தற்போதைய சூழ்நிலையும், முன்னேற்றத்திற்கான வழியும்

இந்தியாவின் தற்போதைய சூழ்நிலையானது தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியாக உள்ளது. இதன் விளைவாக வேலையின்மை மிகவும் மோசமான அளவிற்கு உயர்ந்துள்ளது. ஊதிய வருமானம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. உணவு, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வானத்தை எட்டியுள்ளன. உற்பத்தி நடவடிக்கைகளில் தேக்கமும், சரிவும் இருந்தபோதிலும் முதலாளித்துவ பில்லியனர்களின் இலாபம் வேகமாக வளர்ந்து வருகிறது.

தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் மக்கள் திரள் எதிர்ப்புக்களை எதிர்கொள்ளும் நிலையில், ஆளும் வர்க்கம் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வகுப்புவாதம், கொடூரமான சட்டங்கள், பெருமளவில் பொய்யான தகவல்கள் மற்றும் கொடூரமான திசைதிருப்பல்களை நம்பியுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் பஞ்சாபில் காணப்பட்டதைப் போல, சுரண்டப்படும் மக்களின் ஒற்றுமையை உடைக்க முதலாளி வர்க்கம் பயன்படுத்தும் முக்கிய ஆயுதங்களில் பல கட்சித் தேர்தல்களும் அடங்கும். மக்களை ஏமாற்றவும், இந்த அல்லது அந்த முதலாளித்துவக் கட்சிக்கு ஆதரவாக, குறுங்குழுவாத சண்டைகளில் அவர்களைத் திசைதிருப்பவும் தேர்தல்கள் பயன்படுத்தப்படுகின்றன. நெருக்கடி நிறைந்த இந்த முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற மாயையை உருவாக்க அவை பயன்படுத்தப்படுகின்றன.

அடுத்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 20 மாதங்கள் உள்ளன. இந்தக் காலகட்டத்தில் இமாச்சலப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, திரிபுரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. முதலாளித்துவத் தாக்குதலுக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்ட ஐக்கியத்தை பலவீனப்படுத்த ஆளும் முதலாளி வர்க்கம் இந்தத் தேர்தல்களைப் பயன்படுத்தத் தயாராகி வருகிறது.

கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி ஊடகங்கள் பா.ஜ.க-வையும் அதன் தலைவர் நரேந்திர மோடியையும், இந்தியாவை மிகப்பெரிய உயரத்திற்கு அழைத்துச் செல்லக் கூடிய சிறந்த நிர்வாகக் குழுவென்று கூறி விளம்பரப்படுத்துகின்றன. அதே நேரத்தில், ஆளும் வர்க்கம் பா.ஜ.க-வுக்கு மாற்று என்று கூறப்படுவனவற்றையும் ஊக்குவிக்கிறது. அவ்வாறு மாற்றாகக் கூறப்படுபவைகளில் ஒன்று ராகுல் காந்தி முன்னின்று நடத்தும் காங்கிரசு தலைமையிலான கூட்டணியாகும். இன்னொன்று அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியாகும்.

பா.ஜ.க-வும் அதன் மோசடியான பேச்சும்

உண்மையை தலைகீழாக மாற்றி மக்களின் மனதை குழப்புவதற்கு மோசடியாகப் பேசும் முறையில் பா.ஜ.க மிகவும் திறமை பெற்றிருக்கிறது. அண்மை ஆண்டுகளில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஏழைகளாக மாறியிருப்பது நிதர்சனமாக இருக்கும் போது, ​​இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பான நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். 2047-க்குள் இந்தியா ஆசியாவின் மேலாதிக்க சக்தியாக இருக்கும் என்று அவர் முன்வைக்கும் கண்ணோட்டமானது, டாடாக்கள், அம்பானிகள், பிர்லாக்கள், அதானிகள் மற்றும் பிற ஏகபோக நிறுவனங்களின் ஏகாதிபத்திய நோக்கங்களைப் பிரதிபலிக்கிறது.

அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி என்ற வாக்குறுதியானது, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரிய அளவில் விரிவடைந்து வருகின்ற உண்மையான நிலைக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கிறது.

அதிக அளவில் அந்நிய மூலதனத்தை சார்ந்திருக்கும் நிலையானது, தற்சார்பு கொண்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவோமென்ற அழைப்பு மோசடி என்பதைக் காட்டுகிறது. வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனைத்து கதவுகளும் முழுவதுமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. எல்லா சந்தைகளிலும் கூட்டாக ஆதிக்கம் செலுத்துவதற்காக இந்திய ஏகபோகக் குழுக்கள் அமேசான், வால் மார்ட், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், கார்கில் மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இந்திய மண்ணையும் உழைப்பையும் கூட்டாகச் சுரண்டுவதையும் சூறையாடுவதையும் அவர்கள் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

“ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக்” காக்க அனைவரும் உறுதி ஏற்போம் என பிரதமர் மோடி அழைப்பு விடுப்பது, அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத வன்முறைக்கும் முஸ்லீம்களும் அனைத்து எதிர்ப்பாளர்களும் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டு வருவதற்கும் முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது.

காங்கிரசும் “இந்தியாவே ஒன்றுபடு” பரப்புரையும்

பழி வாங்கும் பா.ஜ.க-வைக் கட்டியெழுப்பி வரும் ஆளும் வர்க்கம், அண்மை ஆண்டுகளில் காங்கிரசு கட்சியை திட்டமிட்டு பலவீனப்படுத்தி வருகிறது. காங்கிரசு கட்சியை ஒருவிதமாக மறுமலர்ச்சி செய்வதற்காக இப்போது ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியும் மற்றும் அவரது குழுவினரும் இந்தியாவே ஒன்றுபடு என்று கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நீண்ட நடைபயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

டாடாக்கள், பிர்லாக்கள், அம்பானிகள் மற்றும் பிற ஏகபோக நிறுவனங்களின் மிகவும் நம்பகமான இந்தப் பழமையான கட்சி, இப்போது தன்னை தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராக நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் மற்றும் விவசாயிகளின் தற்கொலைகள் உட்பட முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பா.ஜ.க-தான் காரணம் என்று அது குற்றம் சாட்டுகிறது. பெரும் பணக்காரர்களை மேலும் கொழுக்கச் செய்தது மற்றும் இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பது என்ற பெயரில், வகுப்புவாத வன்முறையும் அரசு பயங்கரவாதத்தையும் கட்டவிழ்த்து விட்டது என்பன போன்ற அதனுடைய நீண்ட சாதனைகளை மக்கள் மறந்துவிடுவார்கள் என்று அது நம்புகிறது.

ஆம் ஆத்மி கட்சி

தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லியின் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், 75-வது சுதந்திர தினத்தை பயன்படுத்தி, “உலகின் முதல் நாடாக” இந்தியா ஆவது குறித்த தனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தனது கட்சியின் ஊழல் எதிர்ப்பு மற்றும் நல்லாட்சி மேடையைச் சுற்றி ஒரு “மக்கள் கூட்டணியைக்” கட்டியமைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி, அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், வேலை மற்றும் விவசாயிகளுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கூறுகிறது. முதலாளித்துவத்தை தூக்கி எறியாமல் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்ற உண்மையை அது மறைத்து வருகிறது.

அதே முதலாளித்துவ வேலைத்திட்டம்

ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் பல்வேறு போட்டிக் கட்சிகளுக்கு உண்மையில் வேறுபட்ட திட்டங்கள் எதுவும் இல்லை. அவர்களுடைய திட்டங்களின் வர்க்கத் தன்மை ஒன்றுதான். அவர்கள் அனைவரும் உழைக்கும் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளை விலையாகக் கொடுத்து, முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்கவும், முதலாளி வர்க்கத்தின் ஏகாதிபத்திய நோக்கங்களை நிறைவேற்றவும் உறுதி பூண்டுள்ளனர். 2024-இல் இந்தக் கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும், மிகப் பெரிய பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆவார்கள்.

தற்போதுள்ள நாடாளுமன்ற அமைப்பில் தேர்தல் முடிவுகளை மக்கள் தீர்மானிக்கிறார்கள் என்ற எண்ணமே ஒரு மாயை ஆகும். ஆளும் முதலாளி வர்க்கம் தான் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.

ஏகபோக முதலாளிகள் தங்களது பெரிய அளவிலான பண பலத்தையும், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களின் மீதுள்ள தங்களுடைய கட்டுப்பாட்டையும் பயன்படுத்தி தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றனர். பணம் மற்றும் ஊடக பலம் மட்டுமின்றி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகளைச் செய்வதன் மூலம் வாக்கு எண்ணிக்கையிலும் மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

முன்னேற்றத்திற்கான வழி

சமீப காலங்களில் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள மிகவும் சாதகமான முன்னேற்றமானது, உலகமயம், தாராளமயம் மற்றும் தனியார்மயமாக்கல் என்ற முதலாளித்துவ திட்டத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடையே ஒற்றுமை அதிகரித்து வருவதாகும். முதலாளி வர்க்கக் கட்சிகளுக்கிடையிலான தேர்தல் போட்டிகளால் திசை தடுமாறிவிடாமல், இந்த ஒற்றுமையைப் பாதுகாத்து மேலும் வலுப்படுத்துவதே முன்னேற்றத்திற்கான வழியாகும்.

முதலாளி வர்க்கம் ஆட்சி செய்யும் போது ஒரே ஒரு வேலைத் திட்டம் இருப்பது போல, தொழிலாளி வர்க்கத்தையும் மக்களையும் அனைத்து வகையான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுவிக்க ஒரே ஒரு வேலைத் திட்டம் மட்டுமே இருக்க முடியும். அந்த வேலைத் திட்டமானது, முதலாளி வர்க்க ஆட்சியையும் பொருளாதாரத்தின் முதலாளித்துவ போக்கையும் முடிவுக்குக் கொண்டு வருவதாகும்.

தற்போதுள்ள பாராளுமன்ற முறையானது, முடிவெடுக்கும் அதிகாரத்தை ஏகபோக முதலாளிகளின் தலைமையிலான முதலாளி வர்க்கத்தின் கைகளில் வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகும். இதை ஒரு புதிய அமைப்பைக் கொண்டு மாற்றியமைக்க வேண்டும், அதில் முடிவெடுக்கும் அதிகாரம், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் பெரும்பான்மையான மக்களின் கைகளில் இருக்கும். முதலாளித்துவ கோடீஸ்வரர்களை கொழுக்கச் செய்வதற்கு மாறாக, பொருளாதாரமானது அனைத்து உழைக்கும் மக்களின் தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

தங்களைத் தாங்களே கம்யூனிஸ்டு என்று சொல்லிக் கொண்டு, ஆனால் ஏதாவதொரு முதலாளி வர்க்க மாற்றுக்கு பின்னால் செல்லும் கட்சிகளால், இந்த புரட்சிகர திட்டத்தையொட்டி தொழிலாளி வர்க்கம் ஒன்றுபடுவது தடுக்கப்படுகிறது. பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதே உடனடி பணி என்று கூறி, இந்த அமைப்பில் தேர்தல்களின் முடிவை மக்கள் தீர்மானிக்கிறார்கள் என்ற மாயையை இதுபோன்ற கட்சிகள் பரப்பி வருகின்றன. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக முதலாளித்துவத்தை செயல்பட வைக்கலாம் என்ற மாயையை அவர்கள் பரப்புகிறார்கள்.

இந்த மாயை பற்றிய பரப்புரைக்கு எதிராக அனைத்து கம்யூனிஸ்டுகளும் ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்த வேண்டும் என்று சூழ்நிலை அழைக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவுவதற்கும், முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாற்றத்தை மேற்கொள்வதற்குமான வேலைத் திட்டத்தையொட்டி தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதே முன்னேறுவதற்கான வழியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *