முதலாளித்துவ பேராசையும் சமூகத் தேவையும்

தேசிய சொத்துக்களும், பொது சேவைகளும் தனியார் மயமாக்கப்படுவதை தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர், ஏனெனில் இது சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு எதிரானதாகும். இது சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதை விட்டுக் கொடுத்து, அதிகபட்ச இலாபத்திற்கான ஏகபோக முதலாளிகளின் பேராசையை நிறைவேற்றுவதற்காக அவர்களுடைய குறுகிய நலன்களுக்கு உதவுகிறது.

பொதுச் சொத்துக்கள் மற்றும் சேவைகளை தனியார் மயமாக்குவதற்கு எதிராக நமது நாட்டில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்புகளில் உள்ள வேறுபாடுகள் அனைத்தையும் தாண்டி, தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள் ஒன்றுபடுகின்றனர்.

அரசாங்கமும், பெரிய முதலாளித்துவ நிறுவனங்களின் செய்தித் தொடர்பாளர்களும் பொதுத்துறை நிறுவனங்கள் திறமையற்றவை என்றும் பொது நிதியை வீணடித்துக் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர். அவற்றை தனியாருக்குச் சொந்தமான நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் அவற்றின் செயல்திறனை மேம்படுத்தி ஒட்டுமொத்த மக்களும் பயனடையலாம் என்று கூறுகின்றனர். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட எந்தப் பொருட்களையும் உற்பத்தி செய்து வழங்குவது அரசாங்கத்தின் வேலை அல்ல என்று அவர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.

தனியார்மயமாக்கலுக்கு ஆதரவான இந்த மோசடியான பரப்புரையை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் கேள்வி எழுப்புகிறது.

இந்திய ரயில்வே, கோல் இந்தியா, மாநில மின்சார வாரியங்கள், பெட்ரோலியம் மற்றும் இதர கனரக தொழிற்சாலைகள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், ஆயுதத் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பிற பொதுச் சேவைகளின் தொழிலாளர்கள் அனைவரும் தங்களுடைய பணி சமூகத்தின் முக்கியமான தேவையை நிறைவேற்றுகிறது என்பதைத் தெளிவுபடுத்த போராடுகிறார்கள். இவை தனியார் உரிமையாளர்களுக்கு அதிக இலாபம் ஈட்டும் நோக்கத்தோடு இயக்கக்கூடிய சேவைகள் அல்ல என்று அவர்கள் உறுதியாக வாதிடுகின்றனர்.

இரயில்வே தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியிருப்பது போல், முதலாளித்துவ இலாபத்தை அதிகப்படுத்துவதை நோக்கி இரயில் பயணம் அமைந்தால், அது பயணிகளின் பாதுகாப்பைப் புறக்கணிக்க வழிவகுக்கும். மேலும் அது பயணிகளின் கட்டண உயர்வுக்கும், தொலைதூர பகுதிகளைப் புறக்கணிக்கவும் வழிவகுக்கும். இரயில்வே ஊழியர்களின் பணி நிலைமைகளும், பணிப் பாதுகாப்பும் மோசமாக பாதிக்கப்படும். தனியார் ஏகபோக நிறுவனங்கள் நிரந்தரத் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்துவிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். நாட்டின் மிகப்பெரிய வேலையளிப்பாளராக இந்திய இரயில்வே இருப்பதால், இது வேலை வாய்ப்பின் எண்ணிக்கையிலும், தரத்திலும் பெரிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

தாங்கள் வழங்கும் நிதிச் சேவைகள் மக்கள் அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாகவும், மலிவானதாகவும் இருக்க வேண்டும் என்று அரசுக்குச் சொந்தமான வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். அவை பெருவாரியான உழைக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற சேவை செய்ய வேண்டும். அதிகபட்ச இலாபத்திற்காக ஏகபோக முதலாளிகளின் திட்டங்களுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்ட இலாபத்தை அதிகரிக்கும் நிறுவனங்களாக அவை மாற்றப்படக்கூடாது.

அதிக லாபம் ஈட்ட முயற்சிக்கும் தனியார் மருத்துவமனைகள் தேவையில்லாத சோதனைகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்குமாறு மருத்துவர்கள் மீது நெருக்குதல் கொடுப்பதாக சுகாதாரப் பணியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதிக பணம் சம்பாதிப்பதற்காக நோயாளிகளை தேவைக்கும் அதிகமான நாட்கள் மருத்துவமனையில் தங்க வைக்கப்படுகிறார்கள். கொரோனா பெருந்தொற்று நோய் போன்ற ஒரு நெருக்கடி ஏற்படும் போது பொது மருத்துவமனைகள் செய்யும் விதத்தில், தனியார் மருத்துவமனைகள் சமூகத்திற்கு பங்களிப்பதில்லை. சுகாதாரப் பாதுகாப்பு ஒரு சமூகத் தேவையாக இருந்தாலும், இலாப நோக்கில் இயங்கும் தனியார் மருத்துவமனைகள், அவற்றை ஏழை மக்களுக்கு கிடைக்க முடியாததாக ஆக்குகின்றன.

தொழிலாளர்கள் தங்கள் சொந்த வேலையைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள் என்றும் நாட்டின் நலன்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் உண்மையை தலைகீழாக மாற்றுகிறார்கள். குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் தொழிலாளர்கள் அல்ல. கோடீஸ்வர முதலாளிகளும், அந்த முதலாளிகளின் சுய நலன்களுக்காக செயல்படுகின்ற அரசாங்கமும் தான் குறுகிய மனப்பான்மை கொண்டிருக்கின்றன. ஏகபோக முதலாளிகள் அதிகபட்ச இலாபத்தை அடைவதற்காக சமூக உற்பத்தியின் அனைத்துத் துறைகளையும் அவர்களுடைய முயற்சிகளுக்கு அடிபணியச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.

அடிப்படை முரண்பாடு

பொருட்கள் மற்றும் சேவைகளின் சமூக உற்பத்தி செயல்முறையானது, சமூகத்தின் தேவைகளையும், அதன் தொடர்ந்த வளர்ச்சியையும் நிறைவு செய்ய வேண்டும். அனைவருக்கும் பாதுகாப்பான வாழ்வாதாரத்தையும், அதிகபட்ச வளமையையும் அது உறுதி செய்ய வேண்டும். இது இன்றைய காலகட்டத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும். இருப்பினும், சமூகத் தேவைகள் தடையின்றி நிறைவேற்றப்படுவது முதலாளிகளின் அதிகபட்ச இலாபத்திற்கான பேராசையால் தடுக்கப்படுகிறது.

முதலாளித்துவ நாடுகள் அவ்வப்போது பொருளாதார நெருக்கடிகளில் சிக்குவதற்குக் காரணம், உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் உற்பத்திச் சாதனங்கள் தனியுடமையாக இருப்பதற்கும் இடையே உள்ள முரண்பாடே என்று 170 ஆண்டுகளுக்கு முன்பே கார்ல் மார்க்ஸ் கண்டுபிடித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தி வழி முறையின் மீது முதலாளித்துவ பேராசை மேலாதிக்கம் செலுத்துவதே, ஒவ்வொரு முதலாளித்துவ பொருளாதாரத்திலும் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற அதிக உற்பத்தி நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணமாகும்.

தனியார் இலாப நோக்கத்தால் இயக்கப்படும் ஒவ்வொரு நிறுவனமும் அதன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை, முடிந்தவரை குறைவாக வைத்திருக்க வேண்டிய ஒரு “செலவாக” பார்க்கிறது. முதலாளித்துவ நிறுவனங்கள் தங்கள் “தொழிலாளர் செலவை” நெருக்குவதின் ஒருங்கிணைந்த விளைவு, தொழிலாளி வர்க்கத்தின் வாங்கும் சக்தியின் வீழ்ச்சியாகும். சந்தையில் விற்பதற்காக முதலாளித்துவம் மேலும் மேலும் அதிக பொருட்களை உற்பத்தி செய்கிறது, அதே நேரத்தில் அவர்கள் விற்க விரும்பும் பொருட்களை வாங்கக் கூடியவர்களின் வாங்கும் திறன் வளர்ச்சியைக் மட்டுப்படுத்துகிறது. போதுமான வாங்கும் சக்தி இல்லாததால், சந்தையில் பொருட்களுக்குப் போதுமான தேவை இல்லாமல், முதலாளிகள் தங்களுடைய பொருட்களை விற்க முடியாமல் போகிறது. முதலாளித்துவத்தின் இந்த உள்ளார்ந்த போக்கு, மீண்டும் மீண்டும் அதிக உற்பத்தி நெருக்கடிகளுக்குக் கொண்டு செல்கிறது.

கொரோனா பெருந்தொற்று நோய் பரவுவதற்கு முன்பே கூட, நெருக்கடியில் சிக்கியிருந்த இந்தியப் பொருளாதாரத்தின் பிரச்சனையை எடுத்துக் கொள்ளுங்கள். 2019-ல் பல்வேறு துறைகளில் உற்பத்தி மந்தமடைந்தோ அல்லது குறைந்தோ வந்துள்ளது. முதலாளித்துவ நிறுவனங்கள் விற்க விரும்பும் பொருட்களுக்கும், சேவைகளுக்கும் சந்தையில் போதுமான தேவை இல்லை. காரணம், மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வாங்கும் சக்தியை இழந்துள்ளனர். மேற் கொண்டு முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தடையாக மாறக்கூடிய அளவுக்கு, பேராசை பிடித்த ஏகபோக முதலாளிகளின் சுரண்டலும் கொள்ளையடிப்பும் அதிக அளவை எட்டியுள்ளது.

இந்த அடிப்படை முரண்பாட்டை எவ்வாறு தீர்க்க முடியும் என்பது உலகின் முதல் சோசலிச நாடான சோவியத் யூனியனில் நிரூபிக்கப்பட்டது. 1917 அக்டோபர் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து முதல் இருபது ஆண்டுகளில், சோவியத் அரசாங்கமும் மக்களும் உற்பத்திச் சாதனங்களை மக்களின் பொதுவான சொத்துக்களாகவும், விவசாய கூட்டுறவுகளின் கூட்டுச் சொத்தாகவும் மாற்றினர். முதலாளித்துவ பேராசையின் மேலாதிக்கம் செலுத்தும் மற்றும் இயக்கும் பங்கானது, சமூக உற்பத்தித் துறையிலிருந்து அகற்றப்பட்டது.

சமூகத் தேவையை நிறைவேற்றுவதே முக்கிய நோக்கமாக இருப்பதால் சத்தான உணவு, உடை, வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் முழு மக்களின் அடிப்படைத் தேவைகளை உற்பத்தி செய்வதிலும், நுகர் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்குத் தேவையான இயந்திரங்கள், இரும்பு மற்றும் எஃகு, சிமெண்ட், எரிபொருட்கள் மற்றும் பிறவற்றை உற்பத்தி செய்வதிலும் அனைத்து வளங்களும் முதலீடு செய்யப்படுவதை சோவியத் மக்களும், அரசாங்கமும் உறுதி செய்தனர். சமூக உற்பத்தியானது எவ்வித இடையூறுகளுக்கும் வாய்ப்பளிக்காமல், ஒரு ஒட்டுமொத்தத் திட்டத்தின்படி ஒழுங்கமைக்கப்பட்டது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாட்டுப் முதலாளித்துவப் பொருளாதாரங்கள் 1929 இல் தொடங்கி பெரும் வீழ்ச்சியில் சிக்குண்ட போது, ​​சோவியத் யூனியனின் சோசலிசப் பொருளாதாரம் தங்கு தடையற்ற வளர்ச்சியைக் கண்டது. சோவியத் யூனியன் எந்த நெருக்கடியும், வேலையில்லாத் திண்டாட்டமும் இல்லாமல், இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வளர்ச்சி பெற்றது.

கிடைக்கக் கூடிய அனைத்து வளங்களும் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் தேவைகளையும் நிறைவேற்றும் நோக்கில் ஒரு திட்டத்தின்படி முதலீடு செய்யப்படும்போது, ​​அத்தகைய முதலீடுகளும் உற்பத்தி விரிவாக்கமும் மிகப்பெரிய அளவில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இந்தியாவிலும் பிற முதலாளித்துவ நாடுகளிலும் இது நடக்காமல் இருப்பதற்குக் காரணம், பெரிய அளவிலான உற்பத்தி சாதனங்களை இலாப வெறி கொண்ட ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் தனியார் உடைமையாக்கிக் கட்டுப்படுத்துவதுதான். எப்போது, ​​எங்கு அதிகபட்ச இலாபத்தை உறுதியாகப் பெற முடியுமோ அங்கு மட்டுமே ஏகபோக முதலாளிகள் தங்கள் மூலதனத்தை முதலீடு செய்கிறார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக, இந்திய ஏகபோக நிறுவனங்கள் பெரும் இலாபத்தை ஈட்டி வருகின்றன, ஆனால் நம் நாட்டின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்காக அதில் மிகக் குறைந்த அளவை மட்டுமே முதலீடு செய்கின்றன. அவர்கள் தங்கள் இலாபத்தில் பெரும்பகுதியை வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள் அல்லது நம் நாட்டிற்குள் வணிக சூதாட்ட நடவடிக்கைகளில் பயன்படுத்துகின்றனர்.

முதலாளித்துவ பேராசையே வேலையின்மைக்கும், மீண்டும் மீண்டும் பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு ஆளாவதற்கும் மூல காரணமாகும். முதலாளித்துவ பேராசையின் செயல்பாட்டுக் களத்தை விரிவுபடுத்துவதன் மூலம், தனியார்மயம் மற்றும் தாராளமயமாக்கல் திட்டம் மேலும் மேலும் கடுமையான நெருக்கடிகளுக்கும், தாங்க முடியாத அளவு வேலையின்மைக்கும் வழி வகுக்கிறது.

ஏகபோக முதலாளிகளின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல்

தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் மூலம் உலகமயமாக்கலின் நிகழ்ச்சி நிரல், இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளால் திட்டமிடப்பட்டதாகும். இந்த ஏகபோக முதலாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப, இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சியின் போக்கை மாற்றுவதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது.

1947-இல் இந்தியாவின் அரசியல் சுதந்திரத்திற்குப் பிறகு பின்பற்றப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியின் போக்கும் அக்காலத்தின் மிகப்பெரிய முதலாளித்துவ தொழில் நிறுவனங்களால் தீர்மானிக்கப்பட்டதாகும். இருப்பினும், நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள், சட்டங்கள் மற்றும் வரைமுறைகள் அக்கால நிலைமைகளுக்கு ஏற்றதாக இருந்தன, அவை தற்போதைய நிலைமைகளிலிருந்து மிகவும் வேறுபட்டவையாகும்.

1940-களின் நடுப்பகுதியில், சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டம் உலக அளவில் முன்னேறிக் கொண்டிருந்தது. ஐரோப்பாவின் முன்னணி முதலாளித்துவ நாடுகளில், ஆளும் முதலாளி வர்க்கம் சமூக-சனநாயகம் என்ற ஏமாற்று ஆட்சி முறையை பின்பற்றியது. புரட்சி மற்றும் சோசலிசத்தின் பாதையில் தொழிலாளி வர்க்கம் அணிவகுத்து செல்வதைத் தடுப்பதற்காக, சமூக நலத் திட்டங்களை விரிவுபடுத்த முதலாளி வர்க்கம் பொது நிதியைப் பயன்படுத்தியது. எவ்விதப் புரட்சியும் இன்றி, சோசலிசத்தின் நன்மைகளை முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் அடைய முடியும் என்று தொழிலாளி வர்க்கத்தை நம்ப வைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

இந்தியாவின் அரசியல் சுதந்திரத்திற்கான வாய்ப்பு நெருங்கி வரும் சூழ்நிலையில், ​​டாடாக்கள், பிர்லாக்கள் மற்றும் பிற முதலாளித்துவ தொழில் நிறுவனங்கள், காலனியத்திற்குப் பிந்தைய வளர்ச்சிப் போக்கை அந்த நேரத்தில் தங்கள் நலன்களுக்கு மிகவும் பொருத்தமான பாதையில் திட்டமிடத் தொடங்கின. ஆசியாவில் ஒரு வலிமையான தொழில்துறை மற்றும் இராணுவ சக்திக்கு தலைமை தாங்க வேண்டுமென்ற தொலை நோக்கை அவர்கள் கொண்டிருந்தனர். இருப்பினும், அவர்களிடம் இயந்திர கட்டுமானத் தொழிலோ அல்லது போதுமான இரும்பு மற்றும் மின்சாரமோ இல்லை. தேவைப்படும் பெரிய முதலீடுகளுக்கு போதுமான சொந்த மூலதனம் அவர்களிடம் இல்லை.

கனரக தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பை ஒரு பொதுத் துறையாக உருவாக்கப் பொது நிதியைப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பெரிய முதலாளிகள் முடிவு செய்தனர். உற்பத்தி செய்யப்பட்ட பலதரப்பட்ட நுகர் பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டுமென அவர்கள் முடிவு செய்தனர், இதனால் அவர்களே அந்த சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தி அதிகபட்ச இலாபத்தை அடைய முடியும். இந்த முழு கட்டமைப்பையும் ஜே.ஆர்.டி டாடா மற்றும் ஜி.டி.பிர்லா தலைமையிலான பெரிய முதலாளிகளின் முன்னணிப் பிரதிநிதிகளால் எழுதப்பட்டு 1944-45 இல் வெளியிடப்பட்ட பம்பாய் திட்டம் (பாம்பே ப்ளான்) என்ற தொலைநோக்கு ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

1951-65 காலகட்டத்தை உள்ளடக்கிய முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள், பம்பாய் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். வழக்கமான சமூக-சனநாயக பாணியில், முதலாளித்துவ தொழில்துறையை வளர்ப்பதற்கு அரசை சார்ந்திருக்கும் இந்த முக்கிய திட்டமானது, “சோசலிச பாணி சமுதாயத்தை” உருவாக்கும் ஒரு திட்டமாக நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சியால் முன்வைக்கப்பட்டது. முதலாளித்துவ வளர்ச்சிக்கான திட்டத்தை ஒரு சோசலிசத் திட்டமாக முன்வைப்பது, சோசலிசத்தை எதிர்நோக்கிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஏமாற்ற உதவியது.

உள்கட்டமைப்பையும், எஃகு, நிலக்கரி, மின்சாரம் மற்றும் இரயில் போக்குவரத்தை மானிய விலையிலும் அரசுத் துறை வழங்கியதால், பெரும் தொழிற் குடும்பங்களுடைய தனியார் நிறுவனங்கள் மிகவும் பயனடைந்தன. நுகர்வு மற்றும் போக்குவரத்து சாதனங்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளாலும் அவர்கள் ஆதாயம் அடைந்தனர். உதாரணமாக, வெளிநாடுகளிலிருந்து வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டதாலும் அல்லது அவற்றின் மீது மிக அதிக இறக்குமதி வரிகள் விதிக்கப்பட்டதாலும் கார்கள், பேருந்துகள் மற்றும் டிரக்குகளுக்கான சந்தையில் டாடா மோட்டார்ஸ் மற்றும் பிர்லாவின் இந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆதிக்கம் செலுத்தின.

1960-கள் மற்றும் 1970-களில் முதலாளித்துவ வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக அரசின் தலையீடு மேலும் அதிகரித்தது, இதில் பசுமைப் புரட்சி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட முதலாளித்துவ விவசாயத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும், கிராமப்புற சந்தைகளின் விரிவாக்கமும் அடங்கும்.

1980-களில், பொதுச் சொத்துக்களையும் சேவைகளையும் தனியார்மயமாக்கும் மிகப் பெரும் நடவடிக்கை பிரிட்டனில் பிரதம மந்திரி தாட்சர் தலைமையில் தொடங்கப்பட்டது. அதிபர் ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு, தேசியத் தடைகளை குறைப்பதற்கும், உலகின் அனைத்து சந்தைகளையும் மூலதனம் மற்றும் பொருட்களின் தங்குதடையற்ற ஓட்டத்திற்கு திறப்பதற்கும் தீவிரமாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. சோவியத் யூனியனில் முதலாளித்துவ சீர்திருத்தங்களை கோர்பச்சேவ் கட்டவிழ்த்து விட்டார். இறக்குமதிகள் மற்றும் வெளிநாட்டு மூலதனம் நுழைவதற்கு உள்நாட்டு சந்தையைத் திறந்து விட வேண்டுமென உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியும் இந்தியா மீது நெருக்குதல் கொடுத்தன.

சோவியத் ஒன்றியத்தின் சிதைவுடன் சேர்ந்து 1990-கள், உலக அளவில் பெரும் திடீர் மாற்றங்களுடன் தொடங்கியது. உலகப் புரட்சியின் அலை ஓட்டத்தில் இருந்து தேக்கமாக மாறியது. சோசலிசம் தோல்வியடைந்து விட்டதாகவும், “சந்தை சார்ந்த பொருளாதாரத்தை” – அதாவது மூலதனத்தை வைத்திருப்பவர்களின் தனியார் இலாபங்களை அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பொருளாதாரத்தை விட சிறந்தது எதுவுமில்லை என்றும் அனைத்து நாடுகளின் முதலாளி வர்க்கமும் கூற ஆரம்பித்தது. முதலாளிகளுக்கு எது நல்லதோ அதுவே முழு நாட்டிற்கும் நல்லதென அவர்கள் அடாவடியாகக் கூற ஆரம்பித்தனர்.

1991-இல் தொடங்கி, ஏகபோக குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட இந்திய ஆளும் வர்க்கம், ஒரு சோசலிச பாணி சமுதாயத்தை கட்டுவதாகக் கூறிவந்த பாசாங்குத்தனத்தை வெளிப்படையாகக் கைவிடத் தொடங்கியது. தனியார்மயம், தாராளமயம் மூலம் உலகமயமாக்கும் பரிந்துரைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

தங்களுடைய தனிப்பட்ட பேரரசுகளைக் கட்டியெழுப்ப பொதுத் துறையைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய ஏகபோக நிறுவனங்கள், தங்களுடைய தனிப் பேரரசுகளை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள, அடிமாட்டு விலையில் பொதுச் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று அவர்கள் முடிவு செய்தனர். வெளிநாட்டுப் போட்டியை முடக்குவதன் மூலம் தங்கள் தொழில்துறை தளத்தை கட்டியெழுப்பிக் கொண்ட அவர்கள், உலகளவில் போட்டியிட வேண்டுமென்ற ஆர்வத்தில் அந்தக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நேரம் இது என்று முடிவு செய்தனர். இந்திய அரசாங்கம், உள்நாட்டுச் சந்தையை இறக்குமதி மற்றும் வெளிநாட்டு மூலதன முதலீடுகளுக்குத் திறந்துவிட வேண்டும் என்றும், வெளிநாட்டு அரசாங்கங்கள் தங்கள் சந்தைகளை இந்திய ஏற்றுமதி மற்றும் மூலதன முதலீடுகளுக்குத் திறக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர்.

மொத்தத்தில், காலனித்துவத்திற்குப் பிந்தைய இந்தியாவின் அரசாங்கக் கொள்கைகள், சட்டங்கள் மற்றும் வழிமுறைகளுக்கு, எல்லாவற்றையும் விட முக்கியமான நோக்கமாக பணக்கார ஏகபோகக் குடும்பங்களுடைய தனியார் இலாபத்தை அதிகப்படுத்துவதாகவே உள்ளன.

ஆரம்ப ஆண்டுகளில், அரசுக்கு சொந்தமான கனரகத் தொழில்துறை, அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் விரிவுபடுத்தும் கொள்கையானது, தொழில்மயமாக்கலுக்கான உள்கட்டமைப்பை உருவாக்கவும், முதலாளித்துவத்திற்கான உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்தவும் ஏகபோக முதலாளிகளுக்கு அதிகபட்ச இலாபத்திற்கு உத்திரவாதமளிக்கவும் உதவியது. தற்போதைய காலகட்டத்தில், தனியார்மயம், தாராளமயமாக்கல் மூலம், உலகமயமாக்கலின் நிகழ்ச்சி நிரல் மூலம், அதிகபட்ச ஏகபோக இலாபத்தை பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

தனியார்மயம், தாராளமயம் மூலம் உலகமயமாக்கும் நிகழ்ச்சி நிரல், புரட்சி மற்றும் சோசலிசத்திற்கு எதிராக திருப்பியுள்ள அலையைப் பயன்படுத்தி, பாட்டாளி வர்க்கம் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களுக்கு எதிராக ஒரு தங்குதடையற்ற தாக்குதல் நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏகபோக நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் தொழிலாளர்களைச் சுரண்டுவதையும், சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் பெருமளவிலான மக்களைக் கொள்ளையடிப்பதையும் தீவிரப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, 20-ஆம் நூற்றாண்டில் மக்கள் போராடி வென்றெடுத்த உரிமைகளைக் காலில் போட்டு நசுக்கும் நோக்கம் கொண்டாகும்.

உண்மையான மாற்று

தனியார்மயம் மற்றும் தாராளமயமாக்கலுக்கு மாற்று முழு பொருளாதாரத்தையும் மாற்றியமைக்கும் புரட்சிகர வேலைத் திட்டமாகும். தனியார் இலாபங்களை அதிகப்படுத்துதல் மற்றும் முதலாளித்துவ பேராசையை நிறைவேற்றுதல் ஆகிய நோக்கங்களை மாற்றி, சமூகத் தேவையை அதிகபட்சமாக நிறைவேற்றும் நோக்கத்தைக் கொண்டதே அந்தத் திட்டமாகும்.

இந்திய சுதந்திரத்தின் ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்ட வளர்ச்சிப் பாதையானது, சமூகத் தேவையை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. தனியார் இலாபங்களை அதிகப்படுத்துவதே அதன், எல்லாவற்றிற்கும் மேலான முக்கிய நோக்கமாக இருந்தது. ஏகபோகக் குடும்பங்களின் நலன்களுக்கு ஏற்ற வரை மட்டுமே பொதுத்துறை கட்டப்பட்டு பலப்படுத்தப்பட்டது. அண்மைக் காலங்களில் பொதுத்துறை நிறுவனங்களையும் சேவைகளையும் வேண்டுமென்றே பலவீனமடையச் செய்து சிதைக்கப்பட்டுள்ளன. அரசுக்குச் சொந்தமான இந்த நிறுவனங்களையும், சேவைகளையும் ஏகபோக நிறுவனங்களிடம் ஒப்படைப்பதை நியாயப்படுத்தவும், அவர்களின் தனிப்பட்ட பேரரசுகளை விரைவாக விரிவுபடுத்துவதற்கு வசதியாகவும் இவ்வாறு செய்யப்பட்டது.

சமூக உற்பத்தியின் மீதான தனியார் பேராசையின் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே தொழிலாளி வர்க்கத்தின் குறிக்கோளாகும். பொருட்கள் உற்பத்தி மற்றும் சேவைகளின் முழு அமைப்பும் சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இதுவே உலக அளவில் முதலாளி வர்க்கத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் மையமாக உள்ளது. இது இரண்டு எதிரெதிரான சமூக அமைப்புகளுக்கு இடையிலான போராட்டமாக, முதலாளித்துவத்திற்கு எதிரான சோசலிசத்தின் போராட்டமாக உள்ளது.

நமது போராட்டத்தின் உடனடி நோக்கமானது தனியார்மயம், தாராளமயம் மூலம் உலகமயமாக்கும் சமூக விரோத திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதாகும். ஆனால், போராட்டம் அதோடு முடிந்துவிடாது. சமூகத் தேவையை நிறைவு செய்வதே, சமூக உற்பத்தி அமைப்பின் முக்கிய நோக்கமாக ஆக்குவதற்கான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சமூகத் தேவைகளை நிறைவு செய்வதை உறுதி செய்வதற்காக, முதலாளித்துவ பேராசை நசுக்கப்பட வேண்டும்.

பெரிய அளவிலான உற்பத்தி சாதனங்களை சமூக உடமையாக மாற்றி, அதன் மீது கட்டுப்பாட்டை நிறுவுவதே, தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு உண்மையான மாற்றாகும். தொழிலாளி வர்க்கமானது, விவசாயிகள் மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுடன் கூட்டாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசு, பெருவீத உற்பத்தி மற்றும் பரிமாற்ற சாதனங்களை முதலாளிகளின் தனிச் சொத்தாக இருப்பதிலிருந்து எல்லா மக்களுடைய சமூகச் சொத்தாக மாற்ற வேண்டும். அப்போதுதான், ஒட்டுமொத்த மக்களின் அதிகரித்து வரும் பொருள் மற்றும் கலாச்சாரத் தேவைகளை அதிகபட்சமாக நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டத்தின் கீழ் சமூக உற்பத்தியும் விநியோகமும் ஒழுங்கமைக்கப்பட முடியும். இதுவே தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முக்கியமான நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *