மின்சாரம் என்பது இன்றியமையாத சமூகத் தேவையும், பொதுவான மனித உரிமையும் ஆகும்

இந்தியாவில் மின்சாரத்திற்கான வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரைத் தொடரின் ஆறாவது கட்டுரை இது

மின்சாரம் குறித்து நடைபெற்றுவரும் வர்க்கப் போராட்டமானது, இந்த முக்கிய உற்பத்தி சக்தி யாருக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்பதும் அதன் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதும் ஆகும். இந்த மோதலின் மையமாக சமூகத்தில் மின்சாரத்தின் பங்கின் வரையறை உள்ளது.

ஒரு பக்கம் தனியார்மயமாக்கலை ஆதரிப்பவர்கள், மின்சாரம் வழங்குவதை தனியார் மின் நிறுவனங்களுக்கு அதிகபட்ச இலாபத்திற்கான ஒரு ஆதாரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை முன்வைக்கிறார்கள். மறுபுறம், ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மின்சாரம் இன்றியமையாத தேவை என்றும், அது அனைவருக்கும் பொதுவான மனித உரிமை என்றும் தொழிலாளர்களும் பரந்துபட்ட மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

சமுதாயம் நிலைப்பதற்கும் முன்னேறுவதற்கும் மின்சாரம் இன்றியமையாத தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. நவீன தொழிற்சாலைகளும் சுரங்கங்களும் இயங்குவதற்கு மின்சாரம் தேவை. நிலத்தடியில் இருந்து நீரை இறைப்பதற்கும், குழாய்கள் வழியாக கொண்டு செல்லவும் மின்சாரம் தேவைப்படுகிறது. பொருளாதாரமும் சமூக வாழ்வில் பெரும்பாலான செயல்பாடுகளும் மின்சாரத்தை சார்ந்து உள்ளன. தனிநபர் மின்சார நுகர்வின் அளவு, ஒரு நாட்டின் வளர்ச்சியின் அளவைக் குறிப்பதாகக் கருதப்படுவது காரணமின்றி இல்லை.

நவீன சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவை மின்சாரம் என்பது மறுக்க முடியாததாகும். வீடுகளில் விளக்கேற்றுவதற்கு அது அவசியமாகும். இணைய இணைப்புக்கு இது தேவை. வீட்டில் மின்சாரம் இல்லாதவர்கள், அடிப்படைக் கல்வியைக் கூட பெற முடியாது என்பதை கொரோனா வைரசு தொற்றுநோய் தெளிவாகக் காட்டியிருக்கிறது. உணவு, தங்குமிடம், அடிப்படைக் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றுடன், வீட்டில் மின்சாரம் பெறுவதும் ஒரு பொதுவான மனித உரிமையாக உள்ளது.

மின்சாரம் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான ஒரு உரிமை என வரையறுப்பது என்பது, அனைவருக்கும் மலிவு விலையில் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று பொருளாகும். தனியார்மயமாக்கல் என்பது மின்சாரம் வழங்கும் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதாகும். அரசு தனது கடமையைச் செய்ய மறுக்கிறது என்று இதற்குப் பொருளாகும். இது மனித உரிமைகளை மீறுவதாகும்.

தனியார்மயமாக்கும் திட்டம், மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகிய இரண்டையும் தனியாருக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு அதிகபட்ச இலாபத்திற்கான ஆதாரங்களாக மாற்றும் நோக்கத்தோடும், கண்ணோட்டத்தோடும் கொண்டு வரப்படுகிறது. இது, முழு சமூகத்தின் எப்போதும் அதிகரித்துவரும் பொருள் மற்றும் பண்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதை உறுதி செய்வதற்காக மின்சார விநியோகத்தை தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் என்ற தொழிலாளி வர்க்கம் மற்றும் அனைத்து முற்போக்கு மனிதகுலத்தின் குறிக்கோளுக்கும், கண்ணோட்டத்திற்கும் முற்றிலும் பொருந்தாததாகும்.

மின்சாரம் உற்பத்தியும், விநியோகமும் தனியார் இலாபத்தை அதிகப்படுத்துவதாகவோ அல்லது மலிவு விலையில் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதாகவோ இருக்க முடியும். இந்த இரண்டு நோக்கங்களையும் ஒரே நேரத்தில் சாதிக்க முடியாது.

சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணிசமான மின்சார உற்பத்தி தனியார்மயமாக்கல், மின்சாரத்தை மலிவானதாக மாற்றவில்லை. அது, அனைவருக்கும் மின்சாரத்தைக் கிடைக்கச் செய்யவில்லை. மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்குவது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மேலும் பலருக்கும் கிடைக்காததாகச் செய்யும். இது தொலைதூரத்திலுள்ள பகுதிகளுக்கு மின்சாரத்தை தர மறுக்கும்.

ஏகபோக முதலாளிகளுக்கு உத்தரவாதமான இலாபத்தை வழங்குவதற்கு தனியார்மயமாக்கல் பயன்படுத்தப்படுகிறது. அரசுக்கு சொந்தமான மின்சார வாரியங்கள் மற்றும் விநியோக நிறுவனங்களை நிதி அடிப்படையில் நலிவடையச் செய்வதன் மூலம், அவற்றை மிகக் குறைந்த விலையில் தனியார் நிறுவனங்களுக்கு விற்பதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.

இந்தியாவில் தனி நபர் மின்சார நுகர்வானது, மற்ற நாடுகளை விட மிகவும் பின்தங்கியுள்ளது. சீனாவில் தனிநபர் மின் நுகர்வு இந்தியாவை விட நான்கரை மடங்கு அதிகம். இங்கிலாந்தில் இது மூன்றரை மடங்கு அதிகமாகவும், இந்தியாவில் தனிநபர் நுகர்வை விட அமெரிக்காவில் ஒன்பது மடங்கு அதிகமாகவும் உள்ளது. இந்தியாவிற்குள், மாநிலத்திற்கு மாநிலம் நுகர்வில் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. பீகாரிலும், அசாமிலும், தனிநபர் மின் நுகர்வு தேசிய சராசரியில் நான்கில் ஒரு பங்காக மட்டுமே உள்ளது. காலனிய ஆட்சிக்குப் பின் 75 ஆண்டுகால வளர்ச்சிக்குப் பிறகும், கோடிக்கணக்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீடுகளுக்கு மின்சாரம் போதுமானதாகவோ, முழுமையாகவோ கிடைப்பதில்லை.

அனைத்து மக்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தொழில்துறை உற்பத்தியில் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும், திட்டமிட்ட முறையில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு முழுப் பொருளாதாரத்தின் முழுமையான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. தற்போதைய போக்கானது, ​​இந்திய மற்றும் சர்வதேச ஏகபோக முதலாளிகளுக்கு அதிகபட்ச இலாபத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இதை மாற்றி அமைக்க வேண்டும். பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மற்றும் விநியோகமானது, அனைத்து மக்கள் தொகையின் அதிகரித்துவரும் பொருள் மற்றும் கலாச்சார தேவைகளை அதிக அளவில் நிறைவேற்றும் நோக்கத்தால் இயக்கப்பட வேண்டும்.

மின்சாரத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிரான போராட்டம், பொருளாதாரத்தின் முதலாளித்துவ போக்கிற்கு எதிரான போராட்டத்தின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். ஏகபோக முதலாளித்துவப் பேராசையை நிறைவேற்றுவதற்கு பதிலாக மனிதத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பொருளாதாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுடன் கூட்டாக, தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே, பொருளாதாரத்தை இவ்வாறு மாற்றியமைக்க முடியும். மின்சாரத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிரான போராட்டம் இந்தக் கண்ணோட்டத்துடன் நடத்தப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *