கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போர்க்கொடி

கீழ் பவானி திட்ட கால்வாய், பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படுள்ள பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் 200 கிமீ நீளமுடைய பாசன வாய்க்காலாகும். இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. இக்கால்வாயின் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒரு பகுதி நிலம் நேரடிப்பாசனம் பெறும்போது, கால்வாய்க்கு அருகிலுள்ள மற்ற பாசன நிலங்களுக்கும் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மூலமாக அங்குள்ள கிணறுகளுக்கு நீர் கிடைத்து விடுகிறது. இதனால் 1,03,500 ஏக்கர் நிலங்கள் மறைமுகப் பாசனம் பெறுகின்றன.

இதுபோக 38 உரம்பு நீர் – கசிவு நீர் பாசனம் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. தலைமைக் கால்வாய்க்கு வலதுபுறம் தடை செய்யப்பட்ட தூரத்திற்கு அப்பால் கிணறுகள் வெட்டி 60 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகின்றன. இதிலிருந்து வடியும் நீர் கொடிவேரிப் பாசனத்துக்கும், காலிங்கராயன் பாசனத்துக்கும், காவிரியிலும் கலந்து பாசன நீராகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றிலிருந்து வெளியேறும் நீர் காவிரியில் கலந்து டெல்டா மாவட்டங்களுக்குப் பாசன நீராகிறது. மேலும் ஒரு பகுதி நீர் வீராணம் ஏரிக்கும், அங்கிருந்து சென்னைக்கு குடிநீராகவும் செல்கிறது. இவ்வாறு கீழ்பவானி தற்போதைய கால்வாய் ஒரு மழை நீர் அறுவடைத் திட்டமாகவும் செயல்படுகிறது.

கடந்த 2013-ல் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டது. பாசனப் பயனாளிகளின் எதிர்ப்பு மற்றும் எழுச்சி காரணமாக இந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது. தற்போது கீழ்பவானி வாய்க்காலின் கடைமடை வரை கால்வாய் நீர் சென்று சேருவதை உறுதி செய்வதற்காக என்று சொல்லி கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு அறிவித்து வேலை செய்து வருகிறது.

கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு என்ற பெயரில் ரூ.710 கோடி நபார்டு வங்கி கடன் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கமும், விவசாயிகளும், அப்பகுதியில் வாழும் மக்களும் கடுமையாக எதிர்த்து ஆர்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக விவசாயிகள் குடும்பத்தினருடன் பங்கேற்கும் விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழல் பாதுகாத்திட கீழ்பவானி பாசன கால்வாயின் கான்கிரீட் திட்டத்தை கைவிடக்கோரி கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 24-4-2022 அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.

 

 

 

மாநாட்டில் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் துளசிமணி, கே.வெங்கடாசலம், கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் செ.நல்லசாமி, தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் ஈ.வீ.கே. சண்முகம், தமிழக விவசாயிகள் சங்க செயலாளர்கள் த.கனகராஜ், மு.ரவி, ஏ.கே.சுப்பிரமணியம், இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் மே.கு. பொடாரன், சிறு குறு விவசாயிகள் சங்கத்திலிருந்து சுதந்திரதாசு, திமுக-வின் சுற்றுச்சூழல் குழுவின் மாநிலச் செயலாளர் சிவகார்த்திகேய சேனாதிபதி, பவானிசாகர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம் மற்றும் பல்வேறு பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். இந்தக் கால்வாயில் கான்கிரீட் போடப்பட்டால், கீழ்பவானி பகுதியிலுள்ள விவசாய நிலங்களும், மக்களுடைய நீராதாரமும் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பை உருவாக்கும் என்பதை அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.  நவீனமயமாக்கல் என்ற பெயரில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள், நொய்யல் ஆற்றை சீரழித்துக் கொன்றிருக்கிறது.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால், வாய்க்காலில் செல்லும் கசிவு நீர் மூலம், பாசனம் பெறும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள், நீர் ஆதாரம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல், பாலைவனமாகும் சூழ்நிலை உள்ளது. தென்னை, வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட நீண்ட காலப் பயிர்கள் பாதிக்கப்படும் எனவும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர். கான்கிரீட் போடுவதற்காக 12,000-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி அகற்றுவதும் இயற்கைச் சூழலை பெரிதும் பாதிக்கும்.

முக்கிய கால்வாய், கிளை கால்வாய்களை தூர்வாரும் வழக்கத்தை கைவிட்டுவிட்ட நீர்வள ஆதாரத்துறையின் செயலால் கடைமடைக்கு நீர் செல்வதில் சிரமம் இருக்கிறது. பழுதடைந்துள்ள மழைநீர் வடிகால் பாலங்களையும், மதகுகளையும், கொப்புகளையும் அரசாங்கம் முறையாக சீரமைப்பதும் இல்லை. கால்வாய்களை தூர் வாருவதற்கும் பராமரிப்பதற்கும் அரசு ஒதுக்கும் நிதியில் மூலம் ஆண்டுதோறும் தவறாமல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ஊழல் பாசன சபை நிர்வாகிகளும் தங்களது பைகளை நிரப்பிக் கொள்கிறார்கள்.

மண் அணை இருந்தால் கடைமடைக்கு தண்ணீர் செல்லாது என்று கான்கிரீட் போடுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்காலில் கசிவு மூலம் நீர் இழப்பு ஏற்படுவதாக கூறி முழுவதும் வாய்கால்களில் கான்கிரீட் போட்டனர். ஆனால் இப்போது அங்கு நீர் இழப்பு அதிகமாகி இருக்கிறது. கடைமடை விவசாயிகளுக்கு முன்பு கிடைத்த தண்ணீர் கூட தற்போது கிடைப்பதில்லை. இவ்வாறு அதிகாரிகள் தங்கள் தவறை மறைக்க, விவசாயிகள் மீது பிரச்சினையை திசை திருப்புகிறார்கள் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது.

நீரை வணிகமாக மாற்ற வேண்டும், தண்ணீர் பயன்பாட்டிற்கு மக்களிடமிருந்து கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும் என்கிற உலக வங்கியின் சூத்திரத்திற்கு ஏற்ப பாசனத்திற்கும், மக்களுக்குமான நீரைக் குறைத்து, தனியார் பெரு நிறுவனங்களுக்கு நீரை தாரை வார்க்க திட்டமிட்டு படிப்படியாக செயலாற்றி கொண்டிருக்கிறார்கள், அதன் முதல் படி தான் கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டம் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

“மண் வாய்க்கால் மக்களுக்காக, கான்கிரீட் போடுவது கமிஷனுக்காக” என்று கவனயீர்ப்பு கோரிக்கை மாநாட்டில் பங்கேற்றவர்கள் தெளிவுபடுத்தினர்.

கீழ்பவானி வாய்க்கால் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறும் எல்லா விவசாய நிலங்களுக்கும் நீர் ஆதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். கடைமடை விவசாய நிலங்களுக்கு நீரை உறுதி செய்வது என்ற பெயரில் ஆண்டாண்டு காலமாக இந்த வாய்க்காலின் மூலம் பாசன வசதி பெற்றுவரும் மற்ற விவசாயிகளுக்கு அவசியமான நீரை மறுப்பது நியாயமல்ல. எனவே கீழ்பவானி வாய்க்கால் மூலம் பயனடையும் விவசாயிகளை, இடைநிலை என்றும், கடைமடை என்றும் பிளவுபடுத்தி அவர்களை மோத விடும் நோக்கத்தைத் தமிழக அரசாங்கம் கைவிட வேண்டும். தமிழக அரசு வாய்க்காலில் கான்கிரீட் தளம் போடும் திட்டத்தை உடனடியாக நிறுத்தி விட்டு, எல்லா விவசாய நிலங்களுக்கும் தேவைப்படும் பாசன நீரை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இயற்கையாகவே நீரை சேகரிப்பதாகவும், நிலத்தடி நீரை செறிவூட்டுவதாகவும் அமைந்து வெகுவாகப் பயன்பட்டு வரும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதன் மூலம் தமிழக அரசு பரப்புரை செய்துவரும் மழைநீர் சேகரிப்புத் திட்டம், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது போன்றவற்றை ஒழித்துக் கட்ட அரசாங்கமே முனைகிறது.

இன்னொரு பக்கம், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சி மிக்க பகுதிகளின் நிலத்தடி நீர் செறிவூட்டவும், குடி நீர் வழங்குவதற்காகவும் என்று கூறி அத்திக்கடவு அவினாசி திட்டம் ரூ 1800 கோடி ரூபாய் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டு வருவது அரசாங்கத்தின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

கடைமடை பாசன நிலங்களுக்கு நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே கான்கிரீட் தளத்திட்டத்தைக் கொண்டு வருவதாக கூறும் அரசாங்கம், அந்தப் பகுதியில் எத்தனை புதிய ஏரிகளையும் குளங்களையும், நீர் நிலைகளையும் உருவாக்கியிருக்கிறார்கள்? மாறாக தமிழக அரசு, ஏற்கெனவே இருக்கும் நீர்நிலைகளை ஒழித்துக்கட்டியும், மாசுபடுத்தி வேளாண்மைக்கும் மக்கள் தேவைகளுக்கும் பயன்பட முடியாத வகையில் சீரழித்தும் வருவதைப் பார்க்கலாம்.

அண்மைக் காலத்தில் தமிழகத்தில் தேவைக்கும் அதிகமான அளவிலே மழை பெய்திருக்கிறது. ஆயினும் தமிழக அரசு, அறிவியல் அடிப்படையில் நிலத்தின் ஏற்ற இறக்கங்களையும், நீர் வழிப் பாதைகளையும் சரிவர ஆராய்ந்து, நீர்நிலைகளை முறையாகத் தூர்வாரி, நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தி வைக்காத காரணத்தால் பெரும்பாலான மழை நீர் பல இடங்களில் விவசாயிகளுடைய பயிர்களை வெள்ளத்தில் மூழ்கடித்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை உருவாக்கி இருப்பதோடு, மக்கள் குடியிருப்புப் பகுதிகளை மூழ்கடித்தும், மிகுதியான நீர் கடலில் சென்று வீணாகக் கலந்தும் வருகிறது. இந்த நிலை அரசாங்கத்தின் பொறுப்பற்ற, திட்டமற்ற போக்கைக் காட்டுகிறது.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் போடும் திட்டத்தை முன்வைத்து அப்பகுதியிலுள்ள விவசாயிகளைப் பிளவுபடுத்தவும், கட்டுமான நிறுவனங்களுக்கு இலாபத்தை ஏற்படுத்தவும் ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகளுடைய இந்த ஒன்றுபட்டப் போராட்டம் வெற்றிபெரும் என்பது உறுதி.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *