ஐரோப்பாவில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள்

பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும், தங்களுடைய வாழ்வாதாரத்தின் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு எதிராகவும் ஐரோப்பாவெங்கும் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உழைக்கும் மக்களின் வாழ்க்கையை நரகமாக்கும் எரிசக்தி விலை உயர்வை அவர்கள் எதிர்க்கின்றனர்.

உக்ரைன் போரின் காரணமாக உயர்ந்துவரும் எரிசக்தி விலைக்கு எதிராக செக் குடியரசின் ப்ராக் நகரில் ஆர்பாட்டம் (3 செப்டம்பர் 2022)

உக்ரேனைப் பாதுகாப்பது என்ற பெயரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ, ரஷ்யாவிற்கு எதிராக நடத்தும் போரை ஐரோப்பாவெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர். அமெரிக்காவின் நெருக்குதல் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்குவதை நிறுத்துவது இந்தத் தடைகளின் ஒரு பகுதியாகும். ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் காரணமாக எரிவாயு விலைகள் கடுமையாக அதிகரித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதை எதிர்த்து உழைக்கும் மக்கள் வீதிக்கு வந்து தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் செப்டம்பர் மாதம் முதல் தீவிரமடைந்து வருகின்றன.

செர்மன் தொழிலாளர்கள் போரையும் எரிசக்தி விலை உயர்வையும் எதிர்க்கின்றனர்

எரிசக்தி விலை உயர்ந்து வருவதற்கு எதிராகவும், உக்ரேனில் நடைபெற்றுவரும் போருக்கு எதிராகவும் டுசெல்டார்ஃப், பெர்லின், கொலோன் மற்றும் பிற நகரங்களில் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடந்தன. எரிசக்தி நெருக்கடிக்கு ரஷ்யாவை குற்றம் சாட்டிவரும் செர்மெனி அதே நேரத்தில் நார்ட் ஸ்ட்ரீம் 2 இயற்கை எரிவாயு குழாய் வழிக்கு சான்றளித்துத் தொடங்க மறுத்து வருவதை ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டனம் செய்தனர். தங்களுடைய அரசாங்கம் ஆயுதங்களை வழங்குவதன் மூலம் போரில் பங்கேற்று வருவதையும், ரஷ்யா மீதான அமெரிக்கத் தலைமையிலான பொருளாதாரத் தடைகளில் பங்கேற்பதையும் அவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

உக்ரைனுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதைத் தடை செய்யக் கோரி காசெல் நகரில் போராட்டங்கள் நடந்தன. ஆயுத உற்பத்தியாளர் ரெயின்மெடால் (Rheinmetall) மற்றும் டேங்க் உற்பத்தியாளர் கராயுஸ்-மாஃபி வெக்மான் (Krauss-Maffei Wegmann) ஆகியோரின் தொழிற்சாலைகளின் நுழைவாயில்களை மறித்து தொழிலாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். போரின் மூலம் இவர்கள் பெரும் இலாபம் ஈட்டி வருவதை அவர்கள் கண்டனம் செய்தனர். பொருளாதாரம் இராணுவமயமாக்கப்பட்டு வருவது குறித்து செர்மன் மக்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர் என்ற உண்மையை இந்த ஆர்பாட்டங்கள் வெளிப்படுத்தியுள்ளன. நேட்டோவை கலைக்க செர்மெனி முன்னின்று செயல்பட வேண்டுமென்றும், சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் போர் அச்சுறுத்தல்களை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

பிரென்சு தொழிலாளர்கள் அதிக ஊதியத்திற்காகப் போராடுகின்றனர்

பல்வேறு தொழிற்சாலைகளையும், துறைகளையும் சேர்ந்த ஏறத்தாழ இலட்சம் தொழிலாளர்கள் அக்டோபர் 18 அன்று பிரான்சில் பல்வேறு நகரங்களில் போர்க்குணமிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்களை நடத்தினர்.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பல வாரங்களாக நடத்திவரும் வெளிநடப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து, ஊதிய உயர்வு கோரி தொழிற் சங்கங்கள் ஒரு நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தின. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள், ஆசிரியர்கள், உணவுத் துறை தொழிலாளர்கள், பொது மருத்துவமனை ஊழியர்கள், அணுமின் நிலையத் தொழிலாளர்கள் மற்றும் பல தொழிற்சாலைகள் மற்றும் சேவைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அண்மை ஆண்டுகளில் கண்டிராத அளவில் பிரான்சின் பணவீக்கம் 6.2 % மாக உள்ள நிலையில் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க, 10% வரை ஊதிய உயர்வை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கோருகின்றனர். உக்ரேனில் நடைபெற்றுவரும் போர், எரிசக்தி நெருக்கடியை மோசமாக்கி வருதால் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் அதிக விலையிலிருந்து இந்த நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன என்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்த வேலைநிறுத்தம் ரயில் சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள், புறநகர் ரயில் சேவைகள் மற்றும் பாரிஸ் மற்றும் பிரான்சின் பிற முக்கிய நகரங்களில் பேருந்து சேவைகள், நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள், அத்துடன் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய அண்டை நாடுகளுக்கு இடையேயான யூரோஸ்டாரில் அதிவேக ரயில்களின் சேவைகள் அனைத்தையும் முடக்கியது.

பிரெஞ்சு அரசாங்கம் பிறப்பித்த உத்தரவுகள் காரணமாக சில எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். பல இடங்களில் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி பல தொழிலாளர்களைக் கைது செய்துள்ளனர்.

விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராக பிரிட்டன் முழுவதும் மீண்டும் போராட்டங்கள்

பிரிட்டன் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீது முதலாளி வர்க்கம் நடத்திவரும் அனைத்து பக்க தாக்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். “போதும் போதும்!” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் திரள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

லிவர்பூல் ஆர்எம்டி தொழிலாளர்கள் பட்டதெல்லாம் போதும் என ஆர்பாட்டம்

பொதுச் சொத்துக்களையும் சேவைகளையும் தனியார்மயம் ஆக்குதல், அதிகரித்துவரும் விலைவாசி, பணவீக்கம் மற்றும் எரிசக்தியின் கிடுகிடு விலை உயர்வு ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். வேலை இழப்பு மற்றும் கடுமையான ஊதிய வெட்டுக்களைச் சந்தித்துவரும் நிலையில், இரயில்வே தொழிலாளர்கள், கால் சென்டர் சேவை ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் பொறுப்பாக இருக்க வேண்டிய போக்குவரத்து, சுகாதாரம், கல்வி போன்ற பொதுச் சேவைகளை, ஏகபோகங்கள் கையகப்படுத்துவதை அவர்கள் எதிர்க்கின்றனர்.

செக் குடியரசு

மக்களை நசுக்கும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் வாழ்க்கைத் தரம் குறைந்து வருவதைத்  தடுத்து நடவடிக்கை எடுக்க திறனற்ற அரசாங்கத்திற்கு பிராக்கின் வென்சிஸ்லாஸ் சதுக்கத்தில் திரண்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். செக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. உணவு விலைகள், அத்தியாவசியப் பொருட்கள், மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவும், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவும் வேண்டுமென அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

செக் குடியரசுத் தொழிலாளர்கள் வென்செஸ்லாஸ் சதுக்கத்தில் ஆர்பாட்டம்

முன்னதாக, செப்டம்பர் 3 அன்று ப்ராக் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தங்கள் நாடு வெளியேற வேண்டுமென்றும், எரிசக்தி விலைகளைக் குறைக்க ரஷ்யா மற்றும் பிற நாடுகளில் இருந்து இயற்கை எரிவாயுவை நேரடியாக வாங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

ஆஸ்திரியா

“விலைகளை குறை” என்ற முழக்கத்தின் கீழ், ஆஸ்திரிய தொழிற்சங்க கூட்டமைப்பு வியன்னாவின் தெருக்களில் தொடர்ச்சியான போராட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் திறனற்று அரசு இருப்பதற்கு தொழிலாளர்கள் தங்களுடைய கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். வீட்டை சூடுபடுத்துவதற்கு விலை வரம்பு, மளிகைப் பொருட்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து பயணக் கட்டணங்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியை நீக்குதல், எரிபொருட்கள் மீதான வரியைக் குறைத்தல் மற்றும் வாடகை உயராமல் நிறுத்தி வைத்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென அவர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

இத்தாலி

இத்தாலியில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் வந்துள்ளன. 300-400% அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணத்தை மக்கள் செலுத்த மறுத்து, மின்சார கட்டண அறிவிப்புகளை தெருக்களில் எரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *