இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி நிறுவப்பட்டதன் 41 வது ஆண்டு விழா பேரார்வத்துடன் கொண்டாடப்பட்டது!

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி நிறுவப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவடைந்ததை 2021 டிசம்பர் 25 குறிக்கிறது. இந்த மகிழ்ச்சியான நிகழ்வைக் கொண்டாட இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள கட்சி அமைப்புகள் கூட்டங்களை நடத்தின. தில்லி, மும்பை, கனடாவில் டொராண்டோ மற்றும் பிற இடங்களில் கூட்டங்கள் நடைபெற்றன.

இக்கூட்டங்களில் கட்சியின் பகுப்பாய்வு முன்வைக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து ஆர்வத்தோடு விவாதங்கள் நடைபெற்றன. விழாவைக் கொண்டாடும் வகையில் கலாச்சார நிகழ்ச்சிகளும், பாடல்களும், நடனங்களும் நடைபெற்றன.

அண்மைக் காலங்களில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வளர்ந்து வரும் போராட்டங்கள் மற்றும் தாராளமய, தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு எதிராக வளர்ந்து வரும் ஒற்றுமை ஆகியவற்றின் அனுபவங்களை கூட்டங்கள் தொகுத்துரைத்தன.

நாடாளுமன்ற சனநாயகமானது, இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோகங்களின் தலைமையிலான முதலாளி வர்க்கத்தின் கொடூரமான சர்வாதிகாரமென பெருமளவில் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது என்பது மிகவும் வலியுறுத்தப்பட்டது. ஆட்சி நடத்துவதற்கு ஒரு நல்ல கட்சி அல்லது கூட்டணியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், மக்கள் பிரச்சினைகளுக்கு தற்போதுள்ள அமைப்பிலேயே தீர்வு காண முடியும் என்ற மாயைக்கு முட்டுக் கொடுக்க ஆளும் வர்க்கம் ஏற்பாடு செய்து வருகிறது.

முதலாளி வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு கட்சிகள் அல்லது கூட்டணிகள் மாறி மாறி அரசாங்கத்தை நடத்தும் போது முதலாளித்துவ சனநாயக முறை சிறப்பாக செயல்படுகிறது. ஆட்சிப் பொறுப்பிலுள்ள கட்சி மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகும் போது, ​​எதிர்க்கட்சி அதன் இடத்தில் வந்து, புதிய கவர்ச்சிகரமான முழக்கங்களுடன் அதே நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துகிறது. பாஜக-விற்கு நம்பகமான மாற்றை உருவாக்க விவசாயிகள் போராட்டத்தை ஆளும் வர்க்கம் பயன்படுத்த முயன்றது. டாடாக்கள், அம்பானிகள், பிர்லாக்கள், அதானிகள் மற்றும் பிற ஏகபோக நிறுவனங்களின் சார்பாக அரசாங்கத்தை நடத்துவதற்கு தகுதி கொண்ட இரண்டு அணிகளுக்கிடையேயான தேர்தல் போட்டியில் பெரும்பான்மையான மக்கள் சிக்கிக் கொள்வதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

கடந்த 41 ஆண்டுகால நமது செழுமையான அனுபவத்தைப் பயன்படுத்தி, கட்சியைக் கட்டியெழுப்புவதும், பலப்படுத்துவதும் அவசியம் என்பது விவாதத்தின் போது பேசப்பட்ட ஒரு முக்கிய கருப்பொருளாகும். கட்சி உருவான சூழ்நிலைகளை தோழர்கள் நினைவு கூர்ந்தனர். சோவியத் – அமெரிக்க போட்டா போட்டியின் நெருக்குதலாலும், சோசலிசத்திற்கு பாராளுமன்றப் பாதை என்ற மாயையின் கீழும், கம்யூனிஸ்ட் இயக்கம் சிதறுண்டு இருந்த காலம் அது. புறவய நிலைமைகள் புரட்சிக்கு சாதகமாக இருந்தபோதிலும், ஒன்றுபட்ட கம்யூனிச தலைமையின்றி தொழிலாளி வர்க்கம் விடப்பட்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில், அனைத்து கம்யூனிஸ்டுகளும் இணைந்து போராடக் கூடிய, தொழிலாளி வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, சமுதாய முன்னேற்றத்திற்கான பாதையைத் திறக்கக் கூடிய இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிக் கட்சியை நிறுவ முடிவு செய்தோம். அப்படிப்பட்டதொரு கட்சியை எல்லா வகையான திருத்தல்வாத, சந்தர்ப்பவாதங்களுக்கு எதிராகவும், மார்க்சிச-லெனினிச அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையிலும் உருவாக்க முடிவு செய்தோம்.

முதலாளித்துவ ஆட்சியை மாற்றி, பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளுடன் கூட்டாக தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சியை அமைப்பதன் மூலம், அனைத்து வகையான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவரும் ஒரே நோக்கம் கொண்ட இந்தியத் தொழிலாளி வர்க்கம் ஒரே வர்க்கம் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இந்த இலக்கை நனவாக்க, தொழிலாளி வர்க்கம் அதன் சொந்த தனிப்பட்ட வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும், அதையொட்டி அது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும்.

உலகமயம், தாராளமயம், தனியார்மயமாக்கல் என்ற முதலாளித்துவ வேலைத் திட்டத்திற்கு மாற்றாகவும், மக்களை அதிகாரத்திலிருந்து விலக்கி வைத்து, அவர்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கின்ற தற்போதைய பாராளுமன்ற அமைப்பிற்கு மாற்றாகவும், நாம் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். முதலாளி வர்க்கத்தின் சமூக விரோதத் தாக்குதலை எதிர்க்கும் வகையில், தொழிலாளி வர்க்கத்தையும் விவசாயிகளையும் அணி திரட்டுகின்ற அதே நேரத்தில், அத்தகைய வேலைத் திட்டத்தின் மூலம் அவர்களை ஆயத்தப்படுத்த நமது கட்சி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

21 ஆண்டுகளுக்கு முன்பு நமது கட்சி முன்வைத்த “ஒரு தொழிலாளி வர்க்கம், ஒரு வேலைத் திட்டம், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி” என்ற முழக்கத்தை தோழர்கள் நினைவு கூர்ந்தனர். தொழிலாளி வர்க்கத்தை அதன் சொந்த தனிப்பட்ட வேலைத் திட்டத்தின் மூலம் ஆயத்தப்படுத்தும் போராட்டத்தின் போது, ஒரே கட்சியில் இந்திய கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமை மீட்டமைப்போமென்ற தங்கள் உறுதியான நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினர். கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் இயக்கத்தில் உள்ள பாதகமான நிலைப்பாடுகளை எதிர்த்துப் போராடும் போக்கில் கம்யூனிஸ்டுகளுடைய ஒற்றுமை மீட்டெடுக்கப்படும். குறிப்பாக, நாடாளுமன்ற சனநாயகம் குறித்தும், தற்போதுள்ள இந்திய ஒன்றியம் மற்றும் அதன் அரசியல் சட்டம் குறித்தும் அனைத்து மாயைகளையும் அம்பலப்படுத்தி உடைத்தெறிவது அவசியமாகும்.

நமது கட்சி கட்டப்பட்ட அடிப்படையான சனநாயக மத்தியத்துவ அமைப்புக் கோட்பாட்டைப் பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் இந்தக் கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டது. கட்சியை பலவீனப்படுத்தும் அராஜகம், அகங்காரம், போட்டா போட்டி உள்ளிட்ட அனைத்து அன்னிய போக்குகளுக்கு எதிராகப் போராடுவதன் முக்கியத்துவம் குறித்து தோழர்கள் பேசினர். கட்சியின் ஒற்றுமையை கண்ணின் மணி போல காப்போம் என அவர்கள் உறுதி மொழிந்தனர்.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நமது தோழர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தையும், அதன் விளைவாக கட்சி நிறுவப்பட்டதையும், தோழர்கள் நினைவு கூர்ந்தனர். நம்மை விட்டு மறைந்த தோழர்களுக்கு அவர்கள் வணக்கம் செலுத்தினர். முதலாளித்துவ ஆட்சிக்கு பதிலாக தொழிலாளி-விவசாயி ஆட்சியை நிறுவுவதற்கான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டவும், வழிநடத்தவும், சோசலிச இந்தியாவைக் கட்டியெழுப்பும் சாலையில் அணிவகுத்துச் செல்லவும் இரட்டிப்பு ஆற்றலுடன் பணியாற்றுவதென அவர்கள் உறுதியேற்றனர்.

நமது கட்சி, சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் ஒரு அங்கம் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஏகாதிபத்தியம் மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகவும், புரட்சி, தேசிய விடுதலை மற்றும் சோசலிசத்திற்காகவும் அனைத்து நாடுகளின் பாட்டாளி வர்க்கம் மற்றும் மக்களின் போராட்டங்களை நமது கட்சி ஆதரிக்கிறது.

கட்சி மற்றும் அதன் நிலைப்பாட்டின் மீது அனைத்து தோழர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை இந்தக் கூட்டங்களில் நிலவிய சூழல் பிரதிபலித்தது. நம் நாட்டில் புரட்சி மற்றும் சோசலிசத்தின் வெற்றிக்கான அகவய நிலைமைகளைத் தயாரிப்பதற்காக, இந்த நிலைப்பாட்டை நாடெங்கிலும் கொண்டு செல்வதற்கான அவர்களின் உறுதியை இது பிரதிபலித்தது.

சர்வதேச தொழிலாளி வர்க்கத்தின் பாடலான சர்வதேசியத்துடன் கூட்டங்கள் முடிவடைந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *