மின்சார விநியோகத்தின் தனியார்மயமாக்கல் – தவறான கூற்றுக்களும், உண்மையான நோக்கமும்

இந்தியாவில் மின்சாரத்திற்கான வர்க்கப் போராட்டம் பற்றிய தொடர் கட்டுரைகளில் ஐந்தாவது கட்டுரையாகும் இது

மின்சாரம் (திருத்தம்) மசோதா 2022-ஐ அரசாங்கம் நாடாளுமன்றத்தின் முன்வைத்தால், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 27 லட்சம் (2.7 மில்லியன்) மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். மின்சார விநியோகத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என மின் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்சாரம் (திருத்த) மசோதா 2022, அரசுக்கு சொந்தமான விநியோக நிறுவனங்கள் தங்கள் மின்சார கம்பி இணைப்புகளின் வலைப்பின்னலை தனியார் நிறுவனங்களுக்கு பெயரளவு கட்டணத்தில் வழங்குமாறு கட்டாயப்படுத்தி முன்மொழிகிறது. மின்சார விநியோகம் செய்யும் தொழிலிலிருந்து அதிகபட்ச இலாபத்தைப் பெறுவதற்காக, பொது நிதியில் கட்டப்பட்ட மின்சார விநியோக வலைப்பின்னல்களை முதலாளிகள் பயன்படுத்த கிட்டத்தட்ட இலவசமாக வழங்கப்பட உள்ளன.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக (TANGEDCO) ஊழியர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராகப் போராடுகின்றனர்

இந்த மசோதா, மானிய விலையில் மின்சாரம் வழங்குவதை நிறுத்த வேண்டுமென முன்மொழிகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மானியம் இல்லாமல் முழு கட்டணமும் விதிக்கப்பட வேண்டும். அப்படி மானியம் வழங்க வேண்டுமென்றால், எரிவாயு உருளைகளுக்கு (எல்பிஜி சிலிண்டர்களுக்கு) வழங்கப்படுவது போல்,  வாடிக்கையாளர்களுக்கு நேரடிப் பலன் பரிமாற்ற (டிபிடி) திட்டத்தின் மூலம் மாநில அரசால் வழங்கப்பட வேண்டும். 3 விவசாய சட்டங்களை இரத்து செய்த நேரத்தில், விவசாயிகளிடம் கலந்தாலோசிக்காமல் மின்கட்டணத்தில் திருத்தம் செய்ய மாட்டோமென மத்திய அரசாங்கம் உறுதி அளித்தது. கொடுத்த வாக்குறுதியை மீறி கொண்டு வரப்படும் இந்த மின்சார சட்டத் திருத்த மசோதா கோடிக்கணக்கான விவசாயிகளை நேரடியாக பாதிக்கும்.

மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்குவதை ஆதரிப்பவர்கள், மின்சார திருத்த மசோதா ஆரோக்கியமான போட்டியைக் கொண்டுவரும் என்று கூறுகின்றனர். இது மலிவு விலையில் மிகவும் ஆற்றல் திறனுடம் நம்பகமான மின்சாரம் வழங்க வழிவகுக்கும் என்கின்றனர். இதுவரையிலான வாழ்க்கை அனுபவம் இந்தக் கருத்துக்களுக்கு பலம் சேர்க்கவில்லை. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் மாநிலமான ஒரிசாவில், தனியார் விநியோக நிறுவனங்களின் நுழைவு, செயல்திறனில் முன்னேற்றத்தையோ அல்லது செயல்பாட்டு இழப்புகளைக் குறைக்கவோ வழிவகுக்கவில்லை. மும்பை நகரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களும், ஒரு பொதுத்துறை நிறுவனமும் மின்சாரம் வழங்கி வருகின்றன; மும்பை நகரத்தின் மின் கட்டண விகிதங்கள் நாட்டிலேயே மிகவும் அதிகமான ஒன்றாக உள்ளன.

உத்தரப் பிரதேச மின்வாரிய ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தனியார்மயமாக்கலுக்கு எதிரான மெழுகுவர்த்தி ஊர்வலம், லக்னோ (2020)

மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்குவதை ஆதரிப்பவர்கள், இது வெவ்வேறு நிறுவனங்களுக்கிடையில் தங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று கூறுகின்றனர். தில்லியில் டாடா மற்றும் ரிலையன்ஸ் ஏகபோக நிறுவனங்களுக்குச் சொந்தமான இரண்டு வெவ்வேறு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வெவ்வேறு மண்டலங்கள் உள்ளன. தனிப்பட்ட குடும்பங்கள் தங்களுக்கு விரும்பிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க எந்த வாய்ப்பும் இல்லை. அவர்கள் ஏதாவது ஒரு தனியார் ஏகபோகத்தின் தயவில் உள்ளனர்.

ஒரே பகுதியில் அதானி பவர் மற்றும் டாடா பவர் நிறுவனங்கள் மின்சாரம் வழங்குகின்ற மும்பையிலும் இதே நிலைதான். டாடா பவர் நிறுவனம், அதானி பவரின் வலைப் பின்னலைப் பயன்படுத்துகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் எந்த வகையிலும் பயனடையவில்லை. மாறாக, இரண்டு ஏகபோக நிறுவனங்களும் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ 12 முதல் 14 வரை நாட்டிலேயே மிகவும் அதிக கட்டணமாக ஆக்கியுள்ளன. விநியோகத்தை தனியார்மயமாக்குவது நுகர்வோர்கள் தங்களுக்கு மின்சாரம் வழங்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை வழங்கும் என்ற கூற்று தவறானதாகும். அது தனியார்மயமாக்கலுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக மட்டுமே கூறப்படுகிறது.

உ.பி. மின்சார ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின், சுடர் பேரணி

விநியோகத்தை தனியார்மயமாக்குவது, மின்சார விநியோக இழப்பைக் குறைக்கும் என்றும், மின்சாரக் கட்டணங்களைக் கறாராக வசூலிப்பதன் மூலம் மின்சாரத்தை மலிவாக ஆக்கும் என்றும் கூறப்படுகிறது. நாட்டில் அதிக மின் விநியோக இழப்புகளுக்கு ஒரு முக்கிய காரணம், காலாவதியான உபகரணங்களை மாற்றுவதற்கும், அவற்றின் தற்போதைய விநியோக உள்கட்டமைப்பைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும், அரசுக்கு சொந்தமான விநியோக நிறுவனங்களுக்கு நிதியை மறுத்து வருவதாகும். தனியார் விநியோக நிறுவனங்கள், அரசுக்கு சொந்தமான விநியோக நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மட்டுமே பயன்படுத்தப் போவதால், தனியார்மயமாக்குவதன் மூலம் விநியோக இழப்பைக் குறைக்க முடியாது. எனவே, இதுவும் மோசடியான வாதமாகும்.

மின்சார விநியோகத்தைத் தனியார்மயமாக்கும் திட்டம் கடந்த 25 ஆண்டுகளாக நிகழ்ச்சி நிரலில் உள்ளது. கிராமங்களில் உள்ள விவசாயிகள் முதல் நகரங்களில் உள்ள உழைக்கும் குடும்பங்கள் வரை, இந்தத் திட்டத்தைப் பரவலாக எதிர்த்து வருகின்றனர். இது தனியார்மயமாக்கல் திட்டத்தின் மிகக் கடிமான கூறுகளில் ஒன்றாக ஆளும் வர்க்கம் கண்டுவருகிறது.

1990 களின் இடையிலிருந்து, உலக வங்கியும், அதன் நிபுணர் குழு என்று அழைக்கப்படுவதும் பல்வேறு மாநில அரசுகளுடன் அவர்களுடைய மாநில மின்சார வாரியங்களை எவ்வாறு சீர்திருத்த வேண்டும் என்பது குறித்து கொள்கை ரீதியான உரையாடலை நடத்த மத்திய அரசாங்கம் அனுமதித்தது. மாநில மின்சார வாரியத்திடமிருந்து தொழிலின் பல்வேறு பகுதிகளை தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்துவதற்கான இடத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

ஜம்மு காசுமீரம் முழுவதும் உள்ள மின் துறை ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் மின்சார மசோதா 2020 ஐத் திரும்பப் பெறக் கோரி அமைதியான போராட்டங்களை நடத்தினர்

இந்தத் திட்டத்தின் முதல் படி, மாநில மின்சார வாரியங்களை உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்கு பொறுப்பான தனித்தனி நிறுவனங்களாக உடைப்பதாகும். இது ‘கட்டவிழ்த்தல்’ என்று அழைக்கப்பட்டது. ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் வெவ்வேறு பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக கையகப்படுத்துவதை சாத்தியமாக்குவதே இதன் நோக்கமாகும்.

மாநில மின்சார வாரியங்கள் உடைக்கப்படுவது, தனியார்மயமாக்கலுக்கான முதல் படி என்பதை மின்சாரத் தொழிலாளர்களால் பார்க்க முடிந்தது. 1999 ல் உ.பி. அரசாங்கம் இத்தகைய நிறுவனத்தைப் பிரிப்பதற்காக எடுத்த முடிவு, தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பை சந்தித்தது. அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து சனவரி 2000 இல் 80,000 க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட மாநில அரசின் அடக்குமுறை, மற்ற மாநிலங்களில் உள்ள மின்வாரிய ஊழியர்களைக் கோபமடையச் செய்தது. அவர்கள் அனைவரும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர்.

நாடு முழுவதும் மாநில மின்சார வாரியங்களைத் துண்டுபோடவும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒழுங்குமுறை ஆணையங்களை அமைக்கவும் மின்சாரச் சட்டம் 2003, சட்டரீதியான கட்டமைப்பை வழங்கியது. இந்த மாற்றங்களை மின் ஊழியர்கள் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். 2003 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் பல மாநிலங்களால், தங்கள் மின் வாரியங்களை உடைக்க முடியவில்லை. கேரளா மற்றும் இமாச்சல பிரதேசத் தொழிலாளர்கள் தங்கள் மின்வாரியம் பல நிறுவனங்களாக உடைவதைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றி பெற்றனர். இந்த ஒவ்வொரு மாநிலத்திலும், மின்சார வாரியம் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றைக் கவனிக்கும் ஒரே நிறுவனமாக மாற்றப்பட்டது.

மாநில மின்சார வாரியங்கள், மிக நீண்ட காலமாக மோசமான நிதி நிலையில் உள்ளன. மாநில அரசுகளின் நிர்வாக இயந்திரத்தினுள்ளே மின்சார விநியோகத்தை ஒருங்கிணைத்திருப்பது அதிக அளவு ஊழலுக்கு வழிவகுத்தது. சலுகை பெற்ற சில வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் எதுவுமின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மாநில மின்சார வாரியங்களை சூறையாடி வருகிறார்கள். மேலும், காலாவதியான உபகரணங்களை மாற்றுவதற்குப் போதுமான நிதிப் பற்றாக்குறை, தொடர்ந்து அதிகரித்து வரும் பரிமாற்றம் மற்றும் விநியோக இழப்புகளுக்கு வழிவகுத்தது.

நொய்டாவில் அனைத்து மின்சார பரிமாற்றம் மற்றும் விநியோக ஊழியர்களின் நடவடிக்கை (அக் 2020)

பெரும்பான்மையான மாநில மின்சார வாரியங்களின் மோசமான நிதி நிலைமையை நிவர்த்தி செய்வதில் பொது நிதியையும், நிர்வாக ஆற்றலையும் முதலீடு செய்ய வேண்டாம் என்று ஏகபோக முதலாளிகள் முடிவு செய்தனர். மாறாக, மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்க வேண்டுமென வாதிடுவதற்கு அதைப் பயன்படுத்த முடிவு செய்தனர். உலக வங்கியுடன் நெருக்கமாக கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட இந்த முடிவு, அரசுக்குச் சொந்தமான விநியோக நிறுவனங்களின் நிதி நிலையை மேலும் சிதைக்க வழிவகுத்தது. தற்போது அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள், மாநில அரசுகள் மற்றும் நகர அமைப்புகளுக்கு அவர்கள் வழங்கிவரும் மின்சாரத்திற்காக வர வேண்டிய கட்டண பாக்கி பெரும் அளவில் குவிந்து வருகிறது. அவர்கள் தங்கள் செயல்பாடுகளை நிர்வகிக்க ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் தங்களைத் தாங்களே மீட்டெடுக்க முடியாத அளவிற்கு கடனில் மூழ்கி வருகிறார்கள்.

அரசுக்குச் சொந்தமான விநியோக நிறுவனங்களின் நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்தி, ஏற்கனவே நிறுவப்பட்ட மாநில மின்சார வாரிய வலையமைப்பை ஏகபோக முதலாளிகள் பெறுகின்றனர். குறைந்த விலையில் அத்தகைய உள்கட்டமைப்பைக் கையகப்படுத்துவது அவர்களின் நேரத்தையும் விநியோகத்திற்கான ஒரு பரந்த புதிய உள்கட்டமைப்பை உருவாக்கத் தேவையான மூலதனத்தையும் மிச்சப்படுத்தும்.

பீகார் மின்சாரத் துறை ஊழியர்கள் காவல்துறையின் தண்ணீர் பீரங்கியையும் தடியடியை எதிர்கொண்டனர்

இந்தியாவில் மின்சார விநியோகம் பொதுப் பட்டியலில் இருக்கிறது. அதாவது மத்திய, மாநில அரசாங்கங்கள் இரண்டுமே அது குறித்து சட்டம் இயற்றலாம். மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒன்றியப் பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை தனியார் மயமாக்கி வருகிறது. பல மாநில அரசுகள் மின்சார விநியோகத்தை அதிக அளவிலோ அல்லது குறைவாகவோ தனியார்மயமாக்கியுள்ளன. ஏகபோக முதலாளிகள், மாநில மின் வாரியங்களின் மின் விநியோக வலையமைப்புகளை எளிதாகக் கையகப்படுத்தும் வகையில் நாடு முழுவதற்கும் பொருந்தும் வகையில் ஒரு சட்டத்தை மத்திய அரசாங்கம் இயற்ற வேண்டும் என்று பொறுமையின்றிக் கோருகின்றனர்.

மின்சாரத் திருத்த மசோதா 2022 ஏகபோக முதலாளிகளின் இந்தத் தேவைகளை நிறைவு செய்கிறது. மின்சாரத்தை விநியோகிக்கவும், மிகக் குறைந்த முதலீட்டில் பெரும் இலாபம் ஈட்டவும் ஏற்கனவே நிறுவப்பட்ட பொது உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்கான அவர்களின் தேவையை இது நிறைவு செய்கிறது. விவசாயிகள் மற்றும் ஏழை நகர்ப்புற குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டுவரும் மின்சார மானியத்தை குறைக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகளை இது நிறைவு செய்கிறது. இது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பரந்துபட்ட எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

மின்சாரத் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிப்ரவரி 2022 இல் மின்சார ஊழியர் சங்கம் சண்டிகரில் போராட்டம்

சண்டிகர், புதுச்சேரி, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ மற்றும் லட்சத்தீவு ஆகிய ஒன்றியப் பிரதேசங்களில் மின்சார விநியோகத்தைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசாங்கத்தின் முடிவு, தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோருடைய கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. இந்த ஒன்றியப் பிரதேசங்களில், வாடிக்கையாளர்கள் தங்கள் வினியோக நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தை வழங்குவதாகக் கூறியதை காற்றில் பறக்கவிட்டு விட்டு, விநியோகத்தை ஒரு தனியார் ஏகபோகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

2022 பிப்ரவரியில் மீண்டும் மீண்டும் வேலைநிறுத்தங்களை நடத்துவதன் மூலம், சண்டிகரில் மின்சார விநியோகம் தனியார் மயமாக்கப்படுவதை தொழிலாளர்கள் இதுவரை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளனர். தங்களுடைய ஒன்றியப் பிரதேசத்தில் நிலவும் மின் கட்டணங்கள், வடக்குப் பகுதியிலேயே மிகக் குறைவாக இருப்பதையும், கொல்கத்தாவில் சண்டிகர் கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகவிலையில் மின்சாரத்தை விற்றுவரும் கோயங்கா-களுக்கு முழுத் துறையையும் விற்க அரசாங்கம் விரும்புவதையும் அவர்கள் சுட்டிக் காட்டி, அதைத் தடுத்து நிறுத்த வாடிக்கையாளர்களின் ஆதரவைக் கோரினர்.

புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களால் 2022 பிப்ரவரியில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தின் காரணமாக, அவர்களைக் கலந்து பேசாமல் தனியார்மயத்தை செய்யமாட்டோமென வாக்குறுதி அளிக்க அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டது. அரசாங்கம் கொடுத்த உத்தரவாதத்தை மீறி தற்போது செயல்படுவதால், தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில், பவர் கிரிட் கார்ப்பரேசனுடன் இணைத்து மின்சார பரிமாற்றப் பயன்பாட்டை அரசாங்கத்தின் ஒரு கூட்டு முயற்சியாக உருவாக்கி, பின்னர் அதை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதன் மூலம் தனியார்மயமாக்கும் முயற்சி மேற் கொள்ளப்பட்டது. 2021 டிசம்பரில் ஜம்மு – காஷ்மீரின் மின்துறை ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் போராட்டத்தின் மூலம் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ஜம்மு காஷ்மீர மக்களின் ஆதரவுடன் இந்த மக்கள் விரோத முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் அவர்கள் வெற்றி பெற்றனர்.

மின்சார விநியோகத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. மின்துறை ஊழியர்களின் முயற்சிகளை, மற்ற தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும் மக்கள் முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும். ஏகபோக முதலாளிகளுக்கும், அவர்களின் அதிகபட்ச இலாபத்திற்கான பேராசையை நிறைவேற்ற பொது சொத்துக்கள் மற்றும் சேவைகளை தனியார்மயமாக்கும் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும் எதிராக இது ஒரு பொதுவான போராட்டமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *