தோழர் வில்சன் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம்

அண்மையில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் தோழர் வில்சன் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நெகிழ்ச்சியான நினைவலைகளோடும், போராட்ட உணர்வோடும் கன்னியாகுமரி புத்தன் சந்தையில் மே 28 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் தோழர்களும், சிபிஐ(எம்) உட்பட பல்வேறு கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பிற கட்சித் தோழர்களும், தொழிலாளர்களும், நண்பர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு தோழர் ஆப்ரகாம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் தோழர் சரவணமுத்துவேல், சிபிஐ(எம்)  கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய தோழர் லிமா ரோஸ், தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் பாஸ்கர், திமுக-வைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு மைக்கேல் குமார், மேல்புறம் வட்டார சிபிஐ(எம்) குழுவின் உறுப்பினர் தோழர் சத்தியன், திமுக-வைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு லாரென்ஸ் லிபின், மேல்புறம் இந்திய சனநாயக வாலிபர் சங்கத்தின் வட்டார செயலாளர் தோழர் அனுஃப், சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்த கடையாலுமூடு பேரூராட்சியின் முன்னாள் தலைவர் தோழர் எஸ்.ஆர்.சேகர், ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மஞ்சாலுமூடு ஊராட்சியின் முன்னாள் தலைவர் திரு சொல்வின், சிபிஐ(எம்) கட்சியின் மேல்புறம்  வட்டார செயலாளர் தோழர் ஜெயராஜ், சிபிஐ(எம்) கட்சியின் புத்தன் சந்தை கிளைச் செயலாளர் தோழர் ஞானதாஸ் மற்றும் பலர் உரையாற்றினர்.

கூட்டத்தில் உரையாற்றியவர்கள், தோழர் வில்சனுடைய வாழ்க்கையின் பன்முகத் தன்மையையும் கம்யூனிசத்திற்காகவும், தொழிலாளிகள் விவசாயிகளுடைய விடுதலைக்காகவும் அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் விளக்கிப் பேசினார்கள். தன் இளம் பருவத்தில் இந்திய சனநாயக வாலிபர் சங்கத்திலும் பின்னர் கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியிலும் அவர் செயல்பட்டது குறித்து தோழர்கள் எடுத்துரைத்தனர்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தோழர் சரவணமுத்துவேல், விவசாயிகளுடைய போராட்டங்களிலும், தொழிலாளர்கள், மீனவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சிறுகடை விற்பனையாளர்கள் மற்றும் அனைத்து மக்களுடைய போராட்டங்களிலும் தோழர் வில்சன் ஆற்றிய பங்கு குறித்து விளக்கிப் பேசினார்.

திருவட்டார் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிபிஐ(எம்) தோழர் லிமா ரோஸ் அவர்களும், மற்ற தோழர்களும் மக்களுடைய போராட்டங்களிலும் இளைஞர்களுடைய நலன்களுக்காகவும், புதிய ஒரு சமுதாயத்திற்காகவும் இரவு பகலாக தோழர் வில்சன் கடுமையாக உழைத்தது குறித்தும், கம்யூனிச கருத்தியலை மக்களிடையே கொண்டு சென்று அவர்களுடைய விழிப்புணர்வை உயர்த்துவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் பாஸ்கர், தனது உரையில் மக்களுடைய உரிமைகளுக்காகவும், தற்போதைய தேர்தல் அமைப்பு முறையும், இந்திய அரசியல் அமைப்பும் உழைக்கும் பெரும்பான்மையான மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்வது குறித்தும், இந்த முதலாளித்துவ அமைப்பின் சுரண்டல் குறித்த தெளிவை மக்களுக்குக் கொடுப்பதற்காகவும், தொழிலாளிகள் – விவசாயிகளுடைய ஆட்சி அதிகாரத்தை அமைப்பது இன்றியமையாதது என்பதை வலியுறுத்துவதற்காகவும் தோழர் வில்சன் தேர்தல்களில் பங்கேற்றது பற்றி விளக்கிப் பேசினார்.

தோழர் வில்சன் இந்தியாவில் ஒரு புரட்சியை நடத்துவதற்காகவும், தொழிலாளிகள் – விவசாயிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும், புரட்சியை மையமாகக் கொண்ட ஒற்றுமையான ஒரு கம்யூனிச இயக்கத்தைக் கட்டுவதற்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்து வேலை செய்ததை பலரும் குறிப்பிட்டனர். அவர் ஆற்றிய இந்தப் பணிகளை மேற் கொண்டு எடுத்துச் செல்வதே நாம் தோழர் வில்சன் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்குமென்பதை எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற எல்லாத் தோழர்களும், நண்பர்களும், தோழர் வில்சனுக்கு செவ்வணக்கம் செலுத்தி கம்யூனிச இயக்கத்தின் ஒற்றுமைக்காகவும், உழைக்கும் மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் அவர் ஆற்றிய பணிகளை மேலும் முன்னெடுத்துச் செல்லுவோம் என்று உறுதி கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *