மக்கள் அதிகாரம் பெறுவதற்கான ஆயத்தக் குழு நிறுவப்பட்டு 29 ஆண்டுகள் நிறைவு :

இந்திய சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மக்கள் அதிகாரம் பெறுவது அவசியம்

இருபத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 11, 1993 அன்று, கம்யூனிஸ்டுகள் மற்றும் பிற அரசியல் ஆர்வலர்கள், தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் , பெண்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் ஒன்றிணைந்து புதுதில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள் அதிகாரம் பெறுவதற்கான தயாரிப்புக் குழுவை (Preparatory Committee for Peoples Empowerment  – CPE) நிறுவினர்.

ஆளும் வர்க்கத்தின் இரு முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வால் 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இந்தக் கட்சிகளால் நடத்திய பரவலான வகுப்புவாத வன்முறைகள், தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மக்களுக்கு அதிகாரம் இல்லை என்பதைக் காட்டின.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியும் இரு துருவ உலகப் பிரிவு முடிவுக்கு வந்ததும் ஒரு புதிய காலகட்டத்திற்கு வழிவகுத்த நேரம் அது. இருபதாம் நூற்றாண்டில் தொழிலாளி வர்க்கம் மற்றும் மக்களுடைய அனைத்து சாதனைகளுக்கும் எதிராக உலக ஏகாதிபத்திய முதலாளி வர்க்கம் அனைத்து பக்க தாக்குதலையும் தொடங்கியிருந்தது.

நமது நாட்டின் ஆளும் முதலாளி வர்க்கம், முந்தைய காலத்தில் தனக்குச் சேவையாற்றிய பழைய நேருவிய “சோசலிச சமூக அமைப்பை” உதறித் தள்ள முடிவு செய்துவிட்டு, தாராளமயம், தனியார்மயம் மூலம் உலகமயமாக்கலின் போக்கைத் தொடரத் தொடங்கிய காலம் அது. இந்த மக்கள் விரோத மற்றும் தேச விரோத போக்கை எதிர்த்து தொழிலாளி வர்க்கமும், விவசாயிகளும், பெண்களும், இளைஞர்களும் தெருக்களில் இறங்கினர். இந்தச் சூழ்நிலையில், ஆளும் வர்க்கம், தனது நிகழ்ச்சி நிரலைத் திணிப்பதற்காகவும், மக்களின் போராட்டங்களை இரத்தத்தில் மூழ்கடிப்பதற்காகவும் கலவரத்தையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டனர்.

பிப்ரவரி 22, 1993 அன்று, பேரணிகளுக்கு மத்திய அரசு விதித்திருந்த தடையை மீறி, தில்லி ஃபெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பேரணி நடத்தப்பட்டது. தொழிலாளர் ஒற்றுமை இயக்கமும், பல்வேறு பெண்கள் அமைப்புகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்து இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். பேரணியானது மனசாட்சி உள்ள அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் தொலைநோக்கோடு வேண்டுகோள் விடுத்தது. அரசியலை குற்றமயமாக்குவதையும், அரசியல் அதிகாரத்தில் இருந்து மக்கள் ஓரங்கட்டப்படுவதையும் முடிவுக்குக் கொண்டுவர அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று அது அழைப்பு விடுத்தது. நாடு முழுவதும் உள்ள மனசாட்சி கொண்ட ஆண்களும் பெண்களும் இந்த வேண்டுகோளில் கையெழுத்திட்டனர்.

மக்கள் அதிகாரத்திற்கான தயாரிப்புக் குழு (CPE) நிறுவப்பட்டது, இந்திய சமூகம் மூழ்கியிருந்த அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை, அரசியல் அதிகாரத்திலிருந்து மக்கள் ஓரங்கட்டப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்ற உண்மையை அங்கீகரிப்பதாகும். தற்போதைய பாராளுமன்ற அமைப்பு மற்றும் அதன் அரசியல் செயல்முறையில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஒரு பரந்த விவாதத்தை மக்கள் அதிகாரத்திற்கான குழு தொடங்கியது. வகுப்புவாத வன்முறைக்கு எதிராகவும், மனித உரிமைகள் மற்றும் சனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் நடத்தப்பட்ட போராட்ட அனுபவத்தை அது தொகுத்துரைத்தது. இந்த விவாதங்கள், தற்போதுள்ள சனநாயக அமைப்பும் அதன் அரசியல் வழிமுறையும் அடிப்படையில் தவறானவை என்ற முடிவுக்கு இட்டுச் சென்றன.

தற்போதுள்ள அமைப்பு பற்றிய விமர்சன பகுப்பாய்வு, இந்திய அரசியல் சட்டம், ஒரு சிறிய குழுவாகிய பாராளுமன்றத்திலுள்ள உயர்மட்ட அமைச்சரவையின் கைகளில் இறையாண்மையை வைத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வழிவகுத்தது. இந்த பாராளுமன்ற அமைச்சரவைக் குழுவின் ஆலோசனையை குடியரசுத் தலைவர் பின்பற்ற வேண்டிய கடமை உள்ளது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆளும் வர்க்கத்தின் போட்டிக் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏதாவதொரு வேட்பாளருக்கு வாக்களிப்பது மட்டுமே தற்போதைய அமைப்பில் மக்களின் பங்காக உள்ளது. தேர்தல் முடிவுகள் முதலாளித்துவ வர்க்கத்தால் பணம், குண்டர் மற்றும் ஊடக பலத்தின் மூலமாகவும், தேர்தல்களில் நேரடி மோசடிகளை நடத்துவதன் மூலமும் தீர்மானிக்கப்படுகின்றன. வாக்களித்த பிறகு, ஆளுமையில் மக்களுக்கு வேறு எந்தப் பங்கும் இல்லை. முதலாளி வர்க்கம் தீர்மானித்த நிகழ்ச்சி நிரலே அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பில் உள்ள கட்சியால் செயல்படுத்தப்படுகிறது. இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, முடிவெடுக்கும் செயல்முறையின் மையத்திற்கு மக்களைக் கொண்டு வரத் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் இறையாண்மையை மக்களுக்கு வழங்க வேண்டும்.

அனைத்துத் தரப்பு ஆண்களும் பெண்களும் மக்கள் கைகளில் அதிகாரத்தைக் கொண்டு சேர்க்கும் பணியை தங்கள் சொந்த பணியாகவே எடுத்துக் கொண்டனர். மக்கள் கைகளில் அதிகாரத்தை கொண்டு சேர்க்கும் இயக்கத்தை தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் தற்போதைய அமைப்பில் ஒதுக்கி வைக்கப்பட்ட மற்றும் அதிகாரத்தை இழந்து நிற்கும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பெரும்பான்மையான மக்கள் திரள் இயக்கமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை 1999 சனவரி இல் மக்களாட்சி இயக்கம் (லோக் ராஜ் சங்கதன்) நிறுவப்பட்டது பிரதிபலிக்கிறது.

கடந்த 29 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், மக்கள் அதிகாரம் பெறுவதற்கான போராட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான அவசரத் தேவையைத் தான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

நம் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் உரிமைகளுக்காக வீரம் மிக்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அனைவரின் வாழ்வாதாரத்திற்கும் பாதுகாப்பையும், சமூக பாதுகாப்பையும் கோருவதோடு, தனியார்மய – தாராளமயமாக்கல் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரி வருகின்றனர். அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் லாபகரமானதாக ஒரு குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் கூடிய ஒரு பொதுவான கொள்முதல் அமைப்பை நிறுவ வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். கல்வி, சுகாதாரம், மின்சாரம், பொதுப் போக்குவரத்து ஆகியவை பொதுச் சேவைகளாகக் கருதப்பட வேண்டும் என்றும், அவற்றை அனைவருக்கும் வழங்குவது அரசின் கடமை என்றும் மக்கள் விரும்புகிறார்கள்.

காஷ்மீரிகள், அசாமியர்கள், மணிப்பூரிகள், நாகாக்கள் மற்றும் இந்தியாவின் அங்கமாக விளங்கும் பிற தேசங்களும் மக்களும் தங்களுடைய மொழி, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை மதிக்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கைக்காக ஏங்குகிறார்கள். அவர்கள் இராணுவப் படைகளின் காலடிகளின் கீழ் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை விரும்பவில்லை.

பழைய தடைகளையும், கட்டுப்பாடுகளையும் உடைத்துக் கொண்டு, பாலியல் துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக பெண்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அவர்கள் பெண்கள் என்ற அடிப்படையிலும், மனிதர்களாகவும் தங்கள் உரிமைகளைக் கோருகிறார்கள்.

மதத்தின் அடிப்படையிலான பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் விரும்புகிறார்கள். அனைவருக்கும் மனசாட்சிக்கான உரிமையை உத்தரவாதப்படுத்துகின்ற, வகுப்புவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறையை கட்டவிழ்த்து விடுபவர்களை தண்டிக்கின்ற ஒரு அரசு மற்றும் அமைப்புக்காக அவர்கள் ஏங்குகிறார்கள். மக்களை ஒடுக்கி, மனித ஆளுமையை இழிவுபடுத்தும் வெறுக்கப்படும் சாதி அமைப்புக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால், தற்போதுள்ள அமைப்பில், மக்கள் தங்களுடைய எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண வழி இல்லை என்பதே உண்மை.

இந்திய சமூகம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளும் ஆணிவேரானது, முதலாளி வர்க்க ஆட்சியிலும், சுரண்டப்படும் பெரும்பான்மை மக்களை அதிகாரத்தில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதிலும் உள்ளன. முக்கிய உற்பத்தி சாதனங்களை, முதலாளித்துவ ஏகபோகக் குடும்பங்கள் தலைமை தாங்கும் முதலாளி வர்க்கம் கட்டுப்படுத்துகிறது. செயலாக்கத்துறை, சட்டமன்றம், நீதித்துறை, முதலாளி வர்க்கத்தின் பாராளுமன்றக் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் என அரசின் அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த உதவுகின்றன. இந்த ஆட்சியை சட்டப்பூர்வமாக ஆக்குவதற்கு அவ்வப்போது நடத்தப்படும் தேர்தல்கள் உதவுகின்றன.

மற்ற நாடுகளின் ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்துடன் கூட்டாகவும், போட்டியிட்டும், இந்திய முதலாளி வர்க்கம், அதி வேகமாக தன்னைச் செழுமைப்படுத்திக் கொள்ளும் போக்கைப் பின்பற்றி வருகிறது. இதை நோக்கி, தொழிலாளர்களைச் சுரண்டுவதையும், விவசாயிகளைக் கொள்ளையடிப்பதையும், மக்களின் இயற்கை வளங்களைச் சூறையாடுவதையும் தீவிரப்படுத்துகிறது. வகுப்புவாதமும் வகுப்புவாத வன்முறையும், சாதிப் பிரிவுகளும் ஒடுக்குமுறையும், தேசிய ஒடுக்குமுறையும், பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவை, எல்லா வழிகளிலும் மக்களைச் சுரண்டுவதையும் ஒடுக்குவதையும் தீவிரப்படுத்த முதலாளி வர்க்கத்திற்கு உதவுகின்றன.

மக்கள் சந்தித்துவரும் பிரச்சனைகள் அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொள்கைகளால் உருவாகின்றன என்றும், அரசாங்கத்தை நடத்துவதற்கு வேறு ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் மக்களிடம் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. இது ஒரு அப்பட்டமான பொய்யாகும். நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகளை, ஆளும் வர்க்கமான முதலாளி வர்க்கம்தான் தீர்மானிக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சிகள் இந்தக் கொள்கைகளை வெறுமனே செயல்படுத்துகின்றன.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது முதலாளி வர்க்கம் ஆட்சி நடத்துவதற்கும், அதனுடைய ஆட்சியை சட்டப்பூர்வமானதாக ஆக்கிக் கொள்வதற்கும், பல கட்சி பிரதிநிதித்துவ சனநாயக அரசியல் அமைப்பே முதலாளி வர்க்கத்திற்கு மிகவும் விருப்பமான அமைப்பாகும் என்பதை தொழிலாளர்களும், விவசாயிகளும் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான கருத்தாகும். தற்போதைய அமைப்பில் செயலாக்கத் துறை தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்களல்ல. சட்டங்களையும், கொள்கைகளையும் தீர்மானிப்பதில் மக்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை. தேர்தலுக்கான வேட்பாளர்கள் கட்சிகளால் தீர்மானிக்கப்படுகிறார்கள்; வேட்பாளராக யார் இருக்கலாம், யார் இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்வதற்கும் மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பணி திருப்திகரமாக இல்லாதவர்களை திரும்ப அழைக்க வாக்காளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

முதலாளி வர்க்கம், அதன் பணபலத்தின் மூலமாகவும், அரசு இயந்திரத்தின் மீதான தனது கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி மோசடிகள் செய்வதன் மூலமாகவும், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கிறது. அதனுடைய நிகழ்ச்சி நிரலை விசுவாசமாக செயல்படுத்தும் கட்சிக்கு மட்டுமே அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பு வழங்கப்படுவதை அது உறுதி செய்கிறது.

பொருளாதார அமைப்பு மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமானால், உழைக்கும் மக்களே அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பது அவசியமாகும். இன்று முதலாளி வர்க்கம் ஏகபோகமாக முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைப் பறித்து, அந்த அதிகாரம் ஒட்டுமொத்த மக்களின் கைகளில் ஒப்படைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு அரசுதான் நமக்குத் தேவை.

எனவே, பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராடுவதோடு, மக்களின் கைகளில் இறையாண்மையை ஒப்படைக்கும் போராட்டத்தைத் தொழிலாளி வர்க்கம் தனது நிகழ்ச்சி நிரலின் மையப் பகுதியாக மாற்ற வேண்டும். மக்கள் இறையாண்மையைப் பெற்றவுடன், முதலாளித்துவ பேராசையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, மக்களின் வளர்ந்து வரும் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடியும். சுயசார்பு கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரத்தை நம்மால் பாதுகாக்க முடியும்.

அனைவருக்கும் வளமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கத்துடன், இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஒரு புதிய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய அரசுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். செயலாக்க அதிகாரம் சட்டமியற்றும் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டதாகவும், சட்டமியற்றும் அதிகாரம் மக்களின் கட்டுப்பாட்டிலும் இருக்கும். தாங்கள் வேலை செய்யும் இடங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் அணிதிரட்டப்பட்ட ஒட்டுமொத்த மக்களின் கைகளில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அவர்கள் தங்களுடைய எல்லா அதிகாரத்தையும் ஒப்படைக்க மாட்டார்கள், அதில் ஒரு பகுதியை மட்டுமே அதுவும் தற்காலிகமாக ஒப்படைப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் அவர்களுடைய செயல்பாடுகள் குறித்து விளக்கம் கோரும் உரிமையையும், எந்த நேரத்திலும் அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமையையும் மக்கள் தக்க வைத்துக் கொள்வார்கள்.

புதிய அரசியல் நடைமுறையில், அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை அபகரித்துக் கைப்பற்றிக் கொள்வதைத் தடுக்க வேண்டும். அதற்கு மாறாக மக்கள் தங்களைத் தாங்களே ஆளுவதற்கு முழுமையாக இயலும் வகையில், மக்களின் விழிப்புணர்வையும் அணிதிரட்டலின் அளவையும் உயர்த்துவதற்கு இந்த அரசியல் கட்சிகள் பாடுபட வேண்டும்.

விருப்பமுள்ள தேசங்களும் மக்களும், பிரிந்து போகக் கூடிய உரிமை உள்ளிட்ட சுய நிர்ணய உரிமை கொண்ட தன்னார்வத் ஒன்றியமாக இந்திய ஒன்றியம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், தாராளமயம், தனியார்மயத்திற்கு எதிராகவும், வகுப்புவாதம், அரசு பயங்கரவாத்திற்கு எதிராகவும் போராடுகின்ற அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து, மக்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். நமது சமூகத்தை பாதித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் திறவுகோல் இதுவேயாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *