தீவிரமடைந்து வரும் தொழிலாளர் பிரச்சனைகள்

தீவிரமடைந்து வரும் தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்  (தொ.ஒ.இ), சனவரி இறுதியில் ஒரு இணையவழிக் கூட்டத்தை நடத்தினர். இதில் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்று தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து உரையாற்றினர்.

கூட்டத்தில் இணைந்திருந்த தொழிற் சங்கத் தலைவர்களையும், தொழிலாளர்களையும் மற்றவர்களையும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் பாஸ்கர் வரவேற்றார். அவர் தன்னுடைய துவக்க உரையில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் குறித்து விளக்கினார். தொழிலாளர்களை வேலை செய்யும் துறை, தொழிற் சங்கம், கட்சி போன்ற வேறுபாடுகளைக் கடந்த அளவில் தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் ஒருங்கிணப்பதற்காக தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் பாடுபட்டு வருகிறது. நாம் வேலை செய்யும் நிறுவனங்களில் மட்டுமின்றி, அந்த தொழிற் பேட்டையிலுள்ள அனைத்து நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நாம் ஒன்றுபட வேண்டிய தேவையுள்ளது. “ஒருவர் மீது தாக்குதல், அனைவர் மீதும் தாக்குதல்!” என்ற அடிப்படையில் நம்மிடையே ஒரு போராட்ட ஒற்றுமையைக் கட்டியமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

எல்லாத் தொழிலாளர்களுடைய எல்லா நியாயமான போராட்டங்களுக்கும் ஆதரவளிப்பது, அவர்களுடைய உரிமைகளுக்கான விழிப்புணர்வை உயர்த்துவது, எல்லா தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டு செல்வது தொ.ஒ.இ. நோக்கமாகும். இது ஒரு அனைத்திந்திய அமைப்பாகும். தமிழகத்தில் தொ.ஒ.இ.மாகவும், மராட்டிய மாநிலத்தில் காம்கார் ஏக்தா கமிட்டி என்றும், தில்லி, உபி, இராஜஸ்தான் மற்றும் பிற வட இந்திய மாநிலங்களில் மஸ்தூர் ஏக்கா கமிட்டி எனவும் அந்தந்த பகுதிகளில் அழைக்கப்படுகிறது.

அண்மையில் விவசாயிகளுடைய ஒன்றுபட்ட நீண்ட போராட்டம் நடைபெற்றதை நாம் கண்டோம். 500 அமைப்புகளுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து போராடினர். அது எல்லா அமைப்புக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய ஒரு தேவை இன்று இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. பெரும் முதலாளிகளும் அவர்களுடைய அரசும் நம்மைக் கொடூரமாகத் தாக்கி வரும் சூழ்நிலையில் எல்லா தொழிலாளர் அமைப்புக்களும் கட்சி சங்க வேறுபாடுகளைக் கடந்த அளவில் ஒன்றுபட வேண்டிய உடனடித் தேவை இருக்கிறது.

இந்த நோக்கங்களோடு, தொ.ஒ.இ எல்லா தொழிலாளர்களுடைய போராட்டங்களுக்கும் முன்னணியில் இருந்து ஆதரவு தந்து வந்திருக்கிறது. கடந்த காலத்தில் மும்பையில் 2.5 இலட்சம் மில் தொழிலாளர்களுடைய நீண்ட போராட்டம் டாக்டர். தத்தா சாமந்த்தின் தலைமையில் நடைபெற்ற போது, அதில் தீவிரமாக பங்கேற்று போராட்டத்தின் வெற்றிக்காக வழி காட்டுகின்ற வகையில் தொ.ஒ.இ கடுமையாக உழைத்திருக்கிறது. நாடெங்கிலும் நடைபெற்று வந்துள்ள மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடைய போராட்டங்களை ஆதரித்து எல்லா நேரங்களிலும் உறுதுணையாக இருந்து வந்திருக்கிறது. மாடர்ன் புட் இன்டஸ்டிரீஸ் தனியார் மயமாக்கப்பட்ட போது அதை எதிர்த்து தொழிற்சாலை வாயில்களிலும், நீதி மன்றத்திலும் தொ.ஒ.இ. ஒரு நீண்ட போராட்டம் நடத்தியது. தில்லியில் டிசிஎம் மில் தொழிலாளர்களுடைய போராட்டத்திலும், தமிழ்நாட்டில் இரப்பர் தோட்டத் தொழிலாளர்களுடைய போராட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறோம். ஏர் இந்தியா தனியார்மயத்தை எதிர்த்து விமானஒட்டிகள், பராமரிப்பு இஞ்சினியர்கள், பணியாளர்கள், கேபின் கிரூ, தொழிலாளர்கள் என அனைத்து மட்டங்களிலும் போராடி வருகின்ற இயக்கம் தொ.ஒ.இ.மாகும். ஏர் போர்ட் அதாரிட்டியின் தனியார்மயத்தை எதிர்த்து தொ.ஒ.இ ஏர்போர்ட் அதாரிட்டி எம்பிளாயிஸ் யூனியனோடு இணைந்து போராடி வருகிறோம். வங்கிகள், காப்பீடு, பிஎஸ்என்எல், பிபிசில் போன்ற நிறுவனங்கள் தனியார்மயப்படுத்தப்படுவதற்கு எதிராகவும் தொ.ஒ.இ முன்னணியில் நின்று அனைத்துத் தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்துப் போராடி வருகிறது. ரயில்வே தனியார் மயப்படுத்தப்படுவதற்கு எதிராக ரயில்வே தொழிலாளர்கள் குறிப்பாக, ரன்னிங் ஸ்டாப் அசோசியேசன், ரயில் ஓட்டுனர்கள், கார்டுகள், இரயில் இஞ்சின் மற்றும் இரயில் பெட்டி உற்பத்தித் தொழிலாளர்கள் எனப் பல்வேறு பிரிவுத் தொழிலாளர்களுடைய போராட்டத்திற்கு நாம் முழு ஆதரவளித்து வருகிறோம்.

இவ்வாறு எல்லா தொழில்துறை பிரிவுகளிலும் வேலை செய்கின்ற அனைத்துத் தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து பெரும் முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் அனைத்துத் தாக்குதல்களையும் முறியடிப்பதற்காகவும், தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் தொ.ஒ.இ வேலை செய்து வருகிறது.

70-க்கும் மேற்பட்ட பொதுத் துறை நிறுவன தொழிற்சங்கங்களும், கூட்டமைப்புக்களும் பங்கு வகிக்கும் தனியார்மயத்திற்கு எதிரான அனைத்திந்திய மன்றத்தில் (AIFAP) தொழிலாளர் ஒற்றுமை இயக்கமும் முன்னணி பங்கு வகிக்கிறது.

தமிழ்நாட்டில் சிரிபெரும்புதூர் பகுதியில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பெண் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் நெடுஞ்சாலையில் இறங்கி நல்ல தரமான உணவு, உறைவிடம் கோரிப் போராடியதை நாம் கண்டோம். அது போலவே மறைமலை நகரில் உள்ள யசாகி நிறுவனத்தில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான இளம் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பாக்ஸ்கான் போன்ற அதே பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். சான்மினா தொழிலாளர்களும் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அண்மையில் போராடினர். கல்ஃப் ஆயில் நிறுவனத் தொழிலாளர்களும் போராடி வருகின்றனர். ஓசூரில் உள்ள அசோக் லைலேண்டு தொழிலாளர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடியிருக்கின்றனர். இந்த கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்து வரும் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் கால வரையறை ஏதுமின்றி ஒவ்வொரு நாளும் 12-14 மணி நேரம் வேலை செய்யுமாறு நிர்பந்தப்படுத்தி மிகவும் கடுமையாகச் சுரண்டப்படுகின்றனர். கொரோனா தொற்று நோய் எங்கும் பரவி மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்தச் சூழலிலும் முன்னணிப் பணியாளர்களாக இருக்கும் செவிலியர்கள் நிரந்தரப்படுத்தாமல், தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்களாக வைத்து கடுமையாகச் சுரண்டப்படுகின்றனர். இதை எதிர்த்தும் அவர்கள் குரலெழுப்பி போராடி வருகின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி மக்களை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு பதிலாக, இந்திய அரசாங்கம் இவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாதது மட்டுமின்றி, அதே நேரத்தில் மிகப் பெரிய மருத்து உற்பத்தி செய்யும் நிறுவன முதலாளிகளுக்கு பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்களை வாரி வழங்கி வருகிறது. உயிருக்குப் போராடும் நோயாளிகளைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கும் 108 ஆம்புலன்சு தொழிலாளர்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாமல் அவர்களை அலட்சியப்படுத்தி அலைக்கழித்து வருகிறது. இதை எதிர்த்து 108 ஆம்புலன்சு தொழிலாளர்கள் ஒன்றுபட்டு 108 ஆம்புலன்சு தொழிற்சங்கத்தின் கீழ் போராடி வருகின்றனர். ஆம்பூரில் தமிழ்நாடு தொழிற்சங்க நடுவத்தின் பொதுச் செயலாளர் தோழர் ரூபனும் மற்ற தோழர்களும் ஆம்பூரில் உள்ள காலணிகளை உற்பத்தி செய்யும் தோல் தொடர்பான தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி சில வெற்றிகளையும் அண்மையில் பெற்றுள்ளனர்.

இவ்வாறு தமிழ்நாட்டிலும், இந்தியாவெங்கும் தொழிலாளர்கள் தம் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர் என்று விளக்கிப் பேசினார்.

இதைத் தொடர்ந்து ஃபோர்டு தொழிற்சங்கத்தின் தலைவர் தோழர் சுரேஷ், உரையாற்றினார். தொழிலாளர்களுடைய பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் மென்மேலும் மோசமடைந்து வருகின்றன. அதற்கு முடிவு கட்ட வேண்டுமானால் தொழிலாளர்கள் நாம் ஒன்றுபட வேண்டும். ஃபோர்டு நிறுவனம் மூடப்பட உள்ளது என்பதும், 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் நாடறிந்த உண்மையாகும். எங்களுடைய இந்த வாழ்வாதாரப் பிரச்சனை குறித்து நாங்கள் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். 5000 தொழிலாளர்கள் நேரடியாகவும், சார்பு தொழிற்சாலைகளைச் சேர்ந்த 22,000-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் நிர்வாகம் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வில்லை. எங்களுக்கு வேலை தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டுமென்பது எங்களுடைய முதன்மையான கோரிக்கையாகும். ஃபோர்டு தொழிற்சாலையை டாடா நிறுவனம் எடுத்துக் கொள்ளும் என்பது போன்ற செய்திகள் வருகின்றன. எந்த இழப்பீடோ, தீர்வுத் தொகையோ எங்களுடைய வேலையை ஈடு செய்ய முடியாது. இந்த பெருந்தொற்று நோய்க் காலத்தில் ஏற்கெனவே வேலையில் இருக்கும் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டும், உரிமைகள் மறுக்கப்பட்டும் வரும் சூழலில், எங்களுக்கு வேறு வேலை கிடைப்பதென்பது குதிரைக் கொம்பே ஆகும். அரசாங்கமும், நீதி மன்றங்களும், நமது சட்டங்களும் முதலாளிகளுக்கு சாதகமாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவுமே செயல்பட்டு வருகின்றன. அண்மை ஆண்டுகளில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வீதிகளில் எறியப்பட்டு வருகின்றனர். அரசாங்கத்தின் எந்த அனுமதியின்றி ஃபோர்டு தொழிற்சாலையை மூடப்போவதாக நிர்வாகம் அறிவிக்கிறது. மிகுந்த மன உளச்சலோடு, தொழிலாளர்கள் இதுவரை தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். வேறு ஒரு நிறுவனத்திற்கு வேலை மாற்றப்படும் என்று எதிர்பார்த்து அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென நாங்கள் கோரி வருகிறோம். இது வரை எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கவில்லை. எனினும் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். நிரந்திரத் தொழிலாளர்களுக்கு வேலை உட்பட பல பாதுகாப்புகள் இருப்பதாக சட்டம் கூறுகிறது. நாங்கள் ஃபோர்டின் நிரந்தரத் தொழிலாளர்கள் தான். ஆனால் எங்களுடைய இன்றைய நிலை, நிரந்தரத் தொழிலாளர் என்பதற்கு எந்தப் பொருளும் இல்லை என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது. சில நாடுகளில் வேலை இல்லாதவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவில் வேலை இழந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி அவர்களுடைய குடும்பங்களும் வீதிக்கு வர வேண்டிய அவல நிலை உள்ளது. வேலை இழந்தால், தொழிலாளர்கள் வாங்கிய கடன்களைத் திருப்பிக் கட்ட முடியாமல் மிகக் கொடுமையான சூழ்நிலைக்கு ஆளாவார்கள். இன்று போர்டு தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை நாளை பிற தொழிலாளர்களுக்கும் ஏற்படலாம்.

நம்மிடையே வேற்றுமைகளும் பிளவுகளும் நீடிக்கும்வரை, முதலாளிகள் எவ்விதக் கவலையுமின்றி நம்மை ஒட்டச் சுரண்டுவதன் மூலம், மிகவும் மகிழ்ச்சியோடு இலாபம் சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட பெரும் நிறுவனங்களை எதிர்த்துப் போராடவும், நம்முடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வேண்டுமானால், தொழிலாளர்கள் நாம் ஒன்றுபட்டு ஓரணியில் நின்றுப் போராட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

பின்னர் ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் தொழிற் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜி குமார் உரையாற்றினார். ஃபோர்டு தொழிலாளர்களின் நியாயமான போராட்டம் வெற்றி பெற ரெனால்ட் நிசான் தொழிலாளர்கள் எப்போதுமே ஆதரவராக உடனிருப்போம். 2019 இல் எங்களுடைய சங்கத்தைத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்தனர். தற்போது டெக்னிஷியன்களை பணியாளர்களாக மாற்றுவது, மற்ற மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் இடம் மாற்றப்படுவது என 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது ஊதிய உயர்வு, மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. அது குறித்தும் பேச்சு வார்த்தை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. எங்களுடைய தொழிற் சங்கத்தின் மூலம் தொழிலாளர்கள் நாங்கள் எங்களுடைய பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முயற்சி செய்து வருகிறோம். தொழிலாளர்களுடைய பிரச்சனைகள் மட்டுமின்றி, நமது நாட்டில் பல்வேறு பொதுப் பிரச்சனைகள் இருக்கின்றன. தொழிலாளர் விரோத சட்டங்கள், டீசல் – பெட்ரோல் விலை உயர்வு, நீட் தேர்வு, போன்ற பொது மக்களுடைய பிரச்சனைகளையும் தொழிலாளர்கள் நாம் முன்னெடுத்துப் போராட வேண்டும் என்று கூறி தன் உரையை முடித்துக் கொண்டார்.

அடுத்து ஓசூர் அசோக் லேலண்டு யூனிட் 1 தொழிற் சங்கத்தினுடைய பொதுச் செயலாளர் தோழர் ஆர். குமரேசன் அங்கு தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து உரையாற்றினார். அசோக் லேலண்டில் நிரந்த வேலை படிப்படியாக அகற்றப்பட்டு பயிற்சித் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என பல்வேறு பெயர்களில் தற்காலிக தொழிலாளர்களாக மாற்றப்பட்டு வருகிறது. சட்டமும் அரசாங்கமும் முதலாளிகளுடைய இந்த அநீதியான நடவடிக்கைக்கு துணை நிற்கிறார்கள். முன்பு தொழிலாளர்களுடைய குடும்பத்தினருக்கு நிறுவனத்தில் வாரிசு வேலை கொடுத்து வந்ததும், தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இவ்வாறு நிரந்த வேலை பறிக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தம் என்ற பெயரில் தொழிலாளர்களுக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்புகளும், போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளும் நசுக்கப்படுகின்றன. இவற்றிற்கு எதிராகவும், நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் போன்ற கோரிக்கைகளையும் அசோக் லேலண்டுத் தொழிலாளர்கள் முன்னெடுத்தோம். கல்வி, ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்பு போன்ற பல உரிமைகளை எங்களுடைய தொழிற் சங்கத்தின் மூலம் தொழிலாளர்கள் நாங்கள் போராடிப் பெற்றோம். ஆனால் இந்த உரிமைகள் அனைத்தும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு எங்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றன. வாகனத் தொழில் துறையில் ஏற்பட்டு வரும் பெட்ரோல் – எரிவாயு, மின்சாரம் மற்றும் தானியங்கி, ரோபாடிக்ஸ் என்பன போன்ற தொழில் நுட்ப மாற்றங்கள் காரணமாக மிக அதிகமான எண்ணிக்கையில் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு வருகிறது. நிரந்தர வேலையை அதிகப்படுத்த வேண்டுமென்றும், உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். கொரோனா சூழ்நிலையில் நாங்கள் எங்களுடைய ஒற்றுமையின் மூலம் சில சலுகைகளைப் பெற்றுள்ளோம். வாகனத் தொழில் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் தற்காலிகத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், அவர்களுடைய ஊதியம், பணிபாதுகாப்பு, மற்ற பயன்கள் குறித்தும் சரியான விவரங்களை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய வழிக் கூட்டங்களை நாம் நடத்துவது போலவே, தற்காலத்திற்கு ஏற்ப தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய போராட்ட வடிவங்களையும், செயல்முறைகளையும் நாம் ஏற்படுத்த வேண்டும். தொடர் இணையவழிக் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகளை நடத்துவதன் மூலம் தொழிலாளர்களிடையே ஒரு போராட்ட ஒற்றுமையைக் கட்டியமைப்பதோடு, பொது மக்களுடைய ஆதரவையும் திரட்ட நாம் வேலை செய்ய வேண்டும். வங்கி, காப்பீடு, இரயில்வே, அரசுப் பணியாளர்கள், மருத்துவத் துறையில் பணி புரிபவர்களுடைய போராட்டங்களுக்கு, வாகனத் துறையில் வேலை செய்யும் நாம் எந்த வகையில் ஆதரவு தெரிவிக்கப் போகிறோம்? அப்படிப்பட்ட ஒருங்கிணைப்பு மட்டுமே வருங்காலத்தில் தொழிலாளர்களை மேலும் வலுப்படுத்தி நம்முடைய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும். அதன் மூலம் நாம் ஏற்கெனவே பெற்ற உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், முதலாளிகளின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடவும், மேலும் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் முடியும் என்று கூறி தொழிலாளர் ஒற்றுமையை தோழர் குமரேசன் வலியுறுத்தினார்.

ஹுண்டாய் நிறுவனத்தின் தொழிற் சங்கத் தலைவர் தோழர் வினாயகம். எங்கள் நிறுவனத்தில் ஊதிய உயர்வு பற்றிய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. பல நிறுவனங்களில், வேலை இழப்புக்களும், நிரந்தரத் தொழிலாளர்களை நீக்கிவிட்டு பயிற்சித் தொழிலாளர்களை வேலையில் அமர்த்தும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்திலும் நிரந்தரத் தொழிலாளர்களுடைய எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதை எதிர்த்து நாங்கள் பல்வேறு வழிகளிலும் போராடி வருகிறோம். அரசாங்கம் இதில் தலையிட்டு எத்தனை விழுக்காடு பயிற்சித் தொழிலாளர்களை அனுமதிக்கலாம் என்றும் அவர்களுடைய ஊதியம் நிரந்தரப் பணியாளர்களின் ஊதியத்தில் குறைந்த பட்சமாக 70 விழுக்காடாக இருக்க வேண்டும் என்பன போன்ற விதி முறைகளை அறிவித்து, தொழிலாளர்களுடைய உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். சிரிபெரும்புதூர் பகுதியில் பெரும்பாலான தொழிற்சாலைகளில், 10 சதவிகிதம் கூட நிரந்தரத் தொழிலாளர்கள் இல்லாமல் தொழிலாளர்கள் கடுமையாக சுரண்டப்படுகிறார்கள். இங்கு பயிற்சித் தொழிலாளர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்களும் அதிக எண்ணிக்கையில் வைத்து கடுமையாக சுரண்டப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையை எதிர்த்து எல்லா தொழிற்சங்கங்களும் போராட்டங்களை மேற்கொண்டால் நாங்களும் அதில் கலந்து கொள்ளத் தயாராக உள்ளோம். அதிக உற்பத்தி செய்யும் பொது கொள்ளை இலாபம் ஈட்டும் நிறுவனங்கள், உற்பத்தி குறையும் போது, தொழிலாளர்களுடைய ஊதியத்தை வெட்டி தங்களுடைய இலாபத்தைப் பாதுகாத்துக் கொள்கின்றன. தொழிலாளர்களுடைய நலத்தை எந்த நிறுவனமும் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அரசாங்கமே தொழிலாளிகளைப் புறக்கணித்து பெரும் முதலாளிகளுடைய நலன்களுக்காக செயல்படுகின்ற சூழ்நிலையில் நிலவுகிறது. இதற்கான மாற்று குறித்து தொழிலாளர்கள் நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.

அடுத்து வி.எச்.எஸ் மருத்துவமனை தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் மணிதாசன் உரையாற்றினார். வாகனத் தொழிலாளர்கள் மட்டுமின்றி நாடெங்கிலும் உள்ள எல்லாத் தொழிலாளர்களுமே மிக மோசமான நிலையைச் சந்தித்து வருகிறார்கள். தொழிலாளர்களுக்கு ஆதரவாக சில சட்டங்கள் இருந்தாலும், நடைமுறையில் தொழிலாளர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. 240 நாட்களுக்கு மேல் தொடர்ந்து வேலை செய்து வருபவர்கள் நிரந்தரமாக ஆக்கப்பட வேண்டுமென சட்டம் இருந்தும் இது நடைமுறைபடுத்தப்படுவதில்லை. முதலாளி வர்க்கத்திற்கு சேவை செய்வதையே அரசாங்கம் தன்னுடைய கடமையாக கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர் நலச் சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தொழிலாளர் விரோத 4 தொகுப்புச் சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை மனுவை தமிழக முதல்வருக்கு அனுப்பியிருந்தேன். அது குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்த பட்ச ஊதியம் குறித்து சட்டம் இருந்தாலும் அதன் பலன் பெரும்பாலான தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை. மருத்துவமனைத் தொழிலாளர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நாங்கள் பலமுறை போராடி வந்திருக்கிறோம். வி.எச்.எஸ் மருத்துவமனையில் ஒரு நீண்ட போராட்டத்தின் மூலம் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்ததற்குப் பின்னரே எங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நம்முடைய போராட்டங்களுக்கு ஆதரவாக மக்களையும் அணி திரட்ட வேண்டும். தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.

பெண் தொழிலாளர்கள் கடுமையாக சுரண்டப்படுவதற்கு எதிராக கூட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண் தோழர் மரகதம் குரலெழுப்பினார். சுமங்கலி திட்டம் என்ற பெயரிலும் பல்வேறு மோசமான திட்டங்கள் மூலமாகவும் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் மிகக் கொடூமாக சுரண்டப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி, அதை வன்மையாகக் கண்டித்தார்.

சிஓஐடியில் இணைந்திருக்கும் 108 ஆம்பலன்சு தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் இராஜேந்திரன் தன்னுடைய உரையில் “இளைஞர்களை வேலைக்கு எடு, கசக்கிப் பிழி, தூக்கி எறி” என்பது தான் முதலாளி வர்க்கத்தின் நோக்கமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். மருத்துவத் துறையில் வேலை செய்யும், ஆம்புலன்சு தொழிலாளர்கள், செவிலியர்கள், உதவிப் பணியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து வேலை செய்து வருகிறோம். கல்வி, மருத்துவம், பொது சுகாதாரம் அனைத்தும் தனியார்மயப்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. நாம் பல்வேறு துறைகளில் வேலை செய்தாலும், தொழிலாளர்கள் அனைவரும் கடுமையாக சுரண்டப்படுகிறோம். இந்த அநீதிக்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து போராடுவதன் மூலம் இந்த அமைப்பைத் தூக்கியெறிவதற்கு நாம் தயாராக வேண்டும். அதற்காக நாங்கள் முழு பங்களிப்பை அளிக்கத் தயாராக நாங்கள் இருக்கிறோம், என்று அவர் உறுதியளித்தார்.

பின்னர் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத் தோழர் பாஸ்கர், கூட்டத்தில் உரையாற்றிய தொழிலாளர் தலைவர்களுடைய கருத்துக்களைத் தொகுத்துக் கூறினார். இன்று தொழிலாளர்களுக்கு வேலை நிரந்தரம், வேலைப் பாதுகாப்பு, சட்டப் பாதுகாப்பு போன்றன மறுக்கப்பட்டு வருகிறது. நமது குடும்பத்தினரையும், ஒட்டு மொத்த சமுதாயத்தையும் நம்முடைய போராட்டத்தில் ஒருங்கிணைக்க வேண்டும். தொழிலாளர்களை அரசியல்படுத்த வேண்டும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் போராட்டத்தின் முன்னணியில் தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும். தங்களுடைய வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக போர்டு தொழிலாளர்களும், மற்ற தொழிலாளர்களும் மேற் கொள்ளும் போராட்டம் நம் அனைவருடைய போராட்டம் என்ற கருத்தோடு நாம் பங்கேற்க வேண்டும். “ஒருவர் மீது தாக்குதல் – அனைவர் மீதும் தாக்குதல்” என்ற அடிப்படையில் நாம் போராட வேண்டும்.

மார்ச் 28, 29 பொது வேலை நிறுத்தத்தை நாம் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும். 8-மணி நேர வேலை என்பது காகிதத்தில் மட்டுமே இருக்கிறது.

ஆட்சி அதிகாரத்திற்கு கட்சிகள் பல மாறி மாறி வந்தாலும், தொழிலாளர்களுடைய நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. பெரும் முதலாளிகள் தீர்மானிக்கும் திட்டங்களை, அதிகாரத்திற்கு வரும் கட்சிகள் செயல்படுத்துகின்றன. எனவே நாம் இந்த அமைப்பை மாற்றுவதற்கு இணைந்து செயல்பட வேண்டும். நம் தொழிலாளர்களிடையே ஒரு விழிப்புணர்வை உருவாக்கி நாம் இந்த சமுதாயத்தை மாற்றியமைக்க முன்வருவோமென்று கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *