சோவியத் யூனியன் சிதறுண்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு:

முதலாளித்துவத்திற்கு சோசலிசம் மட்டுமே உண்மையான மாற்று

1917 அக்டோபர் புரட்சியை தொடர்ந்து ரஷ்யாவில் சோவியத் யூனியன் பிறந்தது சர்வதேச சூழ்நிலையில் ஒரு தரமான மாற்றத்தை கொண்டு வந்தது. புதிய சோவியத் அரசும் அது பாதுகாத்த சோசலிச அமைப்பும் முழு உலக மக்களுக்கு, அவர்களின் விருப்பமாகவும் ஆர்வத்திற்கு ஆதாரமாகவும் மாறின. தொழிலாளி வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரல், அரசியல் மேடையின் மையத்தை ஆக்கிரமித்தது. முதலாளி வர்க்கத்தின்  பேச்சாளர்கள் கூட தாங்கள் ஏதோ ஒரு வகையான சோசலிசத்திற்காக இருப்பதாக பாசாங்கு செய்ய வேண்டியிருந்தது.

டிசம்பர் 1991 இல் சோவியத் யூனியன் சிதறுண்டது நேரெதிரான திடீர் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அது முன்னேற்ற திசையில் இருக்கவில்லை. அது பின்னடைவான திசையை நோக்கிய ஒரு மாற்றமாக இருந்தது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியர்கள், தொழிலாளி வர்க்கத்தையும் சோசலிசத்தையும் அரசியலின் மைய மேடையிலிருந்து வெளியே தள்ளினார்கள். கடந்த 30 ஆண்டுகளாக ஏகாதிபத்தியர்கள், முதலாளித்துவத்திற்கும் பல கட்சி பிரதிநிதித்துவ சனநாயகத்திற்கும் மாற்று இல்லை என்று கூறி வருகின்றனர்.

உலகமயம், தாராளமயம், தனியார்மயமாக்கல் மற்றும் வழக்கமான பல கட்சித் தேர்தல்கள் ஆகியன அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய ஒரே வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று, இந்தப் பாதையானது ஏகபோக முதலாளிகள் மற்றும் அவர்களுக்கு சேவை செய்யும் அரசாங்கங்களின் ஒரு மூர்க்கத்தனமான தாக்குதலைத் தவிர வேறில்லை என்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பல கட்சி பிரதிநிதித்துவ சனநாயகம், அதன் பிறப்பிடமான நாடுகளிலேயே மிகவும் மதிப்பிழந்துள்ளது. பெரும்பான்மையான மக்களை முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருந்து விலக்கி வைப்பதன் மூலம், ஏகபோக முதலாளிகள் தங்கள் கட்டளைகளை சமூகத்தின் மீது திணிப்பதற்கான ஒரு வழிமுறையென இது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

தொழிலாளி வர்க்கமும், ஒடுக்கப்பட்ட மக்களும் ஏகாதிபத்தியப் போர்களுக்கு முடிவுகட்ட விரும்புகிறார்கள். நெருக்கடி நிறைந்த மற்றும் மிகவும் அழிவுகரமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முடிவுகட்ட அவர்கள் விரும்புகிறார்கள். சனநாயகம் என்பது சுயநலக்கிருமிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏதாவதொரு வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பதைக் காட்டிலும் பொருள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். “வேறு மாற்று வழியில்லை” என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒரு மாற்றை எதிர்பார்த்து ஏங்குகிறார்கள்.

விஞ்ஞான சோசலிசம்

தொழிலாளி வர்க்கத்தின் மீதும், சிறிய உற்பத்தியாளர்கள் மீதும் முதலாளித்துவத்தின் தீய விளைவுகளின் பாதிப்பு 19-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவில் மிகத் தெளிவாக வெளிப்பட்டதால், பல்வேறு சோசலிச சிந்தனைகள் தோன்றின. சுரண்டல் இல்லாத, வேலையின்மையும் வறுமையும், நெருக்கடிகளும் இல்லாத ஒரு சமூக அமைப்பு பற்றி சில தனி நபர்கள் கனவு கண்டனர். சில நல்லெண்ணம் கொண்ட தனிநபர்கள் தங்களுக்குச் சொந்தமான தனிப்பட்ட நிறுவனங்களில் சோசலிசக் கொள்கைகளைச் செயல்படுத்த முயன்றனர். இருப்பினும், கார்ல் மார்க்ஸ் அறிவியல் சோசலிசக் கோட்பாட்டை உருவாக்கும் வரை சோசலிசம் ஒரு யதார்த்தமற்ற கற்பனாவாதமாகவே இருந்தது.

முதலாளித்துவத்திற்கு மாற்றாக, உற்பத்திச் சாதனங்கள் முதலாளிகளின் தனிச் சொத்தாக இருப்பதை, உழைக்கும் மக்களின் சமூகச் சொத்தாக மாற்றப்பட்ட ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்று மார்க்ஸ் காட்டினார். அது, அதிக அளவில் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளுக்கு பொருந்துவதாக உற்பத்தி உறவுகளைக் கொண்டு வரும். அதன் மூலம் அது, அவ்வப்போது ஏற்படும் நெருக்கடிகளுக்கும், வேலையின்மை போன்ற முதலாளித்துவத்தின் பிற சீர்கேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும். பிற வர்க்கங்களை சுரண்டல் மற்றும் கொள்ளை மூலம் தனியார் செல்வத்தை குவிக்கும் ஒரு வர்க்கம் இருப்பதற்கான பொருளாதார அடிப்படையை இது அகற்றும்.

புரட்சி மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தை வழிநடத்தும் ஆர்வமும் திறனும் கொண்ட வர்க்கமாக பாட்டாளி வர்க்கம் இருப்பதை மார்க்ஸ் கண்டு பிடித்தார். பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆளும் வர்க்கமாக மாறுவதே முதல் மற்றும் இன்றியமையாத படி என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

19 ஆம் நூற்றாண்டில் பல ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளி வர்க்கக் கட்சிகள் தோன்றின. 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஏகபோக முதலாளித்துவ பேராசையை நிறைவேற்ற ஒரு உலகளாவிய சுரண்டல் மற்றும் கொள்ளை அமைப்பாக முதலாளித்துவம் ஏகாதிபத்திய கட்டத்திற்கு வளர்ந்திருந்தது. நடைபெற்ற மாற்றங்களை ஆராய்ந்து, முதலாளித்துவத்தின் அனைத்து முரண்பாடுகளும் முற்றிவரும் ​​இது முதலாளித்துவத்தின் மிக உச்ச மற்றும் இறுதிக் கட்டம் என்று லெனின் முடிவு செய்தார். பாட்டாளி வர்க்கப் புரட்சி என்பது இனியும் ஒரு எதிர்கால வாய்ப்பு அல்ல, தீர்வுக்காக எடுக்கப்பட வேண்டிய பிரச்சனையாகும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி சோசலிசத்தைக் கட்டமைப்பதில் புரட்சியின் வெற்றிக்கு பாட்டாளி வர்க்கத்தை வழி நடத்திச் செல்லும் ஒரு முன்னணி கட்சியை பாட்டாளி வர்க்கம் அதன் தலைமையாகக் கொண்டிருக்க வேண்டும். போல்ஷிவிக் கட்சியை அத்தகைய கட்சியாக கட்டமைக்கும் போராட்டத்திற்கு லெனின் தலைமை தாங்கினார்.

ரஷ்யாவின் 1917 புரட்சியும், சோவியத் ஒன்றியத்தின் உருவாக்கமும், மார்க்ஸ் மற்றும் லெனின் படிப்பினைகளை சரியென உறுதிப்படுத்தியது. ஒப்பீட்டளவில் பின்தங்கிய ரஷ்யாவில், விவசாயிகள் மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுடன் கூட்டணி வைத்து, பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. மார்க்சியம்-லெனினிசத்தால் வழிநடத்தப்பட்ட புதிய சோவியத் ஆட்சி அதிகாரம், பெரிய அளவிலான உற்பத்திச் சாதனங்களை சமூகச் சொத்தாக மாற்றுவதில் வெற்றி பெற்றது. காலப்போக்கில், தனிப்பட்ட விவசாயிகள் தன்னார்வ அடிப்படையில் முன்வந்து தத்தம் நிலங்களை ஒன்று சேர்க்கும் செயல்முறையின் மூலம், தனிப்பட்ட விவசாயிகளின் சிறிய அளவிலான சொத்துக்களை விவசாயக் கூட்டுறவுகளின் கூட்டுச் சொத்தாக மாற்றுவதிலும் வெற்றி பெற்றது.

சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் (யுஎஸ்எஸ்ஆர்) ஒரு புதிய வகை அரசாக, ஒரு உயர்ந்த சனநாயக அமைப்பாக இருந்தது. முன்னர் சார் பேரரசின் கீழ் ஒடுக்கப்பட்டிருந்த பல தேசங்கள், இதில் மக்களுடைய தன்னார்வ ஒன்றியமாக இருந்தன. ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லும் உரிமை உட்பட, அதன் அங்கமாக இருந்த ஒவ்வொரு தேசத்திற்கும் சுயநிர்ணய உரிமையை அரசியலமைப்பு அங்கீகரித்தது. தத்தம் சோவியத்துகளில் அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிப்பாய்கள் அனைத்து சட்டமன்ற அமைப்புகளுக்கும் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் உள்ளூர் மற்றும் தேசியக் குடியரசு மட்டத்தில் உள்ள சட்டமன்ற அமைப்புகளின் உறுப்பினர்களையும், நாட்டின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான உச்ச சோவியத்தின் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தனர். தாங்கள் தேர்ந்தெடுத்தவரை எந்த நேரத்திலும் திரும்ப அழைக்கும் உரிமையை அவர்கள் கொண்டிருந்தனர். ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தேர்ந்தெடுக்கவும், தேர்ந்தெடுக்கப்படவும் உரிமை உட்பட சமமான அரசியல் உரிமைகள் இருந்தன.

முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் விடுவிக்கப்பட்ட தளமாக சோவியத் யூனியன் எழுந்தது. ஒடுக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும், மக்களுக்கும், அவர்களுடைய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் மிகவும் நம்பகமான ஆதரவு சக்தியாக அது விளங்கியது.

1930 களின் நடுப்பகுதியில், சோசலிச சமுதாயத்தின் கட்டுமானத்தின் முதல் கட்டம் பெரும்பாலும் முடிக்கப்பட்டது. சுரண்டும் வர்க்கங்களான முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் வர்க்கங்களாக அப்போது இருக்கவில்லை. சமுதாயத்தின் வர்க்க அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தையும், அதன் வளர்ச்சியின் கட்டத்தையும் உணர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடையே ஒரு பரந்த விவாதத்தை தலைமை தாங்கி நடத்தி, ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்ள வழிவகுத்தது.

சோவியத் ஒன்றியத்தின் 1936 அரசியலமைப்புச் சட்டம், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை நிறுவியது மட்டுமின்றி, அரசியல் செயல்பாட்டில் பரந்துபட்ட மக்களின் பங்கை பெரிதும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் அறிமுகப்படுத்தியது. தொழிலாளர்கள், கூட்டுறவு விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் பொதுமக்கள் அமைப்புகளால் பரிந்துரைக்கப்பட்டவர்களில் இருந்து, தேர்தலுக்கான வேட்பாளர்களை முடிவு செய்யும் உரிமையை மக்களுக்கு அது உத்தரவாதப்படுத்தியது. 1936 அரசியலமைப்பில் திட்டமிடப்பட்ட வழிகளில் மேலும் வளர்ச்சி பெறுவதை, இரண்டாம் உலகப் போர் (1939-45) வெடித்ததன் மூலம் தடுக்கப்பட்டது.

சர்வதேச விவகாரங்களில் சோவியத் யூனியனின் கொள்கை ரீதியான நிலைப்பாடு, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அனைத்து தேசங்கள் மற்றும் மக்களின் போராட்டங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் அதனுடைய தலைமை ஆகியன, அமைதியை விரும்பும் அனைத்து மக்களின் மதிப்பையும் பாராட்டையும் பெற்றது.

விலகலும், சீரழிவும் மற்றும் சிதைவும்

முதலாளித்துவம் மற்றும் அதன் பிரதிநிதித்துவ சனநாயகத்தை விட தெள்ளத் தெளிவாக உயர்ந்து நின்ற சோசலிச அமைப்பும், சோவியத் சனநாயகம் ஏன் அழிக்கப்பட்டது? ஜே.வி. ஸ்டாலினின் மறைவைத் தொடர்ந்து வந்த சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPSU) புதிய தலைமை, பாட்டாளி வர்க்கப் போராட்டப் பாதையிலிருந்து விலகியதே அதற்கு மூல காரணமாகும்.

சோசலிசத்தின் பாதையில் அடைந்த அனைத்து முன்னேற்றங்களும் லெனின் மற்றும் ஸ்டாலினின் முன்னணி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் கூட்டாளிகளால் நடத்தப்பட்ட நீடித்த, நிலையான மற்றும் விடாப்பிடியான போராட்டத்தின் மூலம் சாதிக்கப்பட்டன. புரட்சி மற்றும் சோசலிசத்தின் வெளிப்புற மற்றும் உட்புற எதிரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. உழைக்கும் மக்களின் நலன்களை இந்த எதிரிகளிடமிருந்து சோவியத் அரசு பாதுகாத்தது. சோசலிசத்தை அழிப்பதற்காக முதலாளித்துவம் முன்வைத்த அனைத்து கருத்துகளுக்கும் போக்குகளுக்கும் எதிரான கருத்தியல் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது.

1950 களில், போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு காலத்தைத் தொடர்ந்து, சோவியத் சமூகம் புதிய சவால்களை எதிர்கொண்டது. பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சார இயக்கத்தில் பொது மக்களுடைய பங்கை உயர்த்துவதற்கு, உற்பத்தி உறவுகளில் இடைவிடாத புரட்சி தேவைப்பட்டது. பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சாரம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு இணையாக புரட்சிகர கோட்பாட்டை மேம்படுத்த  வேண்டிருந்தது. பொருளாதாரக் கோட்பாட்டுத் துறையில், விநியோகம் உட்பட உற்பத்தித் துறையில் அனைத்தையும் நிர்ணயிப்பதில் உழைக்கும் மக்களின் பங்கை முதலிடத்தில் வைக்க வேண்டிய அவசியம் இருந்தது. அரசியல் கருத்தியல் துறையில், மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வதில் நேரடியாகப் பங்குபெறும் வகையில் அரசியல் வழிமுறையில் புரட்சியை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது. தத்துவத் துறையில், அனைத்து வளர்ச்சிகளிலும் மனிதக் காரணியும், விழிப்புணர்வும் முக்கிய பங்கு வகிப்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, குருசேவ் தலைமையிலான புதிய கட்சித் தலைமை ஜோசப் ஸ்டாலினின் மீது கடுமையான தனிநபர் தாக்குதலைத் தொடங்கியது. 1956 இல் நடைபெற்ற சிபிஎஸ்யு-வின் (CPSU) 20-ஆவது மாநாட்டில் பிற கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இரகசிய அறிக்கை என்று அழைக்கப்படும் ஒரு அறிக்கை வழங்கப்பட்டது. அதில், ஸ்டாலினை ஒரு கொடிய சர்வாதிகாரியாகக் காட்ட ஆங்கிலோ-அமெரிக்க ஏகாதிபத்திய பரப்புரை இயந்திரம் உருவாக்கிய எல்லா கட்டுக்கதைகளையும் குருசேவ் மீண்டும் கூறியிருந்தார்.

ஸ்டாலினின் ஆளுமை மீதான தாக்குதல், விஞ்ஞான சோசலிசக் கோட்பாட்டிலிருந்தும் பாட்டாளி வர்க்கப் போராட்டப் பாதையிலிருந்தும் ஆபத்தான விலகலை மறைக்க உதவியது. சோசலிசத்தின் அனைத்து சாதனைகளையும் குறைத்து மதிப்பிடுவதற்கும், முதலாளித்துவத்தை மீண்டும் கட்டியெழுப்ப வழி வகுக்கவும் இது பயன்படுத்தப்பட்டது. சோவியத் சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்திற்கு இனி எந்தத் தேவையும் இல்லை என்று புதிய சோவியத் தலைமை அறிவித்தது. சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி இனி பாட்டாளி வர்க்கத்தின் கட்சி அல்ல என்றும், மாறாக “எல்லா மக்களின் கட்சி” என்றும் குருசேவ் அறிவித்தார். சோவியத் அரசு இனி பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் அல்ல என்றும், மாறாக “எல்லா மக்களின் அரசு” என்றும் அவர் அறிவித்தார்.

மார்க்சிய-லெனினிசக் கோட்பாட்டின் படி, முதலாளித்துவத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் எதிரான வர்க்கப் போராட்டம், உலக அளவில் கம்யூனிசம் இறுதி வெற்றி அடையும் வரை எல்லா வழிகளிலும் தொடர்கிறது. அதுவரை, முன்னணி கம்யூனிஸ்ட் கட்சியானது வர்க்கப் போராட்டத்தில் அதன் முன்னணிப் பங்கை வலுப்படுத்தி, மென்மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அரசாங்க விவகாரங்களை நிர்வகிப்பதில் பரந்துபட்ட உழைக்கும் மக்களின் அதிகபட்ச பங்கேற்பின் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகார அரசு எப்போதும் பலப்படுத்தப்பட வேண்டும்.

இந்த அறிவியல் கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிராக, குருசேவ் தலைமையிலான சிபிஎஸ்யு (CPSU), பாட்டாளி வர்க்கப் போராட்டம் இனி நிகழ்ச்சி நிரலில் இல்லை என்ற கருத்தைப் பரப்பியது. புதிதாக வளர்ந்து வரும் முதலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற ஏற்பாடு செய்து கொண்டிருக்கையில், இது மக்களை அமைதிப்படுத்தித் தூங்க வைக்க உதவியது. கட்சி மற்றும் அரசின் உயர்மட்டத்தில் இருந்து, தங்களுடைய பதவியைப் பயன்படுத்தி தனிச் சொத்துக்களைக் குவிப்பவர்கள் தோன்றினர்.

கம்யூனிசத்திற்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிக் கட்சியாக இருப்பதிலிருந்து, சிபிஎஸ்யு (CPSU) முதலாளித்துவத்தின் ஒரு கட்சியாக மாற்றப்பட்டது. சோவியத் அரசு, பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்திலிருந்து புதிய முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக மாறியது.

அனைத்து பொருளாதார முடிவுகளும் அமெரிக்காவுடனான ஆயுதப் போட்டி மற்றும் புதிய முதலாளி வர்க்கத்தை கொழுக்கச் செய்யும் நோக்கில் அமைந்திருந்ததால், 1960-களில் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது. வேலையின்மையும், நுகர் பொருட்களுக்கான கறுப்பு சந்தையும் எழுந்தன. வறுமை, விபச்சாரம் உட்பட முதலாளித்துவ அமைப்பின் அனைத்து கொடுமைகளும் அங்கு மீண்டும் தோன்றின.

1960 களின் இறுதியில், சோவியத் யூனியன் ஒரு சமூக-ஏகாதிபத்திய அரசாக உருவெடுத்தது, அதனுடைய ஏகாதிபத்திய தன்மையை மறைப்பதற்காக வெறும் வார்த்தைகளில் சோசலிசத்தை பேசி வந்தது. சோவியத் துருப்புக்கள் செக்கோஸ்லோவாக்கியாவை 1968 இல் கைப்பற்றி ஆக்கிரமித்தன. அவர்கள் 1979 இல் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி ஆக்கிரமித்துக் கொண்டன.

1970-கள் முழுவதும், சர்வதேச அரசியல் முழுவதும் இரு வல்லரசுகளான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான போட்டிகளும், மோதல்களும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தின. உலக மக்களின் பிரதான எதிரியாக மற்றொன்றைச் சுட்டிக்காட்டி ஒவ்வொரு வல்லரசும் தனது அநீதியான ஆக்கிரமிப்புச் செயல்களை நியாயப்படுத்தின.

1980-களின் நடுப்பகுதியில் சோவியத் மக்களின் அதிருப்தி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்தது. ஆப்கானிஸ்தானில் நடந்த போர், சோவியத் அரசின் நிதி ஆதாரங்களை வற்றிப் போகச் செய்தது. இது உழைக்கும் மக்களின் பொருளாதாரப் பிரச்சனைகளை மேலும் மோசமாக்கியது. ஆங்கிலோ-அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் சோசலிசம் மற்றும் சோவியத் அரசின் கடைசித் தடயங்களை அழிக்கும் தங்கள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல இந்தப் பிரச்சனைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்ற பெயரில் முதலாளித்துவ சீர்திருத்தங்களைக் கட்டவிழ்த்து விட்ட கோர்பச்சேவுக்கு அவர்கள் அனைத்துத் தரப்பு ஆதரவையும் வழங்கினர். பல கட்சி தேர்தல்கள் மற்றும் முதலாளித்துவ சனநாயக அதிபர் அமைப்பு முறையை ஊக்குவிப்பதற்காக அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கோர்பச்சேவிற்கு ஆதரவு வழங்கி வந்த அதே வேளையில், பொருத்தமான நேரத்தில் அவரை மாற்றி, சோவியத் ஒன்றியம் முழுமையாக ஒழித்துக்கட்டப்படுவதை உறுதி செய்வதற்காக, யெல்ட்சின் என்ற வெளிப்படையான கம்யூனிச எதிர்ப்பு ஆதரவாளியை நியமிக்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஏற்பாடு செய்தனர். டிசம்பர் 25 அன்று, சுத்தி – அரிவாள் கொண்ட செங்கொடி மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மேலிருந்து இறக்கப்பட்டது.

முடிவுரை

தற்போதுள்ள ஏகாதிபத்திய அமைப்பின் பேச்சாளர்களும், சித்தாந்தவாதிகளும், மேற்கொண்டு ஆய்வு செய்ய எதுவுமில்லை என்பது போல, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி, “சிவப்பு இறந்து விட்டது” என்று பிரகடனப்படுத்துகின்றனர். சோவியத் ஒன்றியத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கான காரணங்களை மக்கள் தீவிரமாக ஆய்வு செய்வதை அவர்கள் விரும்பவில்லை, ஏனெனில் ஏகாதிபத்திய அமைப்புக்கு உண்மையான மாற்றை மக்கள் தேடுவதை அவர்கள் விரும்பவில்லை.

சோவியத் யூனியனில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனமாக பகுப்பாய்வு செய்வது, சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிசம் லெனினிசத்திற்கு துரோகம் இழைத்தது தான், சோசலிசத்தின் அழிவுக்கும் சோவியத் யூனியனின் இறுதிச் சிதைவுக்கும் வழிவகுத்தது என்ற முடிவுக்கு இட்டுச் செல்கிறது. பாட்டாளி வர்க்கப் போராட்டப் பாதையில் இருந்து விலகியது, முதலாளித்துவ பொருளாதார உறவுகளை மீட்டெடுக்கவும் சோசலிச அரசாக இருந்த சோவியத் யூனியனை சமூக-ஏகாதிபத்திய அரசாக மாற்றவும் வழிவகுத்தது. அந்த சுரண்டல் மற்றும் அடக்குமுறை அமைப்பும், அரசும் தான் நெருக்கடியில் மேலும் மேலும் படுபாதாளத்தில் வீழ்ந்து இறுதியில் 1991 டிசம்பரில் முழுவதுமாக சிதைவடைந்தது.

நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ அமைப்புக்கு அறிவியல்பூர்வமான சோசலிசம் மட்டுமே உண்மையான மாற்றாக உள்ளது. விஞ்ஞான சோசலிசத்திலிருந்தும் பாட்டாளி வர்க்கப் போராட்டப் பாதையிலிருந்தும் விலகிச் செல்ல வேண்டுமென்பதை ஆதரிக்கும் அனைவருக்கும் எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்துவதன் மூலம், கம்யூனிஸ்டுகள் மார்க்சிசம்-லெனினிசத்தின் அறிவியலைப் பாதுகாத்து மேலும் வளர்க்க வேண்டுமென தற்போதைய சூழ்நிலை கோருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *