மின்சார உற்பத்தி நெருக்கடியும் அதன் உண்மையான காரணமும்

தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய அனல் மின் நிலையங்களுக்குப் போதுமான நிலக்கரி இல்லாததால் நாட்டின் பெரும் பகுதிகள் கடுமையான மின் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. இந்த மின் பற்றாக்குறைக்கு என்ன காரணம் என்பது பற்றி ஏகபோகக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் குழப்பத்தை உருவாக்குகின்றன. பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) போதுமான நிலக்கரியை உற்பத்தி செய்யவில்லை என்றும், இந்திய இரயில்வே அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை விரைவாக கொண்டு செல்வதை உறுதி செய்யவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நெருக்கடி 2021 அக்டோபரில் போருக்கு முன்னரே இருந்தது என்பதை மறைத்து, இந்த நெருக்கடிக்கு உக்ரைனில் நடைபெறும் போரை மின்சக்தி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

மின்சார உற்பத்தி மற்றும் நிலக்கரி உற்பத்தியை தனியார் மயமாக்குவதே நெருக்கடியின் அடிப்படை.

மின்சார உற்பத்தி தனியார்மயமாக்கம்

மின்சார உற்பத்தியை தனியார்மயமாக்கும் திட்டத்தின் விளைவாக, மார்ச் 2022 நிலவரப்படி, இந்தியாவில் நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறனில் 49% இப்போது தனியார் துறையிடம் உள்ளது.

தனியார் ஏகபோகங்களுக்கு சொந்தமான பல அனல் மின் நிலையங்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியில் இயங்குகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை உயர்ந்திருக்கிறது.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் உற்பத்தி நிலையங்களை வைத்திருக்கும் ஏகபோக முதலாளிகள் அதிகபட்ச இலாபத்திற்கான பேராசை காரணமாக, மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், அரசாங்கத்திற்குச் சொந்தமான மின்சார விநியோக நிறுவனங்களுக்கு முன்பு ஒப்புக் கொள்ளப்பட்ட கட்டணங்களின்படி மின்சாரத்தை வழங்கவும் மறுத்து விட்டன. அவை வேண்டுமென்றே மின் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளனர். இவ்வாறு மின்சார உற்பத்தியை அவர்கள் நாசப்படுத்துவதை நியாயப்படுத்த, அவர்கள் நட்டத்தில் இயங்குவதாகவும், மாநில மின்சார வாரியங்கள் தங்களுக்குக் கொடுக்கும் விலையை அரசாங்கம் உயர்த்த வேண்டும் என்றும் ஊடகங்கள் மூலம் இந்த ஏகபோக முதலாளிகள் இடைவிடாமல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

மே 6 அன்று, மின்சாரச் சட்டத்தின் 11வது பிரிவை அரசாங்கம் செயல்படுத்தியதன் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தும் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் மின்சாரத்தை உற்பத்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டது. அதே நேரத்தில், அரசாங்கத்தின் இந்த ஆணை, மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு உத்தரவாதமான இலாபம் அவர்களுக்குக் கிடைப்பதை அரசு உறுதி செய்வதன் மூலம் இந்த ஏகபோக முதலாளிகளின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவு செய்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான புதிய கட்டணத்தை மின்சார அமைச்சகம், மத்திய மின்சார ஆணையம் மற்றும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமைத்துள்ள குழு மூலம் தீர்மானிக்குமென அது அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து 17,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. இருப்பினும் 10,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே அவர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை மிகவும் உயர்ந்துள்ளதாகவும், முன்பு ஒப்புக் கொள்ளப்பட்ட விலையில் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரத்தை வழங்கினால் இலாபம் ஈட்ட முடியாது எனவும், முதலாளித்துவ உடமையாளர்கள் கூறுகின்றனர். மின்சார கட்டண உயர்வுக்கான கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றுவதால், குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ள எஸ்சார் பவர், கோஸ்டல் எனர்ஜென், சிஎல்பி இந்தியா மற்றும் ஐஎல்&எப்எஸ் தமிழ்நாடு ஆகியவற்றின் மின் உற்பத்தி நிலையங்கள், தங்கள் ஆலைகளில் மின் உற்பத்தியை அதிகரிப்பார்களென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி சார்ந்த இரண்டு பெரிய நிறுவனங்களான டாடா பவர் மற்றும் அதானி பவர் ஆகியவை ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட நிபந்தனைகளின்படி மாநில விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்க மறுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தங்கள் செயல்பாட்டை நிறுத்திவிட்டன. அவை இப்போது மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மின் உற்பத்தி ஆலைகள் அனைத்தும் அரசு நிர்ணயம் செய்யும் புதிய கட்டண அடிப்படையில் மின்சார வினியோக நிறுவனங்களுக்கு மின்சாரத்தை வழங்கும்.

நுகர்வோரின் நலன்களை விலையாகக் கொடுத்து, மின்சாரத் துறையில் ஏகபோக முதலாளிகள் கொள்ளை இலாபம் ஈட்டப் போகிறார்கள்.

நிலக்கரி சுரங்கம் தனியார்மயமாக்கல்

ஏப்ரல் 2022 இல், அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிலக்கரி உற்பத்தியில் அதன் இலக்கை 100% பூர்த்தி செய்துள்ளது. ஆனால் அதானி, ஜிண்டால் மற்றும் பிர்லா ஏகபோக முதலாளித்துவ குழுக்களுக்கு சொந்தமான தனியார் நிறுவனங்கள் அவர்களுடைய உற்பத்தி இலக்கில் 50% க்கும் குறைவாகவே உற்பத்தி செய்தன.

ஒரு பக்கம், நிலக்கரி சுரங்கத் துறையில் உள்ள இந்த ஏகபோக முதலாளிகள் தங்கள் சுரங்கங்களில் அவற்றின் உற்பத்தித் திறனில் பாதிக்கும் குறைவான அளவில் தான் உற்பத்தி செய்கின்றனர். இன்னொரு பக்கம், அனல் மின் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள ஏகபோக முதலாளிகள் நிலக்கரியின் அதிக விலையைக் காரணம் காட்டி, நிலக்கரி இறக்குமதியை நிறுத்தியதாலும், அனல் மின் நிலையங்களை இயக்க நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அதிக விலையைக் கோருவதற்காகவும், வெளிநாடுகளில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்யக் கட்டாயப்படுத்துவதற்காகவும் மின்சார உற்பத்தியில் பற்றாக்குறையை உருவாக்க விரும்பின.

மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை வைத்திருக்கும் மிகப்பெரிய ஏகபோக முதலாளிகள் சிலர், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் பல நிலக்கரி சுரங்கங்களை வாங்கியுள்ளனர். மொசாம்பிக்கில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் டாடா ஸ்டீல் நிறுவனமும், இந்தோனேசியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் டாடா பவர் நிறுவனமும் முதலீடு செய்துள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் அதானி பெரும் முதலீடுகளைக் கொண்டுள்ளது. ஜிண்டால் ஸ்டீல் அன்டு பவர் நிறுவனமும், எஸ்ஸார் எனர்ஜி நிறுவனமும் மொசாம்பிக்கில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் முதலீடு செய்துள்ளன. ஜிவிகே குழுமம் ஆஸ்திரேலியாவில் நிலக்கரியில் முதலீடு செய்துள்ளது. இந்த ஏகபோக முதலாளிகள் அனைவரும் இந்த சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை இந்தியாவிற்கு விற்பதன் மூலம் பெரும் இலாபம் ஈட்டுகின்றனர்.

முன்னதாக ஏப்ரல் மாதத்தில், அரசுக்கு சொந்தமான ஆலைகள் உட்பட, இந்தியாவில் உள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும், கோல் இந்தியா உற்பத்தி செய்யும் நிலக்கரியோடு குறைந்தபட்சம் 10% இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியையும் கலந்து பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து நிலக்கரியை இறக்குமதி செய்யும் திட்டங்களை மாநில அரசுகள் அறிவித்தன. மராட்டியம் 10 மில்லியன் டன்களை இறக்குமதி செய்வதாக அறிவித்தது. குஜராத் ஒரு மில்லியன் டன் இறக்குமதி செய்ய முன்வந்தது. தமிழ்நாடு 1.5 மில்லியன் டன் இறக்குமதி செய்வதாகவும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் 20 சதவிகிதத்தை அனல் மின் ஆலைகளில் பயன்படுத்துவதாகவும் அறிவித்தது. இந்த மூன்று மாநிலங்களும் நாட்டின் மின்சாரத் தேவையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநில அரசாங்கங்கள் மொத்தமாக 10 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பஞ்சாப் 0.63 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.

இவ்வளவு பெரிய அளவில் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான முடிவு அவசியமானதாக முன்வைக்கப்படுகிறது. கோல் இந்தியாவால் போதுமான அளவு நிலக்கரியை உற்பத்தி செய்ய முடியாததால், இறக்குமதி செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அரசாங்கம் கூறுகிறது.

உண்மை என்னவெனில், அடுத்தடுத்து வந்த அரசுகள், கோல் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கி ஒழித்துக் கட்டும் கொள்கையை திட்டமிட்ட முறையில் பின்பற்றி வருகின்றன. நிலக்கரிச் சுரங்கம் மற்றும் எரிசக்தித் துறையில் முதலாளித்துவ ஏகபோகங்கள் பயனடைவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. இருப்பினும், தனியார்மயமாக்கலுக்கு எதிரான நிலக்கரித் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டம் முதலாளிகளின் திட்டங்களுக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

நிலக்கரி இறக்குமதியில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதால், நிலக்கரி இறக்குமதியை அதிகரிப்பது, சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலையை பெருமளவில் உயர்த்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே வெளிநாட்டில் நிலக்கரிச் சுரங்கங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் இந்திய முதலாளித்துவ ஏகபோகங்கள் பெரும் இலாபம் ஈட்டுவார்கள். மின்சார பயன்பாட்டிற்கு கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், இந்திய மக்களை கசக்கிப் பிழிந்து அவர்கள் இந்த பெரும் இலாபத்தை ஈட்டுகிறார்கள். அரசுக்குச் சொந்தமானவை உட்பட அனைத்து அனல் மின் நிலையங்களையும் இறக்குமதி செய்யும் நிலக்கரியை வாங்கும்படி கட்டாயப்படுத்துவதன் மூலம் ஏகபோக முதலாளிகளின் பேராசையை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது.

இரயில் போக்குவரத்து

ஏகபோகங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள், அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை உரிய நேரத்தில் கொண்டு செல்வதை உறுதி செய்யத் தவறி விட்டதாகக் கூறி இந்திய ரயில்வேயைக் குற்றம் சாட்டுகின்றன.

உண்மை என்னவெனில், இரவும் பகலும் உழைக்கும் இரயில் தொழிலாளர்கள், சுரங்கங்களில் இருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி மிகக் குறுகிய காலத்தில் கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்து வருகின்றனர்.

ரயில்வேயில் மொத்தமுள்ள திறந்த சரக்குப் பெட்டிகளில் 86% மாக உள்ள  113,880 சரக்குப் பெட்டிகள் நிலக்கரி கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது. தினமும் சுமார் 28,470 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றப்படுகின்றன. விரைவாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக, நிலக்கரி உற்பத்தி செய்யும் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள 122 இடங்களில் இருந்து மூன்று முதல் ஐந்து ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக விரைவாக அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு நிலக்கரி ரயிலிலும் சுமார் 84 சரக்குப் பெட்டிகள் உள்ளன. நிலக்கரி ரயில்களின் விரைவான இயக்கத்தை உறுதி செய்வதற்காக, பல பயணிகள் மற்றும் விரைவு ரயில்களை ரயில்வே இரத்து செய்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டில், ரயில்வே 653 மில்லியன் டன்கள் (MT) நிலக்கரியைக் கொண்டு சென்றது, இது 2020-21 ஐ விட 20.4 சதவீதம் அதிகமானதாகும். இரயில்வே மூலம் கொண்டு செல்லப்பட்ட 653 மெட்ரிக் டன் நிலக்கரியில், சுமார் 540.4 மெட்ரிக் டன் (83 சதவீதம்) நிலக்கரி அனல் மின் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகும். தனியார்மயமாக்கலை ஆதரிப்பவர்களின் பொய்ப் பரப்புரை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், தற்போதைய நெருக்கடியில் நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை ஏற்றிச் செல்லும் பணியை ரயில் ஊழியர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

முடிவுரை

தற்போதைய மின் நெருக்கடியானது, பொது மக்களைக் கசக்கிப் பிழிந்து அதிகபட்ச இலாபத்தை ஈட்ட வேண்டும் என்ற முதலாளித்துவ ஏகபோகங்களின் பேராசையால், உருவாக்கப்பட்டுள்ளது. மனிதத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக முதலாளித்துவ பேராசையை நிறைவேற்றும் பொருளாதாரத்தின் தற்போதைய போக்கின் விளைவுதான் இந்த நெருக்கடியாகும். இது மின்சார உற்பத்தி மற்றும் நிலக்கரி சுரங்கங்களைத் தனியார்மயமாக்கும் திட்டத்தின் விளைவாகும், இது சமூக உற்பத்தியின் இந்த அத்தியாவசிய துறைகளை இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகள் அதிகபட்ச இலாபம் பெறுவதற்கான ஆதாரங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *