குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு உறுதியாக போராடிவரும் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதை கண்டிப்பீர்

சூன் 25 அன்று, குஜராத் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) மும்பையில் உள்ள டீஸ்டா செடல்வாட்டை அவரது வீட்டில் கைது செய்து அகமதாபாத்திற்கு கொண்டு சென்றது. அவர் சூலை 2 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்படுவதற்கு முன்பு நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டார்.

2002 ஆம் ஆண்டு படுகொலையைத் தடுப்பதற்காக கடுமையாக உழைத்த குஜராத் அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்களை அவதூறு செய்ததாகக் கூறி டீஸ்டா செடல்வாட் மற்றும் பிறரை தண்டிக்க வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம் என்னவென்றால், அரசு பயங்கரவாதத்தை துணிவோடு எதிர்த்து அம்பலப்படுத்துபவர்கள், அரசு பயங்கரவாதத்தின் இலக்காகவும் ஆக்கப்படுவார்கள் என்பதாகும்.

குஜராத் இனப்படுகொலை இருபது ஆண்டுகளுக்கு முன்னர், 2002 பிப்ரவரி இறுதியில் நடந்தது. அகமதாபாதிலும், குஜராத்தின் பிற நகரங்களிலும், கிராமப்புற மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

இனப்படுகொலையைத் தொடர்ந்து, அகமதாபாத்திலும், குஜராத்தில் உள்ள பிற இடங்களிலும், புகழ்பெற்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் தலைமையிலான கவலை கொண்ட குடிமக்கள் தீர்ப்பாயம் (Concerned Citizens’ Tribunal) முழுமையான விசாரணைகளை நடத்தியது. இந்த தீர்ப்பாயத்தில் நீதிபதி ஹோஸ்பெட் சுரேஷ், நீதிபதி பி.பி சாவந்த் மற்றும் திரு.கே.ஜி.கண்ணபிரான் போன்ற பல முக்கிய பிரமுகர்கள் இருந்தனர். படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு செயற்பாட்டாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சாட்சியங்களை அவர்கள் பதிவு செய்தனர். தொகுக்கப்பட்ட ஆதாரங்களும் தகவல்களும் இனப்படுகொலைக்கான ஏற்பாடுகள் ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன என்று காட்டுகின்றன. அதிகாரப்பூர்வமாக சித்தரிக்கப்பட்டதைப் போல இது தன்னிச்சையாக எழுந்த “கலவரம்” அல்ல என்பதை அவை சுட்டிக்காட்டின. இது குஜராத்தின் நிர்வாக மற்றும் காவல்துறை இயந்திரத்தின் முழு ஆதரவுடன் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட மிகப் பெரிய குற்றச் செயலாகும்.

இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண முகாம்களை ஏற்பாடு செய்ய மனசாட்சி உள்ள பெண்களும் ஆண்களும் உழைத்தனர். இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரும் போராட்டத்தையும் அவர்கள் தம் கையில் எடுத்தனர். நீதிக்காக போராடும் செயற்பாட்டாளர்களில் டீஸ்டா செடல்வாடும் ஒருவராவார். குற்றவாளிகள் எந்த உயர் பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக அவர் கடந்த இருபதாண்டுகளாகப் போராடி வருகிறார்.

அரசே பொதுமக்களைப் படுகொலை செய்வதாகவும் பயங்கரவாதத்தை நடத்துவதாக இருக்கும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என்பதை 1984 இனப்படுகொலை மற்றும் பஞ்சாபில் நடந்த “எதிர்மோதல் கொலைகளை” நடத்திய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டுமென நடத்திய போராட்டம் தெளிவாகக் காட்டுகிறது. அரசாங்கம், காவல்துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள், நீதித்துறை மற்றும் ஆளும் வர்க்கக் கட்சிகள் என அரசின் அனைத்து நிறுவனங்களும் ஒன்றாக உண்மையை மூடி மறைக்கின்றன. இனப்படுகொலையை ஏற்பாடு செய்தவர்களும், அதை நடத்திய குற்றவாளிகளும் ஒருபோதும் தண்டிக்கப்படாமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு பதிலாக அவர்கள் மேலும் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள் மேலும், பாதிக்கப்பட்டவர்களைக் காக்கத் துணிந்தவர்களும், குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கக் கோருபவர்களும் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள்.

டீஸ்டா செடல்வாட் மற்றும் பிறருக்கும் இது தான் நடக்கிறது. உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த 24 மணி நேரத்திற்குள், குஜராத் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் படை, டீஸ்டா செடல்வாட் மற்றும் சிலருக்கு எதிராக விரிவான முதல் தகவல் அறிக்கை (FIR) தயாரித்தது மட்டுமின்றி, அவர்களைக் கைது செய்தும் இருக்கிறது. அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்க முன்வந்து எவரும் துணிந்து குரல் எழுப்புவதைத் தடுப்பதற்கு மத்திய அரசு இதை ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்த விரும்புகிறது.

இந்த முதல் தகவல் அறிக்கை, சனவரி 1, 2002 முதல் – அதாவது இனப்படுகொலைக்கு 2 மாதங்களுக்கு முன்பிருந்து துவங்கி, டீஸ்டா மற்றும் பிறரின் பங்கு பற்றி விசாரிக்கும். குஜராத் அரசாங்கத்தைப் பழிகூறுவதற்காக டீஸ்டா மற்றும் பிறர் சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்ட அரசு இப்போது முயற்சிக்கலாம் என்று தெரிகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வழக்குகளின் அனுபவம், இந்தத் திசையையே சுட்டிக்காட்டுகிறது. அந்த செயற்பாட்டாளர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசு மீது அவதூறு பரப்புவதற்காக, பிப்ரவரி 2020 இல் வடகிழக்கு தில்லியில் கலவரங்களை ஏற்பாடு செய்ய சதி செய்ததாக அவர்கள் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டீஸ்டா செடல்வாட் அநியாயமாக கைது செய்யப்பட்டதைக் கண்டிப்பதில் நமது நாட்டின் நீதியை விரும்பும் அனைத்து மக்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி இணைந்து கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *