தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்தில் புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் தற்காலிக வெற்றி பெற்றுள்ளனர். மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை இப்போதைக்கு எடுக்க மாட்டோம் என்று ஒன்றிய பிரதேசத்தின் மின்துறை அமைச்சரிடம் இருந்து அவர்கள் உத்தரவாதம் பெற்றுள்ளனர்.
புதுச்சேரியின் மின்சார விநியோகம் மற்றும் சில்லறை விநியோகத்தை 100% தனியார் மயமாக்குவதற்கான ஏலம் விடுவதற்கு மனுக்களைக் கோரி அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டதற்கு மறு நாள் செப்டம்பர் 28, 2022 –லிருந்து தொடங்கி ஆயிரக்கணக்கான மின் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடந்த இடத்தில் பெரும் எண்ணிக்கையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்த இருந்தபோதிலும் தொழிலாளர்கள் விடாப்பிடியாக 6 நாட்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் ஊழியர்களுடைய இந்த உறுதியான போராட்டத்தால், இறுதியாக முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் தொழிலாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனியார் மயமாக்கும் நடவடிக்கை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
தனியார்மயமாக்கும் திட்டம் முதன்முதலில் முன்மொழியப்பட்ட ஜூன் 2022 நேரத்திலும், தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக மின் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தனர். அப்போது வேலைநிறுத்தத்தைப் பின்வாங்குமாறு ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட புதுச்சேரி முதல்வர், விநியோக வலையமைப்பை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு சம்மதம் அளிப்பதற்கு முன் மின் ஊழியர்களோடு கலந்தாலோசிப்போமென முதல்வர் உறுதியளித்தார். ஆனால் செப்டம்பர் 2022 இல் ஏலம் விடுவதற்கு அழைப்பு விடுவதற்கு முன்னர் மின் துறை ஊழியர்களோடு, எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை.
பேச்சுவார்த்தையின் போது, புதுச்சேரியில் மின்சார விநியோகத்தை தனியார் மயமாக்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று தொழிலாளர்கள் தங்கள் ஆணித்தரமான வாதங்களை முன்வைத்தனர். நாட்டிலேயே புதுச்சேரியில் தான் குறைந்த கட்டணம் வசூலித்து வருவதையும், சேவைகள் குறித்து நுகர்வோர் மன நிறைவு கொண்டிருப்பதையும், புதுச்சேரி மின் துறை இலாபம் ஈட்டி வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். சண்டிகரில் செய்தது போல், அந்தத் துறையின் சொத்துக்களை தனியாருக்கு அன்பளிப்பாக வழங்குவது ஒன்றியப் பிரதேசத்தின் நலனுக்காக இல்லை என்று அவர்கள் வாதிட்டனர். மேலும், மின்சாரம் (திருத்த) மசோதா 2022 குறித்து நிலைக்குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கும் வேளையில், இந்த தனியார்மயமாக்கும் முயற்சி நியாயமானது தானாவென அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்த மசோதா கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, மின்சார விவகாரங்களுக்கான நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டதை நினைவு கூறலாம்.
இந்த பேச்சுவார்த்தை மற்றும் அமைச்சரின் அறிவிப்புக்கு பின், புதுச்சேரி மின்வாரிய ஊழியர்களின் நடவடிக்கை குழு, இப்போதைக்கு வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென முடிவு செய்தது. மேலும் போராட்டத்தின் அவசியத்தை நடவடிக்கை குழு ஆய்வு செய்யும்.