொண்ட கும்பல்களை வழிநடத்தினர். அவ்வழியாக வந்த சீக்கியர்கள் தாக்கப்பட்டு, மண்ணெண்ணெய் ஊற்றி, ரப்பர் டயரை அவர்கள் மீது வைத்து, தீ வைத்து எரித்தனர். சீக்கியர்களின் வீடுகள் தாக்கப்பட்டன, பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டனர், ஆண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டனர், அவர்களது வீடுகளும் கடைகளும் சூறையாடப்பட்டு, பின்னர் தீ வைக்கப்பட்டன, இந்த கொலைகார கும்பல்களை காவல்துறை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்ததோடு அவர்களை ஊக்குவிக்கவும் செய்தது.

இடைக்காலப் பிரதமரான ராஜீவ் காந்தியிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு அனுதாப வார்த்தைகள் கூட வரவில்லை. அந்தப் படுகொலையைக் கண்டிக்கும் வார்த்தைகள் எதையும் அவர் கூறவில்லை. மாறாக, “ஒரு பெரிய மரம் விழுந்தால், பூமி அதிரும்” என்று கூறி அந்தப் படுகொலைகளை நியாயப்படுத்தினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்கான நியாயமான பதிலடியாக சீக்கியர்களின் படுகொலை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்கிறார். அதே நேரத்தில் அவர், இந்தப் படுகொலையில் காங்கிரசு கட்சி மற்றும் அரசாங்கத்தின் பங்கை மறைத்து, மக்கள் மீது பொய்யாக குற்றம் சாட்டினார்.

1984 நவம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை நிகழ்ந்த இனப்படுகொலைகளை “சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்” என்ற பொய்யை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. “கலவரம்” என்ற வார்த்தை, தன்னிச்சையாக எழுந்த ஒரு வெடிப்பு என்பதைக் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நடந்த படுகொலைகளுக்கு இந்திய மக்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

உண்மை முற்றிலும் வேறுபட்டது. சீக்கிய சகோதரர்களைக் கொல்வதற்காக வீதியில் இறங்கியவர்கள் மக்கள் அல்ல. மாறாக, எல்லா இடங்களிலும் மக்கள் தங்கள் அக்கம்பக்கத்திலுள்ள சீக்கிய மக்களைப் பாதுகாக்க தங்களால் இயன்றவரை முயன்றனர்.

இந்த இனப்படுகொலையானது, அப்போது மத்திய அரசில் இருந்த காங்கிரசு கட்சியால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது. அதை நிறைவேற்ற முழு அரசு இயந்திரமும் தீவிரமாக செயல்பட்டது.

நவம்பர் 1 ஆம் தேதி காலை முதலே, ஓய்வுபெற்ற மற்றும் கௌரவிக்கப்பட்ட ஜெனரல்கள் மற்றும் ஏர் மார்ஷல்கள், நீதிபதிகள் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இனப்படுகொலையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய உள்துறை அமைச்சரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். அவர்கள் மயான அமைதியை மட்டுமே எதிர் கொண்டனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகள், காவல்துறையினர் இந்தக் கொடூரத் தாக்குதல்கள் நடைபெற அனுமதித்ததோடு, பல இடங்களில், அவர்கள் கொலைகார கும்பல்களுக்குத் தீவிரமாக உதவினார்கள்.

1984 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலை பற்றிய உண்மை நிலையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென 38 வருடங்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு மூளையாக செயல்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இனப்படுகொலைக்கு முந்தைய வாரங்களிலும் மாதங்களிலும், அந்த மூன்று பகல் மற்றும் இரவுகளிலும் அதிகார வட்டாரங்களில் என்ன நடந்தது என்பதை மக்கள் அறிய விரும்புகிறார்கள். மத்திய அமைச்சரவையிலும், உள்துறை அமைச்சகத்திலும் என்ன விவாதங்கள் நடந்தன, உளவுத்துறையின் பங்கு என்ன?

மக்களின் கோரிக்கைகளுக்கு, விசாரணை ஆணையங்களை அமைப்பதே அடுத்தடுத்த அரசாங்கங்களின் பதிலாக இருந்து வந்திருக்கிறது. இனப்படுகொலையை திட்டமிட்டு நடத்தியதில் மத்திய அரசு, உள்துறை அமைச்சகம், அரசின் பல்வேறு நிறுவனங்களின் பங்கை இந்த விசாரணை ஆணையங்கள் மூடி மறைத்துள்ளன.

அக்டோபர் 31, 1984 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை செய்யப்பட்டது 38 ஆண்டுகளுக்குப் பிறகும் மர்மமாகவே உள்ளது. ஆளும் வட்டங்களுக்குள் உள்ள முரண்பாடுகள் மிகத் தீவிரமாகி விட்டதையும், படுகொலை செய்வதே அவற்றைத் தீர்க்க ஒரே வழி என்பதையும் அது வெளிப்படுத்தியது. கொலைக்கு மூளையாக செயல்பட்டது யார் என்றும், ஏன் என்றும் விசாரணை நடத்தப்பட வேண்டும். படுகொலைக்கு ஒரு சமூகத்தின் மீது பழி சுமத்தி, இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம் ஆட்சியாளர்களால், இந்தக் கேள்விகள் வசதியாக மூடி மறைக்கப்பட்டன. கடந்த 38 ஆண்டுகளில் எந்த அரசாங்கமும் இந்திரா காந்தி கொல்லப்பட்டதன் பின்னணி குறித்தோ, இனப்படுகொலையின் பின்னணியில் உள்ள உண்மையையோ வெளிக் கொண்டு வரவில்லை.

கடந்த 38 ஆண்டுகாலமாக உண்மைகள் மூடிமறைக்கப்பட்டு வருவது, இனப்படுகொலையில் ஆளும் வர்க்கமும் அதன் முழு அரசு இயந்திரமும் ஈடுபட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. அந்த நேரத்தில் காங்கிரசு கட்சியும், முக்கியப் பதவிகளில் இருந்த அதிகாரிகளும் இந்தப் படுகொலைகளை நிறைவேற்றுபவர்களாக இருந்தாலும், ​​ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் சேவைக்காக, ஆளும் வர்க்கம் தன் அணிகளுக்குள் உள்ள முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும், தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை உடைப்பதற்காகவும் இந்த இனப்படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்தியிருக்கிறது.

1984 இனப்படுகொலையானது, தனது ஆட்சியைக் காப்பாற்றி வைத்துக் கொள்வதற்காக இந்திய ஆளும் வர்க்கம், நம் நாட்டு மக்களுக்கு எதிராக எவ்வித மிகக் கொடூரமான குற்றங்களையும் செய்யத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது. மீண்டும் மீண்டும் அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத வன்முறைகள் உட்பட கடந்த 38 ஆண்டுகளில் அரசு பயங்கரவாதம் திட்டமிட்ட முறையில் அதிகரித்து வந்துள்ளது, இதை உறுதிப்படுத்துகிறது.

1992-இல் பாபர் மசூதி இடிப்பு, அதைத் தொடர்ந்து நடந்த வகுப்புவாத பயங்கரவாதம், 2002-இல் குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை, இன்னும் பல இரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமான செயல்கள் அதிகாரத்தில் உள்ள கட்சிகளின் முழு பங்கேற்போடும், அரசு இயந்திரத்தை தீவிரமாகப் பயன்படுத்தியும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன.

வகுப்புவாத படுகொலைகளை ஏற்பாடு செய்து, நம் மக்களின் ஒற்றுமையைத் தாக்குபவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதோடு, உண்மையில் அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர் என்பது நம் மக்களின் கடந்த 38 ஆண்டுகால அனுபவமாக இருக்கிறது. மறுபுறம், தங்கள் உரிமைகளுக்காக போராடும் மக்கள் “பயங்கரவாதிகள்” என்றும், “தேச விரோத சக்திகள்” என்றும் முத்திரை குத்தப்படுகிறார்கள். அவர்களில் பலர், போலியான எதிர்மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். நீதிக்காக பல்லாயிரக்கணக்கான போராளிகள் தடா, போட்டா, யுஏபிஏ போன்ற பாசிச சட்டங்களின் கீழ் பல்லாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாஜக மற்றும் காங்கிரசு தலைமையிலான முதலாளி வர்க்க அரசியல் கட்சிகள், தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது பற்றி பேசுகின்றன. அதே நேரத்தில் அதிகாரத்தில் இருக்கும் வர்க்கத்திற்கு சேவை செய்வதற்காக, மக்களை பிளவுபடுத்த திட்டமிட்டு வேலை செய்கின்றன. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வர்க்க ஒற்றுமையை உடைப்பதற்காக மதம், சாதி, மொழி மற்றும் பிராந்திய அடிப்படைகளில் வெறி உணர்வுகளை அவர்கள் தொடர்ந்து திட்டமிட்ட முறையில் தூண்டிவிட்டு வருகிறார்கள். இத்தகைய கட்சிகள் கூட்டாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது நடத்தப்படும் முதலாளி வர்க்க ஆட்சியைப் பாதுகாக்கின்றன. அவை அனைத்தும், வாக்குச்சீட்டின் மூலமாகவும், உழைக்கும் மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலமாகவும் முதலாளி வர்க்கம் ஆட்சி செய்யும் அமைப்பின் ஒருங்கிணைந்த அங்கமாகும். இத்தகைய கட்சிகள் அரசு இயந்திரத்தைக் கட்டுப்படுத்தவும், முதலாளி வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தவும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுகின்றன.

வகுப்புவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறைக்கும், அனைத்து வகையான அரசு பயங்கரவாதத்திற்கும் அடிப்படையானது ஏகபோகக் குடும்பங்களின் தலைமையிலான முதலாளி வர்க்கத்தின் ஆட்சியில் உள்ளது. எனவே, செயலாக்கப் பொறுப்பில் உள்ள ஒரு கட்சியை மாற்றுவதன் மூலம் வகுப்புவாதத்தையும், வகுப்புவாத வன்முறையையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டம் வெற்றி பெற முடியாது.

காங்கிரசு கட்சி திட்டமிட்டு நடத்திய சீக்கியர்களின் இனப்படுகொலை ஒரு சறுக்கல் தான் என்று ஒரு கருத்து உள்ளது. அகராதியில் சறுக்கல் என்பதன் பொருள் “வழக்கமான நடத்தையிலிருந்து ஒரு தற்செயலான தவறு அல்லது பிறழ்ச்சி” என்பதாகும். ஆனால் சீக்கியர்களின் இனப்படுகொலை ஒரு சறுக்கல் அல்ல. அதை ஒரு பிறழ்ச்சியாகக் கருதுவது மிகப் பெரிய தவறாகும்.

1984 இனப்படுகொலை ஒரு பிறழ்ச்சி அல்லது சறுக்கல் என்ற கருத்தை முன்வைப்பவர்கள், பாஜக கட்சிக்கு எதிராகப் போட்டியிடும் காங்கிரசு கட்சியின் பின்னால் மக்களைத் திரட்ட முயற்சிப்பதை நியாயப்படுத்துவதற்காக அவ்வாறு செய்கிறார்கள். வகுப்புவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறையின் மூலகாரணம் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியான பாஜக-வே தவிர, ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் அல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள். இத்தகைய நிலைப்பாடு, வகுப்புவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிரான போராட்டத்தைக் முட்டுச் சந்துக்குக் கொண்டு சென்று முடக்கிப் போடும்.

வகுப்புவாத வன்முறை உள்ளிட்ட அரசு பயங்கரவாதத்தின் இலக்கு நமது நாட்டின் தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களாகும், அதனுடைய நோக்கம் நமது ஒற்றுமையை உடைத்து நமது உரிமைகளுக்கான போராட்டத்தை நசுக்குவதாகும். வகுப்புவாத வன்முறைக்கும் அரசு பயங்கரவாதத்திற்கும் எதிரான நமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, அனைவரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அனைத்து சுரண்டப்படும், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் அனைத்து முற்போக்கு, சனநாயக சக்திகளின் அரசியல் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும், வலுப்படுத்துவதும் அவசியமாகும். ‘ஒருவர் மீது தாக்குதல், அனைவர் மீதும் தாக்குதல்’ என்ற கொள்கையை உயர்த்திப் பிடித்துச் செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.

முதலாளி வர்க்க ஆட்சிக்கு பதிலாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவும் போது தான், அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத வன்முறையையும் அரசு பயங்கரவாதத்தையும் நிரந்தரமாக ஒழித்துக் கட்ட முடியும். தற்போதுள்ள அரசை மாற்றி, அனைத்து குடிமக்களுக்கும் வாழ்வதற்கான உரிமை, மனசாட்சிக்கான உரிமை, அனைத்து மனித உரிமைகள் மற்றும் சனநாயக உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு புதிய அரசு நிறுவப்பட வேண்டும். அத்தகைய அரசு, ஒருவரது நம்பிக்கைகளின் அடிப்படையில் யாரும் பாரபட்சமாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும், மேலும் பாரபட்சமாக செயல்படும் எவரும், எந்தப் பதவியில் இருந்தாலும் உடனடியாகவும் கடுமையாகவும் தண்டிக்கப்படுவார்கள்.

அரசு திட்டமிட்டு நடத்திய சீக்கியர்களின் கொடூரமான இனப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள் கடந்த நிலையில், அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத வன்முறைக்கும், பயங்கரத்திற்கும் எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த உறுதி ஏற்போம். அனைவருக்கும் வளமையையும், பாதுகாப்பையும் வழங்குவதில் உறுதி கொண்ட ஒரு புதிய அரசை நிறுவும் கண்ணோட்டத்துடன் நாம் போராட்டத்தைத் தொடர்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *