தொழிலாளர் ஒற்றுமையை கட்டி வலுப்படுத்த மே-தினத்தில் உறுதியேற்பு

சென்னை மாநகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள பல தொழிற்சாலைப் பகுதிகளிலும் உள்ள தொழிலாளிகள் தத்தம் தொழிற்சாலை நுழைவாயில்களில் உற்சாகமாக செவ்வண்ணக் கொடிகளை ஏற்றியும் மே தின கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தியும் மே தின உறுதிமொழிகளை ஏற்றனர்.

வி.எச்.எஸ் மருத்துவமனை வளாகத்தின் நுழைவாயில் உற்சாகமான தொழிற்சங்க செயற்பாட்டாளர்களால் காலை ஏழரை மணிக்கு செவ்வண்ண கொடிகளை கொண்டு அலங்கரிக்கப்படிருந்தது. மேதின விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை வி.எச்.எஸ் மருத்துவமனை தொழிற்சங்கத்தின்  தலைவர் தோழர் இராமகிருஷ்ணனும், துணைத் தலைவர் தோழர் எம்.இ.திருப்பதியும் மற்றும் பல செயற்பாட்டாளர்களும் செய்திருந்தனர்.

தொழிலாளர் தோழர்கள் ஒன்று திரண்டவுடன் மேதின கொடியை ஏற்றி, வி.எச்.எஸ் மருத்துவமனை தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் மணிதாசன் அனைவரையும் உற்சாகத்துடன் வரவேற்று, மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். தொழிலாளர்களின் எஃகு போன்ற ஒற்றுமையின் காரணமாக கடந்த காலத்தில் வி.எச்.எஸ் மருத்துவமனைத் தொழிலாளர்கள் பெற்ற உரிமைகளையும், பயன்களையும் அவர் நினைவுபடுத்தினார். இன்று எப்படி நம்முடைய வாழ்வாதாரம் நசுங்கிக் கொண்டே போகிறது என்பதையும், நம் தொழிலாளர் தோழர்கள் அனைவரையும் மேலும் அணிதிரட்டிப் போராட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

அதன் பின் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் பாஸ்கர், மே தின வாழ்த்துக்களை தொழிலாளர்களுக்கு தெரிவித்து பேசினார். தொழிலாளர்கள் நாம், இன்று ஆளும் வர்க்கங்களால் பெரிதும் தாக்கப்படுகிறோம். நம்முடைய ஒரே ஆயுதம் நமது வர்க்க ஒற்றுமையாகும். “ஒருவர் மீது தாக்குதல் நம் அனைவர் மீதும் தாக்குதல்” என்ற அடிப்படையில், நாம் நமது உரிமைகளுக்காகவும் நம்மைச் சார்ந்த தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் ஒன்று பட்டு போராடினால் நாம் பல வெற்றிகளை ஈட்ட முடியும். அதற்கு நாம் எல்லோரும் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். உங்களுடைய எல்லா போராட்டங்களிலும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் முன்நிற்கும் என்று உறுதி கூறினார். நம் தொழிலாளர்களின் எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு இன்றியமையாத ஒரே வழி அரசியல் அதிகாரத்தை தொழிலாளி வர்க்கம் கைப்பற்றுவதாகுமென அவர் வலியுறுத்திக் கூறினார்.

ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவோம் என்றும், தங்களின் உரிமைகளை மீட்டெடுக்க போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும், சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம் என்றும் பங்கேற்ற தொழிலாளர்கள் அனைவரும் மே தின உறுதி ஏற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *