ஆம்பூர் தொழிலாளர்களின் மே நாள் ஆர்பாட்டம்

தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம், ஆம்பூரில் மே 7 அன்று மே நாள் கூட்டத்தையும், கோருரிமை ஆர்பாட்டத்தையும் நடத்தியது. ஆம்பூர் சுற்றுவட்டாரத்திலுள்ள தோல், காலணிகள் மற்றும் தோல் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் இந்த மே நாள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

   

மே நாள் ஆர்பாட்டத்தைத் தோழர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கி நடத்தினார். தமிழ்நாடு தொழிற்சங்க நடுவத்தின் பொதுச் செயலாளர் தோழர் உரூபன், தொழிலாளர்களுக்கு மே நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து தன் உரையைத் தொடங்கினார். ஆம்பூர் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் முழு ஆதரவோடு தொழிற் சங்க நடுவம் மேற் கொண்ட பல போராட்டங்களை அவர் விவரித்துக் கூறினார். அடிப்படையான சில பொருளாதார கோரிக்கைகளுக்காக என்.எம்.இசத் தொழிற்சாலைத் தொழிலாளர்களும் தொழிற் சங்கமும் மேற் கொண்ட நீண்ட போராட்டத்தைப் பற்றி அவர் விளக்கிப் பேசினார். 15 ஆண்டு கால நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்னர் தங்களுடைய கோரிக்கைகளில் சிலவற்றை தொழிலாளர்கள் வென்றிருக்கிறார்கள். தொழிலாளர்களுக்கு ஆதரவாக நீதி மன்றம் தீர்ப்பளித்தும் கூட, நீதி மன்ற ஆணையின்படி தொழிலாளர்களுக்கு உரிய பயன்களைத் தருவதற்கு முதலாளிகள் மறுத்து வருகிறார்கள். ஆலை நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனமான நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்த தோழர் உரூபன், தொழிலாளர்களுக்கு உரிய தொகையை உடனடியாகக் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

கண்ணியமான வாழ்க்கை நடத்தத் தக்க வகையில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூபாய் 30,000 மாக உயர்த்த வேண்டுமென வெகு காலமாக தொழிற் சங்கங்களும் தொழிலாளர்களும் எழுப்பி வரும் கோரிக்கையை அவர் வலியுறுத்தினார். முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஆம்பூர் – வாணியம்பாடி பகுதியில் தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த புளோரின்ட் உட்பட பல தொழிற்சாலைகள் அண்மை ஆண்டுகளில் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலை இழந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மிகவும் மோசமான சூழ்நிலைகளைச் சந்தித்து வருகிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்த இந்தத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்படியான முடிவிலுறு பயன்களைக் கூட இந்த முதலாளிகள் தரவில்லை. நெருக்கடி நிறைந்த தொற்று நோய் காலத்தில், நிறுவனங்களின் கதவடைப்பின் காரணமாக வேலையிழந்த எல்லா தொழிலாளர்களுக்கும், கிடைக்க வேண்டிய முடிவிலுறு பயன்களை உடனடியாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தோழர் உரூபன் கோரினார்.

மே நாள் ஆர்பாட்டத்தில் அம்பேத்கார் தொழிற் சங்கத்தைச் சேர்ந்த தோழர் பிரதாபன், கருநாடகா மாண்டியா பகுதியைச் சேர்ந்த திராவிடியன் நகரப்புற இயக்கத்தைச் சேர்ந்த திரு எச்.எஸ்.அபிலாஷ், தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் பாஸ்கர், திமுக-வைச் சேர்ந்த திரு இராஜேந்திர பிரசாத் மற்றும் தமிழ்நாடு தொழிற்சங்க நடுவத்தின் பல தோழர்களும் உரையாற்றினர்.

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் பாஸ்கர், எல்லா தொழிலாளர்களுக்கும் புரட்சிகர மே நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். மிகச் சாதாரண, நியாயமான பயன்களைக் கூட கடினமாக உழைக்கும் என்.எம்.இசத் தொழிலாளர்களுக்கு ஒரு தலைமுறைக்கும் மேல் மறுத்து வரும் இந்திய அரசியல் அமைப்பை அவர் வன்மையாகக் கண்டித்தார். தங்களுடைய அடிப்படைத் தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் கடுமையான வறுமையில் நமது தொழிலாளர்கள் சிக்கித் தவித்துவரும் சூழ்நிலையில், முதலாளிகள் இந்திய அரசின் நிறுவனங்களின் ஆதரவோடு மென்மேலும் கொழுத்து வருகிறார்கள். தொழிலாளர்களுடைய கோரிக்கைக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்து, உரிய தொகையை உடனடியாக தொழிலாளர்களுக்கு முதலாளி கொடுக்க வேண்டுமென ஆணையிட்டும், அதை கொடுக்காமல் தொழிலாளிகளை பழிவாங்கி வருவதையும், அரசாங்கம் அதை வேடிக்கைப் பார்த்து வருவதையும் அவர் கோபத்தோடு சாடினார்.

அக்டோபர் புரட்சியின் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின், சோவியத் யூனியனில் தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் கொண்டிருந்த மிகச் சிறப்பான வாழ்க்கை நிலைமைகளை அவர் விவரித்தார். சோவியத் யூனியனில் தொழிலாளி வர்க்கம் அன்று செய்து காட்டிய ஒளிமயமான எடுத்துக்காட்டை பின்பற்றி தொழிலாளிகள் நாம், இந்தியாவில் தொழிலாளிகளுடைய ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதற்கு ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.

தொழிலாளர்களுடைய போர்க்குணமிக்க ஒற்றுமையை மேலும் கட்டி வலுப்படுத்தவும், சுரண்டலற்ற ஒரு இந்தியாவைப் படைப்பதற்காகப் போராடவும் வேண்டுமென்ற மிகவும் எழுச்சியான கருத்தோடு தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் நடத்திய மே நாள் ஆர்பாட்டம் முடிவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *