இந்திய விவசாயத்தின் நெருக்கடியும் அதன் தீர்வும்

நம் நாட்டு மக்களுக்கு உணவளிக்க விவசாயம் இன்றியமையாதது. கோடிக்கணக்கான விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு நம்பியிருக்கும் ஒரு பெரிய பொருளாதார நடவடிக்கையாகும் இது. இருப்பினும், இன்று இந்தியாவில் விவசாயம் மக்களுக்கு போதுமான ஊட்டச்சத்தான உணவை உறுதி செய்வதோ அல்லது உணவை உற்பத்தி செய்பவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வாதாரத்தை வழங்குவதோ இல்லை. விவசாய நெருக்கடி ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தையும் ஆபத்தில் ஆழ்த்தி வருகிறது.

அனைத்து பக்க நெருக்கடி

சில்லறைக் கடைகளிலிருந்து உணவு வாங்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் பிற உழைக்கும் மக்களுக்கும், சமீப காலமாக விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன (அட்டவணை 1). இது அவர்களின் உணவுப் பொருட்களை வாங்கும் அளவைக் குறைத்துள்ளது.. பருப்பு வகைகள், இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், ஏற்கனவே குறைந்த அளவு புரதச் சத்தை உட்கொண்டு வரும் நமது நாட்டு கோடிக்கணக்கான மக்களின் பயன்பாட்டை மேலும் குறைக்க வழிவகுத்துள்ளது.

அட்டவணை 1: உணவு விலைகள் செங்குத்தாக உயர்வு

சில்லறை விலைகளின் சதவீத அதிகரிப்பு

ஆகஸ்டு 2021-லிருந்து ஆகஸ்டு 2022 வரை

காய்கறிகள்

187%

பழங்கள்

173%

மசாலா பொருட்கள்

194%

இறைச்சியும், மீனும்

206%

சமையல் எண்ணெய்

192%

சூலை 2022-லிருந்து ஆகஸ்டு 2022 வரை
துவரம் பருப்பு

10-20%

உளுந்து

25-45%

உணவு உற்பத்தியாளர்களில் விவசாயிகளும், பயிர்களை விளைவித்தல்,  மீன்பிடித்தல், கால்நடை வளர்ப்பு மற்றும் பால், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்களும் அடங்குவர். பயிர் சாகுபடி வருமானம் இப்போது பல ஆண்டுகளாக குறைந்து வருகிறது, இதனால் கோடிக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் கூலி வருமானத்தை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். (அட்டவணை 2). விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்க உறுதிபூண்டுள்ளதாகக் கூறும் மத்திய அரசின் கூற்றுக்கு முற்றிலும் எதிரானதாக உண்மை நிலவரம் இருக்கிறது.

அட்டவணை -2

இந்தியாவில் விவசாயக் குடும்பங்களுடைய சராசரி மாத வருவாய்

கூலி பயிரிடுதல் கால்நடை வளர்ப்பு பிற மொத்தம்
அனைத்திந்தியா 2012-13

2071

3081 762 512

6426

அனைத்திந்தியா 2018-19

4063

3798 1582 775

10218

கிராமப்புறங்களில் பணவீக்கம் நுகர்வோர் விலை குறியீடு (சிபிஐ) 2012-18

40%

40% 40% 40%

40%

உண்மை வருமான உயர்வு

40%

-12% 48% 8%

14%

* விவசாயக் குடும்பம் என்றால் குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினராவது விவசாயத்திலும், அது தொடர்பான செயல்பாடுகளிலும் ஈடுபட்டு இருக்க வேண்டும்.
ஆதாரம் – தேசிய புள்ளிவிவர அமைப்பு, 2018-19 மற்றும் 2012-13 சூழ்நிலை கணிப்பு கணக்கெடுப்பு

வரட்சி, வெள்ளம் அல்லது பூச்சிகளின் தாக்குதல் இருக்கும் போது மட்டுமே பயிர்களின் விளைச்சலிருந்து வருமானம் குறைவதில்லை. மிகுதியான விளைச்சல் ஏற்படும் போதும் அவர்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு, உற்பத்தி செலவைக் காட்டிலும் குறைவான விலை கிடைப்பதால் அவர்களுடைய வருவாய் சரிகிறது. இடுபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்வதால், உற்பத்திக்காக விவசாயிகளின் செலவும் கடுமையாக அதிகரித்து வருகின்றன. வருமான வீழ்ச்சி, பெரும்பான்மையான விவசாயிகளை தாங்க முடியாத அளவிற்கு கடன்சுமைக்கு தள்ளியுள்ளது.

2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவின் விவசாயக் குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடனாளிகளாக உள்ளனர், சராசரியாக ரூ. 74,121 கடன் அவர்களுடைய தலை மீது உள்ளது, இது அவர்களுடைய ஏழு மாத சராசரி வருவாயை விட அதிகமாகும். 2018-19ல் சராசரி கடன் அளவு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 57 சதவீதம் அதிகமாகும். அதிகரித்து வரும் கடன் சுமை, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளிவருகிறது.

முதலாளித்துவ போக்கு

பிரிட்டிஷ் காலனியர்கள் நிறுவிய மூலதனத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரப் போக்கைக் கடந்த 75 ஆண்டுகளாக ஆளும் வர்க்கம் விடாப்பிடியாக கடைபிடித்து வந்திருக்கிறது. விவசாயத்தின் வளர்ச்சியானது, முதலாளிகள் தங்கள் இலாபத்தைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தால் உந்தப்பட்டதே தவிர, அனைவருக்கும் ஊட்டச் சத்தான உணவை வழங்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது உழவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவோ அல்ல.

1950-கள் மற்றும் 1960-களில் மேற்கொள்ளப்பட்ட நிலச் சீர்திருத்தங்கள் முதலாளித்துவ மற்றும் வணிக விவசாயத்திற்கு வழி வகுக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டன. அது, உலக வங்கியின் தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியுடன் 1965 இல் பசுமைப் புரட்சியின் மூலம் வளரத் தொடங்கியது.

உணவுத் தேவைக்கு அன்னிய நாட்டு உதவியை இந்தியா சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், அரசாங்கத்தின் கைகளில் உணவு தானியங்களின் போதுமான கையிருப்பை உருவாக்கும் நோக்கத்துடன் பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டது. அது, நடுத்தர மற்றும் பெரிய பரப்பிலான நிலங்களில் அதிக மகசூலைப் பெறுவதற்காக, ஆய்வகங்களில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மற்றும் நெல் விதைகளை குறிப்பிட்ட இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி கலவையை பயன்படுத்தி, பயிரிடுவதற்காக, பாசன வசதி கொண்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளைத் தூண்டும் திட்டமாகும்.

பசுமைப் புரட்சியானது விவசாயத்தின் நீண்ட காலம் நீடித்த முறையில் விவசாயம் செய்வதற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் வகையில் கோணல்மாணலான பயிர் முறைகளை விளைவித்தது (பெட்டி A- ஐப் பார்க்கவும்).

பெட்டி A: பஞ்சாபில் கோணல்மாணலான பயிர் முறை

இதற்கு யார் பொறுப்பு, என்ன செய்ய வேண்டும்?

30 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பில் நெல் பயிரிடப்படுவதால், பஞ்சாபின் பெரும்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இரசாயன உரங்களை அதிக அளவில் சேர்த்து, ஆண்டுக்கு ஆண்டு ஒரே பயிரை மீண்டும் மீண்டும் சாகுபடி செய்வதால், மண்ணின் வளம் குறைந்துள்ளது என்பதும் உண்மைதான்.

பஞ்சாபின் விவசாயிகள் இந்தப் பிரச்சனைகளை அறிந்திருக்கிறார்கள். இருப்பினும், தற்போதைய ஒருதலைப்பட்சமான பயிர் முறை பின்பற்றப்படுவதற்கு அவர்கள் பொறுப்பல்ல. 50 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைப் புரட்சியின் முக்கிய மையமாக பஞ்சாபை மத்திய அரசு தேர்வு செய்தது. மத்திய அரசு பஞ்சாபில் அதிக மகசூல் தரக்கூடிய கோதுமை மற்றும் நெல் விதைகளை மொத்தமாக நடவு செய்வதை மத்திய அரசு ஊக்குவித்தது. அத்துடன் அதற்கு ஆதரவாக இலாபகரமான விலையில் பொது கொள்முதலுக்கு உத்திரவாதமளிக்கப்பட்டது.

நெல் பயிரிடுவதிலிருந்து மாறி, குறைந்த அளவு நீர் தேவைப்படும் சோளம், பருத்தி மற்றும் சில பழங்கள் போன்ற பயிர்களுக்கு மாறுவது விவசாயத்திற்கும் பஞ்சாபின் விவசாயிகளுக்கும் நீண்டகால நலன்களை அளிக்குமென வேளாண் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். பயிர் சாகுபடி முறையில் இத்தகைய மாற்றத்தை அடைவதற்கான இன்றியமையாத நிபந்தனை என்னவென்றால், அந்த விரும்பத்தக்க பயிர்கள் அனைத்தையும் உறுதியான இலாபகரமான விலையில் பொது கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்வதாகும்.

பசுமைப் புரட்சியின் விளைவாக குறிப்பிட்ட சில பகுதிகளில் சிறுபான்மையான முதலாளித்துவ விவசாயிகள் சில ஆண்டுகளுக்கு ஓரளவு வளமையடைந்தனர். மறுபுறம், சிறிய நிலங்களில் உழைக்கும் இலட்சக்கணக்கான விவசாயிகள், முதலாளித்துவ விவசாயத்தின் வளர்ச்சியின் விளைவாக ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

உலகமயமாக்கலும் விவசாய வணிகம் தாராளமயமாக்கலும்

கடந்த 30 ஆண்டுகளில் விவசாயம் உலக சந்தையுடன் அதிக அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. உலக வர்த்தக அமைப்பின் (WTO) பரிந்துரைகளுக்கு ஏற்ப, இறக்குமதி மீதான அளவுக் கட்டுப்பாடுகளை நீக்குதல், இறக்குமதி வரி குறைப்பு, உணவு மானியக் குறைப்பு ஆகியன பயிர் முறைகளை மேலும் சிதைக்க வழிவகுத்தது. இது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அவர்கள் பெறும் விலையில் தீவிர பாதுகாப்பற்ற நிலைக்கு வழிவகுத்தது.

விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், கால்நடை தீவனம் மற்றும் பிற விவசாய இடுபொருட்களை வழங்குவதில் இந்திய மற்றும் அயல்நாட்டு பூதாகர ஏகபோக நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்ற. அளவிற்கு பங்கு வகிக்கின்றன. அவற்றில் கார்கில், மான்சாண்டோ, ஜுவாரி அக்ரோ (பிர்லா குழுமம்), டாடா கெமிக்கல்ஸ், கோத்ரேஜ் அக்ரோவெட், பிரிட்டானியா (வாடியா குழுமம்) மற்றும் ராலிஸ் இந்தியா (டாடா குழுமம்) ஆகியவை அடங்கும்.

விவசாயக் கொள்முதலில் அரசின் பங்கு குறைந்து வருவது, வேளாண்மை துறையில் தனியார் ஏகபோக நிறுவனங்களின் விரைவான வளர்ச்சியோடு சேர்ந்துள்ளது. இவற்றில் வால்மார்ட் மற்றும் அமேசான் ஆகியவை அடங்கும். அவற்றில் டாடாக்கள், முகேஷ் அம்பானி குழுமம், ஆதித்யா பிர்லா மற்றும் அதானி குழுமங்களுக்கு சொந்தமான நிறுவனங்களும் அடங்கும்.

ஏற்றுமதி சார்ந்த ஒப்பந்த விவசாயம் சூரியகாந்தி, சோயாபீன், கெர்கின்ஸ் போன்றவற்றை உற்பத்தி செய்ய ஒதுக்கப்படும் நிலத்தின் பங்கு உயர்வதற்கு வழிவகுத்தது. பருப்பு வகைகளின் உற்பத்தி அனைத்து இந்தியர்களுக்கும் சத்தான உணவை வழங்குவதற்குத் தேவையான அளவைக் காட்டிலும் பின்தங்கியுள்ளது.

விவசாய வர்த்தக தாராளமயமாக்கல் என்பது ஏகபோக நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலாகும். சந்தையில் “தங்குதடையற்ற போட்டியை” அனுமதிப்பது என்பது பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் பயனளிக்கும் என்ற மோசடியான கோட்பாட்டின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

அரசின் எந்தவொரு கட்டுப்பாடுகளுமற்ற சந்தை என்ற கருத்து 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும், அப்போது முதலாளித்துவம் அதன் ஏகபோக நிலைக்கு வளர்ச்சியடையவில்லை. அந்த நேரத்தில், பொருட்களின் சந்தைகளில் அதிக எண்ணிக்கையிலான விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்களிடையே போட்டி நிறைந்திருந்தது. அவர்களில் ஒவ்வொருவரும் சந்தையில் ஒரு சிறிய பங்கைக் கொண்டிருந்தனர், எனவே அவர்களால் பொருட்களின் விலையில் எந்த மேலாதிக்கத்தையும் செலுத்த முடியவில்லை. பெரும் ஏகபோக நிறுவனங்களின் வளர்ச்சியால் பெரும்பாலான பொருட்களின் சந்தையில் அவை மிகப் பெரிய பங்கு வகிக்கும் நிலையில் 20 ஆம் நூற்றாண்டில் சந்தைகளின் தன்மை மாறியது,

நமது நாட்டில் தற்போது விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் 2 லட்சத்திற்கும் குறைவான வணிகர்களுக்கு விற்பனை செய்கின்றனர். விவசாயச் சந்தைகளில் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையிலான உறவு, பூதாகர அளவிலான முதலாளித்துவ நிறுவனங்கள் சந்தையில் தங்கள் பங்கை விரிவுபடுத்துவதால், மென்மேலும் சமமற்றதாகி வருகிறது. ரிலையன்ஸ் ரீடெய்ல், ஆதித்யா பிர்லா ரீடெய்ல், டாடாவின் ஸ்டார் இந்தியா, அதானி வில்மர், பிக் பஜார் மற்றும் டி-மார்ட் ஆகியவை பெரும்பாலான சிறு வணிகர்களை வணிகத்திலிருந்து வெளியேற்றும்.

விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் இருவருக்கும் பலனளிக்காமல், தாராளமயமாக்கல் உணவு விநியோகத்தை கட்டுப்படுத்தும் ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது. அவர்கள் சந்தையைக் கட்டுப்படுத்தும் அளவு பங்கைப் பெற்றவுடன், அவர்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலைகளைக் கட்டளையிட முடியும், அத்துடன் விவசாயப் பொருட்களைப் பதுக்கி வைத்து அவற்றை அதிக சில்லறை விலையில் விற்கவும் முடியும்.

மொத்தத்தில், கடந்த 75 ஆண்டுகால வாழ்க்கை அனுபவம், பொருளாதார வளர்ச்சியின் முதலாளித்துவப் போக்கினால், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ அல்லது உணவு உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவோ முடியாது என்பதைக் காட்டுகிறது. ஏகபோகக் குடும்பங்களால் வழிநடத்தப்பட்டு, மேலாதிக்கம் செலுத்தப்படும் முதலாளித்துவ வளர்ச்சியே, இந்திய விவசாயத்தின் நெருக்கடிக்கான மூல காரணமாகும்

நெருக்கடிக்குத் தீர்வு

நெருக்கடிக்குத் தீர்வு, முழு பொருளாதாரத்தை மாற்றி அமைப்பதன் இன்றியமையாத அங்கமாக விவசாயத்தின் முழுமையான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. முதலாளிகளுடைய இலாபத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தை மையமாகக் கொண்டிராமல், மக்களுக்கு சத்துள்ள உணவை உறுதிசெய்வதற்கும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்வாதாரம் மற்றும் வளமையை உறுதி செய்வதற்கான தேவையை நிறைவேற்றுவதற்கும் விவசாயம் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

உணவு உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகத்தை அதிகபட்ச இலாபத்திற்காக ஏகபோக முதலாளிகளுடைய பேராசையால் இயக்கப்படும் “சந்தை சக்திகளுக்கு” விட்டுவிட முடியாது, உணவு உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை சமூகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு ஒட்டுமொத்தத் திட்டத்தின்படி மேற்கொள்ளப்பட வேண்டும்.

அனைத்து உணவு மற்றும் உணவு அல்லாத பயிர்களையும் உள்ளடக்கிய பொது கொள்முதல் முறையை உருவாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உட்பட இந்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். விவசாய இடுபொருட்களை ஏகபோக விலையில் அல்லாமல், அவற்றின் உண்மையான மதிப்பின் அடிப்படையில் விவசாயிகளுக்குக் கிடைப்பதற்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும்.. இதற்கு இந்தத் துறையிலுள்ள தனியார் ஏகபோக நிறுவனங்களின் உற்பத்தி சாதனங்களை அரசு தன் கைகளில் எடுத்துக் கொண்டு, இடுபொருட்கள் மீது அரசு தன் கட்டுப்பாட்டை நிறுவ வேண்டும்.,

பொது நிறுவனங்கள் விவசாயப் பொருட்களின் பெரும்பகுதியை முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலாகரமான விலையில் வாங்க வேண்டும். தனியார் வணிகர்கள் விவசாயிகளை சூறையாடுவதைத் தடுக்க இது முற்றிலும் அவசியமாகும்.

அனைத்து அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களும் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் பொது விநியோக முறையுடன் பொது கொள்முதல் முறை இணைக்கப்பட வேண்டும்.

உணவு விநியோகத்தை கட்டுப்படுத்த ஏகபோக முதலாளிகளின் நடவடிக்கைகளே, நெருக்கடியின் தீர்வுக்கு முக்கிய தடையாக உள்ளன. ஏகபோக முதலாளிகள் அரசு இயந்திரத்தைக் கட்டுப்படுத்தி, தங்கள் நம்பிக்கைக்குரிய கட்சிகளில் ஏதாவது ஒன்று அரசாங்கத்தை அமைப்பதற்கு தேர்தல்களைப் பயன்படுத்திவரும் வரை, இந்த நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது.

தங்களின் உடனடி கோரிக்கைகளுக்கான போராட்டத்தை மேற்கொள்வதோடு, விவசாயம் மற்றும் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரு வேலைத் திட்டத்தையொட்டி தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியல் சக்தியாக அவர்கள் மாற வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சி, விவசாயம் மற்றும் அனைத்து சமுதாயத்தையும் நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான பாதையைத் திறக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *