வாகன உற்பத்தித் தொழிலாளர் போராட்டங்கள்

குர்கான் – மானேசர் பகுதி : நிரந்தரத் தொழிலாளர்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கும் போராட்டத்தில் முன்னேற்றம்

வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளெங்கும், நிரந்தரத் தொழிலாளர்கள் என்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களென்றும் தொழிலாளர்களை முதலாளிகள் பிளவுபடுத்தி வைத்திருக்கின்றனர். ஒரே வேலைக்கு, நிரந்தரத் தொழிலாளர்களை விட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எந்த சமூகப் பாதுகாப்பு நலன்களும் இல்லை. முதலாளித்துவ உடமையாளர்கள், அரசாங்கத்தின் தொழிலாளர் துறையுடன் இணைந்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற் சங்கங்களாக அணி திரள்வதை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி வருகின்றனர். அவர்கள் நிரந்தரத் தொழிலாளர்களின் சங்கங்களில் உறுப்பினர்களாக சேரவும் அனுமதிக்கப்படுவதில்லை.

நிரந்தரத் தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் என இருசாராரும் தங்கள் உரிமைகளுக்காகப் போராட ஒரே அமைப்பில் ஒன்றிணைய வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள். பெல்சோனிகா ஆட்டோ காம்பொனென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் தொழிற் சங்கம் ஆகஸ்ட் 2021 இல் ஒப்பந்தத் தொழிலாளர்களும் சங்கத்தில் சேரலாமென அதன் கதவுகளைத் திறந்து வைத்தது. இந்த முடிவை மாற்றுவதற்காக நிர்வாகம் எல்லா கடும் முயற்சிகளையும் எடுப்பார்களென சங்கம் முழுமையாக அறிந்திருந்தது. அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து நிற்பது தொழிலாளர்களுக்கு நலனுக்கு உகந்தது என்று தொழிற்சங்கம் முடிவு செய்து, முதல் கட்டமாக ஒப்பந்தத் தொழிலாளி ஒருவரை சங்கத்தில் சேர்த்துக் கொண்டனர்.

தொழிற் சங்கத்தின் இந்த நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறி 20 நாட்களுக்குள் இதற்கு விளக்கம் கேட்டு தொழிற்சங்கத்திற்கு தொழிற்சங்கப் பதிவாளராகச் செயல்படும் அரியானா தொழிலாளர் ஆணையர், நிர்வாகத்தின் சார்பில், கடிதம் அனுப்பினார். தொழிற் சங்கம் தன் நடவடிக்கை சரியானது என்று கூறி இக்கடிதத்திற்கு பதிலளித்துள்ளது. தொழிலாளர்கள் தாங்கள் விரும்பும் ஒரு தொழிற்சங்கத்தை அமைக்கவும் அல்லது அதில் சேருவதற்கான உரிமையை அது உயர்த்திப் பிடித்தது. இந்தக் கேள்வியில் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இடையே எந்த வேறுபாடும் பார்க்கக் கூடாது என்று அது சுட்டிக்காட்டியது.

பெல்லசோனிகா தொழிலாளர்களின் எடுத்துக்காட்டு, நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக நடத்தப்படும் ஒன்றுபட்ட போராட்டங்களுக்கு ஒரு உந்துததலைக் கொடுக்கும். இது தொழிற் சங்கங்களை ஒன்றிணைத்து வலுப்படுத்துவதுடன், பல்வேறு தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதற்கும், ஒன்றுக்கு எதிராக இன்னொன்றை பயன்படுத்துவதற்கும் விதிகள் மற்றும் வழிமுறைகளைப் பயன்படுத்தும் நிர்வாகங்களின் முயற்சிகளை எதிர்க்கும்.

மீண்டும் வேலையில் வைக்க வேண்டுமென மாருதி தொழிலாளர்கள் கோரிக்கை

மாருதி ஆட்டோமொபைல்ஸின் மானேசர் ஆலையில் 2012 இல் நடந்த வன்முறையை அடுத்து, “நம்பிக்கை இழப்பு” என்று காரணம் காட்டி, 546 தொழிலாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்

வேலையிலிருந்து நீக்கப்பட்ட 546 தொழிலாளர்களில் 426 பேர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை. இந்த தொழிலாளர்கள் நிறுவனத்தின் நலன்களுக்கு எதிராக எந்த விதத்திலும் செயல்பட்டனர் என்ற நிறுவனத்தின் கூற்றை உறுதிப்படுத்த எந்த உள் விசாரணையும் நிறுவனத்தால் நடத்தப்படவில்லை.

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் வேறு வேலைகளைத் தேடியும், அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்களில் பெரும்பாலோர் வேலையிழந்த பின்னர், குர்கானில் தங்குமிடத்திற்கான வாடகையை செலுத்த முடியாமலும், பிற தேவைகளுக்கு பணம் இல்லாமலும், தங்கள் கிராமங்களுக்குத் திரும்பினர். அவர்களில் பலர் ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளாகவும் அல்லது கிராமத்தில் வேறு தொழில்களிலும் வேலை செய்கிறார்கள்.

இருப்பினும், தங்கள் வாழ்வாதாரத்தின் மீது நடத்தப்பட்ட அநீதியான தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தைத் தொழிலாளர்கள் கைவிடவில்லை. அவர்களில் நூற்றுக்கணக்கானோர் தங்களை மீண்டும் பணியமர்த்தக் கோரி அக்டோபர் 11-12 தேதிகளில் அரியானா அரசாங்கத்தின் செயலகத்திற்கு வெளியே இரண்டு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாருதி நிறுவன அலுவலகத்தில் 18 சூலை 2012 அன்று ஒரு மூத்த மேலாளரின் மரணம் நிகழ்ந்தது நினைவிருக்கலாம். அநியாயமாக வெளியேற்றப்பட்ட ஒரு தொழிலாளியை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, ​​மாருதி நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தீ விபத்தில் இறந்த மேலாளரின் மரணத்தை ஏற்படுத்தியாகவும், கலவரம் மற்றும் தீ வைத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டன. குர்கான் மானேசர் தொழிற்பேட்டை முழுவதும் பயங்கரமான ஒரு சூழ்நிலையைப் பரப்ப இந்த சம்பவம் பயன்படுத்தப்பட்டது. இது மாருதி சுசூகியில் மட்டுமின்றி, அந்தப் பகுதி முழுவதிலும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தைப் பின்னுக்குத் தள்ளியது.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் சித்திரவதை செய்யப்பட்டனர். மார்ச் 10, 2017 அன்று, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 148 பேரில் 31 பேரை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்ததோடு, மீதமுள்ள 117 பேரை விடுதலை செய்தது. இந்த 117 தொழிலாளர்கள் ஏற்கனவே கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்! தண்டிக்கப்பட்டவர்களில் மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்கள் 12 பேர் உட்பட 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நீண்ட காலம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணைகளின் போது, ​​ மேலாளர் கொல்லப்பட்ட அலுவலகத் தீயைத் தொழிலாளர்கள் தான் வைத்தனர் என்பதற்கு அரசு உறுதியான ஆதாரம் எதையும் வழங்கவில்லை. மறுபுறம், கிளர்ச்சி செய்யும் தொழிலாளர்கள் நிறுவனத்தின் வாயில்களுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததையும், அதே நேரத்தில் நிர்வாகத்தின் குண்டர்கள் தொழிற்சாலை வளாகத்தைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததையும் நேரில் கண்ட சாட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. மாருதி சுசூகி தொழிலாளர்களின் சக்தி வாய்ந்த போராட்டத்தை நசுக்கவும், அவர்களின் தொழிற்சங்கத்தை அழிக்கவும், மேலாளரின் கொலையை மாருதி சுசூகி நிறுவனமே திட்டமிட்டு நடத்தியிருக்கலாம் என்பதையும் நிராகரிக்க முடியாது.

பணிநீக்கம் செய்யப்பட்ட சுமார் 340 தொழிலாளர்கள் 2016 ஆம் ஆண்டு தாங்கள் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், ஆறு வருடங்களாக எந்த அசைவும் இன்றி வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். வேலையில் மீண்டும் அமர்த்த வேண்டுமென்ற மாருதி சுசூகி தொழிலாளர்களின் கோரிக்கைக்கு, குருகிராம்-மனேசர்-பாவல் பகுதி வாகனத் தொழிற்பேட்டையில் உள்ள தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் பரந்துபட்ட ஆதரவைத் தந்து வருகிறார்கள்.

தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும் யமகா மோட்டார் நிர்வாகத்தின் திட்டங்களைத் தொழிலாளர்கள் முறியடித்தனர்

யமகா மோட்டார் பிரைவேட் லிமிடெட் தொழிலாளர்கள், சென்னையின் புறநகரில் உள்ள காஞ்சிபுரத்தில் உள்ள தொழிற்சாலையில் 10 நாட்கள் உள்ளிருப்புப் போராட்டத்திற்குப் பிறகு, அக்டோபர் 20, 2022 அன்று தங்கள் வேலைநிறுத்தத்தை நிறுத்திக் கொண்டனர். நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்ததை அடுத்து தொழிற்சங்கம் இதனைச் செய்துள்ளது.

தொழிலாளர்களின் ஒற்றுமையை உடைக்க நிர்வாகம் மேற்கொண்ட முயற்சியை எதிர்த்து அக்டோபர் 11 ஆம் தேதி அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் ஒற்றுமையை உடைக்கும் முயற்சியில் ஒரு பொம்மை தொழிற்சங்கத்தை உருவாக்கி, அந்த சங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கூட நிர்வாகம் கையெழுத்திட்டது.

கடந்த 13 மாதங்களாக, ஒரு நீண்ட கால ஒப்பந்தத்திற்காக நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த தொழிலாளர் சங்கம் முயற்சி செய்து வந்திருக்கிறது. ஆனால் நிர்வாகம், தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டது. மாறாக நிர்வாகம் தான் அமைத்த தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது.

தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் கிடைக்காததால், அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் ஆலைக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

நீதிமன்றத் தடை, காவல்துறையின் உதவியுடன் போராட்டத்தை ஒடுக்குவது மற்றும் ஆலையை மூடப் போவதாக மிரட்டுவது என வேலைநிறுத்தத்தை முறியடிக்க நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலனளிக்கவில்லை. வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அனைத்து அச்சுறுத்தல்களையும் கொட்டும் மழையையும் தாங்கிக் கொண்டு ஆலை வளாகத்தில் 24 மணி நேரமும் தர்ணாவைத் தொடர்ந்தனர். ஆலையில் பணிபுரியும் பயிற்சித் தொழிலாளர்களுக்கும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கும் நிரந்தர வேலை வழங்குவதாக உறுதியளித்து வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சியையும் நிர்வாகம் மேற்கொண்டது. குறைந்தபட்சம் பெயரிலாவது நிர்வாகச் சார்பு தொழிற் சங்கத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே நிர்வாகத்தின் எண்ணமாக இருந்தது. தற்காலிக தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்ததோடு, தொழிலாளர்களுக்கு நிர்வாக நிலைகளுக்கு பதவி உயர்வு அளிக்கவும் நிர்வாகம் உறுதியளித்தனர். இருப்பினும், பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த பொய்யான வாக்குறுதிகளுக்கு இணங்க மறுத்துவிட்டனர்.

தொழிலாளர்களின் உறுதியான போராட்டம், இறுதியாக நிர்வாகத்தை அவர்களது பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *