1947 முதல் 1992 வரை சுதந்திர இந்தியாவில் மின்சார விநியோகத்தின் வரலாற்று பரிணாமம்

இன்று நம் நாட்டில் மின்சாரம் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான அதிகாரப்பூர்வ நிலைப்பாடானது, 1947 இல் இந்திய அரசாங்கம் அறிவித்த கொள்கைக்கு எதிரானதாக இருக்கிறது. நாடு முழுவதும் அனைவருக்கும் மலிவு விலையில் மின்சாரம் வழங்குவதற்கான முழுப்பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. மின் துறைக்கான கொள்கை ஏன் முற்றிலும் தலைகீழாக மாற்றப்பட்டது? இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு, நமது நாட்டில் முதலாளி வர்க்கம் மற்றும் முதலாளித்துவ அமைப்பு முறையின் பரிணாம வளர்ச்சியின் பின்னணியில் மின்துறையின் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றை ஆய்வு செய்வது அவசியம்.

1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ​​நாட்டின் மின் உற்பத்தி திறன் வெறும் 1,362 மெகாவாட்டாக மட்டுமே இருந்தது. அப்போது மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் முதன்மையாக தனியார் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில நகர்ப்புற மையங்களில் மட்டுமே மின்சாரம் கிடைத்தது. கிராமப்புறங்களிலும், கிராமங்களிலும் மின்சாரம் இல்லை. பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு மின்சாரத் துறையின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் விரைவான வளர்ச்சி அவசியமானதாக இருந்தது.

1947 க்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்ட மின் துறைக்கான கொள்கைத் திட்டமானது 1944-45 இல் டாடாக்கள், பிர்லாக்கள் மற்றும் பிற பெரும் தொழிற் குடும்பங்களால் தயாரிக்கப்பட்ட பம்பாய் திட்டம் என்ற தொலைநோக்கு ஆவணத்தின்படி உருவாக்கப்பட்டதாகும். அந்த நேரத்தில், இந்திய முதலாளிகளில் பெரும் செல்வந்தர்களிடம் கூட மின்சக்தி, கனரக தொழில்துறை மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்குத் தேவையான பிற உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்யப் போதுமான மூலதனம் இல்லை. மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை அமைக்க மத்திய அரசு மக்களுடைய பொதுப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்தனர். மூலதனத் தேவை குறைவானதாகவும், எதிர்பார்க்கப்படும் இலாபம் அதிகமாகவும் உடனடியாகவும் கிடைக்கக் கூடியதாக இருக்கும் நுகர் பொருட்களில் பெரிய முதலாளிகள் கவனம் செலுத்தினர்.

1948 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டம், பம்பாய் திட்டத்தின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களிலும் மாநில மின்சார வாரியங்கள் (SEBs) உருவாக்கப்பட்டன. அந்தந்த மாநிலத்தின் எல்லைக்குள் மின்சாரம் வழங்குவதற்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.

மேலும், 1948 ஆம் ஆண்டின் சட்டம், சம்பந்தப்பட்ட மாநில அரசு/மின்சார வாரியத்தால் நியமிக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் விநியோகத்தையும் அல்லது உற்பத்தியையும் செய்ய தனியார் நிறுவனங்களை அனுமதித்தது. இதன் மூலம் மும்பையில் மின்சாரம் தயாரித்து விநியோகித்துக் கொண்டிருந்த டாடா குழுமமும், கொல்கத்தாவில் மின்சாரம் விநியோகித்துக் கொண்டிருந்த கோயங்கா குழுமமும் தங்கள் செயல்பாடுகளைத் தொடரவும், அரசுத் துறையுடன் இணைந்து வளர்ச்சியடைவதையும் உறுதி செய்தது.

1956 ஆம் ஆண்டின் தொழில்துறைக் கொள்கைத் தீர்மானமும் மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் கிட்டத்தட்ட பொதுத்துறையில் மட்டுமே இருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்தியது. தேசிய அனல் மின் கழகம் (NTPC), தேசிய நீர்மின் சக்தி கழகம் (NHPC), தேசிய மின்சக்தி பரிமாற்ற கழகம் (NPTC), மின்சக்தி வலையமைப்பு (PGC) போன்ற மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மின் உற்பத்தி ஆலைகள் மற்றும் பரிமாற்ற வழிகளை அமைப்பதற்காக பொது மக்களுடைய பெரும் தொகை முதலீடு செய்யப்பட்டது. மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திரங்களைத் தயாரிப்பதற்காக பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் (பிஹெச்இஎல்) நிறுவப்பட்டது.

இந்திய ஏகபோக முதலாளிகள் பயன்பெறும் வரை, அரசு நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் கொள்கை தொடர்ந்தது. 1980-களில், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதி மூலம் செயல்படும் மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகளிடமிருந்து, இறக்குமதி வரிகளைக் குறைப்பதற்கும், அன்னிய மூலதன முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்கும் இந்தியா மீது பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. வெளிநாட்டுப் போட்டியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் டாடாக்கள், பிர்லாக்கள் மற்றும் பிற தொழில் குடும்பங்கள், தங்கள் உள்நாட்டுப் பேரரசைக் கட்டியெழுப்பியுள்ளன. உலக அளவில் போட்டியிடுவதற்காக அந்தக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் இப்போது உணர்ந்தனர். இருப்பினும், இந்திய சந்தையை மிக வேகமாக திறந்துவிட அவர்கள் விரும்பவில்லை. வெளிநாட்டு பொருட்கள் மற்றும் அந்நிய மூலதனத்திற்கு பொருளாதாரத்தைப் படிப்படியாகத் திறந்துவிடும் கொள்கையை அவர்கள் செயல்படுத்தினர்.

சோவியத் ஒன்றியத்தின் சிதைவுடன் சேர்ந்து உலக அளவில் பெரும் திடீர் மாற்றங்களுடன் 1990-கள் தொடங்கியது. உலகப் புரட்சியின் அலை ஓட்டத்தில் இருந்து தேக்க நிலைக்கு மாறியது. நமது நாட்டில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி எட்டியிருந்த கட்டத்தில், நாட்டில் அன்னிய மூலதன முதலீட்டை இந்திய ஏகபோக நிறுவனங்கள் தங்கள் சொந்த உலகளாவிய விரிவாக்கத்தை விரைவுபடுத்தக்கூடிய காரணியாக பார்க்க ஆரம்பித்தன. இந்திய ஏகபோக முதலாளிகளின் கண்ணோட்டத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் 1991ல் தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் மூலம் உலகமயமாக்கல் திட்டத்தை அவர்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது. சோசலிச பாணி சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதாக கூறிவந்த அனைத்து பாசாங்குகளையும் அவர்கள் கைவிட்டனர். சந்தையில் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் முதலீட்டிற்கு சாதகமான சூழலை உருவாக்குவது மட்டுமே அரசின் பொறுப்பு என்ற ஏகாதிபத்திய மந்திரத்தை அவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னார்கள், அதாவது எந்த நாட்டின் முதலாளிகளும் முதலீடு செய்வதற்கும், அதிகபட்ச இலாபத்தைப் பெறுவதற்கும் சாதகமான ஒரு சூழலை உருவாக்குவதே அரசின் கடமையாகும் என்றனர்.

தங்களுடைய தனிப்பட்ட பேரரசுகளைக் கட்டியெழுப்ப பொதுத்துறையைப் பயன்படுத்திக் கொண்ட ஏகபோக நிறுவனங்கள், தங்களுடைய தனிப்பட்ட பேரரசுகளை மேலும் விரிவுபடுத்த, அடிமாட்டு விலையில் பொதுச் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதென முடிவு செய்தனர். வெளிநாட்டு போட்டியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தங்கள் தொழில்துறை தளத்தைக் கட்டியெழுப்பிக் கொண்ட அவர்கள், உலகளாவிய போட்டியாக மாறுவதற்கான ஆர்வத்தில் அந்தக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நேரம் இது என்று முடிவு செய்தனர்.

மொத்தத்தில், பணக்கார ஏகபோக முதலாளிகளின் தனிப்பட்ட இலாபத்தை அதிகப்படுத்துவதே காலனித்துவத்திற்குப் பிந்தைய இந்தியாவின் அரசாங்கக் கொள்கைகள், சட்டங்கள் மற்றும் வழிமுறைகளின் முக்கிய நோக்கமாக இருந்து வந்துள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த ஆண்டுகளில், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் விரிவுபடுத்துதல் என்ற கொள்கை தொழில் மயமாக்கலுக்கான உள்கட்டமைப்பை உருவாக்க உதவியது, இதனால் தொழில்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்யப்பட்ட நுகர்வு பொருட்களின் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி அதிகபட்ச இலாபத்தை அறுவடை செய்யலாம். தற்போதைய காலகட்டத்தில், தனியார்மயம் தாராளமயம் மூலம், உலகமயமாக்கும் நிகழ்ச்சி நிரல் அதிகபட்ச ஏகபோக இலாபத்தை அடைய வேண்டுமென்ற நோக்கத்திற்கு பயன்படுகிறது.

1948ல் மின் உற்பத்தியிலிருந்து பகிர்மானம் வரையிலான முழுப்பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும் என்ற கொள்கை ஏகபோக முதலாளிகளின் நலன்களை மையமாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டதாகும். 1991 முதல் தனியார்மயமாக்கும் திட்டத்தை கட்டளையிட்டதும் ஏகபோக முதலாளிகளின் நலன்கள் அடிப்படையாகக் கொண்டதாகும். முதலீடு செய்ய போதுமான நிதி தங்களிடம் இல்லாத சூழ்நிலையில், மின்சாரத் துறையில் முதலீடு செய்ய பொது நிதியைப் பயன்படுத்த வேண்டுமென அவர்கள் விரும்பினார்கள். இப்போது உலகின் மிகப் பெரிய பணக்காரர்களாக இருக்கும் அளவுக்கு அவர்கள் செல்வத்தை குவித்துள்ளதால், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களைத் தங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *