மின்சார உற்பத்தி தனியார்மயமாக்கல் – தவறான கூற்றுக்களும் உண்மையான நோக்கங்களும்

1992 இல் தனியார் மின் உற்பத்தியாளர் (IPP) கொள்கையைக் கொண்டு வந்ததன் மூலம், மின்சார உற்பத்தியானது, இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்குத் திறந்து விடப்பட்டது. 1992 க்கு முன், மின்சார உற்பத்தி என்பது பொதுத்துறைக்கு ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு துறையாக இருந்தது.

மின் உற்பத்தியில் தனியார் துறை நுழைவது, மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று இந்திய அரசால் கூறப்பட்டது. மேலும், மின்சாரம் மிகவும் நம்பகமானதாகவும் குறைந்த விலையிலும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.

30 ஆண்டுகளுக்குப் பிறகும் மின்சாரத் தட்டுப்பாடு நீங்கவில்லை, அது மலிவானதாகவும் ஆகவில்லை. கடந்த 12 மாதங்களில், நாடு அக்டோபர் 2021-இலும், ஏப்ரல் – மே 2022 இலும் இரண்டு மின் பற்றாக்குறை நெருக்கடிகளை எதிர்கொண்டது. இப்போதும் கூட, விவசாயிகள் தங்கள் பாசன பம்புகளை இயக்குவதற்கு இரவில் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது.

அக்டோபர் 2021 நெருக்கடியின் போது மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ 20 என அதிக விலைக்கு வாங்கி விற்கப்பட்டது!

25 ஆண்டுகளுக்குப் பிறகும், 2017 இல் கிட்டத்தட்ட 20 கோடி மக்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்று உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது. மின்சாரத்தின் நம்பகத்தன்மையில், 137 நாடுகளில் இந்தியா 80-ஆவது இடத்தில் இருப்பதாக 2018 உலகளாவிய போட்டித்திறன் அறிக்கை கூறுகிறது.

தனியார் மின் உற்பத்தியாளர் (IPP) கொள்கையால் மிகப் பெரிய அளவில் பயனடைந்தவர்கள் இந்திய ஏகபோக முதலாளித்துவக் குழுக்களாகும். டாடா, அதானி, அனில் அம்பானி, ஜிண்டால், கோயங்கா, டோரண்ட் மற்றும் வேறு சில குழுக்களுக்குச் சொந்தமாக உள்ள தனியார் நிறுவனங்கள் இன்று நாட்டின் மின் உற்பத்தித் திறனில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளன.

இந்த ஏகபோகக் குழுக்கள் இப்போது அதிக திறனுடன் செயல்பட்டுவரும் அரசுக்குச் சொந்தமான உற்பத்தி ஆலைகள் மீது கண் வைத்து வருகின்றன. ஆனால், பொதுத்துறை மின்சார உற்பத்தி ஆலைகளைத் தனியார் மயமாக்கும் திட்டம், மின்வாரிய ஊழியர்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.

மராட்டிய அரசாங்கம், நீர்மின் நிலையங்களின் செயல்பாட்டை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க விரும்பியபோது, ​அதை ​மின்சார ஊழியர்களும் பொறியாளர்களும் ஒன்றிணைந்து எதிர்த்தனர். நீர் மின் நிலையங்கள் மலிவான மின்சார உற்பத்திக்கு ஆதாரமாக இருப்பதால், அவற்றின் தனியார்மயமாக்கல் அரசுக்கு சொந்தமான விநியோக நிறுவனத்தையும் (டிஸ்காம்) மராட்டிய மாநில மக்களையும் பாதித்திருக்கும். சிரி தாமோதரம் சஞ்சீவய்யா அனல் மின் நிலையத்தை நீண்டகால அடிப்படையில் நடத்தும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஆந்திர அரசு முயன்றபோது இதே போன்ற போராட்டத்தை ஆந்திர மாநில மின் ஊழியர்கள் நடத்தினர்.

மின் உற்பத்திக்கு உரிமக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன், நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் (பிபிஏக்கள்) மூலம் இலாபகரமான விற்பனை உறுதி செய்யப்பட்டிருப்பதால், மின் உற்பத்தி ஆலைகளை அமைக்க முதலாளிகள் விரைந்தனர். 1992ல் இந்தக் கொள்கை அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள், மின் திட்டங்களுக்காக 138 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதலாளிகள் கையெழுத்திட்டனர். இந்தத் திட்டங்களின் முழு உற்பத்தித் திறன் நாட்டிலுள்ள எல்லா நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனைக் காட்டிலும் அதிகமானதாகும்!

ஒரு நிலையான அளவு மின்சாரத்தை வாங்குவதற்கு 25 ஆண்டுகள் வரை நீண்ட காலத்திற்கு இந்த மின்சார கொள்முதல் ஒப்பந்தங்கள் (பிபிஏக்கள்) உருவாக்கப்பட்டன. எனவே, அடுத்த 25 ஆண்டுகளில் மின்சாரத் தேவையை மாநில மின் வாரியங்கள் மதிப்பிட வேண்டி இருந்தது. மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை நியாயப்படுத்துவதற்காக மின்சாரத் தேவை பெரும்பாலும் தேவைக்கு அதிகமாகவே மதிப்பிடப்பட்டது. பல மாநிலங்களில், அதிகபட்ச தேவையை விட ஒப்பந்தம் செய்யப்பட்ட தேவை 30% அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, மராட்டியத்தில் 37,896 மெகாவாட் மின்சாரத்திற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. ஆனால் அதன் அதிகபட்சத் தேவை 22,516 மெகாவாட் மட்டுமே ஆகும். அதேபோல, தமிழகத்தில் அதிகபட்சத் தேவையானது 14,223 மெகாவாட் மட்டுமே ஆகும். ஆனால் மின்சார வாரியம் 26,975 மெகாவாட்டிற்கான தனியார் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

2017-18 ஆம் ஆண்டில், நாட்டில் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன் சுமார் 334,000 மெகாவாட்டாக இருந்தது, அதில் 291,000 மெகா வாட், நீண்ட கால தனியார் ஒப்பந்தங்களின் கீழ் இருந்தது. அந்த ஆண்டின் உச்சமட்டத் தேவை 164,000 மெகாவாட் மட்டுமே ஆகும்.

“செலவையும், இலாபத்தையும் சேர்த்து” இலாபகரமான அடிப்படையில் மின் கட்டணத்தை நிர்ணயிக்குமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. கட்டண நிர்ணயத்திற்கான உத்தரவாதமான இலாப விகிதம், தற்போது அனல் மின்சாரத்திற்கு 15.5% ஆகவும், காற்று மற்றும் சூரிய ஒளி ஆற்றல் அடிப்படையிலான ஆலைகளுக்கு 16% ஆகவும் உள்ளது. இது மூலதனத்தின் மீது, வரி அல்லாமல் உள்ள இலாப வருமானமாகும். தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கான உத்தரவாதமான இலாப விகிதம், இந்தியத் தொழில்களின் சராசரி இலாப விகிதத்தை விட அதிகமாக உள்ளது. மின் உற்பத்தியில் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கு, இவ்வாறு அதிக இலாபத்தை வழங்குவது அவசியம் என்று அரசாங்கம் கூறுகிறது.

மின்சாரத்தை வாங்காவிட்டாலும், மின்சார உற்பத்தியாளருக்கு ஒரு குறைந்தபட்ச கட்டணத்தைச் செலுத்தியே ஆக வேண்டும் என்ற விதிமுறை பொதுவாக இந்த மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களில் உள்ளது. இவ்வாறு, ஒரு தனியார் மின் உற்பத்தியாளர் மின்சாரம் வழங்காமலேயே சம்பாதிக்கிறது, அதே நேரத்தில் மாநில மின்சார வாரியங்கள் மின்சாரத்தைப் பெறாமலேயே அதற்கான கட்டணத்தைச் செலுத்துகின்றன. இது மின்சார கொள்முதல் ஒப்பந்தப்படி அவசியமாகிறது.

2016-17 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில், தனியார் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து எந்தவிதமான மின்சாரத்தையும் பெறாமல், விநியோக நிறுவனங்கள் 12,834 கோடி ரூபாய்களை மத்தியப் பிரதேசம் செலுத்தியிருப்பது, இதற்கு ஒரு பொதுவான எடுத்துக்காட்டாகும்.

இவ்வாறு, ஏகபோக முதலாளிகளின் தனியார் நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதையும்,  அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் இழப்பில் தள்ளப்படுவதையும் மின்சார கொள்முதல் ஒப்பந்தங்கள் உறுதி செய்துள்ளன.

முதல் சில திட்டங்களில், மாநில மின்சார வாரியங்கள் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்குக் கட்டணத் தொகையைக் கட்டத் தவறினால், அதைத் தானே கட்டுவதாக மத்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இவ்வாறு, இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளுக்கு உதவுவதற்காக அரசாங்கம் தன்னுடைய வழிமுறைகளையும் மீறி செயல்பட்டிருக்கிறது.

1990 களில் முதலில் துவக்கப்பட்ட பெரிய தனியார் மின் திட்டம், என்ரான் என்ற அமெரிக்க ஏகபோக நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டதாகும். மராட்டியத்தில் துவக்கப்பட்ட இந்த என்ரான் திட்டம், தனியார்மயமாக்கல் திட்டத்தின் மக்கள் விரோத மற்றும் சமூக விரோத தன்மையை முழுமையாக அம்பலப்படுத்தியது.

என்ரான் திட்டம் முன்மொழியப்பட்ட நாளிலிருந்தே, அது மின்வாரிய தொழிலாளர்களாலும், பல்வேறு மக்கள் அமைப்புகளாலும் எதிர்க்கப்பட்டது. இத்திட்டம் இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோலிய எரிபொருளை அடிப்படையாகக் கொண்டதால், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை, அப்போது இருந்த மின்சார விலையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். அத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட இருந்த மின்சாரத்தின் திறன் மாநிலத்தின் தேவையை விட மிக அதிகமாக இருந்தது. இந்த திட்டமானது மராட்டிய மாநில மின் வாரியத்தை திவாலாக்கியிருக்கும். சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதம் குறித்தும், மின் கட்டணங்களின் அதிகரிப்பு குறித்தும் மக்கள் கடுமையான கவலைகளைக் கொண்டிருந்தனர்.

1999 இல் இந்த மின் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டபோது, மராட்டிய மின்சார வாரியம், தேவைப்படாத போதிலும், 2000 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.7.80 என அதிக விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மின் நுகர்வோர் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 செலுத்தியிருப்பார்கள். மின்வாரியத் தொழிலாளர்களும், மக்களும் சேர்ந்து தங்கள் எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியதன் மூலம், என்ரானுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு மாநில அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தினர். இதன் ஒப்பந்தத்தின் மூலம் மராட்டிய மாநில மின்சார வாரியத்திற்கு ரூ.3,360 கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முந்தைய ஐந்து ஆண்டுகளில் கையெழுத்திட்ட மின்சார கொள்முதல் ஒப்பந்தங்கள் காரணமாக ஆண்டுதோறும் ரூ.2,200 கோடி கூடுதலாக செலவாகிறது என்று ஆந்திரப் பிரதேச அரசு 2019 இல் மதிப்பிட்டுள்ளது. இருப்பினும், மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. “மின்சார கொள்முதல் ஒப்பந்தங்கள், சம்பந்தப்பட்ட அனைவரையும் பிணைக்கும் ஒப்பந்தங்கள் ஆகும். இந்த ஒப்பந்தங்கள் மதிக்கப்படாவிட்டால், முதலீடுகள் வருவது நின்றுவிடும். எனவே அனைத்து மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களையும் ரத்து செய்வது என்பது தவறானதும், சட்டத்திற்கு எதிரானதும் ஆகும்” என்று முதல்வருக்கு மின்துறை அமைச்சர் கடிதம் எழுதினார்.

இன்னொரு பக்கம், ஏகபோக முதலாளிகள் மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மீறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தும் குஜராத் கடற்கரையில் உள்ள டாடா மற்றும் அதானியின் மின்சார உற்பத்தி ஆலைகள் நிலக்கரி விலை உயர்வு காரணமாக மின்சார விலையில் திருத்தம் கேட்டபோது, ​​ஒப்பந்தத்தின் விதிமுறைகளைப் புறக்கணித்து அரசாங்கம் அதை அனுமதித்தது. மிக சமீபத்தில், உக்ரைனில் நடந்த போரின் காரணமாக நிலக்கரி விலை உயர்ந்தபோது, ​​இந்த ஆலைகள் தங்கள் மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மதிக்க மறுத்து, உற்பத்திச் செலவை ஈடுகட்ட தங்களுக்கு வழங்கப்படும் விலை போதாது எனக் கூறி ஆலைகளை மூடிவிட்டனர்.

ஏகபோக முதலாளிகளுக்கு உத்தரவாதமான இலாபத்துடன், மின்சார உற்பத்தியை குறைந்த ஆபத்துள்ள வணிகமாக மாற்றுவதே மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களின் முக்கிய  நோக்கமாக இருந்து வருகிறது என்பது வெட்ட வெளிச்சமான உண்மையாகும். மின்சார கொள்முதல் ஒப்பந்தங்கள் அரசுக்குச் சொந்தமான உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களின் நிதி நிலைச் சீரழிவுக்கு வழிவகுத்து, அதன் மூலம் அவற்றை தனியார் மயமாக்குவதற்குத் தளத்தைத் தயாரித்து வருகின்றன. மின்சாரத்திற்கு மேலும் மேலும் அதிக விலை கொடுத்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பிற உழைக்கும் மக்களின் செலவில் முதலாளிகளின் இலாபம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *