இலங்கையின் மிகவும் பயங்கரமான சூழ்நிலைக்கு காரணிகள்

இந்தியாவின் தெற்கிலுள்ள அண்டை நாடான இலங்கைத் தீவு நாடு, இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான அனைத்துப் பக்க நெருக்கடியை சந்தித்து வருகிறது. உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு அங்கு சமீப மாதங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல அத்தியாவசிய மக்கள் நுகர் பொருட்களை கிடைக்கச் செய்வதற்கு இலங்கை இறக்குமதியை சார்ந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து அவற்றை வாங்குவதற்கு அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக கோடிக்கணக்கான மக்கள் அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட சரிவால் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடும், செயல்பாட்டை முடக்கும் மின்வெட்டும் ஏற்பட்டுள்ளது.

பெருந்திரளான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சா நெருக்கடி நிலையை ஏப்ரல் 1 அன்று பிரகடனப்படுத்தினார். அது மக்களிடையே மிகப் பரவலான, கோபமான எதிர்ப்புகளை சந்தித்ததால், அவர் அதை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் பின்னர் பிரதமர் மகிந்த ராஜபக்சா பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவருக்கு பதிலாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை அதிபர் நியமித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நெருக்கடிக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச காரணிகள் என்ன? இந்தக் கேள்வியில் அதிக அளவில் குழப்பம் பரப்பப்படுகிறது.

வெளிநாட்டுக் கடனும் ஏற்றுமதி அடிப்படையிலான வளர்ச்சியும்

2019 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 56 பில்லியன் அமெரிக்க டாலர்களாகி உச்சத்தை எட்டியது. மேற்கத்திய ஏகாதிபத்திய ஊடகங்களும் அனைத்து வகையான வல்லுநர்களும் இந்த நிலைக்கு சீனாவின் மீதும், நிதி உதவிக்காக சீனாவை நம்பியதற்காக ராஜபக்சே ஆட்சி மீதும் பழியைப் போட முயற்சிக்கின்றனர். சீனா “கடன் பொறி சூழ்ச்சி ” செய்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 10% மட்டுமே சீனாவிடம் வாங்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெரிய ஏகபோக வங்கிகளுக்கு கடன்பட்டிருக்கும் வெளிநாட்டுக் கடனில் மிகப்பெரிய பகுதி “சந்தை கடன்” என வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் ஒவ்வொன்றும் சுமார் 10 சதவீத கடன் கொடுத்துள்ளனர் (விளக்கப்படம் B). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய முதலாளிகள் ஆதிக்கம் செலுத்தும் நிதி நிறுவனங்கள் மொத்தமாக 80 சதவீதக் கடனைக் கொண்டுள்ளன. எனவே, இலங்கையின் கடன் பிரச்சினைக்கு சீனாவைக் குற்றம் சாட்டுவதில் எந்த அடிப்படையும் இல்லை.

சர்வதேச நாணய நிதியம் (IMF) இதுவரை 16 கடன்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது, அவை அனைத்தும் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சர்வதேச நாணய நிதியக் கடனும் உணவு மானியம் உட்பட அரசாங்க மானியங்களைக் குறைத்தல், சமூக செலவினங்களைக் குறைத்தல் மற்றும் இலங்கை ஏற்றுமதிகளை போட்டியிடச் செய்வதற்காக இலங்கையின் பண மதிப்பைக் குறைத்தல் போன்ற நிபந்தனைகளுடன் வந்தனவாகும்.

ஏற்றுமதியை மையமாகக் கொண்ட வளர்ச்சி எனப்படும் ஆபத்தான பொருளாதார வளர்ச்சியின் பாதையில் இலங்கையை தள்ளியதற்கு சர்வதேச நாணய நிதியமும், பிற ஏகாதிபத்திய நிதி மூலதன நிறுவனங்களும் பொறுப்பாகும். அந்தப் போக்கைப் பின்பற்றுவதால் ஏற்படும் பேரழிவான விளைவுகளில் கடன் சுமையும் ஒன்றாகும்.

ஏற்றுமதி மைய வளர்ச்சி, அல்லது ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியானது, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் முன்னாள் காலனிய நாடுகளை புதுக்காலனிய முறையில் கொள்ளையடிக்கும் பிற நிறுவனங்களால் ஊக்குவிக்கப்பட்டதாகும். குறிப்பாக 1980 களில் இருந்து, இது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு சிறந்த வளர்ச்சிப் பாதையாக ஊக்குவிக்கப்பட்டது. உலகச் சந்தையை இலக்காக வைத்து உற்பத்தி செய்வதென்பதே அதன் பொருளாகும். அதாவது, இலாபகரமான விலையில் ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களை மென்மேலும் உற்பத்தி செய்வதில் இலங்கை முதலீடு செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.

தாராளமயம், தனியார்மயம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியின் ஆதரவாளர்களான “சுதந்திர சந்தைக்” கோட்பாட்டாளர்கள், விரைவான ஏற்றுமதி வளர்ச்சி புதிய வேலை வாய்ப்பைகளை உருவாக்கும் என்று கூறினர். அது கூடுதல் வருமானத்தை உருவாக்கும் என்றும், அது துளித் துளியாக கசிந்து வந்து அனைவருக்கும் பயனளிக்கும் என்றனர்.

இந்த கோட்பாட்டின் ஊக்குவிப்பாளர்கள், ஒரு நாடு தனது சொந்தத் தேவைகளை முடிந்தவரை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியத்திற்கு எதிராக வாதிட்டனர். மக்களின் தேவைகளைப் பொறுத்த வரையில், நாட்டில் போதுமான உற்பத்தி இல்லை என்றால், அவற்றை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று அவர்கள் கூறினர். ஏற்றுமதியும் சுற்றுலாவும் வேகமான விகிதத்தில் வளரும் வரை, வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து இலங்கை கடன்களை பெறும் வரை, தேவையானவற்றை இறக்குமதி செய்ய போதுமான அன்னிய செலாவணி இருக்கும் என்றனர்.

மொத்தத்தில் வெளிநாட்டுச் சந்தைகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு மூலதனத்தை நம்பியிருக்கும் கொள்கையின் அடிப்படையில் இலங்கை வளர்ச்சிப் போக்கை மேற்கொண்டு வந்திருக்கிறது. இது சுயசார்புக் கொள்கைக்கு எதிரானதாகும். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை 16 தடவைகள் அணுக வேண்டியிருந்தது என்பதே, இந்த வளர்ச்சிப் பாதையில் உள்ள அதிக ஆபத்தைக் காட்டுகிறது.

சர்வதேச நாணய நிதியம் என்பது அமெரிக்க தலைமையிலான முன்னணி ஏகாதிபத்திய சக்திகளால் ஆதரிக்கப்படும் சர்வதேச நிதி மூலதனத்தின் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும். உலகின் பெரும்பான்மையான முதலாளித்துவ நாடுகள் அதன் உறுப்பினர்களாக உள்ளன. அன்னியச் செலாவணி தட்டுப்பாட்டைச் சந்திக்கும் எந்தவொரு உறுப்பு நாடுகளுக்கும் கடைசி முயற்சியாக கடன் வழங்கும் ஒரு மைய வங்கியாக அது செயல்படுகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியர்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலையற்ற சூழ்நிலையை உருவாக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நாட்டை குறி வைக்க முடிவு செய்யும் போது, ​​நிதி மூலதனத்தின் பல்வேறு நிறுவனங்கள் செயலில் இறக்கி விடப்படுகின்றன. கடன் தகுதியைத் தீர்மானிக்கும் நிறுவனங்கள் (கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகள்) அந்த நாட்டின் தகுதியைக் குறைக்கின்றன, மற்றும் வங்கி ஏகபோகங்கள் தங்கள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துகின்றன. இவ்வாறு கூட்டாக வேலை செய்வதன் மூலம், தனிப்பட்ட இலாபம் தேடும் நிறுவனங்களும் ஏகாதிபத்திய அரசுகளும் இலக்கு வைக்கப்பட்ட நாட்டின் அரசாங்கத்தை கடன் புதைக் குழியிலும் அந்நிய செலாவணி நெருக்கடியிலும் சிக்க வைக்கின்றன. பின்னர் அந்த அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தை அணுகி சூழ்நிலையிலிருந்து மீளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி, சர்வதேச நாணய நிதியம், தாராளமயம் மற்றும் தனியார்மயமாக்கலின் ஏகாதிபத்திய பரிந்துரைகளை அவர்கள் மீது சுமத்துகிறது. இவ்வாறு அவர்கள் இலங்கையை ஏற்றுமதி அடிப்படையிலான வளர்ச்சிப் பாதையில் தள்ளியுள்ளனர்.

மிக உடனடி காரணியாக அல்லது இலங்கையின் சூழ்நிலையில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வைப் பொறுத்தவரை, 2019 இல் தொடங்கிய அந்நிய செலாவணி வரவுகளின் கடுமையான சரிவுக்கான காரணத்தை நாம் ஆராய வேண்டும். அது கொரோனா பெருந்தொற்று நோய் வெடிப்பதற்கு முன்பே தொடங்கியது. ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு (விளக்கப்படம் சி) திருப்புமுனையாக அமைந்தது என்பதை சுற்றுலாத்துறை வரவுகளின் போக்கு தெளிவாகக் காட்டுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு, இலங்கையின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் துறையை முடக்கியது. அது பல பொருட்களின் ஏற்றுமதியையும் பாதித்தது. பயங்கரவாத தாக்குதலால் ஏற்பட்ட நிச்சயமற்ற நிலை காரணமாக வெளிநாடுகளிலிருந்து வாங்குபவர்கள் இலங்கை நிறுவனங்களிலிருந்து பொருட்கள் வாங்குதை நிறுத்தி விட்டனர். ஏப்ரல் 2019 முதல் சுற்றுலா மற்றும் ஏற்றுமதி வரவுகளில் ஏற்பட்ட சரிவு, பணச் சமநிலை – அந்நிய செலாவணி நெருக்கடியாக மாறியது. 2020 முதல் கொரோனா பெருந்தொற்று நோய், பிரச்சினைகளை மேலும் மோசமாக்கியது.

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள்

21 ஏப்ரல் 2019, ஈஸ்டர் ஞாயிறு அன்று, இலங்கையில் உள்ள மூன்று தேவாலயங்களும், வர்த்தக தலைநகரான கொழும்பில் உள்ள மூன்று சொகுசு தங்கும் விடுதிகளும் தொடர்ச்சியான ஒருங்கிணைந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகின. அன்று மாலையில், ஒரு குடியிருப்பு வளாகத்திலும், ஒரு விருந்தினர் மாளிகையிலும் சிறிய அளவிலான குண்டு வெடித்தன. விக்கிபீடியாவின் கூற்றுப்படி, குறைந்தது 45 வெளிநாட்டினரும், 3 காவல் அதிகாரிகளும், 8 குண்டு போட்டவர்களும் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 500 பேர் காயமடைந்துள்ளனர்.

மேற்கத்திய ஏகாதிபத்தியம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பரப்புரை, இந்த குண்டுவெடிப்புகளுக்கு “ஈராக்கின் இஸ்லாமிய அரசையும், செவன்ட்” (ISIS) மீது குற்றம் சாட்டியுள்ளன. தாக்குதல் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 23 ஆம் தேதி, பாதுகாப்பு அமைச்சர் விஜேவர்தனே, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தனது அரசாங்கம் கருதுவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நியூசிலாந்து அரசாங்கம் இந்தக் கருத்தை மறுத்துள்ளது.

இலங்கையில் முஸ்லீம்-கிறிஸ்தவ மோதல்கள் ஏற்பட்டதாக வரலாறு இல்லை. ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை ஒட்டியோ, அதற்குப் பின்னரோ கிறித்துவத்திற்கு எதிரான பரப்புரை எதுவும் அங்கு நடைபெறவில்லை.

இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) பொறுப்பான மூத்த அதிகாரி, 2019 சூலையில், சிறப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்கும் போது, ​​குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் இஸ்லாமிய நாடு (IS) இருப்பதாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார். இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த பயங்கரவாதக் குழு, இந்தோனேசியாவில் உள்ள மூன்றாம் தரப்பினரின் மூலம், இது குறித்து அறிக்கை வெளியிடுமாறு ஐஎஸ் அமைப்பின் தலைவரிடம் கோரியதாக அவர் கூறியதாக சொல்லப்படுகிறது. உண்மையாக குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்டு செய்தவர்களுடைய அடையாளம் மறைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், இஸ்லாமிய நாடு (IS) பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளதென்பதை அவரது அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஒரு நிதானமான பகுப்பாய்வு, இந்த சதித்திட்டமானது புவி-அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சதி என்பதைக் காட்டுகிறது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை சிதைத்து, தற்போதைய ஆட்சியை சீர்குலைப்பதில் அரசியல் ஆதாயம் அடையக்கூடிய சக்தி எது? அமெரிக்காவின் மீதே சந்தேகம் எழுகிறது.

சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கு எதிராக இலங்கையின் ஆளும் வர்க்கத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் எச்சரித்து வந்திருக்கிறது. இந்த எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், ராஜபக்சே அரசாங்கம் 2021 இல் சீனாவிடம் உதவியை நாடியது. இது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு பிடிக்கவில்லை. 2021 டிசம்பரில் நடைபெற்ற சனநாயக உச்சி மாநாட்டிற்கான அழைப்பாளர்களின் பட்டியலில் இருந்து பைடென் நிர்வாகம் இலங்கையை வெளிப்படையாக நீக்கியது குறிப்பிடத்தக்கது. அந்த மாநாட்டிற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் அழைக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை அழைக்கப்படவில்லை.

இலங்கையை மண்டியிடச்செய்யவும், பிச்சைத் தட்டோடு சர்வதேச நாணய நிதியத்திடும் மீண்டும் வரவும், அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்ற ஒரு ஆட்சி மாற்றத்திற்கான சூழ்நிலையை உருவாக்கவும் பயங்கரவாதத் தாக்குதல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம். இதற்கு முன்னர், இலங்கை பல்லாண்டுகளாக நீடித்த உள்நாட்டு கலவரம் மற்றும் தமிழ் மக்கள் மீதான கொடூரமான அரசு அடக்குமுறையைக் கடந்து வந்திருக்கிறது. இது இலங்கை மக்களின் ஒற்றுமையை பலவீனப்படுத்தியதோடு, வெளிநாட்டு ஏகாதிபத்திய தலையீடுகளால் இலங்கை பாதிப்படையக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது.

முடிவுரை

ஏகாதிபத்தியம் நிர்ணயித்த பொருளாதார வளர்ச்சிப் போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கை மக்களாவர். இது வெளிநாட்டுச் சந்தைகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டு மூலதனத்தின் மீது எப்போதும் அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் நிதி சார்புநிலைக்கு நாட்டைத் தள்ளியது. பொருளாதாரத்தை சீர்குலைக்கவும், அரசியல் நிறுவனத்தைச் சீர்குலைக்கவும் மற்றும் இலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலையை வலுப்படுத்தும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவும், பெரும்பாலும் அமெரிக்காவினால் சூழ்ச்சியாக நடத்தப்பட்ட ஒரு கொடூரமான ஏகாதிபத்திய சதிக்கு இலங்கை மக்கள் பலியாகி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *