முதலாளி வர்க்க ஆட்சியை நிலைப்படுத்த தேர்தல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன

2022 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், ஆளும் வர்க்கம் தன்னுடைய உடனடி நோக்கத்தை சாதித்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும், உத்தரபிரதேசம் உட்பட மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க-வும் வெற்றி பெற்றிருப்பது, ஏகபோக முதலாளிகளின் தலைமையிலான முதலாளி வர்க்கத்தால் கொண்டு வரப்பட்டது.

தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும் மக்கள், முன்னெப்போதும் இல்லாத அளவில் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை மற்றும் வாழ்வாதாரத்தின் பாதுகாப்பின்மை ஆகியவற்றை எதிர்கொண்டு வரும் நேரத்தில் இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளாக நாடெங்கிலும் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், பொது வேலை நிறுத்தங்களில் தொழிலாளர்களின் பெரும் பங்கேற்பு, விவசாயப் போராட்டங்களின் வளர்ச்சி மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிரான நடவடிக்கையில் ஒற்றுமை ஆகியவற்றை ஒட்டு மொத்தமாக எடுத்துக்கொண்டால், அவை முதலாளி வர்க்கம் ஆட்சி செலுத்தும் நாடாளுமன்ற சனநாயக அமைப்பின் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

போராடி வந்த விவசாயிகளை இந்த தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக, தில்லியின் எல்லைகளிலிருந்து அகற்றி அவர்களை வீட்டிற்கு அனுப்புவதில் ஆளும் வர்க்கம் முதலில் வெற்றி பெற்றது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கும், ஏகபோக முதலாளிகளுக்கு அதிகபட்ச லாபத்தை உறுதி செய்வதற்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்த தேர்தல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஏமாற்றும் வகையில், பாஜகவுக்குப் பதிலாக நாடாளுமன்ற மாற்றுக்களை ஊக்குவிக்கவும் இந்தத் தேர்தல்களை ஆளும் வர்க்கம் பயன்படுத்தியுள்ளது.

டாடாக்கள், அம்பானிகள், பிர்லாக்கள், அதானிகள் மற்றும் பிற ஏகபோக முதலாளி வர்க்க பூதாகரமான பணக்காரர்கள் ஆளும் வர்க்கத்திற்குத் தலைமை தாங்குகின்றனர். வெளிநாட்டு ஏகபோக முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுடன் கூட்டாக, அவர்கள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றனர். அவர்கள் தங்கள் அபரிமிதமான பணபலம் மற்றும் அரசு இயந்திரத்தின் மீதுள்ள ஆதிக்கம், செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சூழ்ச்சியாக கையாளும் திறன் ஆகியவற்றைக் கொண்டு அவ்வாறு செய்கிறார்கள்.

ஏகபோக முதலாளிகளைப் பொறுத்த வரையில், அண்மை ஆண்டுகளில் பாஜக மிகச் சிறந்த விளைவுகளை அவர்களுக்கு அளித்துள்ளது. முழு உலகமும் ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில், இந்திய ஏகபோக நிறுவனங்களின் இலாபம் செங்குத்தாக உயர்ந்துள்ளது.

இந்த அமைப்பில் தேர்தல்கள் மக்களின் அரசியல் விருப்பங்களைப் பிரதிபலிக்கின்றன என்ற தவறான கருத்தின் அடிப்படையில், தேர்தல் முடிவுகளிலிருந்து எல்லா வகையான விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன. பஞ்சாபியர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும், அதே நேரத்தில் உ.பி. மக்கள் யோகி தலைமையிலான பாஜக தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும் பல முதலாளித்துவ பத்திரிகையாளர்களும், வல்லுநர்கள் என்று அழைக்கப்படுபவர்களும் விளக்கம் அளித்துள்ளனர். வேறு சிலர், இந்த முடிவுகள் “வலதுசாரி” அரசியலின் வளர்ந்து வரும் செல்வாக்கைப் பிரதிபலிக்கின்றன என்று கூறுகின்றனர். இந்த அனைத்து முடிவுகளும் தவறானவையாகும், ஏனென்றால் தற்போதுள்ள அமைப்பில் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது மக்கள் அல்ல. ஆளும் வர்க்கம்தான் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கிறது. தேர்தல் முடிவுகள், முதலாளி வர்க்கத்தின் திட்டத்தைப் பிரதிபலிக்கிறதே அன்றி உழைக்கும் மக்களின் விருப்பங்களையோ அல்லது எண்ணங்களையோ அல்ல.

தேர்தல் முடிவுகளை மக்கள் தீர்மானிக்கிறார்கள் என்ற முதலாளி வர்க்க மாயையுடன் அனைத்து வகையான சமரசத்தையும் கம்யூனிஸ்டுகளாகிய நாம் எதிர்க்க வேண்டும். போராட்டமானது, முதலாளி வர்க்கத்தின் “வலதுசாரி” மற்றும் “இடதுசாரிக்கும்” இடையில் நடைபெறுகிறது என்ற கருத்தை நாம் நிராகரிக்க வேண்டும். போராட்டமானது, பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையில் தான் நடைபெறுகிறது என்று மார்க்சிய அறிவியல் நிறுவியுள்ளது.

“அதிக வாக்கு பெற்றவரே வெற்றி” (“First past the Post”) என்ற  தற்போதைய அமைப்பிலிருந்து “விகிதாசாரப் பிரதிநிதித்துவம்” என்ற ஒரு வகையான வடிவத்திற்கு செல்வது விரும்பத் தக்கதாகும் என்ற ஒரு திசைதிருப்பலான விவாதத்தை முதலாளி வர்க்கம் உருவாக்கியுள்ளது. தற்போதைய தேர்தல் அமைப்பில் கட்சிகள் பெற்ற வாக்கு விகிதத்திற்கும், கிடைத்த இடங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளுக்கு இது தீர்வாக முன்வைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உ.பி.யில் 41 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக 60 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 32 சதவீத வாக்குகளைப் பெற்ற சமாஜ்வாதி கட்சி 28 சதவீத இடங்களைப் பெற்றுள்ளது. 13 சதவீத வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி, 1 சதவீதத்துக்கும் குறைவான இடங்களைப் பெற்றுள்ளது.

“அதிக வாக்கு பெற்றவரே வெற்றி” மற்றும் ‘விகிதாச்சார பிரதிநிதித்துவம்’ ஆகிய இரண்டுமே முதலாளி வர்க்கக் கட்சிகளிடையே சட்டமன்றத்தில் உள்ள இடங்களைப் பங்கிடுவதற்கான இரண்டு வெவ்வேறு முறைகளாகும். விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதம், தற்போதுள்ள அரசியல் செயல்பாட்டில் உள்ள அடிப்படைக் குறைபாடுகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப உதவுகிறது. இது, வாக்குப் பங்கு மற்றும் இடப் பங்குகளுக்கு இடையிலான வேறுபாடு பற்றிய ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்த உதவுகிறது. தற்போதுள்ள அரசியல் செயல்முறையின் முக்கிய பிரச்சனை இதுவல்ல.

தற்போதுள்ள அரசியல் செயல்பாட்டில் உள்ள அடிப்படை குறைபாடுகளில் பின்வருவன அடங்கும்:

  • தேர்தலுக்கான வேட்பாளர்கள், கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்; யார் வேட்பாளராகலாம், யார் வேட்பாளராக ஆகக் கூடாது என்பதை முடிவு செய்வதில் மக்களுக்கு எந்தப் பங்கும் இல்லை;
  • தேர்தல் பரப்புரைகளுக்கும் ஊடகங்களில் பிரபலப்படுத்துவதற்கும் தனியார் நிதியுதவி செய்வது, ஒரு சில கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாட்டை ஏற்படுத்துகிறது;
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவரவர்களுடைய கட்சியின் உயர் மட்டத்திற்கு மட்டுமே கடமைப்பட்டவர்களாக உள்ளனர், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய மக்களுக்கு அல்ல;
  • தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதியை எந்த நேரத்திலும் திரும்ப அழைக்கும் உரிமை வாக்காளர்களுக்கு இல்லை;
  • சட்டங்கள் மற்றும் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கைகளில் குவிந்துள்ளது, மக்கள் கைகளில் அல்ல.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி முகாம்களாகப் பிரிக்கப்படுகிறார்கள், நிர்வாக அதிகாரமானது ஒரு சிறிய குழுவான உயர்மட்ட அமைச்சரவையின் கைகளில் குவிந்துள்ளது; மற்றும்
  • செயலாக்க அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற அமைப்புக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் அல்ல, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வாக்களித்த மக்களுக்கு கடமைப்பட்டவர்கள் அல்ல.

தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி, அரசியல் செயல்பாட்டில் உள்ள அடிப்படைக் குறைபாடுகளைக் களைய வேண்டும் என்று கோர வேண்டும்.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டத்தின் நோக்கமானது, முதலாளி வர்க்க ஆட்சிக்கு பதிலாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவுவதாகும். அப்போது தான், முதலாளி வர்க்க பேராசையை நிறைவேற்றும் தற்போதைய நோக்குநிலைக்கு பதிலாக, மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடியும். மக்களுக்கு அதிகாரமளிப்பதற்கு வழிவகுக்கும் அரசியல் அமைப்பு மற்றும் செயல்முறை மாற்றங்களுக்கான போராட்டம், இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *