நான்கு வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் முதல் வாரத்தில், இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியிருப்பது அரசாங்கத்திலும், கார்ப்பரேட் உலகிலும், ஊடகங்களிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் எப்படி வளர்ந்து வருகிறது என்பது குறித்து பல விவாதங்களை இந்த செய்தி ஏற்படுத்தியது.
தனியார் நிறுவனங்களின் பெருகிவரும் இலாபங்கள், அதிக வரி வசூல், அதிகரித்துவரும் ஏற்றுமதிகள் மற்றும் கார்கள், ரியல் எஸ்டேட் மற்றும் வெளிநாட்டு விடுமுறைக்கு அதிக பணம் செலவிடப்படுவது ஆகியவை பொருளாதாரத்தின் இந்த வளர்ச்சியின் அளவீடுகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
இருப்பினும் வேகமான வளர்ச்சி கொண்ட பொருளாதாரம், அதன் அளவு அடிப்படையில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்ற தோற்றம், கோடிக்கணக்கான இந்தியர்களின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்ச்சியாக கீழ்நோக்கி சரிந்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
வேலையில்லாத் திண்டாட்டமும் வேலை மற்றும் வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பின்மையும் அதிகரித்து வருகிறது. உழைக்கும் மக்கள் உணவு, சுகாதாரம் மற்றும் குடும்பத்திற்குத் தேவையான பிற அத்தியாவசியப் பொருட்களை வெட்டிக் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் கடன்சுமை அதிகரித்து வருவதால், விவசாயிகள் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பான்மையான மக்களின் இந்த நிலைமைகள் பொருளாதார வளர்ச்சி பற்றிய இந்தக் கதையின் பின்னணியில் உள்ள கசப்பான யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன.
பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான மக்களின் நிலைமைகளுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில், உழைக்கும் மக்களில் பெரும் பகுதியினர் இவ்வளவு மோசமான பொருளாதார பிரச்சனைகளை சந்தித்து வருவது எப்படி சாத்தியம்? இதற்கான பதில், பொருளாதாரமானது மிகப்பெரிய ஏகபோக முதலாளிகளின் சொத்துக்களைப் பெருக்குவதையும், அவர்களுடைய இலாபங்களில் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதாகும். பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதையோ அல்லது அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதையோ அது நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
மற்ற நிறுவனங்களை விலைக்கு வாங்கியும், வெளிநாடுகளில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தியும் மிகப் பெரிய ஏகபோக நிறுவனங்கள் இன்னும் பெரிதாக வளர்ந்து வருகின்றன. பல இந்திய ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்று உலகின் மிகப் பெரிய பணக்காரர்களாகக் கணக்கிடப்படுகின்றன.
மறுபுறம், பல இலட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர் அல்லது குறைந்த ஊதியத்தில் வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நிலையில், தொழிலாளர்களின் ஊதியம் தேக்கநிலையில் உள்ளது அல்லது குறைந்துள்ளது. உணவு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்து வருவதால், பெரும்பாலான உழைக்கும் மக்களின் நிகர வருமானமும் வாங்கும் சக்தியும் வேகமாகக் குறைந்து வருகின்றன.
எந்த வளர்ச்சியைப் பற்றிப் பேசப்பட்டாலும் அது மிகவும் தலைகீழாக இருப்பதை இந்தியப் பொருளாதாரம் பற்றிய சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்துகிறது. நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகமாகி உள்ளது, ஆனால் இரு சக்கர வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளது, தனிநபர் உணவு நுகர்வு குறைந்துள்ளது மற்றும் வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், முந்தைய 2021-22 ஆண்டு பற்றி வெளியிடப்பட்ட வளர்ச்சி விகிதத்தைப் பற்றி அரசாங்கம் பெருமிதம் கொள்கிறது. 2021-22-ல் அதற்கு முந்தைய ஆண்டை விட பொருளாதாரம் 8.7 சதவீதம் விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த முந்தைய ஆண்டில் கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த வளர்ச்சி மிகக் குறைவான அளவில் இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில், பொருளாதாரம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வெறும் 3.8 மட்டுமே சதவீதம் அதிகரித்திருக்கிறது.
நடப்பு ஆண்டிற்கான வளர்ச்சி விகிதமும் அதிகமாக இருக்குமென அரசாங்கம் கணித்து வருகிறது, ஆனால் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட வரவு-செலவு அறிக்கையிலிருந்து ஒவ்வொரு 2-3 மாதங்களுக்கும் மதிப்பீட்டைக் குறைத்து வர வேண்டியிருந்தது. சனவரி 2022-இல் 9 சதவிகிதத்திற்கும் அதிகமாக மிகைப்படுத்தி மதிப்பிடப்பட்ட வளர்ச்சி வாய்ப்பை, சூன் 2022 இல், அரசாங்கம் வெறும் 7 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. சமீபத்திய கணிப்பீடுகள் மீண்டும் வளர்ச்சி வாய்ப்புகளைக் குறைத்துள்ளன. முன்னர் வளர்ச்சி 7.2 % மாக இருக்குமென கணித்திருந்த ரிசர்வ் வங்கி, அதை இப்போது 7 % மாக வெட்டிக் குறைத்திருக்கிறது. அதே நேரத்தில் ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி பற்றிய கருத்தரங்கு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 5.7 % மாக வீழ்ச்சியடையுமென கணித்துள்ளது.
உலகெங்கிலும் இந்தியப் பொருளாதாரம் ஒரு “இனிமையான இடமாக” பார்க்கப்படுவதாக ஒரு வாரத்திற்கு முன்பு, அக்டோபர் 1, 2022 அன்று தான் நிதியமைச்சர் கூறினார்! இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் அனைத்து வகையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான இந்திய சந்தையின் மிகப்பெரிய அளவு பற்றிய பரப்புரை, இந்தியாவை “முதலீடு செய்வதற்கு ஒரு சிறப்பான இடமாக” உலக முதலாளிகளிடையே ஊக்குவிக்கப் பயன்படுகிறது.
வளர்ச்சி குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையிலும், இந்தியப் பொருளாதாரம் இன்னொரு நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதே உண்மை. பெருமளவில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தேவையில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது, ஏனெனில் உழைக்கும் மக்கள் மிகவும் ஏழ்மையில் தள்ளப்பட்டுள்ளனர். இந்திய முதலாளிகள் மட்டுமின்றி வெளிநாட்டு முதலாளிகளும் தங்கள் முதலீடுகளை அதிகரிக்கவில்லை. ஏற்றுமதி மூலம் மட்டும் பொருளாதாரத்தை நீடித்து நிலைநிறுத்த முடியாது, மேலும் உலகம் முழுவதும் பல நாடுகளில் வரவிருக்கும் மந்தமான பொருளாதார சூழ்நிலையில் இது மேலும் முடியாததாகும்..
உலகம் முழுவதும் முதலாளித்துவம் கடுமையான நெருக்கடியில் உள்ளது, இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.